search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூர்வாருதல்
    X
    தூர்வாருதல்

    சிவகங்கை மாவட்டத்தில் ஆறுகள், கால்வாய்களை தூர்வார கோரிக்கை

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் வரத்து கால்வாய்களை முழுமையாக தூர்வார வேண்டும் என்று பெரியாறு வைகை பாசன சங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் வைகை, பாம்பாறு, பாலாறு, தேனாறு, நாட்டாறு, உப்பாறு, சருகனியாறு, கிருதுமால், மணிமுத்தாறு, விருசுழியாறு என 10 சிற்றாறுகள் உள்ளன. மழைக் காலங்களில் பெய்யும் நீர் மேற்கண்ட ஆறுகள் வழியாக சென்று மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 968 கண்மாய்கள் மற்றும் 4 ஆயிரத்து 871 ஒன்றிய கண்மாய்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாய்கிறது. இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று சங்கிலி தொடர் போன்று அமைந்துள்ளது சிறப்பம்சமாகும். இந்த கண்மாய்கள் மூலம் சுமார் 2 லட்சத்து 83 ஆயிரம் வேளாண் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    கடந்த 25ஆண்டுகளுக்கு முன்பு மேற்கண்ட கண்மாய் மற்றும் ஆறுகளில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. இதன் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் வேளாண் பணிகள் மட்டும் முதன்மை பணிகளாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில் மாவட்டத்தில் ஆறுகள் முறையாக பராமரிக்காததாலும் உரிய கண்காணிப்பு இல்லாததால் ஆறுகள் மற்றும் கண்மாய்கள் முழுவதும் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஆறுகளின் தொடர்பு தடைப்பட்டு இருந்த இடம் தெரியாமல் மாயமாகி உள்ளது. இது தவிர, பாசன மற்றும் வரத்து கால்வாய்களும் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதில் வைகை ஆறு மட்டுமே தற்போது சிவகங்கை மாவட்டத்தில் உயிர்ப்புடன் இருந்து வருகிறது.

    எனவே இனி வரும் காலங்களில் வேளாண்மை பிரதான தொழிலாகவும், முதன்மை தொழிலாகவும் மாற வேண்டும் என்றால் ஆறுகள், கண்மாய்கள், குளங்கள் மட்டுமல்லாமல் வரத்து கால்வாய்களையும் முறையாக பராமரிக்க முன் வர வேண்டும் என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ஒருங்கிணைந்த 5 மாவட்ட பெரியாறு வைகை பாசன சங்க விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூறியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் வைகையை தவிர மீதமுள்ள 9 ஆறுகள் இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் முற்றிலும் அளிக்கப்பட்டு வருகிறது. ஆறுகள் அனைத்தும் பராமரிப்பில்லாமல் போனதால் கண்மாய்கள் வறண்டு போய் விவசாயம் அழிந்து வருகிறது. ஆறுகள் மற்றும் வரத்து கால்வாய்கள் உரிய பராமரிப்பு இல்லாததால் ஒவ்வொரு ஆண்டிலும் மாவட்டத்தில் சராசரி அளவு மழை பெய்ததாலும் கண்மாய்களுக்கு நீர் வரத்து இல்லாமல் உள்ளது.

    நீதி மன்ற உத்தரவின் பேரில் அண்மையில் மாவட்டத்தில் உள்ள ஒரு சில ஆறுகளில் குறைந்த தூரம் வரை தூர் வாரும் பணி மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து அனைத்து ஆறுகள் மற்றும் வரத்துக் கால்வாய்களையும் முழுமையாக தூர்வார வேண்டும். மேலும் ஆறுகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்றவும், மணல் கடத்தலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு சார்பில் போதிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஆறுகள் காப்பாற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×