என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • ஜே.பி.நட்டா வருகிற 22-ந் தேதி மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடிக்கு வருகிறார்.
    • இரவு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகள் குறித்து பேசுகிறார்.

    காரைக்குடி:

    பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா வருகிற 22-ந் தேதி மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடிக்கு வருகிறார். அவர் அன்று மாலை 3.30 மணிக்கு காரைக்குடி எம்.ஏ.எம். மகாலில் நடைபெறும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து மாலை 4.45 மணி முதல் 5.30 மணி வரை மாநில, மாவட்ட மகளிரணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இரவு என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகள் குறித்து பேசுகிறார்.

    23-ந் தேதி காலை 7.45 மணிக்கு பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த பின்னர் காரைக்குடி மகாலில் 11 மணிக்கு பிற்பட்ட, மிக பிற்பட்ட அணிகளின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மதியம் 12 மணிக்கு மாநில நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.

    • சாகிர் உசேன் கல்லூரியில் சர்வதேச எழுத்தறிவு தின கருத்தரங்கம் நடந்தது.
    • ‘‘வாசிப்பின் அவசியம்’’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் சர்வதேச எழுத்தறிவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சியில் தமிழ்துறைத்தலைவர் இப்ராஹிம் தலைமை தாங்கி "கற்றலின் சிறப்பு" என்ற தலைப்பில் பேசினார். நூலகர் நைனார் முஹம்மது "நாளும் பழகுவோம் நூல்களுடன்" என்ற தலைப்பில் பேசினார். ''வாசிப்பின் அவசியம்'' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது.

    இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முதல்வர் அப்பாஸ் மந்திரி ரொக்கப்பரிசு வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முஹம்மது, அப்ரோஸ், சேக் அப்துல்லா ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வில் 180 பேர் கலந்து கொண்டனர்.

    • சிவலிங்கத்தின் மீது சூரிய கதிர் படும் அபூர்வ நிகழ்வை கண்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    • நிகழ்வினை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அரியாண்டிபுரம் கிராமத்தில் மாதவ ஜோதி லிங்கேஸ்வரர் சமேத கூம்பாச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் லிங்கத்தின் மீது சூரிய கதிர் வீச்சு விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது.

    ஆண்டுதோறும் ஆவணி மாதம் பவுர்ணமி நாளின் முதல் நாளில் இருந்து 3 நாட்கள் வரை லிங்கத்தின் மீது அதிகாலை காலை 6.10 மணிக்கு தொடங்கி 6.30 மணி வரை 20 நிமிடங்கள் சூரிய கதிர்கள் விழுகின்றன. இந்த அரிய நிகழ்வு குறித்து வேதாந்த மடத்தின் மடாதிபதி மாதவ குமாரசாமி கூறுகையில், ஆவணி மாதம் பவுர்ணமியில் இருந்து 3 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுவது வழக்கமான ஒன்று. இந்த வருடம் தெளிவாக அற்புத நிகழ்வு நிகழ்ந்துள்ளது என்றார். இந்த நிகழ்வினை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

    • மானாமதுரை 4 வழிச்சாலையில் தடுப்புசுவர் இல்லை.
    • கடந்த ஆண்டு மார்நாடு கால்வாயில் தண்ணீர் சென்றபோது நிலை தடுமாறி கார் கால்வாய்க்குள் பாய்ந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பூர்வீக வைகைபாசனபகுதியாகும். வைகை ஆற்றின் கரைபகுதியில் மதுரை- ராமேசுவரம் 4 வழிசாலை உள்ளது. திருப்புவனம் முதல் மானாமதுரை மேலபசலை ரெயில் மேம்பாலம் வரை கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்கள் உள்ளது. 3 முறை வைகை அணை நிரம்பியதால் 2 மாதங்களாக வைகை ஆற்றில் வந்த தண்ணீர் சாலையோர கால்வாய்களில் செல்கிறது. இந்த சாலைகளின் இருபுறமும் தடுப்புகள் இல்லை. கடந்த ஆண்டு மார்நாடு கால்வாயில் தண்ணீர் சென்றபோது நிலை தடுமாறி கார் கால்வாய்க்குள் பாய்ந்தது.

