என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிவகங்கையில் போலீஸ் சோதனையின் போது காரில் துப்பாக்கியுடன் வந்த 5 பேர் சிக்கினர்.
    சிவகங்கை:

    சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகனத்தில் ரோந்து சென்றனர். அப்போது சிவகங்கை வாணியங்குடி சாலையில் வந்த கார் ஒன்றை நிறுத்தினர். அப்போது காரில் இருந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் இறங்கி தப்பி ஓடினர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் காரில் சோதனை செய்தனர். அதில் 2 நவீன ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து போலீசார் காரில் இருந்த மதுரையை சேர்ந்த பாலகணேசன் (வயது37), பிரபாகரன் (27), சண்முகராஜன் (32), சிவகங்கையை சேர்ந்த அலிமுகமது (26), பாலகுரு (28) ஆகிய 5 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் வைத்திருந்த துப்பாக்கி அனுமதி பெற்றது என்றும் அவர்கள் இரவில் வனவிலங்குகளை வேட்டையாட வந்ததாகவும் தெரியவந்தது. இதையடுத்து கார், துப்பாக்கி, தோட்டாக்களை போலீசார் கைப்பற்றினர்.

    இதைத்தொடர்ந்து கார், துப்பாக்கிகளுடன் அவர்களை, நகர் இன்ஸ்பெக்டர் மோகன் வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். அவர்களிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    சிவகங்கையில் 19 பேருக்கும், விருதுநகரில் 22 பேருக்கும் ஒரேநாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிவகங்கையில் ஒருவர் பலியானார்.
    சிவகங்கை:

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ஒரு பெண், சிவகங்கை மாவட்டம் கல்லலில் ஒரு ஆண், ஒரு பெண், பனையம்பட்டியில் ஒரு பெண், திருப்பத்தூரில் ஒரு ஆண், ஒரு பெண், அதிராம்பேட்டையில் ஒரு ஆண், தேவகோட்டையில் 2 பெண்கள், மேலமாகானத்தில் ஒரு ஆண், சிறியூரில் ஒரு ஆண், காளையார் கோவிலில் ஒரு ஆண், சிவகங்கை காஞ்சிரங்காலில் ஒரு ஆண் உள்பட மொத்தம் 19 பேருக்கு சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவகங்கையை அடுத்த ஜமீன்தார் பட்டியை சேர்ந்த 49 வயது நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவிற்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது. இவர் சென்னையில் இருந்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கடந்த 20-ந் தேதி சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சுகாதார நடவடிக்கையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 15,552 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. 1,600 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவில்லை. 138 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 9 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 328 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் ராஜபாளையம் பெரியகடை வீதியை சேர்ந்த 35 வயது பெண், 23 வயது நபர், கூனம்பட்டியை சேர்ந்த 55 வயது பெண், 33 வயது நபர், 4 வயது பெண் குழந்தை, பூலாங்காலை சேர்ந்த 5 வயது பெண் குழந்தை, ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த 39 வயது நபர், வத்திராயிருப்பை சேர்ந்த 21 வயது பெண், சித்துராஜபுரத்தை சேர்ந்த 42 வயது பெண், விளாம்பட்டி அருகே உள்ள பூலாவூரணியை சேர்ந்த 36 வயது நபர், 32 வயது மனைவி, 3 வயது பெண் குழந்தை, 62 வயது மூதாட்டி, 3 வயது ஆண் குழந்தை, அருப்புக்கோட்டையை சேர்ந்த 33 வயது நபர், பெரிய வள்ளிகுளத்தை சேர்ந்த 57 வயது நபர், சிவகாசி வேலாயுத ரஸ்தாவை சேர்ந்த 31 வயது நபர், விருதுநகர் கோட்டூர் 30 வயது நபர் உள்பட 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆதலால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 302 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து திரும்பியவர்களால் கொரோனா பாதிப்பு இந்த மாவட்டத்தில் வேகமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் வரத்து கால்வாய்களை முழுமையாக தூர்வார வேண்டும் என்று பெரியாறு வைகை பாசன சங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் வைகை, பாம்பாறு, பாலாறு, தேனாறு, நாட்டாறு, உப்பாறு, சருகனியாறு, கிருதுமால், மணிமுத்தாறு, விருசுழியாறு என 10 சிற்றாறுகள் உள்ளன. மழைக் காலங்களில் பெய்யும் நீர் மேற்கண்ட ஆறுகள் வழியாக சென்று மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 968 கண்மாய்கள் மற்றும் 4 ஆயிரத்து 871 ஒன்றிய கண்மாய்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாய்கிறது. இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று சங்கிலி தொடர் போன்று அமைந்துள்ளது சிறப்பம்சமாகும். இந்த கண்மாய்கள் மூலம் சுமார் 2 லட்சத்து 83 ஆயிரம் வேளாண் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    கடந்த 25ஆண்டுகளுக்கு முன்பு மேற்கண்ட கண்மாய் மற்றும் ஆறுகளில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. இதன் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் வேளாண் பணிகள் மட்டும் முதன்மை பணிகளாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில் மாவட்டத்தில் ஆறுகள் முறையாக பராமரிக்காததாலும் உரிய கண்காணிப்பு இல்லாததால் ஆறுகள் மற்றும் கண்மாய்கள் முழுவதும் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஆறுகளின் தொடர்பு தடைப்பட்டு இருந்த இடம் தெரியாமல் மாயமாகி உள்ளது. இது தவிர, பாசன மற்றும் வரத்து கால்வாய்களும் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதில் வைகை ஆறு மட்டுமே தற்போது சிவகங்கை மாவட்டத்தில் உயிர்ப்புடன் இருந்து வருகிறது.

