search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தில் சிறுவர்கள் உள்பட 18 பேருக்கு கொரோனா

    சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தில் சிறுவர்கள் உள்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர், சுவாச பொடி, மூலிகை டீ ஆகியவைகள் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாவட்டம் இருந்து வந்தது. பலர் குணமாகி வீடு திரும்பினர். இந்தநிலையில் இந்த மாவட்டத்தை சேர்ந்தவர் வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வருவதால் கொரோனா தொற்று பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

    நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த 2 ஆண்கள், கல்லல், காளையார்கோவில், திருப்பத்தூர் ஆகிய பகுதியைச் சேர்ந்த தலா ஒரு பெண்கள் வீதம் 3 பேருக்கும், தேவகோட்டை அருகே கண்ணமங்கலம், சிவகங்கை, சாலைக்கிராமம் பகுதியைச் சேர்ந்த 3 ஆண்களுக்கும், நாட்டரசன்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு தாய், அவரது 10 வயது மகள் மற்றும் 11, 13 வயது மகன்கள் ஆகியோருக்கும், இளையான்குடி அருகே கீழாயூரை சேர்ந்த 7 வயது சிறுமிக்கும் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள்.

    நேற்று மாவட்டத்தில் 2 சிறுவன், 2 சிறுமி உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 11,990 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 201 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. 475 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. 127 பேர் பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 4 தனிமைப்படுத்தும் முகாம்களில் 206 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சிவகாசி எழில்நகரை சேர்ந்த 39 வயது போலீஸ்காரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். இதே போன்று மீனம்பட்டியை சேர்ந்த 7 வயது சிறுவனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சாத்தூரை சேர்ந்த 26 வயது நபருக்கும், நடுசூரங்குடியை சேர்ந்த 28 வயது நபருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர்கள் இருவரும் சென்னையில் இருந்து திரும்பியவர்கள். சாத்தூர் டிரான்ஸ்போர்ட் காலனியை சேர்ந்த 27 வயது நபரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து திரும்பி உள்ளார்.

    இதன் மூலம் இந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 206 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களால் தான் இந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    Next Story
    ×