என் மலர்
சேலம்
- பூங்காவில் பல்வேறு வகை ரோஜா செடிகள் வளர்க்கப்படுகிறது.
- மலர் செடிகள் நடவு செய்து பணியாளர்கள் பராமரித்து வருகிறார்கள்.
ஏற்காடு:
தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று ஏற்காடு. இங்கு நிலவும் குளிர்ச்சியான காலநிலை சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கிறது. இதனால் இங்கு வருடந்தோரும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்குள்ள தாவரவியல் பூங்கா, மான் பூங்கா, அண்ணா பூங்கா, ஏரிக்கரை பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்து சுற்றுலா பயணிகள் ரசிக்கின்றனர். அதுபோல் ஏரியில் குதுகலமாக படகுசவாரி செய்து உற்சாகம் அடைகின்றனர்.
இந்த நிலையில் நடப்பாண்டுக்கான கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சிக்கான முன் ஏற்பாடுகள் தோட்டக்கலை துறை சார்பில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மலர் செடிகள் நடவு செய்து பணியாளர்கள் பராமரித்து வருகிறார்கள்.

மேலும் பூங்காவில் பல்வேறு வகை ரோஜா செடிகள் வளர்க்கப்படுகிறது. இந்த ரோஜா மலர்களுக்கு தனி கவனம் செலுத்தி வளர்க்கப்படுகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் ஏற்காடு அண்ணா பூங்காவில் பல வகை நிறங்களில் ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்குகிறது.
இது கண்களை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது. பூத்துக்குலுங்கும் இந்த மலர்களை மனதில் மகிழ்ச்சி ததும்ப வியந்து பார்த்தப்படி அதன் முன்பு நின்று செல்பி எடுத்து சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். இதே போல் ஏற்காடு ரோஜா தோட்டத்திலும் பல வகை வண்ண ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்குகிறது.
- சுகாதாரத்துறையினர் மாடுபிடி வீரர்களுக்கு உடற்கூறு தகுதி சான்றிதழ் வழங்கிய பிறகே போட்டியில் அனுமதிக்கப்பட்டனர்.
- போதுமான மருந்துகளுடன் கால்நடை டாக்டர்களுடன் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள உலிபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவினை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தொடங்கி வைத்தார். உறுதி மொழி எடுக்கப்பட்டு விழா தொடங்கியது. இந்த விழாவில் சேலம், ஆத்தூர், கடம்பூர், கூடமலை, கெங்கவல்லி, ஏத்தாப்பூர், புதுக்கோட்டை, பெத்தநாயக்கன்பாளையம், கோனேரிப்பட்டி, நடுவலூர், கீரிப்பட்டி, கொண்டையம்பள்ளி, மல்லியகரை, திம்மநாயக்கன்பட்டி, மங்களபுரம், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500 காளைகள் கலந்து கொண்டன. இதில் 300 மாடுபிடி வீரர்கள் 50 பேராக 6 சுற்றாக பிரிக்கப்பட்டு மாடு பிடிக்கு அனுமதிக்கப்பட்டனர்.
முதலில் கோவில் மாடு அவிழ்த்து வாடிவாசல் வழியாக விடப்பட்டது. கோவில் மாடு என்பதால் அதை யாரும் பிடிக்கவில்லை. இதையடுத்து வரிசையாக ஒவ்வொரு மாடுகளாக அவிழ்த்து விடப்பட்டது. இந்த மாடுகள் வாடி வாசல் வழியாக சீறி பாய்ந்தது. தொட்டுப்பார், நாங்கள் தாறுமாறு என காளைகள் மைதானத்தில் துள்ளிக்குதித்து ஓடியது. வாடிவாசல் முன்பு திரண்டிருந்த வீரர்கள் இந்த காளைகளின் திமிலை பிடித்து அடக்க முயன்றனர். வீரர்கள் காளைகளின் திமிலை பிடித்து தொங்கியபடி வாடிவாசல் முகப்பில் இருந்து சில அடி தூரம் வரை சென்று அடக்கி பிடித்தனர். பெரும்பாலான காளைகள் வீரர்களிடம் பிடிப்படாமல் எகிறி குதித்து ஓடியது. காளைகளின் திமிலை பிடித்து அடக்க முயன்றபோது வீரர்களை காளைகள் முட்டி தூக்கி எறிந்தது.
இந்த போட்டியை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். கரகோஷம் எழுப்பி வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள். அதுபோல் வீரர்களிடம் இருந்து எகிறி குதித்து ஓடிய காளைகளுக்கு கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். மாடுகளின் திமிலை பிடித்து அடக்கிய வீரர்களுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாமல் சென்ற மாடுகளுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக கால்நடை பராமரிப்புத்துறை டாக்டர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு உடற்கூறு தகுதி சான்றிதழ் வழங்கினர். பிராணிகள் நல வாரியத்தால் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. இதேபோல் சுகாதாரத்துறையினர் மாடுபிடி வீரர்களுக்கு உடற்கூறு தகுதி சான்றிதழ் வழங்கிய பிறகே போட்டியில் அனுமதிக்கப்பட்டனர். தடுப்பு வேலிகள், பாதுகாப்பு அம்சங்கள், மக்கள் அமரும் பார்வையாளர் மாடம், மேடைகள், ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்து வருவதற்குரிய பாதைகளுக்கான தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.
