என் மலர்
சிவகங்கை
- சிங்கம்புணரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ராட்சத குழாயில் மோதியது.
- பலூன் வெளிவந்ததால் டிரைவர் உயிர் தப்பினார்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் செந்தில்முருகன் (வயது 36). வாடகை கார் டிரைவர்.
காரைக்குடியில் இருந்து இவர் காரில் சவாரி ஏற்றிக்கொண்டு கோவை சென்று விட்டு மீண்டும் காரைக்குடி நோக்கி திரும்பி கொண்டிருந்தார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சிலநீர்பட்டி பிரிவில் இரவில் வந்த போது வளைவான சாலையில் கார் வேகமாக திரும்பியது.
அப்போது கட்டுப்பா ட்டை இழந்த கார் சாலையோரம் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்திற்காக போடப்பட்டிருந்த ராட்சத இரும்பு குழாய் மீது மோதியது.
இதில் காரின் என்ஜின் பகுதி நொறுங்கியது. கார் வேகமாக மோதியதால் டிரைவர் சீட்டின் முன்பகுதியில் இருந்த பலூன் வெளி வந்தது. இதன் காரணமாக காரை ஓட்டிய செந்தில்முருகன் எவ்வித காயமுமின்றி உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த எஸ்.வி.மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
- சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு வாரவிழா வருகிற 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்கிறது.
- இந்த தகவலை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜினு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேசிய அளவில் ஆண்டுதோறும் நவம்பர் 14-ந் தேதி முதல் நவம்பர் 20-ந் தேதிவரை கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் கூட்டுறவுத்துறை சார்பில் வருகிற 14-ந் தேதி முதல் நவம்பர் 20-ந் தேதி வரை 69-வது கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட உள்ளது.
கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பயிர்க்கடன் மேளா நடத்தப்பட உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு நடப்பு 2022-23-ம் ஆண்டில் ரூ.200 கோடி அளவுக்கு பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே சங்கத்தில் உறுப்பினராக உள்ள விவசாயிகளும், இதுவரை உறுப்பினராக சேராத விவசாயிகளும் உடனடியாக புதிய உறுப்பினராக சேர்ந்து பயிர் கடன் பெற்று பயனடையலாம். பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டுக்கான பயிர்காப்பீட்டை சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், தொடக்க வோளண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொதுசேவை மையங்களில் உரிய ஆவணங்களுடன் பயிர்காப்பீடு கட்டணத்தை செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.
மேலும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கீழ்க்கண்டவாறு உர இருப்பு உள்ளது.
யூரியா-840 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி.500 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ்-283 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ்-787 மெட்ரிக் டன்னும் இருப்பு உள்ளது.
எனவே விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.
கடன் உறுப்பினராக சேர தேவையான ஆவணங்கள்:-
ஆதார் அட்டை நகல், ஸ்மார்ட் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-3
கடன் பெற தேவையான ஆவணங்கள்:-
1432 பசலி அடங்கல், 10(1) நகல் (பட்டா), ஆதார் அட்டை நகல், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கே.சி.சி. பாஸ்புக் நகல், ஸ்மார்ட் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-3.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இளையான்குடி கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்க புத்தாக்க பயிற்சி நடந்தது.
- செஞ்சிலுவை சங்க தலைவர் கலந்துகொண்டு செஞ்சிலுவை சங்கத்தின் தோற்றம் மற்றும் நோக்கம் குறித்து பேசினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் புத்தாக்க பயிற்சி நடந்தது. தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் அப்துல் ரஹீம் வரவேற்றார். முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சிவகங்கை மாவட்ட செஞ்சிலுவை சங்க தலைவர் பகீரத நாச்சியப்பன் கலந்துகொண்டு செஞ்சிலுவை சங்கத்தின் தோற்றம் மற்றும் நோக்கம் குறித்து பேசினார். பொருளாளர் ராமமூர்த்தி ''மனிதம் செம்மையுற மனவளக்கலை'' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். செயலாளர் அனந்த கிருஷ்ணன் ''காலத்தால்' செய்யும் முதலுதவி'' என்ற தலைப்பில் பேசினார். இதில் செஞ்சிலுவைச்சங்க மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். செஞ்சிலுவைச்சங்க திட்ட அலுவலர் நர்கீஸ் பேகம் நன்றி கூறினார்.
