என் மலர்
சிவகங்கை
- ரூ.40 லட்சத்தில் அமைக்கப்பட்ட கால்நடை மருந்தகத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
- 79 கால்நடை மருந்தகங்களும், 47 கிளை கால்நடை மருந்தகங்களும் செயல்பட்டு வருகின்றன.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் 79 கால்நடை மருந்தகங்களும், 47 கிளை கால்நடை மருந்தகங்களும் செயல்பட்டு வருகின்றன.
ஆலங்குடி, தேவகோட்டை, பனங்குடி, பி.நெற்புகப்பட்டி, நடராஜ புரம் மற்றும் செம்பனூர் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில், ஆலங்குடி ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு புதிய மருந்தகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் 20 பயனாளி களுக்கு செறிவூட்டப்பட்ட தாதுஉப்பு கலவை மற்றும் 20 பயனாளிகளுக்கு நீண்ட கால பயன்பாட்டிற்கு நறுக்கிய பசுந்தீவன 40 கிலோ எடை கொண்ட புல் மூட்டைகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
இதில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் நாக நாதன், ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்கள் சொர்ணம் அசோகன் (கல்லல்), சண்முகவடிவேலு (திருப்பத்தூர்), மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி உறுப்பி னர் செந்தில்குமார், உதவி இயக்குநர் பாலசுப்பி ரமணியன், பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளா; ரமணன், ஊராட்சி மன்ற தலைவர் மலைச்சாமி, திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அழகுமீனாள், இளங்கோ வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- குறிச்சி காசி விஸ்வநாதர் கோவிலில் ஏராளமானோர் தர்ப்பணம் செய்தனர்.
- இங்குள்ள சிவலிங்கத்திற்கு பக்தர்களே அபிஷேகம் செய்து வழிபடலாம்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள குறிச்சி காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
இன்று காலை 6 மணி முதல் கோவிலுக்குள் திரண்ட பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். இதில் பங்கேற்றவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தர்ப்பண பொருட்கள் எள், பூ, வாழைப்பழம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் உள்ள அன்னபூரணி அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இங்குள்ள சிவலிங்கத்திற்கு பக்தர்களே அபிஷேகம் செய்து வழிபடலாம். அதன்படி ஏராளமான பக்தர்கள் இன்று வழிபட்டனர். மதுரை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் இன்று சாமி தரிசனம் செய்தனர்.
- ஆடிக்களரி திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
- இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசு த்தொகை வழங்கப்பட்டன.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காளாப்பூர் கொக்கன் கருப்பர் சுவாமி கோவில் ஆடிக்களரி திருவிழாவை முன்னிட்டு 26-ம் ஆண்டு இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
இந்த பந்தயத்தில் பெரியமாடு 8 மைல் தூரமும், சின்னமாடு 6 மைல் தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டது. முதலில் 11 பெரியமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது. முன்னாள் தடயவியல் துறை இயக்குநர் (ஓய்வு) விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. அருணகிரி ஆகியோர் கொடி அசைத்து பந்தயத்தை தொடங்கி வைத்தனர். பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல்பரிசாக பரவை அம்மாபொண்ணு கார்த்திகேயனுக்கு ரூ.15 ஆயிரத்து 26ம், 2-ம் பரிசாக சிங்கம்புணரி காஞ்சனாதேவிக்கு ரூ.14 ஆயிரத்து 26, 3-ம் பரிசாக பட்டிவீரன்பட்டி முரளிதரனுக்கு ரூ.13 ஆயிரத்து 26 ம், 4-ம் பரிசாக மட்டங்கிபட்டி காவியாவுக்கு ரூ.6 ஆயிரத்து 26ம் வழங்கப்பட்டது.
