என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • கால்நடைகளுக்கு தேவையான தீவனப்புல் வளர்க்க விதைத் தொகுப்பு வாங்க மானியம் வழங்கப்படும் என கலெக்டர் கூறினார்.
    • கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு தேவைப்படும தீவனப்புல் வளர்க்க விதைத் தொகுப்பு மற்றும் புல்கறனைகள் வாங்குவதற்கு மானியம் வழங்குவதற்கான அரசாணை வரப்பெற்றுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18-65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தீவனப்புல் மற்றும் புல்கறனைகள் வளர்க்க ஆர்வமுள்ளவர்கள் கால்நடை உதவி மருத்து வரிடம் பரிந்துரை பெற்று விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். பயனாளிகளுக்கு விதைத் தொகுப்பு, புல்கறனைகளுடன் தீவனங்களை வளர்க்க தேவையான பயிற்சி, கையேடுகள் மற்றும் களப்பயிற்சி ஆகியவற்றின் செலவினங்கள் ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் என்ற மானிய தொகைக்கு உட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

    தீவன விதைகள் ஆவின் நிறுவனம், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள ஆதிதிராவிடர் பயனாளிகள் https:/ /application.tahdco.com என்ற இணையதளத்திலும், பழங்குடியின பயனாளிகள் https://fast.tahdco.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காரைக்குடியில் அ.ம.மு.க. செயலாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது.
    • தெற்கு நகர செயலாளராக கார்த்திக், வடக்கு நகர செயலாளராக அஸ்வின்குமார் நியமிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டனர்.

    காரைக்குடி

    காரைக்குடி நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் காரைக்குடி வடக்கு, காரைக்குடி தெற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டது. புதிய நகர செயலாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா மாவட்ட அ.ம.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி தலைமை தாங்கினார்.மாநில பொறியாளர் அணி தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் விமல் வரவேற்றார்.

    காரைக்குடி தெற்கு நகர செயலாளராக கார்த்திக், வடக்கு நகர செயலாளராக அஸ்வின் குமார் நியமிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டனர். அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி வழங்கி உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.

    இதில் பொதுக்குழு உறுப்பினர் பழனி பெரியசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் பந்தாபாண்டி, முத்துபாரதி, மாவட்ட பொருளாளர் லாரன்ஸ், மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் சுமதி உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் திரளாக கலந்துகொண்டனர்.நகர தலைவர் மைக்கேல் நன்றி கூறினார்.

    • சிங்கம்புணரி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியானார்.
    • இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மருதிப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகன் ஆகாஷ் (வயது 19). இவர் மதுரையில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று மாலை மாணவர் ஆகாஷ், திருப்பத்தூரில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    சிங்கம்புணரி அருகே எம்.கோவில்பட்டி பகுதியில் சென்று கொண்டி ருந்தபோது அவரது மோட்டார் சைக்கிள், எதிரே காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற தனியார் பஸ் மீது மோதியது. இதில் பஸ் சக்கரத்தில் சிக்கிய மாணவர் ஆகாஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே பலியானார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த எஸ்.பி.மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரைக்குடி தெற்கு நகர அ.ம.மு.க. செயலாளராக கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    காரைக்குடி