- மானாமதுரை பகுதியில் தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
- இந்த முகாமை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி கன்னார் தெரு மாரியம்மன் கோவிலில் தொடங்கியது. இதை மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி புதிய உறுப்பினர்கள் பெயர்களை எழுதி தொடங்கி வைத்தார். நகரசெயலாளர் பொன்னுசாமி வரவேற்றார். முத்தனேந்தல் பகுதியில் ஒன்றியசெயலாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை, ஒன்றியகுழு துணைத்தலைவர் முத்துசாமி ஆகியோர் வரவேற்றனர். திருப்புவனம் ஒன்றிய பகுதியில் மாவட்ட துணை செயலாளர்-திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் வரவேற்றார். அனைத்து இடங்களுக்கு சென்று இளைஞரணி உறுப்பினர் சேர்க்கும் பணியை தமிழரசி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
- சிவகங்கையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.
- இந்த முகாமில் பணி வாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது.
சிவகங்கை
சிகவங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படு த்தும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி வருகிற 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெறலாம்.
மேலும் இந்த முகாமில் இலவச திறன்பயிற்சிக்கான விண்ணப்பபடிவம், போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவ தற்கான விண்ணப்ப படிவமும் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ படித்த இளைஞர்கள் கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இந்த முகாமில் பணி வாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிவகங்கையில் சட்டவிழிப்புணர்வு முகாம் நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள், தன்னார்வ சட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.
சிவகங்கை
சிவகங்கையில் மத்திய சட்ட பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படியும், மாநில சட்ட பணிகள் ஆணைகுழு வழிகாட்டுதலின்படியும், சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதிசாய் பிரியா வழிகாட்டுதலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் குடும்ப நல நீதிபதி முத்துகுமரன் தலைமையில் அனைத்து துறை சார்ந்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இதில் அரசின் நலத்துறை செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன் பெறும் வகையில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர்/சார்பு நீதிபதி பரமேஸ்வரி ஏற்பாடு செய்திருந்தார். இதில் நீதித்துறை தலைமை குற்றவியல் நீதிபதி சுதாகர், நீதிதுறை நடுவர்கள் அனிதா கிறிஸ்டி, சத்தியநாராயணன், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்களும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள், தன்னார்வ சட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.
- வாராப்பூர் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிடத்திற்கான பூமி பூஜை நடந்தது.
- கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு முற்றிலுமாக சேதமடைந்துள்ளதால் உடனடியாக கலெக்டர் ஆய்வு செய்து கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடர் மழையின் காரணமாக இந்த பள்ளி யின் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு முற்றிலுமாக சேதமடைந்தது. உடனடியாக மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்து கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டார். அதன்படி கட்டிடம் இடிக்கப்பட்டது.
