என் மலர்
சிவகங்கை
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள தாணிச்சாஊரணி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 42). டிப்பர் லாரி டிரைவர். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
பாலமுருகன் அடிக்கடி மது குடித்து வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் அவருக்கும், செல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து செல்வி கணவரிடம் கோபித்துக்கொண்டு சித்தானூர் சமத்துவபுரத்தில் உள்ள தனது தந்தை பூமிநாதன் (65) வீட்டிற்கு வந்துவிட்டார்.
நேற்று இரவு சுமார் 11.30 மணி அளவில் பாலமுருகன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். அவர் செல்வியை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி மாமனார் பூமிநாதன், மாமியார் முனியாத்தாள் (58) ஆகியோரிடம் வாக்கு வாதம் செய்தார். அவர்கள் நீ மது குடித்து வந்திருப்பதால் இப்போது அனுப்ப முடியாது, காலையில் வா பேசிக்கொள்ளலாம் என கூறினர்.
ஆனால் இதனை பாலமுருகன் ஏற்க மறுத்தார். அவர் தொடர்ந்து மாமனார் மற்றும் மனைவியுடன் தகராறு செய்தார். இதனைத் தொடர்ந்து பூமிநாதன் மற்றும் குடும்பத்தினர் வீட்டுக்குள் சென்றுவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பாலமுருகன் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு மீண்டும் வந்தார். அவர் வீட்டு வாசலில் தொடர்ந்து சத்தம் போடவே, பூமிநாதன் வெளியே வந்தார். அப்போது பாலமுருகன் கத்தியால் அவரை குத்தினார். இதில் பூமிநாதனுக்கு வயிறு, மார்பு உள்ளிட்ட 3 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு மனைவி முனியாத்தாள், மகள் செல்வி ஆகியோர் ஓடி வந்தனர்.
அவர்கள் பாலமுருகனை தடுக்க முயன்றனர். அப்போது 2 பேரையும் பாலமுருகன் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் அவர்களும் பலத்த காயம் அடைந்தனர். இதற்கிடையில் இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதனை பார்த்ததும் பாலமுருகன் மோட்டார் சைக்கிளில் தப்பிஓடிவிட்டார்.
வீட்டு முன்பு கணவன்- மனைவி மற்றும் மகள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக 3 பேரையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் பூமிநாதன் இறந்துவிட்டார். முனியாத்தாள், செல்வி ஆகியோர் தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். செல்வியின் நிலை கவலைக்கிடமாக இருந்தால் முதல்உதவி சிகிச்சைக்கு பிறகு அவர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தேவகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சிவக்குமார், தாலுகா இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தப்பி ஓடிய பாலமுருகனை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் வாசிவம் தலைமையிலான போலீசார் தாணிச்சா ஊரணியில் உள்ள பாலமுருகன் வீட்டுக்கு விரைந்தனர்.
அங்கு பாலமுருகன் இருப்பது தெரிந்ததும் சுற்றிவளைத்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தி கத்தி மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






