என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிவகங்ககை அருகே உள்ள தட்டட்டி ஊராட்சியில் கணினி பட்டா திருத்த முகாம் நடந்தது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் தட்டட்டி ஊராட்சியிக்கு உட்பட்ட கொரட்டி, தட்டட்டி, துலாவூர் ஆகிய பகுதியச் சேர்ந்த கிராம மக்களுக்கான கணினி பட்டா திருத்த முகாம் நடந்தது. 

    வட்டாட்சியர் வெங்க டேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து ஆகியோரின் ஆலோசனை யின்படி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமையில் இந்த முகாம் நடந்தது. 

    இதில் இலவச பட்டா, பட்டா மாறுதல்,கணினி திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளாக 12 மனுக்கள் பெறப்பட்டன. அதில் உடனடியாக 3 மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டது.  மீதமுள்ள மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட இடத்தில் வருவாய்த்துறையினர் நேரடியாக விசாரணை நடத்தி அதற்கும் விரைந்து தீர்வு காணப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. 

    இந்த நிகழ்ச்சியில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் உமா, வார்டு உறுப்பினர்கள், வருவாய் ஆய்வாளர் அங்காள ஈஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் முத்துகிளி, ஆலம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அன்னபூரணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டையில் போலீஸ் சூப்பிரண்டிடம் புதிதாக பொறுப்வாபேற்ற சார்பு ஆய்வாளர்கள் வாழ்த்து பெற்றனர்.
    தேவகோட்டை 

    சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட தலைமை காவலர்கள் சிறப்பு சார்பு ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று உள்ளனர்.

    தமிழக காவல் துறையில் 1997 முதல் பேட்ச் தலைமை காவலராக பணியாற்றிய சுமார் 5000-க்கும் மேற்பட்ட வர்களுக்கு தற்போது சிறப்பு சார்பு ஆய்வாளராக அரசு பதவி உயர்வு வழங்கி உள்ளது.
    சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட தலைமை காவலராக பணியாற்றிய காவலர்களும் சிறப்பு சார்பு ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றனர். அவ்வாறு பதவி உயர்வு பெற்ற தலைமை காவ லர்கள் சிறப்பு சார்பு ஆய்வாளர் சீருடை அணிந்து அந்தந்த உட் கோட்டத்தில் உள்ள துணை கண்காணிப்பா ளர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    அதன்படி தேவகோட்டை கோட்டத்தில் 7 ஆண்கள், 3 பெண்கள் சிறப்பு சார்பு ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றனர். இவர்கள் தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) கார்த்திகேயனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
    கம்பனூர் ஊராட்சியில் மஞ்சு விரட்டு நடந்தது.
    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா  கல்லல் ஒன்றியம்  கம்பனூரில்  வாரிகருப்பர் அந்த நாச்சிஅம்மன் கோவில்  திருவிழாவை முன்னிட்டு 120-ம் ஆண்டு மாபெரும் பாரம்பரியமிக்க விரட்டு மஞ்சுவிரட்டு நாட்டார்கள் தலைமையில் நடைபெற்றது. 

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக விரட்டு மஞ்சு விரட்டு நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு  கண்மாய் மற்றும் வயல்வெளிகளில் பாரம்பரியமிக்க விரட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். 

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கம்பனூர் நாட்டார்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். முன்னோர்களின் பாரம்பரியம் மாறாமல் அனைத்து வீடுகளிலும் வந்திருந்த மாடுபிடி வீரர்க ளுக்கும், விருந்தினராக வந்த உறவுகளுக்கும் விருந்து உபசாரம் நடைபெற்றது.

    காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் தலைமையில் நாச்சியாபுரம் காவல் நிலையத்தை சேர்ந்த 20ககும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    இளையான்குடி கல்லூரியில் தண்ணீர் சேமிப்பு கருத்தரங்கம் நடந்தது.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம். இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர்உசேன் கல்லூரியில் மத்திய அரசின் ஜல் சக்தி அபியான்  திட்டத்தின் படி,  கல்லூரி உன்னத் பாரத் அபியான்,  வேதியியல் துறை இணைந்து தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்த போட்டிகள் நடத்தப்பட்டது. 