இதன் காரணமாக அங்கு படித்த பள்ளி மாணவ-மாணவிகள் அருகாமையில் உள்ள எஸ்.புதூர், சிங்கம்புணரி, பொன்னமராவதி போன்ற பகுதிகளுக்கு சென்று கல்வி பயிலக்கக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இப்பள்ளி யில் கல்வி பயின்ற முன்னாள் மாணவரும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர் சேதுராமன் பார்வைக்கு இதுகுறித்து வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் கொண்டு சென்றார். அதன் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் சார்பில் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் டாக்டர் சேதுராமன், டாக்டர் குரு சங்கர் மனைவி காமினி, சந்திரசேகர், மீனாட்சி மிஷன் பொறியாளர் கோபால், ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன், கட்டிட பொறியாளர் நாகராஜன், தலைமை ஆசிரியர் அலமேலுமங்கை, அரசு அதிகாரிகள், வகுப்பு ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் ஊர் பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்
- காரைக்குடி அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
- இந்த ஆய்வின் போது இணை இயக்குநர், தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் இருந்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு, பரிசோதனை ஆய்வகம், இயன்முறை சிகிச்சை பிரிவு மருந்தகம், அவசர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவற்றை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது வருகை பதிவேட்டில் மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கை, வருகைபுரிந்த மருத்துவர்கள், விடுப்பில் உள்ள மருத்துவர்கள், சிறப்பு பிரிவு மருத்துவர்கள் எண்ணிக்கை, குழந்தை களுக்கு போடப்படும் தடுப்பூசி குறித்தும், புற நோயாளிகள் பிரிவிற்கு சென்று சிகிச்சை பெற வந்துள்ள பொது மக்கள், சிகிச்சை அளிக்கப்படும் விதம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
மகப்பேறு பகுதியில் கர்ப்பிணிகளை பரிசோதிக்கும் வெளிநோயாளிகள் பிரிவில் மாதம்தோறும் 1200 பேருக்கும், உள்நோயாளிகள் பிரிவில் மாதம்தோறும் 600 பேருக்கும், பிரசவிக்கும் தாய்மார்கள் மாதம்தோறும் 300 முதல் 400 பேருக்கும், குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் தாய்மார்கள் மாதம்தோறும் 100 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படும் சிசு பராமரிப்பு பகுதியில் மாதம்தோறும் 300 வெளி நோயாளி குழந்தைகளுக்கும், 150 உள்நோயாளி குழந்தை களுக்கும் சிகிச்சை அளிக்க ப்படுகிறது.
பொது வெளி நோயாளி கள் பிரிவில் மாதம்தோறும் 20 ஆயிரம் பேருக்கும், விபத்து மற்றும் அவரச சிகிச்சை பிரிவின் கீழ் மாதம்தோறும் 200 நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சீறுநீரக சுத்திகரிப்பு பிரிவில் மாதம்தோறும் 25 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எலும்பு முறிவு அறுவை சிகிச்சை, கர்ப்பபை அகற்றும் சிகிச்சை, பித்தப்பை கல் அடைப்பு அகற்றுதல், கர்ப்பவாய் பரிசோதனை நுண்துளைகள் அறுவை சிகிச்சையும் நடைபெறு கிறது.
தொற்றுநோய் பிரிவு, மனநலபிரிவு, செவி திறன் ஆய்வு பிரிவு, குழந்தைகளுக்கான வெளிநோயாளி மற்றும் உள்நோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு ஆகிய பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மற்றும் இதர நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையின் வலதுபுற பகுதியில் 300 மரக்கன்றுகளை நடும் பணியின் தொடக்கமாக கலெக்டர் மரம் நடும் பணியை தொடங்கிவைத்தார்.
இந்த ஆய்வின் போது இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன், தலைமை மருத்துவர் தர்மர், வட்டாச்சியர் கண்ணன் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் இருந்தனர்.
- திருப்பத்தூரில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் ஒன்றிய தலைவர் சண்முகவடிவேல் செய்திருந்தார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள அண்ணா சாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க ஒன்றிய தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு பேச்சாளர்களாக வி.பி. ராஜன், இலக்கிய அணி தலைவர் தென்னவன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, தலைமை கழக பேச்சாளர் ஒப்பிலாமணி ஆகியோர் பங்கேற்று இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்து அனைவரும் ஓரணியில் நின்று பாடுபட வேண்டும் என்று பேசினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் ஒன்றிய தலைவர் சண்முக வடிவேல் செய்திருந்தார்.