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர அ.ம.மு.க. இரண்டாகப் பிரிக்கப்பட்டு காரைக்குடி தெற்கு நகர செயலாளராக, ரித்தீஷ் பஸ் உரிமையாளர் கார்த்திக் அறிவிக்கப்பட்டுள்ளார். காரைக்குடி வடக்கு நகர செயலாளராக அஸ்வின் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    2 நகரச் செயலாளர்களும் மாவட்டச் செயலாளர் தேர்போகி பாண்டி, மாவட்ட பொருளாளர் லாரன்ஸ் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    • நெற்குப்பையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பேரூராட்சி தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
    • நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள மண்டு கருப்பர் கோவில் தெருவில், காலனி தெருவில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. உடனடியாக பேரூராட்சி மன்ற தலைவர் புசலான் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூய்மை பணியாளர்கள் உதவியோடு தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார். இளநிலை உதவியாளர் சேரலாதன், தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு மற்றும் தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • மாடுகள் மேய்ந்ததில் 75 ஏக்கர் நெற்பயிர்கள் நாசமாகின.
    • கடந்த ஆண்டும் இதேபோன்று மாடுகளால் விவசாயம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காவல்துறைக்கு புகார் செய்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா பனிக்கனேந்தல் 3 கண்மாய் பாசனத்தில் உள்ள 75 ஏக்கர் விவசாயத்தில் 50 மாடுகள் மேய்ந்து நாசமானது. இது தொடர்பாக கிராம மக்களும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொறுப்பாளர்களும் வட்டாட்சியர் சாந்தியிடம் புகார் செய்தனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மானாமதுரை ஒன்றிய செயலாளர் ஆண்டி, விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி மற்றும் விவசாயிகள் இரவு நேரங்களில் மாடுகள் விவசாய நிலங்களில் புகுந்து நெற்பயிர்களை அழித்ததை விவசாயிகள் சுட்டிக் காண்பித்தனர்.

    இந்த கிராமத்தில் 3 கண்மாய்கள் உள்ளது. 3 கண்மாய்கள் மூலம் மொத்தம் 100 ஏக்கர் பாசன பாசனம் பெறுகிறது. வைகை கரையோரம் இருந்தாலும் வைகை தண்ணீர் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.

    கண்மாயை நம்பித்தான் விவசாயம் நடைபெற்று வருகிறது. கண்மாயில் மழை தண்ணீர் நிரம்பி விவசாயம் நடைபெறுகிறது. இங்கு நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. 3 மாத காலம் நெல் விவசாயத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் விவசாயிகளிடம் உள்ளது.

    பூச்சிகளில் இருந்து பாதுகாப்பு செய்ய வேண்டி உள்ளது. பன்றிகளால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டி உள்ளது. அதுபோக கடந்த 3 ஆண்டு காலமாக மானாமதுரை நகர் அழகர் கோவில் தெருவில் உள்ள சுமார் 75 மாடுகளால் விவசாயம் அழிக்கப்பட்டு வருகிறது.

    மாடுகள் வளர்ப்போர் மாலையில் அவிழ்த்து விடுகிறார்கள். இந்த மாடுகள் வைகை கரை ஓரம் செல்கிற பாதையில் நல்ல நிலையில் இருக்கும் நெற்பயிர்களை மேய்ந்து அழித்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் மானாமதுரை வட்டாட்சியர் சாந்தியிடம் புகார் தெரிவித்தனர் . கடந்த ஆண்டும் இதேபோன்று மாடுகளால் விவசாயம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காவல்துறைக்கு புகார் செய்தனர். அதன் பின்பு ஓரளவுக்கு மாட்டின் உரிமையாளர்கள் கட்டுப்பட்டு இருந்தனர். தற்போது மீண்டும் மாடுகள் அவிழ்த்து விடப்படுகிறது.

    அந்த மாடுகள் கடந்த 4 நாட்களாக நெற்பயிர்களை அழித்து 75 ஏக்கர் விவசாயத்தை மேய்ந்ததால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.தற்போது விவசாயிகள் மும்முரமாக பாசன பணிகளில் இரவு, பகல் பாராமல்பணி செய்து வருகின்றனர்.

    ஆனால் கால்நடைகளில் இருந்து விவசாயத்தை காப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மானாமதுரை ஒன்றிய செயலாளர் ஆண்டி மற்றும் விவசாயிகள் வட்டாட்சியரிடம் கேட்டுக் கொண்டனர்.

    • திருப்புவனத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • இதனை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மூலம் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    இதில் சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர்-திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், ஒன்றிய குழு தலைவர் சின்னையா, துணைத்தலைவர் மூர்த்தி, பேரூராட்சி செயல்அலுவலர் ஜெயராஜ் மற்றும் வட்டார குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள், வார்டு கவுன்சிலர்கள், கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடி ெரயில் நிலையத்தில் அவசர சிகிச்சை மையம் தொடக்க விழா நடந்தது.
    • அவசர ஊர்தியும் மக்கள் பயன்பாட்டுக்காக நிறுத்திவைக்கப்படும் என கே.எம்.சி. மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தெரிவித்தார்.