    எனவே இனி வரும் காலங்களில் வேளாண்மை பிரதான தொழிலாகவும், முதன்மை தொழிலாகவும் மாற வேண்டும் என்றால் ஆறுகள், கண்மாய்கள், குளங்கள் மட்டுமல்லாமல் வரத்து கால்வாய்களையும் முறையாக பராமரிக்க முன் வர வேண்டும் என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ஒருங்கிணைந்த 5 மாவட்ட பெரியாறு வைகை பாசன சங்க விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூறியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் வைகையை தவிர மீதமுள்ள 9 ஆறுகள் இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் முற்றிலும் அளிக்கப்பட்டு வருகிறது. ஆறுகள் அனைத்தும் பராமரிப்பில்லாமல் போனதால் கண்மாய்கள் வறண்டு போய் விவசாயம் அழிந்து வருகிறது. ஆறுகள் மற்றும் வரத்து கால்வாய்கள் உரிய பராமரிப்பு இல்லாததால் ஒவ்வொரு ஆண்டிலும் மாவட்டத்தில் சராசரி அளவு மழை பெய்ததாலும் கண்மாய்களுக்கு நீர் வரத்து இல்லாமல் உள்ளது.

    நீதி மன்ற உத்தரவின் பேரில் அண்மையில் மாவட்டத்தில் உள்ள ஒரு சில ஆறுகளில் குறைந்த தூரம் வரை தூர் வாரும் பணி மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து அனைத்து ஆறுகள் மற்றும் வரத்துக் கால்வாய்களையும் முழுமையாக தூர்வார வேண்டும். மேலும் ஆறுகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்றவும், மணல் கடத்தலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு சார்பில் போதிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஆறுகள் காப்பாற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் மாவட்டத்தில் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூரில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 4 வீரர்கள் மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை மற்றும் 2 பெண்களும், காரைக்குடியை சேர்ந்த 4 ஆண்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இது தவிர சிவகங்கை மருத்துவ கல்லூரியில் பணியாற்றி வரும் பெண் ஊழியர் மற்றும் சிவகங்கை, தேவகோட்டை, பாகனேரி, திருப்பத்தூர், எஸ்.வி.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 34 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 14,594 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 261 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. 1,104 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. 134 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

