search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 34 பேருக்கு கொரோனா

    சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் மாவட்டத்தில் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூரில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 4 வீரர்கள் மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை மற்றும் 2 பெண்களும், காரைக்குடியை சேர்ந்த 4 ஆண்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இது தவிர சிவகங்கை மருத்துவ கல்லூரியில் பணியாற்றி வரும் பெண் ஊழியர் மற்றும் சிவகங்கை, தேவகோட்டை, பாகனேரி, திருப்பத்தூர், எஸ்.வி.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 34 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 14,594 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 261 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. 1,104 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. 134 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

    இந்தநிலையில் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் நேற்று 4 பெண்கள் உள்பட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. வத்திராயிருப்பு அருகே உள்ள குன்னூரை சேர்ந்த 16 வயது சிறுவன், கிருஷ்ணன்கோவிலை சேர்ந்த 36 வயது நபர், சாத்தூர் போத்திரெட்டியபட்டியை சேர்ந்த 43 வயது பெண், வடகரையை சேர்ந்த 28 வயது நபர், கோட்டூரை சேர்ந்த 30 வயது நபர், 26 வயது பெண், ஆமத்தூரை சேர்ந்த 54 வயது ஆண், இவரது 42 வயது மனைவி, 15 வயது மகள், 13 வயது மகன் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆமத்தூரை சேர்ந்த நபர் மட்டுமே முதலில் சென்னையில் இருந்து திரும்பி உள்ளார். இவர் மூலமே இவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. சிவகாசி வேலாயுதம் ரஸ்தாவை சேர்ந்த 58 வயது நபருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

    இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 272 ஆக உயர்ந்துள்ளது. இந்த மாவட்டத்தில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மட்டுமே மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதனால் தினசரி மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிய வேண்டியவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

    நேற்று முன்தினம் வரை 1,104 பேருக்கு முடிவுகள் தெரிய வேண்டி உள்ள நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் வேறு மையங்களில் மருத்துவ பரிசோதனை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 
    Next Story
    ×