    பின்னால் வந்த திருப்புவனத்தை சேர்ந்த வாடகை கார் டிரைவர் உடனடியாக தண்ணீரில் நீந்தி காரில் இருந்தவர்களை மீட்டார். கால்வாய்களில் தண்ணீர் இல்லாத போதும் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    விபத்துக்களை தடுக்கும் வகையில் மதுரை-ராமேசுவரம் 4 வழிசாலையில் உள்ள கால்வாய் கரைகளில் தடுப்பு சுவர்கள், தற்காலிக இரும்பு வேலி தடுப்புகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • சிவகங்கையில் சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
    • இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை குறித்து மாதந்தோறும் சம்பந்தப்பட்ட துறைகள் முதன்மை அலுவலர்க ளுடனான ஆய்வுக்கூட்டம் நடந்து வருகிறது.

    இதில் ஆக்கி ரமிப்புகளை அகற்றுவது தொடர்பாகவும், 64 கோவில்கள் பட்டியலினை சம்பந்தப்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பி நிரந்தர தீர்வு காணவும், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்க ளின் பயன்பாட்டினை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் உள்ளிட்ட மாவட்டத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்பாகவும், பதிய ப்பட்டுள்ள வழக்குகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து காவல் துறை அலுவலர்ளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கோட்டாட்சியர்கள் சுகிதா, (சிவகங்கை), பிரபாகரன் (தேவகோட்டை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தர்ராஜ், துணை காவல் கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டையில் இருந்து கோவை செல்லும் அரசு விரைவு பஸ்கள் இயங்கவில்லை.
    • அதிக கட்டணம் கொடுத்து தனியார் பஸ்களில் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையானது முதன்மையான நகராட்சியாகும். இந்த நகரை சுற்றியுள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அன்றாட தேவைக்காகவும், சென்னை, கோவை, பெங்களூர் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல பஸ் வசதிகளுக்காக வந்து செல்கின்றனர்.

    மாணவ-மாணவிகள் மேல்படிப்புக்காக அதிக அளவில் அரசு பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை, பெங்களூர், கோவை போன்ற நகரங்களுக்கு அரசு விரைவு பஸ்கள் தேவகோட்டை பஸ் நிலையத்தில் இருந்து சென்று கொண்டிருந்தது.

    குறிப்பாக கோவை செல்ல அரசு விரைவு பஸ்கள் காலையில் 2 பஸ்களும், இரவில் 2 பஸ்களும் இயங்கின. சில மாதங்களாக கோவை செல்லும் அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் வேலைகளுக்கு செல்வோரும், மேற்படிப்புக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    கடந்த காலங்களில் தனியார் பஸ்களின் எண்ணிக்கையை விட இப்போது 10-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சமூக ஆர்வலர் மணிகண்டன் கூறுகையில், கோவை செல்ல குறைந்த செலவில் இந்த பகுதி கிராம மக்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் அரசு விரைவு பஸ்கள் பயன்பட்டது.

    தற்போது அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படாததால் அதிக கட்டணம் கொடுத்து தனியார் பஸ்களில் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. தேவகோட்டை பஸ் நிலையம் உட்புறமுள்ள அரசு விரைவு பஸ்கள் முன்பதிவு அலுவலகத்தின் அட்டவணையில் கோவை செல்லும் பஸ்களில் நேரம் உள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் தனியார் பஸ்களுக்கு சாதகமாக செயல்படுகிறதா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. முதன்மையான நகராட்சியில் இந்த அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படாமல் இருப்பது வேதனையாக உள்ளது என்றார்.

