என் மலர்
சிவகங்கை
- டேராடூனில் உள்ள ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
டேராடுனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜூலை-2023 பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்காக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ந் தேதி அன்று தேர்வு நடைபெறுகிறது.
சேர்க்கைக்கு 8-ம் வகுப்பு (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்), 7-ம் வகுப்பு படிப்பவர் அல்லது 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் (1.7.2023 தேதியின்படி) கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். 11½ வயது முதல் 13 வயது வரை (1.7.2023 தேதியின்படி) (அவர்கள் 2.7.2010-க்கு முன்னதாகவும் 1.1.2012-க்குப் பிறகும் பிறந்திருக்கக்கூடாது). தேர்வு நடைபெறும் நாள்: 3.12.2022 முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகும்.
தேர்விற்கான திட்ட ப்படி, ஆங்கிலம் (125 மதிப்பெண்கள்) - 2 மணி நேரம், கணிதம் (200 மதிப்பெண்கள்) - 1.30 மணி நேரம், பொது அறிவு (75 மதிப்பெண்கள்) - 1 மணி நேரம் (கணிதம் மற்றும் பொது அறிவுத்தாள் ஆகியவை ஆங்கிலம் அல்லது இந்தியில் விடையளிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பம் பெற வேண்டிய முகவரி கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடுன், உத்தரகாண்ட் 248 003 என்ற முகவரிக்கு, விரைவு அஞ்சல் வாயிலாகவும், கேட்பு காசோலைக்குரிய கிளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, டெல்பவன், டேராடுன் (வங்கி குறியீடு 01576)-ம் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்ப கட்டணம் காசோலை மூலம் அல்லது இணையவழியாக
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய சாலை, பூங்கா நகர், சென்னை-600 003 என்ற முகவரிக்கு 15.10.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்கப் பெற வேண்டும்.
விண்ணப்பப் படிவம், தகவல் தொகு ப்பேடு ஆகியவை சென்னை யிலுள்ள இந்த தேர்வாணைய அலுவலகத்தில் இருந்து விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட மட்டாது. ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியின் விண்ணப்பப்படிவங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ள ப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரூ.31 லட்சம் செலவில் ஊரணியை தூர்வாரி பராமரிக்க பூமிபூஜை நடந்தது.
- 20ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஊரணி பராமரிக்கப்படாமல் குப்பை கொட்டும் இடமாக இருந்து வந்தது.
சிவகங்கை
சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட சவக்கட்டு ஊரணி 20ஆண்டுகளுக்கு மேலாக பராமரிக்கப்படாமல் குப்பை கொட்டும் இடமாக இருந்து வந்தது. அதனை தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து சவக்கட்டு ஊரணி தூர்வாரபட்டு நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கும் பணி, கம்பி வேலி அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் தலைமை தாங்கினார். இதில் நகர் மன்ற பொறியாளர், கவுன்சிலர்கள் அன்புமணி, சண்முக ராஜன், விஜயகுமார், அயூப்கான், ராமதாஸ், ஆறு சரவணன், கீதாகார்த்திகேயன், மதியழகன், வழக்கறிஞர் ராஜஅமுதன், ஒப்பந்ததாரர் மதி, தொழில்நுட்ப பிரிவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- அவர்கள் தங்களது கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் கடந்த 1993 முதல் 1996 வரை தாவரவியல் துறையில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.தாவரவியல் துறை தலைவர் முனைவர் கோமளவள்ளி தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர்கள் பழனிச்சாமி மற்றும் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். 25 ஆண்டுகளுக்கு பின்னர் மாணவ-மாணவிகள் தங்கள் குடும்பத்துடன் சந்தித்து மகிழ்ந்தனர். குவைத், சிங்கப்பூர், கத்தார், துபாய் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்த மாணவர்கள் தங்கள் கல்லூரி காலத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களையும், தங்கள் பேராசிரியர்களைப் பற்றியும், பசுமை நிறைந்த நினைவுகளையும் ெதரிவித்தனர்.
துறை தலைவர் மற்றும் அதே துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் பழனிச்சாமி வாழ்த்துரை வழங்கினார். பின்னர் அனைவரும் வள்ளல் அழகப்பர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். பின்னர் வரும் காலங்களில் தாவரவியல் துறைக்கு தேவையான பல்வேறு உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் வீரபாண்டியன், ஐங்கரன் ஆகியோர் செய்திருந்தனர்.
- சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளை விருந்தினரைபோல பார்த்துக்கொள்வதாக டீன் தெரிவித்தார்.
- 100 படுக்கைகளும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அமருவதற்கான இருக்கை களும் ஏற்படுத்தி உள்ளேன்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் அப்துல் வாஹித். இவர் இதே பகுதியில் 4 சக்கர வாகனத்தை நாள் வாடகை ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் சிவகங்கைக்கு திருமண நிகழ்விற்காக சென்றபோது எதிர்பாராத விதமாக மூச்சுத் திணறலும், நெஞ்சுவலியும் ஏற்பட்டது. உடனடியாக அவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் துரிதமாக பரிசோதித்து 2 மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு மாற்றினர்.
இது குறித்து மருத்துவமனை டீன் ரேவதிபாலன் கூறுகையில், இங்கு வரும் எந்த ஒரு நோயாளியையும் இவர் உள்நோயாளி, இவர் புறநோயாளி என்ற பாகுபாடின்றி வீட்டிற்கு வரும் விருந்தினரைபோல நன்றாக கவனித்துக் கொள்கிறோம். நான் 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மருத்துவமனைக்கு பணிமாறுதலாகி வரும்போது முகப்பு தோற்றம், வளாக பகுதிகளில் நோயாளிகளுடன் வரும் நபர்கள் அமருவதற்கு இருக்கை இல்லாத நிலையும், நோயாளிகளின் படுக்கைகள் பற்றாக்குறையாகவும் இருந்தது.
தற்போது அமைச்சர், கலெக்டர் உதவியுடன் புதிதாக 100 படுக்கைகளும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அமருவதற்கான இருக்கை களும் ஏற்படுத்தி உள்ளேன்.
கொரோனா தொற்று காலங்களில் மிகவும் குறைந்த நோய் தொற்று உள்ள மாவட்டமாக சிவகங்கை இருந்தது. இதற்கு காரணமாக என்னுடன் பாடுபட்ட மருத்துவர்கள், செவிலிய ர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இவர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியை தந்துள்ளது என்றார்.
சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கும் அப்துல் வாஹித் கூறுகையில், என்னை போன்ற அடித்தட்டு மக்கள் நோய் நொடி காலங்களில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலையில் பணத்தை வீண்விரயம் செய்யாமல் மற்ற மாநிலங்களை காட்டிலும் மக்கள் நலனில் அக்கறை காட்டி தமிழக அரசு வழங்கும் அனைத்து மருத்துவ சலுகைகளையும் பெற்று பயன்பெற வேண்டும் என்றார்.
கடந்த காலங்களில் தூத்துக்குடி, விருதுநகர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் டீன் ரேவதி பாலன் மருத்துவராகவும், டீனாகவும் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜே.பி.நட்டா வருகிற 22-ந் தேதி மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடிக்கு வருகிறார்.
- இரவு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகள் குறித்து பேசுகிறார்.
காரைக்குடி:
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா வருகிற 22-ந் தேதி மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடிக்கு வருகிறார். அவர் அன்று மாலை 3.30 மணிக்கு காரைக்குடி எம்.ஏ.எம். மகாலில் நடைபெறும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து மாலை 4.45 மணி முதல் 5.30 மணி வரை மாநில, மாவட்ட மகளிரணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இரவு என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகள் குறித்து பேசுகிறார்.
23-ந் தேதி காலை 7.45 மணிக்கு பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த பின்னர் காரைக்குடி மகாலில் 11 மணிக்கு பிற்பட்ட, மிக பிற்பட்ட அணிகளின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மதியம் 12 மணிக்கு மாநில நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.
- சாகிர் உசேன் கல்லூரியில் சர்வதேச எழுத்தறிவு தின கருத்தரங்கம் நடந்தது.
- ‘‘வாசிப்பின் அவசியம்’’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் சர்வதேச எழுத்தறிவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சியில் தமிழ்துறைத்தலைவர் இப்ராஹிம் தலைமை தாங்கி "கற்றலின் சிறப்பு" என்ற தலைப்பில் பேசினார். நூலகர் நைனார் முஹம்மது "நாளும் பழகுவோம் நூல்களுடன்" என்ற தலைப்பில் பேசினார். ''வாசிப்பின் அவசியம்'' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது.
இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முதல்வர் அப்பாஸ் மந்திரி ரொக்கப்பரிசு வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முஹம்மது, அப்ரோஸ், சேக் அப்துல்லா ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வில் 180 பேர் கலந்து கொண்டனர்.
- சிவலிங்கத்தின் மீது சூரிய கதிர் படும் அபூர்வ நிகழ்வை கண்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
- நிகழ்வினை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அரியாண்டிபுரம் கிராமத்தில் மாதவ ஜோதி லிங்கேஸ்வரர் சமேத கூம்பாச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் லிங்கத்தின் மீது சூரிய கதிர் வீச்சு விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது.
ஆண்டுதோறும் ஆவணி மாதம் பவுர்ணமி நாளின் முதல் நாளில் இருந்து 3 நாட்கள் வரை லிங்கத்தின் மீது அதிகாலை காலை 6.10 மணிக்கு தொடங்கி 6.30 மணி வரை 20 நிமிடங்கள் சூரிய கதிர்கள் விழுகின்றன. இந்த அரிய நிகழ்வு குறித்து வேதாந்த மடத்தின் மடாதிபதி மாதவ குமாரசாமி கூறுகையில், ஆவணி மாதம் பவுர்ணமியில் இருந்து 3 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுவது வழக்கமான ஒன்று. இந்த வருடம் தெளிவாக அற்புத நிகழ்வு நிகழ்ந்துள்ளது என்றார். இந்த நிகழ்வினை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
- மானாமதுரை 4 வழிச்சாலையில் தடுப்புசுவர் இல்லை.
- கடந்த ஆண்டு மார்நாடு கால்வாயில் தண்ணீர் சென்றபோது நிலை தடுமாறி கார் கால்வாய்க்குள் பாய்ந்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பூர்வீக வைகைபாசனபகுதியாகும். வைகை ஆற்றின் கரைபகுதியில் மதுரை- ராமேசுவரம் 4 வழிசாலை உள்ளது. திருப்புவனம் முதல் மானாமதுரை மேலபசலை ரெயில் மேம்பாலம் வரை கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்கள் உள்ளது. 3 முறை வைகை அணை நிரம்பியதால் 2 மாதங்களாக வைகை ஆற்றில் வந்த தண்ணீர் சாலையோர கால்வாய்களில் செல்கிறது. இந்த சாலைகளின் இருபுறமும் தடுப்புகள் இல்லை. கடந்த ஆண்டு மார்நாடு கால்வாயில் தண்ணீர் சென்றபோது நிலை தடுமாறி கார் கால்வாய்க்குள் பாய்ந்தது.
பின்னால் வந்த திருப்புவனத்தை சேர்ந்த வாடகை கார் டிரைவர் உடனடியாக தண்ணீரில் நீந்தி காரில் இருந்தவர்களை மீட்டார். கால்வாய்களில் தண்ணீர் இல்லாத போதும் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
விபத்துக்களை தடுக்கும் வகையில் மதுரை-ராமேசுவரம் 4 வழிசாலையில் உள்ள கால்வாய் கரைகளில் தடுப்பு சுவர்கள், தற்காலிக இரும்பு வேலி தடுப்புகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- சிவகங்கையில் சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
- இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை குறித்து மாதந்தோறும் சம்பந்தப்பட்ட துறைகள் முதன்மை அலுவலர்க ளுடனான ஆய்வுக்கூட்டம் நடந்து வருகிறது.
இதில் ஆக்கி ரமிப்புகளை அகற்றுவது தொடர்பாகவும், 64 கோவில்கள் பட்டியலினை சம்பந்தப்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பி நிரந்தர தீர்வு காணவும், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்க ளின் பயன்பாட்டினை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் உள்ளிட்ட மாவட்டத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்பாகவும், பதிய ப்பட்டுள்ள வழக்குகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து காவல் துறை அலுவலர்ளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கோட்டாட்சியர்கள் சுகிதா, (சிவகங்கை), பிரபாகரன் (தேவகோட்டை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தர்ராஜ், துணை காவல் கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தேவகோட்டையில் இருந்து கோவை செல்லும் அரசு விரைவு பஸ்கள் இயங்கவில்லை.