    கல்லூரி உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பா ளர் சுல்த்தான் செய்யது இப்ராஹிம் வர வேற்றார். கல்லூரி செயலர்   ஜபருல்லாகான் தலைமை தாங்கினார். முதல்வர் அப்பாஸ் மந்திரி, ஒருங்கி ணைப்பாளர்  முஸ்தாக் அஹமதுகான், வேதியியல்துறைத்தலைவர்  செய்யது அபுதாஹிர் ஆகியோர் பேசினர். 

    மாணவ-மாணவியர் தண்ணீர் சேமிப்பின் அவசியம் குறித்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து பல்தவேறு தலைப்புகளில் நடந்த போட்டிகளில் மாணவ -மாணவியர் கலந்து கொண்டனர். 

    வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்ப ட்டன. இந்த நிகழ்வில் கல்லூரி ஆட்சிக்குழு பொரு ளாளர் மற்றும் தலைவர் (பொறுப்பு)  அப்துல் அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர்  அபூபக்கர் சித்திக், வேதியியல்துறை இணைப்பேராசிரியர்  ஜபருல்லாகான், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர்  ஷபினுல்லாகான் உள்ளிட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். 

    உன்னத் பாரத் அபியான், இணை ஒருங்கிணைப்பாளர்  ஜெயமுருகன் நன்றி கூறி னார். நிகழ்வினை வேதியியல்துறை உதவிப்பேராசிரியை  அப்ரோஸ், ர்சனா பர்வீன் ஆகியோர் ஒருங்கி ணைத்தனர்.

    தேவகோட்மாடை அருகே மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    தேவகோட்டை

    தேவகோட்டை அருகே வெங்களூர் கிராமத்தில் மாட்டுவண்டி மற்றும் குதிரைவண்டி பந்தயம் நடந்தது. 

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே  உள்ள வெங்களூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் மதுஎடுப்பு விழாவை முன்னிட்டு இன்று காலை மாட்டுவண்டி மற்றும் குதிரைவண்டி பந்தயங்கள் நடந்தன. 

    மாட்டுவண்டியில் 2 பிரிவுகளாக பெரியமாடு, சின்னமாடு என நடந்த பந்தயத்தில் பெரியமாடு போக வர 8 மைல் தூரமும், சின்னமாட்டுக்கு போக வர 6 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  வெங்களூர்-தேவ கோட்டை சாலையில் இந்த போட்டி நடந்தது.

     20-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, தேனி மாவட்ட மாடு மற்றும் குதிரைகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் முதலாவதாக சிவகங்கை மாவட்டம் வெங்களூர் கே.ஆர்.அம்பலம், 2-வதாக ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம், 3-வதாக சிவகங்கை மாவட்டம் சாத்தம்பத்தி, 4-வதாக தானாவயல் மாட்டுவண்டியும்,  சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் முதலாவதாக தேனி மாவட்டம் கம்பம் கோம்பை, 2-வதாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பிரசாத் மொபைல், 3-வதாக கல்லூரணி பாலாஜி, 4-வதாக கடத்தி மணி அம்பலம் மாடுகளும் வெற்றி பெற்றன. 

    குதிரைவண்டி பந்தயத்தில் முதலாவதாக சிவகங்கை மாவட்டம் வெங்களூர் கேஆர்அம்பலம், 2-வதாக திருச்சி அருண், 3-வதாக சிவகங்கை மாவட்டம் கண்டதேவி மருதுபிரதர்ஸ், நான்காவது தஞ்சாவூர் குண்டுமணி குதிரைகள் வெற்றிபெற்றன.