    • 45 பயனாளிகளுக்கு ரூ.3.77 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • தலா ரூ.4 ஆயிரத்து 299 மதிப்பீட்டில் குளிர்காப்பு பெட்டிகளை கலெக்டர் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 298 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இதில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பையூர்பிள்ளைவயல் திட்டப்பகுதியின் சார்பில், 6 பயனாளிகளுக்கு மனை ஒதுக்கீட்டு ஆணைகள், மாவட்ட சமூகநலத்துறையின் சார்பில், 17 பயனாளிகளுக்கு குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட மற்றும் இடை நின்றவர்களுக்கு தொழில் பயிற்சிக்கான ஆணைகள், சிவகங்கை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தின் சார்பில், பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குளிர்காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.69 ஆயிரத்து 243 மதிப்பீட்டில் இருசக்கர வாகனங்கள் மற்றும் தலா ரூ.4 ஆயிரத்து 299 மதிப்பீட்டில் குளிர்காப்பு பெட்டிகளை கலெக்டர் வழங்கினார்.

    மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) சார்பில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் கீழ் உறுப்பினரின் வாரிசுதாரர்கள் 7 மாணவர்களுக்கு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோ்ச்சி பெற்றதை ஊக்குவிக்கும் வகையில் தலா ரூ.1,500 மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகை என மொத்தம் 45 பயனாளிகளுக்கு ரூ.3.77 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பிரபாகரன் (தேவகோட்டை), கலெக்டரின் நோ்முக உதவியாளர் (பொது) கண்ணகி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் காமாட்சி, உதவி இயக்குநர் (மீன்வளத்துறை) சிவராமசந்திரன், குடிசை மாற்று வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர் புஷ்பராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மங்களநாதன் குடிசை மாற்று வாரிய சமுதாய அலுவலர் காளிதாஸ், மீன்வளத்துறை ஆய்வாளர் ஜோபியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மக்கள் தொடர்பு முகாம் நாளை நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், இளையாத்தங்குடி உள்வட்டம், திருக்கோலக்குடி குரூப், பழைய திருக்கோலக்குடி கிராமத்தில் நாளை (14-ந் தேதி) காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.

    அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும்.

    மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நடைபெற உள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • வேளாங்கண்ணி மாதா ரத பவனி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது .
    • விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பால்ராஜ் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. நிறைவு நாளான நேற்று மறை மாநில அருட்தந்தை பன்னீர்செல்வம் சிறப்பு திருப்பலியை நடத்தி வைத்தார்.

    அலங்கரிக்கப்பட்ட மின்னொளி ரதத்தில் வேளாங்கண்ணி மாதா சொரூபம் ஏற்றப்பட்டு பங்கு மக்கள் முன்னிலையில் சிறப்பு பூஜை நடந்தது. லாரன்ஸ் போஸ் ஆசீர்வாதத்துடன் சிறப்பு பூஜைகள் நிறைவு பெற்று சப்பரபவனி தொடங்கியது.

    நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ரத பவனியில் அருட்சகோதரிகள் வழிபாடு பாடல்களை பாடி வந்தனர். 43-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவில் நெற்குப்பை, சிங்கம்புணரி, மாதா நகர், காரையூர் இலங்கை முகாம் மக்கள் திரளாக பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பால்ராஜ் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • ஒருபோக பாசனத்துக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
    • சிவகங்கை மற்றும் சிங்கம்புணரி தாலுகாவில் உள்ள 6 ஆயிரத்து 39 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், கள்ளிராதினிப்பட்டி, கட்டாணிப்பட்டி ஆகிய பகுதிகள் வழியாக பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒரு போக பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீர் சிவகங்கை மாவட்டத்திற்கு வந்தடைந்ததையொட்டி, கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    2022-23-ம் ஆண்டிற்கான பெரியாறு வைகை பாசனத்திற்காக, பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒருபோக பாசனப் பரப்பாகிய 85 ஆயிரத்து 563 ஏக்கர் நிலங்களுக்கும். திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசனப்பரப்பாகிய 19 ஆயிரத்து 439 ஏக்கர் நிலங்களுக்கும் ஆக மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 1,130 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும், கடந்த 7-ந் தேதி முதல் மொத்தம் 120 நாட்களுக்கு 8,461 மி.க.அடி தண்ணீரை வைகை அணையில் இருந்து திறந்து விட அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