- திருப்புவனம் அருகே பால்குளிரூட்டும் நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
- தமிழரசி எம்.எல்.ஏ. உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து ரூ. 16 லட்சம் ஒதுக்கினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் உள்ள திருப்புவனம் அருகே கீழராங்கியம் கிராமத்தில் கிராமப்புற பெண்கள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் பால் குளிரூட்டும் நிலை யத்திற்கான அடிக்கல் நாட்டினர்.
விழாவில் சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும், திருப்புவனம் பேரூராட்சி தலைவருமான சேங்கைமாறன், திருப்புவனம் கூட்டுறவு பால்பண்ணை செயலாளர் கிருஷ்ணன், நகர செயலாளர் நாகூர்கனி, ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆவின் நிர்வாகிகளும், ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
- மானாமதுரை பகுதியில் சிவாலயங்களில் சனிபிரதோஷவிழா நடந்தது.
- 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டு நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் வலம்வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்று கரையில் உள்ள ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில் சனிபிரதோஷத்தை முன்னிட்டு 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டு நந்தி வாகனத்தில் எழுந்த ருளி கோவிலில் உள்ள பிரகாரத்தில் வலம்வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு பள்ளியறை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை-பரமக்குடி சாலையில் உள்ள குறிச்சி வழிவிடு பெரிய நாச்சி அம்மன் கோவிலில் உள்ள காசிவிஸ்வநாதர் திருலிங்க திருமேனிக்கு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
நாளை (திங்கட்கிழமை) காலை வருஷாபிஷேக மும் ஐப்பசி மாத அன்னாபிஷேகம் மற்றும் பவுர்ணமி பூஜையும் இங்கு நடைபெறுகிறது.
இதேபோல் நாகலிங்கம் நகர் அருணாச்சலேஸ்வரர், இடைக்காட்டூர் மணிகண்டேஸ்வரர், வேம்பத்தூர் கைலாசநாதர், மேலெநெட்டூர் சொர்ண வாரிஸ்வர் கோவில்களிலும் சனிபிரதோஷம் பூஜைகள் நடைபெற்றது.
- விரிவாக்க கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் பங்கேற்றார்.
- ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன் வரவேற்றார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் விரிவாக்க கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். நகராட்சித் தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி வரவேற்றார். அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் விழாவில் பங்கேற்று விரிவாக்க கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். அவர் பேசியதாவது:-
பேரூராட்சியாக இருந்த மானாமதுரை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அதிகமாக செய்துதர வேண்டும். பொதுமக்கள் அலுவலகத்துக்கு வந்து செல்லும் வகையில் நகராட்சிக்கு போதுமான கட்டிடங்கள், பணியாளர்கள் தேவைப்படும் நிலையில் முதல்கட்டமாக தற்போது ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய விரிவாக்க கட்டிடம் 4800 சதுர அடியில் கட்டப்பட உள்ளது. இன்னும் பல திட்டங்கள் மானாமதுரை நகராட்சிக்கு வர உள்ளது.
கடந்த 1½ ஆண்டுகால முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் அமலில் இருந்த பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய நமக்கு நாமே திட்டம் தற்போது நகர்புறங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மானாமதுரை நகராட்சியிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் எந்த திட்டங்களையும் ரத்து செய்யாமல் மேலும் பல புதிய திட்டங்களை அறிவித்து நிதி நெருக்கடியான இந்த கால கட்டத்திலும் இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். பொதுமக்கள் எப்போதும் இந்த அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அர் பேசினார்.
விழாவில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், நகராட்சி துணைத்தலைவர் பாலசுந்தரம், மாவட்ட விழிப்புணர்வுக்குழு உறுப்பினர் பொன்னுச்சாமி, ஊராட்சி ஒன்றியத்தலைவர் லதா அண்ணாதுரை, ஆணையாளர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர் தங்கதுரை மற்றும் வார்டு உறுப்பினர்கள், பணியா ளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மானா மதுரை ஊராட்சி ஒன்றியம் இடைக்காட்டூர் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு மற்றும் வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தில் பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் வழங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன் வரவேற்றார்.