    வெற்றிபெற்ற மாடு மற்றும் குதிரைகளுக்கு மாலை, வேட்டி, துண்டு மற்றும் ரொக்கபரிசுகள் வழங்கப்பட்டன. இந்த பந்தயத்தை சாலையின் இருபுறமும் சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கண்டுகளித்தனர்.
    சிவகங்கை நகர்மன்ற தலைவருக்கு, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்தார்.
    சிவகங்கை

    சிவகங்கை தி.மு.க. நகரசெயலாளர் ஆனந்தன் காங்கிரஸ் கூட்டணியுடன் நகர்மன்ற தலைவராக பதவியற்றார். அவரை வரவேற்று வாழ்த்து தெரிவிக்க நேற்று முன்னாள் மத்தியமந்திரி ப.சிதம்பரம் வருகை தந்தார்.

    வருகைதந்த ப.சிதம்பரத்துக்கு, நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் மற்றும் கவுன்சிலர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் நகர்மன்ற தலைவரிடம் கோரிக்கை மனுவை அளித்தார். 

    அதில் சிவகங்கை கோகுலேகால் தெருவில் அமைந்துள்ள டிரஸ்ட்டுக்கு சொந்தமான மிகவும் பழமையான நூலகத்தை புதுப்பிக்க நகராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.  இந்த நூலகம் தென்பகுதி மக்களுக்காக முதன்முதலில் உருவாக்கப்பட்டது.  மகாத்மா காந்தி இந்த நூலகத்துக்கு வந்து தங்கி படித்து உள்ளார் என்ற வரலாறு உள்ளது.  இதை கவனத்தில் கொண்டு இந்த நூலகம் கட்டிடத்தை புதுப்பிக்க நகராட்சி தலைவர், ஆணையாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோரிடம் ப.சிதம்பரம்  கோரிக்கை மனுவை அளித்தார்.

    இந்த நிகழ்வில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, சிவகங்கை நகர் மன்ற துணை தலைவர் கார்கண்ணன், கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், அயூப்கான், கார்த்திகேயன், சரவணன், ராமதாஸ், மகேஷ், சீமான் விஜயக்குமார், சண்முகராஜன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    நடத்தை சந்தேகத்தில் மனைவியை கணவனே இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற சம்பவம் தேவகோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்டதேவி சாலையில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    அந்த முகாமைச் சேர்ந்தவர் நிமல் ராஜ் (வயது48). இவரது மனைவி துஷ்யேந்தினி (36). இவர்களுக்கு வினிதா என்ற மகளும், வினித் என்ற மகனும் உள்ளனர்.

    வினிதாவுக்கு திருமணமாகி தேவகோட்டை கண்ட தேவி சாலை ராம்நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது கணவருடன் வசித்துவருகிறார். வினித் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நிமல்ராஜ் அகதிகள் முகாமிலேயே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாக மனைவி துஷ்யேந்தினியும் கடையை கவனித்து வந்தார். கணவர் இல்லாத நேரத்தில் துஷ்யேந்தினியே கடையில் வியாபாரம் செய்வார்.

    அப்போது கடைக்கு வருபவர்களிடம் பேசியபடி இருந்துள்ளார். இதனால் துஷ்யேந்தினியின் நடத்தையில் நிமல்ராஜுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அது தொடர்பாக கேட்டபடி இருந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இன்று காலையும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கணவரிடம் கோபித்து கொண்டு தேவகோட்டை ராம்நகரில் உள்ள மகள் வீட்டிற்கு துஷ்யேந்தினி சென்றார். கணவர் நிமல்ராஜும் அங்கு சென்று விட்டார்.

    மகள் வீட்டில் வைத்து மனைவியிடம் தகராறு செய்திருக்கிறார். அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நிமல் ராஜ் வீட்டில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து மனைவி துஷ்யேந்தினி தலையில் அடித்தார்.

    இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. படுகாயம் அடைந்து துஷ்யேந்தினியை அவரது மகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் சேர்ந்து அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    ஆனால் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே துஷ்யேந்தினி பரிதாபமாக இறந்தார். துஷ்யேந்தினி அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து தேவகோட்டை நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கார்த்திகேயன், நகர் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்பு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் இருந்த துஷ்யேந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து துஷ்யேந்தினியை அடித்துக் கொன்ற கணவர் நிமல்ராஜை கைது செய்தனர். நடத்தை சந்தேகத்தில் மனைவியை கணவனை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற சம்பவம் தேவகோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருப்பத்தூர் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் அருகே உள்ள கல்வெட்டு மேட்டு பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் காரையூர் தமிழ்நம்பி, கண்டவராயன்பட்டி சோமசுந்தரம் ஆகியோரின் ஏற்பாட்டில் மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.

    ஒன்றிய தலைவர் சண்முகவடிவேல், நகரச் செயலாளர் கார்த்திகேயன், திருப்பத்தூர் பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி நாராயணன், துணை சேர்மன் காண் முகமது முன்னிலை வகித்தனர்.  அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, முன்னாள் அமைச்சர் தென்னவன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    இந்த மஞ்சுவிரட்டுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் வரவழைக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் காயமடைந்த வீரர்களுக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில், மாவட்ட மகளிரணி பவானி, நகர இளைஞரணி  அமைப்பாளர் பஷீர் அகமது, இளைஞரணி துணை அமைப்பாளர்களான ஜான், முத்துக்குமார், பழக்கடை அபுதாஹீர், மனோகரன், மற்றும் ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
    காரைக்குடியில் அ.ம.மு.க. சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடந்தது.
    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மே தின பொதுக்கூட்டம் பாண்டியன் தியேட்டர் திடலில் நடந்தது. 

    சிவகங்கை மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி தலைமை தாங்கினார்.  தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார்.கண்ணங்குடி ஒன்றிய தலைவர் சரவண மெய்யப்பன் வரவேற்றார்.

    இதில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    சாமானியர்களால் ஆரம்பிக்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களின் அடிப்படை கோரிக்கையான 8 மணிநேர வேலையை போராடி பெற்றது. உழைப்பாளர் வர்க்கம். போராடினால் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் தினமே மேதினம்.துரோகத்தை எதிர்த்து, அச்சுறுத்தலை எதிர்த்து ஆரம்பித்த இயக்கம்.எந்த எதிர்பார்ப்புமின்றி பணபலம், அதிகாரபலத்தை எதிர்த்து  போராடிக் கொண்டிருப்பவர்கள் நாங்கள். 

    அம்மாவின் உண்மையான தொண்டர்கள் நாங்கள்தான். மீண்டும் அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவோம்.

    திருந்தியிருப்பார்கள் என்று நினைத்து மக்கள் தி.மு.க.விற்கு வாக்களித்துள்ளார்கள்.போக்குவ ரத்து தொழிலாளர்களின் ஊதிய கோரிக்கை, நிலுவை பஞ்சப்படி, பென்சன், அகவிலைப்படி நிறுத்திவைப்பு போன்ற வற்றை எப்போது நிறைவேற்றுவீர்கள்? 

