search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூரிய சக்தியில் இயங்கும் பம்புசெட்
    X
    சூரிய சக்தியில் இயங்கும் பம்புசெட்

    சூரிய சக்தியில் இயங்கும் பம்பு செட் அமைக்க மானியம்

    சூரிய சக்தியில் இயங்கும் பம்புசெட் அமைக்க 70 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின்கீழ் வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாய பயன்பாட்டிற்கான திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் சூரிய சக்தியில் இயங்கும் சோலார் பம்புசெட்டுகளை 70 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நடப்பு 2020-21-ம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்திற்கு 640 சோலார் பம்புசெட்டுகள் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 5 எச்.பி. முதல் 10 எச்.பி. வரை சோலார் பம்புசெட்டுகள் அமைத்துத்தரப்படும். 5 எச்.பி. சோலார் பம்புசெட்டுகள் அமைக்க அதிக பட்சமாக ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 330-ம், 7.5 எச்.பி. சோலார் பம்பு செட் அமைக்க அதிக பட்சமாக ரூ.3 லட்சத்து 67ஆயிரத்து 525 மற்றும் 10 எச்.பி. சோலார் பம்பு செட் அமைக்க அதிகபட்சமாக ரூ.4 லட்சத்து 39ஆயிரத்து 629 செலவாகும். இதில் 70 சதவீத தொகை அரசு மானியமாக வழங்கப்படும்.

    ஏற்கனவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இலவச மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ள விவசாயிகள் அவர்களுடைய முன்னுரிமையை துறக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் தங்களுக்குரிய இலவச மின் இணைப்பு முறை வரும்பொழுது சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான சம்மத கடிதத்தினை சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் வழங்க வேண்டும்.

    இத்திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ள இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, சிவகங்கை மற்றும் திருப்புவனம் வட்டார விவசாயிகள் சிவகங்கை-தொண்டி ரோட்டில் அமைந்துள்ள சிவகங்கை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், தேவகோட்டை, கண்ணங்குடி, கல்லல், எஸ்.புதூர், சாக்கோட்டை மற்றும் திருப்பத்தூர் வட்டார விவசாயிகள் காரைக்குடி சூடாமணிபுரம் புகழேந்தி தெருவில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும் தொடர்புகொண்டு விண்ணப்பங்களை கொடுத்து பயனடையலாம்.

    இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×