    இந்தநிலையில் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் நேற்று 4 பெண்கள் உள்பட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. வத்திராயிருப்பு அருகே உள்ள குன்னூரை சேர்ந்த 16 வயது சிறுவன், கிருஷ்ணன்கோவிலை சேர்ந்த 36 வயது நபர், சாத்தூர் போத்திரெட்டியபட்டியை சேர்ந்த 43 வயது பெண், வடகரையை சேர்ந்த 28 வயது நபர், கோட்டூரை சேர்ந்த 30 வயது நபர், 26 வயது பெண், ஆமத்தூரை சேர்ந்த 54 வயது ஆண், இவரது 42 வயது மனைவி, 15 வயது மகள், 13 வயது மகன் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆமத்தூரை சேர்ந்த நபர் மட்டுமே முதலில் சென்னையில் இருந்து திரும்பி உள்ளார். இவர் மூலமே இவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. சிவகாசி வேலாயுதம் ரஸ்தாவை சேர்ந்த 58 வயது நபருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

    இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 272 ஆக உயர்ந்துள்ளது. இந்த மாவட்டத்தில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மட்டுமே மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதனால் தினசரி மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிய வேண்டியவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

    நேற்று முன்தினம் வரை 1,104 பேருக்கு முடிவுகள் தெரிய வேண்டி உள்ள நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் வேறு மையங்களில் மருத்துவ பரிசோதனை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 
    கொரோனா வைரசால் பாதிப்பை தடுக்க கட்டுமான தொழிலாளர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்ட பாதுகாப்பு பெட்டகத்தை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட தொழிலாளர் நலத்துறையின் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பணியின்போது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் கட்டுமான தொழிலாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கி பேசியதாவது:-

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த பெட்டகத்தில் கவச உடை, கால்களுக்கு அணியும் பூட்ஸ் மற்றும் சாக்ஸ், கையுறை மற்றும் கண்ணாடி, தொப்பி ஆகியவை அடங்கி இருக்கும். சிவகங்கை மாவட்டத்தில் 491 பேருக்கு இந்த பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு விலையில்லா இஸ்திரி பெட்டிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலர் உஷா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலெட்சுமி, சிவகங்கை ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலசந்தர், இந்து சமய அறநிலைத்துறை மாவட்டக்குழு தலைவர் சந்திரன், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் சசிக்குமார் உள்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
    கீழடியில் அகழாய்வு பணியில் கொந்தகை பகுதியில் புதிய குழி தோண்டும் பணி நடைபெற்றபோது அதில் ஒரு அடி ஆழத்தில் 2 இடத்தில் முதுமக்கள் தாழிகளின் மேற்பகுதி அமைப்பு காணப்பட்டது.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் பகுதியில் 6-வது கட்ட அகழாய்வு பணி கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய 4 இடங்களில் நடைபெற்று வருகிறது. கீழடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட ஒரு குழியில் 2 பானைகள் அருகருகே கண்டெடுக்கப்பட்டன. அதன் அருகே மணல் சூழ்ந்திருந்த நிலையில் அதை தோண்டும்போது நீளமாக செங்கற்கள் அடுக்கிய நிலையில் பானையின் அடிப்பாகத்தில் வடிகால் போன்ற அமைப்பு தென்பட்டது. தற்போது அதை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    கொந்தகை பகுதியில் புதிய குழி தோண்டும் பணி நடைபெற்றபோது அதில் ஒரு அடி ஆழத்தில் 2 இடத்தில் முதுமக்கள் தாழிகளின் மேற்பகுதி அமைப்பு மட்டும் காணப்பட்டது. இதை இன்னும் ஆழமாக குழிகள் தோண்டும் போது இந்த முதுமக்கள் தாழியின் விவரங்கள் குறித்து தெரிய வரும். மேலும் கொந்தகை பகுதியில் அகழாய்வு பணி நடைபெறும் இடத்திற்கு எதிரே தனியார் நிலத்தில் முதுமக்கள் தாழியில் மனித மண்டை ஓடு, எலும்புகள் மற்றும் சிறிய வகை குடுவைகள் ஆகியவைகளை மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் தொல்லியல் குழுவினர் ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த நிலத்தில் முதுமக்கள் தாழியை ஆய்வு செய்தும், மேலும் பல்வேறு குழிகள் தோண்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 
    சிவகங்கை மாவட்டத்தில் டாக்டர் உள்பட 13 பேருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது
    சிவகங்கை:

    சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போது 69 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றி வரும் ஒரு டாக்டர் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கையை அடுத்த புதுப்பட்டியை சேர்ந்த 18 வயது பெண், சிவகங்கை காமராஜர் சாலையை சேர்ந்த 2 பெண் மற்றும் ஒரு ஆணுக்கும், காளையார்கோவிலை சேர்ந்த ஒரு ஆணுக்கும், சிவகங்கை மருத்துவ கல்லூரியில் பணியாற்றி வரும் ஒரு பெண் டாக்டருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வி.புதூரில் ஒரு ஆண், சிவகங்கை முத்தூரில் ஒரு ஆண், டி.புதூரில் ஒரு பெண், திருப்பத்தூரில் 2 ஆண், ஒரு பெண், ஆண் குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது அவர்கள் அனைவரும் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரசால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13 பேர் பூரண குணமடைந்ததை தொடர்ந்து, அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவ கல்லூரி முதல்வர் ரெத்தினவேல், மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவர் மீனாள் மற்றும் டாக்டர்கள் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
    கீழடியில் நடைபெற்று வரும் 6-வது கட்ட அகழாய்வு பணியில் அகரம் பகுதியில் கி.பி. 17-ம் நூற்றாண்டை சேர்ந்த தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. மணலூர் பகுதியில் அதிகளவில் எலும்புகள் கிடைத்துள்ளன.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனைச் சேர்ந்தது கீழடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 5 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்றது. தற்போது 6-வது கட்ட அகழாய்வு பணிகள் கீழடி மற்றும் அதை சுற்றியுள்ள அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது.

    இதில் கீழடி பகுதியில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை மொத்தம் 7 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அங்கு பெரிய மற்றும் சிறிய பானைகள் கிடைத்துள்ளது. இதுதவிர செங்கல் கட்டிட பகுதி, விலங்கின எலும்பு கூடு உள்பட பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கொந்தகையில் 12-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கிடைத்துள்ளது. இதில் ஒரே குழியில் 8 முதுமக்கள் தாழி கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதில் 3 முதுமக்கள் தாழியில் ஆய்வு செய்தபோது அதில் மனித மண்டை ஓடு, மனித உடலின் கையின் பாகங்கள் கிடைத்துள்ளன. இதேபோல் அகரம் பகுதியில் மண் பானை ஓடுகள், சங்கு வளையல்கள், நத்தை ஓடுகள், பாசி, மணிகள் மற்றும் முழுமையான பானைகள் கிடைத்துள்ளன.

    மணலூரில் சுடுமண் உலை, மண் திட்டு பகுதி ஆகியவை கிடைத்துள்ளன. இந்நிலையில் நேற்று அகரம் பகுதியில் நடைபெற்ற அகழாய்வில் தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டது. அந்த நாணம் சுமார் 1 சென்டி மீட்டர் அளவு கொண்டதாகவும், அதன் எடை 300 மில்லி கிராம் இருந்தது. இந்த நாணயம் கி.பி. 17-ம் நூற்றாண்டு காலத்தில் வசித்த மக்களிடையே புழக்கத்தில் இருந்துள்ளதாக தெரிய வருகிறது. நாணயத்தின் ஒரு புறம் நாமம் போன்ற தோற்றம் கொண்டு, நடுவில் சூரியன் மற்றும் அதன் கீழே சிங்க உருவமும் காணப்படுகிறது. மற்றொரு புறத்தில் 12 புள்ளிகளும், அதன் கீழ் 2 கால் மற்றும் 2 கையுடன் கூடிய உருவம் காணப்படுகிறது.