    வாரிசு பணிநியமனம் எப்போது? விருப்பஒய்வு, பணியின்போது இறப்பு பலன்களை எப்போது வழங்குவீர்கள்? மின்சார வாரியத்தில் ஊதிய உயர்வை நிலுவை தொகையோடு எப்போது வழங்குவீர்கள்?
    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறிதிகளை நிறைவேற்றுவது எப்போது? தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது.குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பில்லை.இந்த கூட்டத்திற்கு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த நிர்வாகிகளை பாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    அ.தி.மு.க. மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளராக பதவி வகித்து ராஜினாமா செய்த வெங்களூர் வீரப்பன்  டி.டி.வி. தினகரன் முன்னைலை யில் அ.ம.மு.க.வில் இணைந்தார். இதில் மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் இறகு சேரி முருகன், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் அன்பரசன், எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் வெங்கடேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் பழனி பெரியசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் விமல், பேரவை மாவட்ட தலைவர் ஊரவயல் ராமு, மாவட்ட பேரவை செயலாளர் ராஜேந்திரன், தேவ கோட்டை நகர செயலாளர் கமலக்கண்ணன், சாக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் கார்த்தி கேயன், நிர்வாகி மரிங்கிப்பட்டி ரமேஷ், மங்களம் பூமி, பந்தா பாண்டி உள்பட நகர, ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள், மகளிரணியினர், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.காரைக்குடி நகர செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.
    காரைக்குடி செஞ்சை பள்ளிவாசலில் இப்தார் நோன்பில் கலெக்டர் பங்கேற்றார்.
    காரைக்குடி

    சிவகங்பகை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பழமை வாய்ந்த செஞ்சை பள்ளிவாசல் ஜமாத் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. 
    ஜமாத் தலைவர் ஹனிபா தலைமை தாங்கினார்.செயலாளர் அலி மஸ்தான் வரவேற்றார்.  கலெக்டர்  மதுசூதன் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    அவர் பேசுகையில், ரமலான் மாதம் நோன்பை கடைபிடிக்கும் இஸ்லாமிய பெருமக்கள் தானதர்மங்கள் செய்து வருகின்றனர்.மேலும் ரத்ததானம் செய்வதிலும், பேரிடர் காலங்களில உதவுவதிலும் இஸ்லாமிய மக்கள் சிறப்பாக செய்துவருகின்றனர்.அவர்களுக்கு மனமார்ந்த ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    இதில் காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்க வாசகம், நகராட்சி ஆணையாளர் லட்சுமணன், சிவகங்கை மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் கலீல்ரஹ்மான், காரைக்குடி ஐக்கிய ஜமாத் தலைவர் அப்துல்ரஹ்மான், நகர இஸ்லாமிய வியாபாரிகள் சங்கத் தலைவர் அப்பாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்காவிட்டால் 10 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சிவகங்கை

    சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குறைந்தபட்ச ஊதியச்சட்டத்தின்படி தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியா ளர்களுக்கு 1.4.2022முதல் வழங்கப்படவேண்டிய அகவிலைப்படி கணக்கீடு செய்யப்பட்டு சென்னை தொழிலாளர் ஆணையரால் வெளியிடப்பட்டுள்ளது.மேற்படி உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை அரசு பல்வேறு தொழில்களுக்கு நிர்ணயித்துள்ள அடிப்படை ஊதியத்துடன் வழங்க வேண்டும்.

    மேலும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஏப்ரல் 2022 மாதம் முதல் வழங்கப்பட வேண்டும்.கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,507 மற்றும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ரூ.6,708 ஆகமொத்தம் ரூ.10,205 வழங்கப்பட வேண்டும்.

    ஓட்டல் மற்றும் ரெஸ்டா ரண்ட்டில் பணிபுரியும் சப்ளையர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.6,127 மற்றும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ரூ.6,708 ஆக மொத்தம் ரூ.12,835 வழங்கப்பட வேண்டும்.

    செக்யூரிட்டி கார்டு களுக்கு அடிப்படை  ஊதியம் ரூ.7,996 மற்றும் உயர்ந்தப்பட்ட அக விலைப்படி ரூ.6,554 ஆக மொத்தம் ரூ.14,550 வழங்கப்பட வேண்டும்.

    பொது மோட்டார் போக்குவரத்து துறையில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9,118, அகவிலைப்படி ரூ.7,678 ஆக        மொத்தம் ரூ.16, 796-மும், நடத்துனர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8,907, அகவிலைப்படி ரூ.7,678 ஆக மொத்தம் ரூ.16,585-மும் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று செங்கல் சூளை ,சினிமா தியேட்டர்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், மருத்துவமனையில் பணி புரியும் தொழிலாளர்கள், அரிசி ஆலை போன்ற 72 வகையான தொழில்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை அரசு நிர்ணயித்துள்ள அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்க வேண்டும்.

