search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூர்வார கோரிக்கை"

    • ஆர்.எஸ்.மங்கலத்தில் பாண்டிய மன்னன் கட்டிய கண்மாயை தூர்வார வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நதி நீர் இணைப்பை செயல்படுத்தியது இங்குள்ள பெரிய கண்மாய் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரத்தில் இருந்து காரைக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 35 கி.மீ. தூரத்தில் உள்ளது ராஜசிங்க மங்கலம். இந்த ஊர் பெயரை ஆர்.எஸ்.மங்கலம் என சுருக்கமாக அழைத்து பழகிவிட்டனர்.

    இந்த ஊரில் உள்ள கைலாச நாதர் கோவில், கலிய பெருமாள் கோவில், ராஜசிங்கப் பெருங்குளம் எனும் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் ஆகியவை புகழ் பெற்றவை. நீர் மேலாண்மையில் புகழ் பெற்ற பாண்டிய மன்னர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நதி நீர் இணைப்பை செயல்படுத்தியது இங்குள்ள பெரிய கண்மாய் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது.

    20 கி.மீ தூரமுள்ள இந்த கண்மாய்க்கு ''நாரை பறக்க முடியாத-48 மடைகள் கொண்ட கண்மாய்'' என்ற சிறப்பு பெயரும் உண்டு. இந்த கண்மாயில் பாசன வசதிக்காக சுமார் 1 கி.மீ தூரத்திற்குள் குறைந்தது ஓரிரு மடை வீதம் அமைய பெற்றுள்ளது.

    மற்றொரு சிறப்பு இந்த கண்மாயில் 1,205 மி.க. அடி தண்ணீரை தேக்க முடியும். சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. இந்த கண்மாய் மடைகள் பெயரில் செட்டியமடை, பெருமாள் மடை, புல்லமடை, செங்கமடை என பல ஊர்கள் உள்ளன.

    இந்த கண்மாய் பாசனத்தை நம்பி ஆர்.எஸ்.மங்கலம், செட்டியமடை, பிச்சனாக்கோட்டை, ரகுநாதமடை, நெடும்பு ளிக்கோட்டை, பொட்டக்கோட்டை, பனிக்கோட்டை, புலிவீர தேவ ன்கோட்டை, இருதயாபுரம், கீழக்கோட்டை, சிலுகவயல், இரட்டையூரணி, வில்லடி வாகை, புல்லமடை, வல்லமடை மட்டுமின்றி அருகில் உள்ள 72 சிறு கண்மாய் பகுதிகளான சோழாந்தூர், வடவயல், மங்கலம், அலிந்திக்கோட்டை உள்ளிட்ட பல கிராமங்களும் பாசன வசதி பெறுகின்றன.

    தற்போது கரைகளை பலப்படுத்தியும், மடை களை, கலுங்குகளை பராமரித்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் யானைப்பசிக்கு சோளப்பொறி கொடுத்தது போன்றது.

    ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்று சிறப்பு மிக்க ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயை மத்திய, மாநில அரசுகள் சிறப்பு கவனம் செலுத்தி தனியாக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து ஆண்டுதோறும் வற்றாமல் இருக்க, மழை நீர் கடலுக்குச் செல்லாமல் சேமிக்க, தமிழகத்திலேயே அதிகமான பரப்பளவு கொண்ட இந்த கண்மாயை முழுமையாக தூர்வார வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    ×