    இந்த நாணயம் வீரராயன் பணம் என்று பொதுவாக அழைக்கப்பட்டுஉள்ளது. இதுதவிர நேற்று மணலூரில் உள்ள ஒரு குழியில் சிறிய எலும்பு மற்றும் பழங்கால கற்களும் கிடைத்துள்ளன. மற்றொரு குழியில் பெரிய எலும்பு ஒன்றும் கிடைத்துள்ளது. இவை மனித எலும்புகளா அல்லது விலங்கின எலும்புகளா என்று ஆய்வு செய்தால் மட்டுமே முழு விவரமும் தெரிய வரும் என மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்துள்ளார். தற்போது நடைபெறும் அகழாய்வில் அடுத்தடுத்து ஏராளமான பொருட்கள் கிடைத்து வருவதால் தொல்லியல் அலுவலர்கள் மிக ஆர்வத்துடன் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இ-பாஸ் இல்லாமல் சென்னையில் இருந்து வருபவர்களின் விவரங்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறையினர் மூலம் வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அந்தந்த பரிசோதனை மையத்தில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இதில் சிவகங்கை மாவட்டத்தை சொந்த ஊராக கொண்ட மக்கள் தற்போது சென்னையில் இருந்து அதிகஅளவில் இங்கு வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் அவர்களின் விவரங்கள் குறித்து சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறையின் மூலம் சேகரிக்கப்பட்டு அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இவ்வாறு வரும் அவர்களில் பலர் இ-பாஸ் இல்லாமல் சென்னையில் இருந்து அங்குள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்காமல் சொந்த ஊர்களுக்கு வருகின்றனர். இதன் மூலம் தற்போது மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.

    இதேபோல் சென்னையில் இருந்து வரும் நபர்கள் தாங்களாகவே முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அல்லது சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-ல் தொடர்பு கொண்டு அவர்களின் விவரம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் இவ்வாறு வெளிமாவட்டத்தில் இருந்து வரும் அவர்கள் வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் சென்னையில் இருந்து வருபவர்களின் விவரங்களை பொதுமக்கள், தன்னார்வலர்கள் அல்லது அவர்களின் வீட்டின் அருகில் வசிப்பவர்கள் 1077 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    மேலும் பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்றி முககவசம் அணிய வேண்டும். இதுதவிர அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் முழுமையாக பின்பற்றி தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    திருப்புவனம் அருகே சிறுமியை கடத்திய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
    திருப்புவனம்:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா பகுதியை சேர்ந்த13 வயது சிறுமி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கடம்பகுடி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.

    இந்நிலையில் சிறுமி திடீரென மாயமானாள். இதுகுறித்து அச்சிறுமியின் தந்தை பழையனூர் போலீசில் புகார் செய்தார். விசாரணையில் அதே கிராமத்தைச் சேர்ந்த 18 வயது சிறுவன் ஒருவன் மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூருக்கு அந்த சிறுமியை அழைத்து சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் தேடுவதை அறிந்த 2 பேரும் கடம்பகுடி வந்தபோது திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பகுதியில் போலீசார் அவர்களை பிடித்தனர். மேலும் சிறுமியை கடத்திச் சென்றதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதாபானு வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்தார்.
    சிவகங்கை மாவட்டத்தில் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நபர்கள் மூலம் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் காரைக்குடி அருகே மாவட்ட எல்லை பகுதியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக பரிசோதனை செய்து வருகின்றனர்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டத்தில் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நபர்கள் மூலம் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் காரைக்குடி அருகே மாவட்ட எல்லை பகுதியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக பரிசோதனை செய்து கைகளில் அடையாளமிட்டு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

    சீனா நாட்டில் இருந்து பரவிய கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவ தொடங்கியதை அடுத்து கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் முதல்கட்டமாக டெல்லியில் நடைபெற்ற மாநாடு மூலம் கொரோனா பரவியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து சிவகங்கை மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை செய்தபோது சில நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தனர்.

    இந்நிலையில் இந்த ஊரடங்கில் சில தளர்வுகளை தொடர்ந்து மக்கள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியது. மேலும் பல்வேறு கடைகள் திறக்கப்பட்டு ஊரடங்கு தற்போது முழுமையாக தளர்வு செய்யும் வகையில் இருந்து வருகிறது. இதையடுத்து ஆரம்ப காலக்கட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் 10-க்கும் குறைவாக கொரோனா தொற்று எண்ணிக்கை கொண்ட மாவட்டமாக இருந்து, தற்போது வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து வருவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா தொற்றும் சதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 51 வயது நபரும், சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு நபரும் பலியாகினர்.

