என் மலர்
உள்ளூர் செய்திகள்

மானாமதுரை அருகே மின்வேலியில் சிக்கி தந்தை-2 மகன்கள் பலி
- விருதுநகர் மாவட்டம், முகவூரை சேர்ந்தவர் அய்யங்காளை.
- மின்வேலியில் சிக்கி தந்தை-2 மகன்கள் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மானாமதுரை:
விருதுநகர் மாவட்டம், முகவூரை சேர்ந்தவர் அய்யங்காளை. இவரது மகன்கள் அஜீத், சுதந்திரபாண்டி.
ராணுவ வீரரான அஜீத்துக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது. கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவிக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இதையடுத்து அஜீத் குழந்தையை பார்ப்பதற்காக விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்கு வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை அய்யங்காளை, தனது 2 மகன்களுடன் அருகில் உள்ள திருப்பாச்சேத்தி மாரநாடு காட்டுப்பகுதிக்கு முயல் வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அங்குள்ள ஒரு தோட்டத்தில் முயல்பிடிக்க சென்றபோது அங்கு போட்டிருந்த மின்வேலியில் அடுத்தடுத்து 3 பேரும் சிச்கினர்.
இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் அய்யங்காளை, அஜீத், சுதந்திரபாண்டி ஆகிய 3 பேரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பாச்சேத்தி போலீசார் சம்பவ இடம் சென்று 3 பேரின் உடல்களை மீட்டு மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் இறந்த சுதந்திரபாண்டி அண்மையில் நடந்த போலீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மின்வேலியில் சிக்கி தந்தை-2 மகன்கள் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