அதை தொடர்ந்து சிறிய மாட்டு வண்டி போட்டியில் 12 வண்டிகள் பங்கேற்றன. இதில் முதல் பரிசாக கல்லனை விஸ்வா ரவிச்சந்திரனுக்கு ரூ.14 ஆயிரத்து 26ம், 2-ம் பரிசாக மேலமடை சீமான் பாண்டியராஜனுக்கு ரூ.13 ஆயிரத்து 26-ம் , 3-ம் பரிசாக சிங்கம்புணரி செந்தில்குமாருக்கு ரூ.12 ஆயிரத்து 26ம், 4-ம் பரிசாக பாதரக்குடி வளர்மதிக்கு ரூ.5 ஆயிரத்து 26 மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
போட்டியில் சீறிப்பாய்ந்த மாடுகள் இலக்கை நோக்கி பாய்ந்து சென்றன. இதில் வெற்றிபெற்ற முதல் 4 மாட்டின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும், பரிசுத்தொ கைகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து சிறியமாடுகள் 12 எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்தன. இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசு த்தொகை வழங்கப்பட்டன. மாட்டுவண்டி பந்தயத்தை பொதுமக்கள் சாலை இருபுறமும் நின்று கண்டுகளித்தனர்.
விழா ஏற்பாடுகளை ஊர் அம்பலகாரர் பார்த்தி பன், தனம் பிரிக்ஸ் சேவுகப்பெருமாள், சிங்கம்புணரி சேர்மன் அம்பலமுத்து, துணைச்சே ர்மன் இந்தியன் செந்தில் மற்றும் எட்டுக்கரை இளைஞர்கள் பங்காளிகள் செய்திருந்தனர்.
- காரைக்குடியில் கருணாநிதி பிறந்த நாளில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
- பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெரியார் சிலை அருகில் நடந்தது.
காரைக்குடி
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு காரைக்குடி 15-வது வட்ட தி.மு.க. சார்பில் கொடியேற்று விழா மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெரியார் சிலை அருகில் நடந்தது.
நகர்மன்ற தலைவர் முத்துதுரை வரவேற்றார்.முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சுப.துரைராஜ், நகர செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தி.மு.க. கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் கே.ஆர்.ஆனந்த், சின்னத்துரை, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சத்யா ராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் கண்ணன், அன்னை மைக்கேல், நாகராஜன், சித்திக், தெய்வானை, கலா, ஹேமலதா செந்தில், பூமி, கார்த்திகேயன், தனம் சிங்கமுத்து, மாவட்ட பிரதிநிதிகள் சேவியர், கென்னடி, முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேஷ்,புதுவயல் பேரூராட்சி துணை தலைவர் பகுர்தீன் அலி, நிர்வாகிகள் ருக்மா சரவணன், அமராவதிபுதூர் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கிரிக்கெட் போட்டியில் கோவிலூர் கெமிக்கல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
- 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சுழற்கோப்பையை தட்டிச் சென்றது.
காரைக்குடி
காரைக்குடியில் லத்தீப் மெமோரியல் 8-ம் ஆண்டு மாவட்ட அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி மைதானங்களில் நடந்தது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நாக் அவுட் முறையில் போட்டிகள் நடந்தன. இறுதிப்போட்டியில் கோவிலூர் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் அணியும், காரைக்குடி மூன்லைட் அணியும் மோதியதில் கெமிக்கல்ஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சுழற்கோப்பையை தட்டிச் சென்றது.
சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் தொடர்நாயகனாக கெமிக்கல்ஸ் அணியின் பார்த்தசாரதியும், பந்து வீச்சாளராக ராமச்சந்திரனும், ஆல்ரவுண்டராக நைட்ஸ் அணியின் சிவசங்கரும், சிறந்த பயிற்சியாளராக அழகப்பா கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குநர் அசோக்குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகளை வென்றனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் காரைக்குடி நகர்மன்ற உறுப்பினர் ஹரிதாஸ், தொழிலதிபர் செந்தில்குமார், பள்ளத்தூர் சங்கர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் சங்கர், துணை தலைவர் பெஸ்ட் பாண்டியன், லத்தீப் மெமோரியல் அணி செயலாளர் சிவானந்தம், பழமலை, திருச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நவீன எரிவாயு தகனமேடை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
- ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மானாமதுரை நகராட்சி பகுதியான அரசகுலி மயானம் அருகே எரிவாயு தகன மேடை அமைக்கப்பட உள்ளது. ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
இந்த தகன மேடைக்கான பூமி பூஜை மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. ஒரு வருடத்துக்குள் பணியை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பூமி பூஜையில் நகராட்சி ஆணையாளர் கண்ணன், பொறியாளர் பாண்டீஸ்வரி, நகரமைப்பு ஆய்வாளர் திலகவதி, நகர மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம் , ஒன்றியசெயலாளர் அண்ணாதுரை, நகர்செயலாளர் பொன்னுசாமி , கவுன்சிலர்கள் மாரிக்கண்ணன், சண்முகப்பிரியா, புருஷோத்தமன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சி.பி.எஸ்.இ. தேர்வில் செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.
- தாளாளர் சத்தியன், நிர்வாக இயக்குநர் சங்கீதாசத்தியன், பள்ளி கல்வி இயக்குநர் ராஜேஸ்வரி, முதல்வர் ராணிபோஜன், தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்களும் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களை பாராட்டினர்.
காரைக்குடி
2021-– 22-ம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
இதில் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளி மாணவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். 10-ம் வகுப்பில் ஸ்ரீஹரிரமணா 489 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். அபிசேகபிரியன் 482 மதிப்பெண்களுடன் 2-ம் இடமும், ஸ்ரீரிஷப் கணிதத்தில் 100 மதிப்பெண் உள்பட 481 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும், சிவசவுந்தரி 480 4-ம் இடமும், விஷ்ணுஹரி 464, சந்திரமவுலி 464 5-ம் இடத்தையும் பெற்றனர்.
12-ம் வகுப்பில் அறிவியல் பிரிவு மாணவர் கிரண்செல்வக்குமார் 480 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். சந்தானகவுந்தரி (477) 2-ம் இடமும், நூகாஅப்துல்லா (470) 3-ம் இடமும், ஜோதிகா (468) 4-ம் இடமும், தர்ஷிணி 467 5-ம் இடமும் பெற்றனர். வணிகவியல் பாடப்பிரிவில் 99 மதிப்பெண்களும், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் போன்ற பாடப்பிரிவுகளில் 95-க்குமேல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். தாளாளர் சத்தியன், நிர்வாக இயக்குநர் சங்கீதாசத்தியன், பள்ளி கல்வி இயக்குநர் ராஜேஸ்வரி, முதல்வர் ராணிபோஜன், தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்களும் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களை பாராட்டினர்.
- நெற்குப்பையில் தூய்மை இயக்க நிகழ்ச்சி நடந்தது.
- செயல் அலுவலர் கணேசன், இளநிலை உதவியாளர் சேரலாதன், வார்டு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் நகரங்களின் தூய்மை இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி பேரூராட்சி சேர்மன் புசலான் தலைமையில் நடந்தது.
இதில் சைக்கிள் பேரணி, மாராத்தான் ஓட்டம், மரக்கன்றுகள் நடுதல், நீர்நிலை தொட்டிகளை சுத்தம் செய்தல், நீர்வரத்து கால்வாய்களை சுத்தம் செய்தல், போன்றவை நடத்தப்பட்டு அதில் பங்கேற்ற மகளிர் சுயஉதவி குழுவினர், மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் செயல் அலுவலர் கணேசன், இளநிலை உதவியாளர் சேரலாதன், வார்டு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
- பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துெகாண்டார்.
- எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை மேலரத வீதியை சேர்ந்தவர் சுடர்ராஜ் (வயது 52). இவரது மனைவி மேகலா. இவர்களது மகன் செல்வக்குமார் (17). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கொரோனா ஊடங்கிற்கு செல்வக்குமார் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் விரக்தியில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை சுடர்ராஜ் தனது மனைவியுடன் திருச்செந்தூர் அருகே உள்ள அவரது குல தெய்வ கோவிலுக்கு சென்றிருந்தார். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த செல்வக்குமார் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. அக்கம்பக்கத்தினர் கதவை தட்டியும் பலனில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சாக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு தனி அறையில் செல்வக்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதையடுத்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மகன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து உடனே ஊர் திரும்பிய சுடர்ராஜ்-மேகலா மகனின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. செல்வக்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சி.பி.எஸ்.இ. தேர்வில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி சாதனை படைத்தார்.
- மாணவ, மாணவிகளை முதல்வர் உஷா குமாரி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.
காரைக்குடி
சி.பி.எஸ்.இ.12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டது. இதில் சிவகங்கை மாவட்டம் மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
12-ம் வகுப்பில் மொத்தம் 96 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் கிருஷ்ணபிரியா 96 சதவீத மதிப்பெண்,சாம்சி நிர்மல் 94 சதவீத மதிப்பெண், வைரவபிரீத்தி 93 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.
10-ம் வகுப்பில் 110 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் கயிலை கார்த்திக் 96 சதவீத மதிப்பெண்களும், ராகவ கிருஷ்ணன் 95.8 சதவீத மதிப்பெண்களும், செந்தில் பிரபாகர் வேலு 95.4 சதவீத மதிப்பெண்களும், அபூர்வா 95.4 சதவீத மதிப்பெண்களும் பெற்றனர்.மாணவ, மாணவிகளை முதல்வர் உஷா குமாரி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.
- அணைக்கரைப்பட்டியில் ரூ. 20 லட்சத்தில் கட்டப்பட்ட துணை சுகாதாரநிலையம் அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
- மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.
கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்து கொண்டு துணை சுகாதா நிலையத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற போது கொரோனா நோய் தொற்று இருந்ததால், அந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் மக்களை மீட்டெடுத்த துறை
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை ஆகும்.
இதன்மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் முதல் தவணை, 2-ம் தவணை மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு, பொதுமக்களை பாதுகாத்து வருகிறார். இது தவிர, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பரிசோதனை மேற்கொண்டு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கு மருந்துகள் வழங்கியும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் பொதுமக்களின் நலனும் காக்கப்பட்டு வருகிறது.
கிராமப்புற–மக்களுக்கு பயனுள்ள வகையில் சிவகங்கை மாவட்டத்தில் 12 நடமாடும் மருத்துவமனைகள் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. அணைக்கரைப்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கு தேவையானதாகவும், பயனுள்ள வகையிலும் இங்கு நிரந்தர கட்டிடத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அரசு துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
அதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கென திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், யாதவா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் மூலம், ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின்சாரத் திருவிழா, சாதனைகளை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று கலை நிகழ்ச்சி நடத்திய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
- தொழிலதிபர் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
- தொடர் கொள்ளைகளால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஆறாவயல் கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம். தொழிலதிபரான இவர் திருப்பூரில் வசித்து வருகிறார். மாதத்திற்கு சில நாட்கள் மட்டும் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
இதன் காரணமாக பெரும்பாலான நாட்களில் வீடு பூட்டியே கிடக்கும். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று இரவு சிதம்பரத்தின் வீட்டின் கதவை உடைத்த உள்ளே புகுந்தனர்.
பின்னர் பீரோவில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். மறுநாள் காலை வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே ஆறாவயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் மருது மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளும் சேகரிப்பட்டன.
இந்த கொள்ளை குறித்து வீட்டின் உரிமையாளர் சிதம்பரத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்த பிறகு தான் கொள்ளை போன பொயருட்களின் விபரம் மற்றும் மதிப்பு தெரிய வரும்.
ஆறாவயலை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் தொழில்நிமித்தம் காரணமாக வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இதனால் அங்கு பெரும்பாலான வீடுகள் பூட்டியே கிடக்கும். இதனை பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆறாவயல் கிராமத்தில் பூட்டியிருந்த 3 வீடுகளில் கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர் கொள்ளைகளால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.