    இந்நிலையில் கொரோனா தொற்று எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட எல்லை பகுதியில் சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறையினர் மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி சிவகங்கை மாவட்ட எல்லையான திருப்புவனம், தேவகோட்டை, மானாமதுரை மற்றும் காரைக்குடி அருகே உள்ள மாவட்ட எல்லை பகுதியில் தற்போது அந்தந்த பகுதி போலீசாருடன் இணைந்து சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதன்படி காரைக்குடி அருகே புதுக்கோட்டை மாவட்ட எல்லை பகுதியான நேமத்தான்பட்டி பகுதியில் போலீசாருடன் இணைந்துள்ள புதுவயல் சுகாதாரத்துறையினர் அந்த பகுதியில் உள்ள பை-பாஸ் சாலையில் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களையும், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களின் வாகனங்களை நிறுத்தி அவர்கள் குறித்த விவரம் சேகரித்து வருகின்றனர்.

    மேலும் அவர்கள் என்ன காரணத்திற்காக இங்கு வந்துள்ளார்கள் என்றும் அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று உள்ளதா என்று பரிசோதனையை சுகாதாரத்துறையினர் செய்து அதன் பின்னர் அவர்களின் வலது கை மணிக்கட்டு பகுதியில் அடையாளமாக 2 சீல் வைத்து அனுப்பி வைக்கின்றனர். இதில் முதல் சீல் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் நபருக்கு எவ்வித கொரோனா அறிகுறியும் இல்லை என்பதை காட்டுகிறது. மற்றொரு சீல் பரிசோதனை செய்த நாளில் இருந்து 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தும் வகையில் தேதியை காண்பிக்கும் வகையில் வைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அவர்களை தொடர்ந்து கண்காணிக்கும் நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்

    இதுதவிர வெளியில் இருந்து வருபவர்களின் நெற்றியில் பரிசோதனை கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களை முக கவசம் அணிய வேண்டும் என்றும், அடிக்கடி கைககளை நன்றாக கழுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதுதவிர தற்போது சென்னை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு உயிர் பலியும் அதிகரித்து வருகிறது. எனவே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மக்கள் சென்னையில் வேலை, படிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தங்கி இருந்து மக்கள் தற்போது சொந்த மாவட்டத்தை நோக்கி படை எடுத்து வருகின்றனர். இதனால் தற்போது சிவகங்கை மாவட்டத்தில் அங்கிருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களையும் மாவட்ட எல்லை பகுதியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக பரிசோதனை செய்து அதில் கொரோனா இருக்கும் நபர்களை அங்கிருந்து தனியாக அழைத்து சென்று தனிமைப்படுத்தி சிவகங்கை அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் சிகிச்சைக்காக சேர்ப்பதற்கான நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    கீழடியில் அகழாய்வு பணியில் புதிதாக 2 மண் பானைகள், மனித மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடியில் தற்போது 6-வது கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி கீழடி மட்டுமின்றி அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

    கீழடியில் ஏற்கனவே தோண்டப்பட்ட குழிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் நேற்று 2 மண் பானைகள் கண்டெடுக்கப்பட்டன. இதுதவிர புதிதாக மீண்டும் ஒரு குழி தோண்டும் பணியும் நடைபெற்றது. கொந்தகையில் நடந்த பணியில் நேற்று புதிதாக மனித மண்டை ஓடு பாகங்கள் கிடைத்துள்ளன. மொத்தம் இதுவரை 12-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டன. ஒவ்வொரு முதுமக்கள் தாழியையும் மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் தொல்லியல் அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்ட ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதுவரை 3 முதுமக்கள் தாழிகள் ஆய்வு செய்யப்பட்டு அதன் உள்ளே உள்ள மனித எலும்புகள் மற்றும் சிறிய பொருட்கள் எடுக்கப்பட்டன.

    அகரத்தில் கவிழ்ந்த நிலையில் பானை மற்றும் அதன் அருகே உடைந்த நிலையில் மற்றொரு பானை, நத்தை ஓடுகள், சங்குவளையல்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. மணலூரில் சுடுமண் உலை, மண் திட்டு பகுதி ஆகியவை இருந்தது தெரியவந்தது.

    எனவே 4 இடங்களிலும் கூடுதலாக குழிகள் தோண்டி அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
    ×