    இந்த        அகவிலைப்படி    1.4 . 2022 முதல் நடைமுறைக்கு வருகிறது. மேற்குறிப்பிட்ட தொழில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அகவிலைப்படியை அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர்களுக்கு அரசால் நிர்ண யிக்கப்பட்டுள்ள அடிப்படையில் சேர்த்து வழங்க வேண்டும்.

    அவ்வாறு வழங்கப்படாத நிறுவனங்கள் மீது  குறைந்தபட்சக் கூலி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு மதுரை இணை ஆணையர் முன்பு சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர் மூலம் கேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு பணியாளர்களுக்கு தர வேண்டிய வித்தியாச தொகை தொழிலா ளர்களுக்கு பெற்று வழங்கப்படும்.

    மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது 10 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும்.

    மேலும் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்)  சட்டத்தின்படி தேசிய விடுமுறை தினமான மேதினத்தன்று (1.5 .2002)   கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.  

    இந்த தினத்தில்  விடுமுறை அளிக்காமல் ஊழியர்களை வேலை செய்ய அனுமதித்தால் அவர்களுக்கு வேலை அளிப்பவர்கள் இரட்டிப்பு சம்பளம் மற்றும் வேறு ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சிவகங்கை அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா நடந்தது.
    சிவகங்கை

    சிவகங்கை அருகே  திருமலை கிராமத்தில் மலைக்கொழுந்தீஸ்வரர் கோவில் அருகே மடை கருப்பசாமி கோவில் உள்ளது.  நூற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா கொண்டாடப்படும்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக விழா கொண்டாடப்படவில்லை.  திருமலை கண்மாயில் உள்ள 4 மடைகளில் (நீர் திறப்பிற்கான பகுதி) காராலமடைக்கு சிறப்பு செய்யும் விதத்தில் இவ்விழா நடத்தப்படுகிறது.மேலும் திருமண தடை, மழை பெய்து விவசாயம் செழிக்க போன்ற வேண்டுதலுக்காக விழா கொண்டப்படுவது வழக்கம்.

     இக்கோவில் சித்திரை திருவிழாவிற்கு ஆண்கள் மட்டும் சித்திரை முதல் தேதியில் இருந்து விரதம் இருப்பார்கள். திருவிழா தொடங்கியதும்  திருமலையில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் ஊர்வலமாக மடை கருப்பசாமி கோவிலுக்கு புறப்பட்டனர். 

    நேர்த்திக்கடன் செலுத்த வேண்டிய அரிவாள், மணி, கோவில் காளைகள், கிடாய்கள் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டு  கொழுந்தீஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தம் எடுத்து வந்து மண்பானையில் பொங்கலிடப்பட்டது. தொடர்ந்து ஆடுகள் பலியிடப்பட்டன.

    முதலில் கிராமத்து ஆடு, அடுத்து பூசாரி ஆடு என 325ஆடுகள் வரிசையாக பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டு பச்சரிசி சோற்றை உருட்டி கறிக்குழம்புடன் பிரசாதம் வழங்கினர்.

    இங்கு சமைத்த உணவுகளை சாப்பிட்டு காலி செய்த பிறகே பக்தர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பது நம்பிக்கை. இதனால் அதிகாலை  3  மணிவரை பக்தர்களுக்கு கறிவிருந்து பரிமாறப்பட்டது.

    இந்த விழாவில் மதுரை, காரைக்குடி, திருப்புத்தூர், சிவகங்கை, மேலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் கலந்து கொண்டனர். பலியிட்ட 325 ஆடுகளின் தலைகள் விழாவிற்கு வந்திருந்த ஒரு பிரிவினரிடம் வழங்கப்பட்டது. 




    ×