    காரைக்குடி

    காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனை சார்பில், காரைக்குடி ெரயில் நிலையத்தில் முதல் உதவி சிகிச்சை மையம் கமாண்டெண்ட் ெரயில்வே புரொடெக்க்ஷன் போர்ஸ் செல்வராஜ் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர் கொலம்பஸ் டோபோ ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.

    முதல் உதவி சிகிச்சை மையத்தை பற்றி கே.எம்.சி. மருத்துவமனையின் தலைமை மருத்துவர் காமாட்சி சந்திரன் பேசுகையில் இந்த முதல் உதவிமையம் கே.எம்.சி மருத்துவமனை சார்பாக அடிப்படை அவசர சிகிச்சை உபகரணங்களுடன் 24 மணிநேரமும் ெரயில் பயணிகள் மற்றும் ெரயில்வே பணியாளர்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா மருத்துவ உதவி பெரும் வகையில் செயல்படும் என தெரிவித்தார். மேலும் அவசர ஊர்தியும் மக்கள் பயன்பாட்டுக்காக நிறுத்திவைக்கப்படும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கே.எம்.சி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் காமாட்சி சந்திரன் மற்றும் டாக்டர்கள் காளியப்பு, பாலாஜி, பிரசாந்த் மற்றும் கே.எம்.சி. மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் காரைக்குடி ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ெரயில்வே பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் நெல் அறுவடை திருவிழா நடந்தது.
    • நெல் அறுவடைக்குப் பின் 2 நெல் இரகங்களின் மகசூல் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள விசாலயன்கோட்டை கலாம் கவி கிராமத்தில் அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கோடை நெல் அறுவடைத்திருவிழா நடைபெற்றது.

    இவ்விழாவில் கல்லூரியின் தாளாளர் சேது குமணன் தலைமை தாங்கி சுற்று வட்டார கிராம விவசாயிகளை வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் கருணாநிதி பண்ணையில் பயிரிட்ட திருச்சி -1 மற்றும் திருச்சி-3 ஆகிய நெல் இரகங்களின் சிறப்புகளை விவசாயிகளுக்கு விளக்கினார். விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் நெல் அறுவடையில் கலந்துகொண்டனர். நெல் அறுவடைக்குப் பின் 2 நெல் இரகங்களின் மகசூல் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன.

    இவ்விழாவில் நெல் சாகுபடி மற்றும் விவசாயம் சார்ந்த பல்வேறு சந்தேகங்களுக்கு கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர். எஸ்.ஆர் பட்டினம், விசாலயன் கோட்டை, கலிப்புலி, காளையார்கோவில் மற்றும் புலிக்குத்தியைச் சேர்ந்த சுமார் 40 விவசாயிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர், கல்லூரியின் இயக்குநர் கோபால் நன்றியுரை வழங்கினார்.

    • சிவகங்கை மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரம் ரேசன் கார்டுதாரர்களுக்கு குடிமை பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
    • தேவகோட்டை வட்டத்திற்குட்பட்ட ஈழொளி வயல், கண்ணங்குடி வட்டத்திற்குட்பட்ட எழுவன்கோட்டை ஆகிய பகுதிகளில் ரேசன் கடைகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்திற்குட்பட்ட ஈழொளி வயல், கண்ணங்குடி வட்டத்திற்குட்பட்ட எழுவன்கோட்டை ஆகிய பகுதிகளில் செயல்படும் ரேசன் கடைகளில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறிய தாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் 660 முழு நேரம் மற்றும் 204 பகுதிநேர நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலமாக, 4 லட்சத்து 20 ஆயிரத்து 792 குடும்ப அட்டைதாரர் களுக்கு குடிமைப்பொருட்கள் அனைத்தும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

    மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடைகளின் மூலம் குடும்ப அட்டைதாரர் களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிமைப்பொருட்களின் எண்ணிக்கை, பொருட்கள் வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடையளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்து, மாதந்தோறும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நியாய விலைக்கடை களுக்கு வருகை தரும் குடும்ப அட்டைதாரர்களிடம் பொருட்களின் தரம் மற்றும் நியாய விலைக்கடையின் செயல்பாடுகள் தொடர்பாக பொதுமக்களிடம் கேட்ட றியப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் குறைகள் இருப்பின், அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவவாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அருண்பிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேவரம்பூர் கிராமத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை முகாம் வருகிற 14-ந் தேதி நடக்கிறது.
    • விவசாயிகள் தங்கள் கால்நடைகளை முகாமிற்கு அழைத்து வந்து பயன்பெறலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், தேவராம்பூர் கிராமத்தில், வருகிற (14-ந்் தேதி) மாவட்ட கலெக்டர் தலைமையில், ஏழை எளிய விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடக்கிறது.

    இந்த முகாமில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல். நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, ஊடு அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி, நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு அளிக்கப்படும்.

    மேலும் சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளைப் பின்பற்றும் சிறந்த 3 விவசாயிகளுக்கு விருது வழங்கப்படும். கிடாரி கன்று பேரணி நடத்தி சிறந்த 3 கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

    மேலும், தாது உப்புக்கலவைகள் கால்நடை வளர்ப்போருக்கு விநியோகிக்கப்படும். எனவே, கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை முகாமிற்கு அழைத்து வந்து பயன்பெறலாம்.

    இந்த தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • இணையதள குளறுபடியால் 5 மாதம் சம்பளம் கிடைக்காமல் ஆசிரியர்கள் அவதிப்படுகின்றனர்.
    • கல்லல் ஒன்றிய பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை அதிகாரிகள் இணைய தளத்தில் இருந்து நீக்கி உள்ளனர்.

    சிவகங்கை

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது:-

    தமிழக அரசு காகித பயன்பாட்டை தவிர்க்கவும், விரைவான சேவை வழங்கும் நோக்கத்திலும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்திட்டம் இணையதளம் மூலம் ஊதியம் மற்றும் பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதை நிறுவிய தனியார் நிறுவனம் அடிப்படை ஊழியர்களுக்கு முறையான பயிற்சியை வழங்கவில்லை. இதனால் தொழில்நுட்ப கோளாறு ஏற்படும்பொழுது அதை சரிசெய்ய அலுவலக பணியாளர்களால் இயலவில்லை.

    இதன் காரணமாக சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் ராஜேஸ்வரி,என்.மேலையூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி இடைநிலை ஆசிரியர் விவிலி ஆகிய இருவருக்கும் கடந்த 5 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை.

    2 பள்ளிகளிலும் உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் சிவகங்கை ஒன்றியத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது.

    இதனால் கல்லல் ஒன்றிய பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை அதிகாரிகள் இணைய தளத்தில் இருந்து நீக்கி உள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மற்ற மாவட்டங்களில் இருந்து மாறுதல் பெற்று வந்த ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை மாதத்தில் இருந்து ஊதியம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அந்த ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்.

    நிர்வாக ரீதியில் அதிகாரிகளால் ஏற்பட்ட குளறுபடிக்கு எவ்வித காரணமும் இல்லாத ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது சராசரி குடும்ப வாழ்க்கை மிகவும் பாதிப்பு அடைந்துள்ளது.

    இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் கருவூலக அலுவலர்களிடம் முறையிட்டதற்கு சென்னை இயக்குநர் அலுவலகம்தான் சரி செய்து தரவேண்டும் அதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்கிறார்கள்.

    இந்த நிலையே கடந்த 5 மாதமாக தொடருவதால் இந்த குளறுபடியை சரிசெய்து உடனடியாக ஊதியம் வழங்க வேண்டுமென தொடக்கக்கல்வி இயக்குனரிடம் நேரடியாக முறையிட்டுள்ளோம். பல லட்சம் செலவழித்து உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள் குறித்து முழுமையான பயிற்சியை அனைத்து அலுவலக பணியாளர்களுக்கும் வழங்கி ஊதியம் உள்ளிட்ட பணப்பலன்களை உரிய தேதியில் வழங்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×