    தற்போது, தண்ணீர்திறக்கப்பட்ட 3-வது நாளிலேயே பெரியாறு பாசன திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் வந்தடைந்தது. மாவட்டத்திலுள்ள கண்மாய்களுக்கு கட்டாணிப்பட்டி கால்வாய் 1 மற்றும் 2 மற்றும் 48-வது மடைகால்வாய் ஆகிய கால்வாய்கள் திறக்கப்பட்டு முருகினி, புதுக்கண்மாய், பெரியகோட்டை மற்றும் சின்னகுண்ணங்குடி ஆகிய கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் மதுரையில் உள்ள குறிச்சி கண்மாய் பெருகி சிவகங்கை மாவட்டத்திற்கு செல்லும் சீல்டு கால்வாய் மூலம் ஆதினிக்கண்மாய்க்கு தண்ணீர்வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 129 கண்மாய்களுக்கு தண்ணீர்வழங்கப்பட்டு, சிவகங்கை மற்றும் சிங்கம்புணரி தாலுகாவில் உள்ள 6 ஆயிரத்து 39 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை செயற்பொறியாளர் பவளக்கண்ணன், உதவி செயற்பொறியாளர் தாசியூஸ், உதவி பொறியாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காவல் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
    • 25 தலைமுறைகளுக்கும் மேலாக இந்த வழிபாடு நடந்து வருகிறது.

    சிவகங்கை 

    சிவகங்கை அருகே பையூர் பழமலை நகர் உள்ளது. இங்கு நரிக்குறவர்கள் இனத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் காளி, மதுரை வீரன், மீனாட்சி, முத்துமாரியம்மன் ஆகிய தெய்வங்களை குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

    மேற்கண்ட தெய்வங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் திருவிழா கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டுக்கான திருவிழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

    முக்கிய விழாவான எருமை மாடுகளை பலியிட்டு, ரத்தத்தை குடிக்கும் விழா நடந்தது. இதையொட்டி காளி உள்ளிட்ட காவல் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதையடுத்து, திருவிழா திடலில் அமைக்கப்பட்டுள்ள குடிலில் 14 எருமை மாடுகளும், 124 ஆடுகளும் பலியிடப்பட்டன. அருள் வாக்கு கூறுபவர்கள் (சாமியாடிகள்) எருமை மாடுகளை பலியிட்டு ரத்தத்தை குடித்தனர்.

    பின்னர் காளி உள்ளிட்ட காவல் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இந்த விழாவை காண சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்திருந்தனர்.

    இதுகுறித்து பழமலை நகரைச் சேர்ந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், முன்னோர்களின் அறிவுறுத்தலின் படி சுமார் 25 தலைமுறைகளுக்கும் மேலாக இந்த வழிபாடு நடந்து வருகிறது. காளி உத்தரவுக்கு பின்னர் காப்புக் கட்டுதல் நிகழ்விலிருந்து ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு மாதம் விரதம் இருப்பார்கள்.விழாவில் பலி கொடுக்கப்படும் எருமை மாடு மற்றும் ஆட்டின் இறைச்சியை எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தோர் வசிக்கும் பகுதிகளுக்கு பகிர்ந்து வழங்குவோம். காளி அசுரனை வதம் செய்யும் போது, தரையில் சிந்தும் அசுரனின் ரத்தம் மீண்டும் உயிர்த்தெழுந்ததால், அந்த ரத்தத்தை கீழே சிந்தாமல் காளி குடித்து விடுவதாக புராணம் கூறுகிறது.

    அந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எருமை மாட்டை அசுரனாக பாவித்து பலியிட்டு வருகிறோம் என்றார்.