- அதிக கட்டணம் கொடுத்து தனியார் பஸ்களில் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையானது முதன்மையான நகராட்சியாகும். இந்த நகரை சுற்றியுள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அன்றாட தேவைக்காகவும், சென்னை, கோவை, பெங்களூர் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல பஸ் வசதிகளுக்காக வந்து செல்கின்றனர்.
மாணவ-மாணவிகள் மேல்படிப்புக்காக அதிக அளவில் அரசு பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை, பெங்களூர், கோவை போன்ற நகரங்களுக்கு அரசு விரைவு பஸ்கள் தேவகோட்டை பஸ் நிலையத்தில் இருந்து சென்று கொண்டிருந்தது.
குறிப்பாக கோவை செல்ல அரசு விரைவு பஸ்கள் காலையில் 2 பஸ்களும், இரவில் 2 பஸ்களும் இயங்கின. சில மாதங்களாக கோவை செல்லும் அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் வேலைகளுக்கு செல்வோரும், மேற்படிப்புக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் தனியார் பஸ்களின் எண்ணிக்கையை விட இப்போது 10-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சமூக ஆர்வலர் மணிகண்டன் கூறுகையில், கோவை செல்ல குறைந்த செலவில் இந்த பகுதி கிராம மக்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் அரசு விரைவு பஸ்கள் பயன்பட்டது.
தற்போது அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படாததால் அதிக கட்டணம் கொடுத்து தனியார் பஸ்களில் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. தேவகோட்டை பஸ் நிலையம் உட்புறமுள்ள அரசு விரைவு பஸ்கள் முன்பதிவு அலுவலகத்தின் அட்டவணையில் கோவை செல்லும் பஸ்களில் நேரம் உள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் தனியார் பஸ்களுக்கு சாதகமாக செயல்படுகிறதா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. முதன்மையான நகராட்சியில் இந்த அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படாமல் இருப்பது வேதனையாக உள்ளது என்றார்.
- 45 பயனாளிகளுக்கு ரூ.3.77 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- தலா ரூ.4 ஆயிரத்து 299 மதிப்பீட்டில் குளிர்காப்பு பெட்டிகளை கலெக்டர் வழங்கினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 298 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பையூர்பிள்ளைவயல் திட்டப்பகுதியின் சார்பில், 6 பயனாளிகளுக்கு மனை ஒதுக்கீட்டு ஆணைகள், மாவட்ட சமூகநலத்துறையின் சார்பில், 17 பயனாளிகளுக்கு குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட மற்றும் இடை நின்றவர்களுக்கு தொழில் பயிற்சிக்கான ஆணைகள், சிவகங்கை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தின் சார்பில், பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குளிர்காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.69 ஆயிரத்து 243 மதிப்பீட்டில் இருசக்கர வாகனங்கள் மற்றும் தலா ரூ.4 ஆயிரத்து 299 மதிப்பீட்டில் குளிர்காப்பு பெட்டிகளை கலெக்டர் வழங்கினார்.
மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) சார்பில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் கீழ் உறுப்பினரின் வாரிசுதாரர்கள் 7 மாணவர்களுக்கு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோ்ச்சி பெற்றதை ஊக்குவிக்கும் வகையில் தலா ரூ.1,500 மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகை என மொத்தம் 45 பயனாளிகளுக்கு ரூ.3.77 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பிரபாகரன் (தேவகோட்டை), கலெக்டரின் நோ்முக உதவியாளர் (பொது) கண்ணகி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் காமாட்சி, உதவி இயக்குநர் (மீன்வளத்துறை) சிவராமசந்திரன், குடிசை மாற்று வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர் புஷ்பராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மங்களநாதன் குடிசை மாற்று வாரிய சமுதாய அலுவலர் காளிதாஸ், மீன்வளத்துறை ஆய்வாளர் ஜோபியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மக்கள் தொடர்பு முகாம் நாளை நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், இளையாத்தங்குடி உள்வட்டம், திருக்கோலக்குடி குரூப், பழைய திருக்கோலக்குடி கிராமத்தில் நாளை (14-ந் தேதி) காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும்.
மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நடைபெற உள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.






