search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெட்டுக்கிளி
    X
    வெட்டுக்கிளி

    வெட்டுக்கிளி தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை- கலெக்டர் தகவல்

    சிவகங்கை மாவட்டத்தில் வெட்டுக்கிளி தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் ஜெயகாந்தன் கூறியுள்ளார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் வேளாண் மற்றும் தோட்டக் கலைப் பயிர்களில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தி மகசூல் இழப்பை தவிர்க்க அவ்வப்போது வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தற்போது வடமாநிலங்களில் பாலைவன வெட்டுக்கிளி படை பல்வேறு பயிர்களைத் தாக்கி சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து சிஸ்டோசெர்கா கிரிகேரியா என்று அழைக்கப்படும் பாலை வன வெட்டுக்கிளிகள் நடப்பாண்டில் ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பாலைவனப் பகுதிகளை கடந்து ராஜஸ்தான் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது.

    மத்திய வேளாண் அமைச்சகத்தின் மூலம் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் அறிவிப்புகள் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என்பதால் விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஆங்காங்கே தென்படும் வெட்டுக்கிளிகள் உள்நாட்டு வெட்டுக்கிளிகள் என ஆய்வு செய்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருந்தபோதும் வேளாண் துறை மூலம் தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதனை மீறி எதிர்பாராத சூழலில் பாலைவன வெட்டுக்கிளிகளின் ஊடுருவல் ஏற்படுமாயின் அதனை எதிர்கொள்ளும் வகையில் பரிந்துரைக்கப்பட்ட உயிர் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன மருந்துகள் மற்றும் தெளிப்பு உபகரணங்கள் போதிய அளவு இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஒருவேளை பாலைவன வெட்டுக்கிளி தாக்குதல் ஏற்பட்டால் விவசாயிகள் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்களை ஆலோசித்த பிறகு அவற்றை அழிக்கும் முறைகளை பின்பற்ற வேண்டும்.

    எனவே சிவகங்கை மாவட்ட விவசாய பெரு மக்கள் வயல்வெளிகளில் காணப்படும் வெட்டுக்கிளிகளை கண்டு பாலைவன வெட்டுக்கிளிகள் என அச்சப்பட வேண்டாம். வெட்டுக்கிளிகள் கூட்டமாக தென்பட்டால் அவற்றை புகைப்படம் எடுத்து உழவன் செயலியில் பூச்சிநோய் கண்காணிப்பு பிரிவில் பதிவேற்றம் செய்தும், அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டும் ஆலோசனை பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×