search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் சுகாதாரத்துறையினர்
    X
    வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் சுகாதாரத்துறையினர்

    வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை

    சிவகங்கை மாவட்டத்தில் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நபர்கள் மூலம் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் காரைக்குடி அருகே மாவட்ட எல்லை பகுதியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக பரிசோதனை செய்து வருகின்றனர்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டத்தில் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நபர்கள் மூலம் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் காரைக்குடி அருகே மாவட்ட எல்லை பகுதியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக பரிசோதனை செய்து கைகளில் அடையாளமிட்டு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

    சீனா நாட்டில் இருந்து பரவிய கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவ தொடங்கியதை அடுத்து கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் முதல்கட்டமாக டெல்லியில் நடைபெற்ற மாநாடு மூலம் கொரோனா பரவியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து சிவகங்கை மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை செய்தபோது சில நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தனர்.

    இந்நிலையில் இந்த ஊரடங்கில் சில தளர்வுகளை தொடர்ந்து மக்கள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியது. மேலும் பல்வேறு கடைகள் திறக்கப்பட்டு ஊரடங்கு தற்போது முழுமையாக தளர்வு செய்யும் வகையில் இருந்து வருகிறது. இதையடுத்து ஆரம்ப காலக்கட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் 10-க்கும் குறைவாக கொரோனா தொற்று எண்ணிக்கை கொண்ட மாவட்டமாக இருந்து, தற்போது வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து வருவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா தொற்றும் சதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 51 வயது நபரும், சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு நபரும் பலியாகினர்.

    இந்நிலையில் கொரோனா தொற்று எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட எல்லை பகுதியில் சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறையினர் மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி சிவகங்கை மாவட்ட எல்லையான திருப்புவனம், தேவகோட்டை, மானாமதுரை மற்றும் காரைக்குடி அருகே உள்ள மாவட்ட எல்லை பகுதியில் தற்போது அந்தந்த பகுதி போலீசாருடன் இணைந்து சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதன்படி காரைக்குடி அருகே புதுக்கோட்டை மாவட்ட எல்லை பகுதியான நேமத்தான்பட்டி பகுதியில் போலீசாருடன் இணைந்துள்ள புதுவயல் சுகாதாரத்துறையினர் அந்த பகுதியில் உள்ள பை-பாஸ் சாலையில் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களையும், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களின் வாகனங்களை நிறுத்தி அவர்கள் குறித்த விவரம் சேகரித்து வருகின்றனர்.

    மேலும் அவர்கள் என்ன காரணத்திற்காக இங்கு வந்துள்ளார்கள் என்றும் அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று உள்ளதா என்று பரிசோதனையை சுகாதாரத்துறையினர் செய்து அதன் பின்னர் அவர்களின் வலது கை மணிக்கட்டு பகுதியில் அடையாளமாக 2 சீல் வைத்து அனுப்பி வைக்கின்றனர். இதில் முதல் சீல் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் நபருக்கு எவ்வித கொரோனா அறிகுறியும் இல்லை என்பதை காட்டுகிறது. மற்றொரு சீல் பரிசோதனை செய்த நாளில் இருந்து 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தும் வகையில் தேதியை காண்பிக்கும் வகையில் வைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அவர்களை தொடர்ந்து கண்காணிக்கும் நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்

    இதுதவிர வெளியில் இருந்து வருபவர்களின் நெற்றியில் பரிசோதனை கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களை முக கவசம் அணிய வேண்டும் என்றும், அடிக்கடி கைககளை நன்றாக கழுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதுதவிர தற்போது சென்னை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு உயிர் பலியும் அதிகரித்து வருகிறது. எனவே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மக்கள் சென்னையில் வேலை, படிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தங்கி இருந்து மக்கள் தற்போது சொந்த மாவட்டத்தை நோக்கி படை எடுத்து வருகின்றனர். இதனால் தற்போது சிவகங்கை மாவட்டத்தில் அங்கிருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களையும் மாவட்ட எல்லை பகுதியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக பரிசோதனை செய்து அதில் கொரோனா இருக்கும் நபர்களை அங்கிருந்து தனியாக அழைத்து சென்று தனிமைப்படுத்தி சிவகங்கை அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் சிகிச்சைக்காக சேர்ப்பதற்கான நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×