    • கணவர் தனது சம்பள பணத்தை தன்னிடம் கொடுக்காமல் ஆசிரியையிடம் கொடுத்து வந்ததால்தான் நதியா கொலை திட்டத்தை வகுத்துள்ளார்.
    • தலைமை ஆசிரியை கொலை வழக்கில் அவரது தம்பி மனைவியே முக்கிய குற்றவாளியாக சிக்கி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கான்பா நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதம் (வயது 52). இவர் தென்மாபட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    இவரது கணவர் ராஜேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் வெளியூரில் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி ரஞ்சிதம் தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் தலைமையில் போலீசார் சில்லாம்பட்டி விலக்கு பகுதியில் நேற்று வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் நெடுமரம் கிராமத்தை சேர்ந்த சூர்யா (24) என்பதும், அவர் தலைமை ஆசிரியை ரஞ்சிதத்தை கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக அவரிடம் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

    கொலை செய்யப்பட்ட தலைமை ஆசிரியை ரஞ்சிதத்துக்கு பாண்டி வேல்முருகன் என்ற தம்பி உள்ளார். அவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி நதியா (31) மற்றும் அவர்களது குழந்தைகள் 3 பேர் நெடுமரத்தில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் பாண்டி வேல்முருகன் வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்தை தனது அக்காள் ரஞ்சிதத்துக்கு அனுப்பி வந்துள்ளார். அவரிடம் நதியா செலவுக்கு பணம் வாங்கி கொள்ள ஏற்பாடு செய்திருந்தார். இது நதியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே நதியாவுக்கும், நெடுமரத்தை சேர்ந்த சூர்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதனால் நதியா கள்ளக்காதலன் மூலம் ரஞ்சிதத்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி சூர்யாவிடம் தனது திட்டத்தை தெரிவிக்க நதியா அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து கடந்த 6-ந்தேதி இரவு சூர்யா தலைமை ஆசிரியை ரஞ்சிதம் வீட்டுக்கு சென்று பின்புற சுவர் ஏறி குதித்து மறைந்து இருந்துள்ளார். இரவில் ரஞ்சிதம் பாத்ரூம் செல்வதற்காக வெளியே வந்தபோது சூர்யா அவரது முகத்தையும், வாயையும் பொத்தி கீழே தள்ளி உள்ளார். இதில் அவர் மயங்கி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து வீட்டுக்குள் புகுந்த சூர்யா பீரோவில் வைக்கப்பட்டிருந்த 60 பவுன் நகை, ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்துள்ளார்.

    அப்போது ரஞ்சிதம் முனங்கும் சத்தம் கேட்டதால் கத்தியை எடுத்து ரஞ்சிதத்தின் கை, கால் நரம்புகளை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் கொள்ளையடித்த நகை மற்றும் பணத்தை நதியாவிடம் சூர்யா கொடுத்துள்ளார்.

    நகை-பணத்துக்காக கொள்ளையர்கள் தலைமை ஆசிரியை ரஞ்சிதத்தை கொலை செய்துவிட்டு சென்றதுபோல் காட்டுவதற்காக நகை-பணத்தை சூர்யா எடுத்து சென்றுள்ளார்.

    இந்த நிலையில் போலீசாரின் பிடியில் சூர்யா சிக்கியதை தொடர்ந்து அவருக்கு மூளையாக செயல்பட்ட நதியாவையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 60 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த கொலை வழக்கில் போலீசார் 5 நாட்களில் குற்றவாளிகளை பிடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கணவர் தனது சம்பள பணத்தை தன்னிடம் கொடுக்காமல் ஆசிரியையிடம் கொடுத்து வந்ததால்தான் நதியா இந்த கொலை திட்டத்தை வகுத்துள்ளார். இதில் அவரது கள்ளக்காதலனை ஏவி அவரையும் கொலையாளி ஆக்கிவிட்டார்.

    தலைமை ஆசிரியை கொலை வழக்கில் அவரது தம்பி மனைவியே முக்கிய குற்றவாளியாக சிக்கி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×