போதுமான மருந்துகளுடன் கால்நடை டாக்டர்களுடன் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது. டாக்டர்கள் மற்றும் மருந்துகள், 108 ஆம்புலன்ஸ் வசதி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் இதர சம்பந்தப்பட்ட துறையினர் கண்காணித்தனர். பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
- குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து மீண்டும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- நாயை அடித்துக்கொன்று குடிநீர் தொட்டியில் வீசிய மர்மநபர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி கிராம ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 50-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள ஆட்டையான்வட்டம் பகுதியில் 5 கிராமங்களுக்கு அனுப்பும் வகையில் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்கும் வகையில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி 16.5 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
இந்த குடிநீர் தொட்டிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் காவிரி நீர் ஏற்றப்பட்டு இந்த தொட்டியில் இருந்து அருகில் உள்ள அங்கன்வாடி மையம், அரசு நடுநிலைப்பள்ளி, கொடியன் வளவு, ஆட்டையன்வளவு, கந்தாயி வட்டம், ஆரான்வட்டம், ஆப்பவட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கும் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. டேங்க் ஆபரேட்டராக அம்மாசி என்பவர் பணியாற்றி வருகின்றார்.
இந்த நிலையில் நேற்று தண்ணீர் தொட்டிக்குள் நாய் ஒன்று செத்து மிதந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் தாரமங்கலம் போலீசாருக்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி பணியாளர்கள் குடிநீர் தொட்டியில் செத்து மிகுந்த நாயை வெளியே எடுத்து போட்டனர். அதன் பிறகு குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து மீண்டும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குடிநீர்தேக்க தொட்டியில் மர்மநபர்கள் அங்கு சுற்றி திரிந்த தெரு நாயை அடித்துக்கொன்று போட்டுள்ளது தெரியவந்தது.
எனவே நாயை அடித்துக்கொன்று குடிநீர் தொட்டியில் வீசிய மர்மநபர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மர்மநபர்களை உடனடியாக போலீசார் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் எதிர்காலத்தில் வேறு எங்கு வேண்டுமானாலும் இதுபோல் மீண்டும், மீண்டும் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தாரமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஈரோடு-செங்கோட்டை முன்பதிவற்ற எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் வருகிற 27-ந் தேதி வரை வாஞ்சி மணியாச்சி-செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது.
- மறு மார்க்கத்தில் வருகிற 28-ந் தேதி நெல்லையில் புறப்பட வேண்டிய தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரையில் இருந்து புறப்படும்.
சேலம்:
சேலம் கோட்ட ரெயில்வே சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது-
திருநெல்வேலி-மேலப்பாளையம் ரெயில் பாதையை இரட்டிப்பாக்கும் பணி நடக்கிறது. இதனால் நாகர்கோவில் கோவை முன்பதிவற்ற ரெயில் இயக்கம் நாளை (23-ந் தேதி) முதல் 28-ந் தேதி வரை நாகர்கோவில்-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கத்தில் கோவையில் இருந்து இயக்கப்படும் ரெயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்.
பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் வருகிற 27-ந் தேதி வரை திண்டுக்கல்-நாகர்கோவில் வரை ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் நாளை முதல் வருகிற 27-ந் தேதி வரை திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு பெங்களூருக்கு சென்றடையும்.
ஈரோடு-செங்கோட்டை முன்பதிவற்ற எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் வருகிற 27-ந் தேதி வரை வாஞ்சி மணியாச்சி-செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில் வாஞ்சி மணியாச்சி புறப்பட்டு ஈரோட்டை அடையும்.
நாளை (23-ந் தேதி) தாதரில் புறப்பட்டு நெல்லையை அடையும் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் இயக்கம் மதுரை-நெல்லை இடையே ரத்து செய்யப்படுகிறதது. மறு மார்க்கத்தில் வருகிற 28-ந் தேதி நெல்லையில் புறப்பட வேண்டிய தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரையில் இருந்து புறப்படும்.
நாளை (23-ந் தேதி) இயக்கப்படும் ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கத்ரா-நெல்லை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி-நெல்லை இடையே ரத்து செய்யப்படுகிறது. வருகிற 24-ந் தேதி தாதரில் இருந்து நெல்லை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் விருதுநகர்-நெல்லை இடையே ரத்து செய்யப்படும். மறு மார்க்கத்தில் வருகிற 26-ந் தேதி நெல்லையில் புறப்பட வேண்டிய தாதர் எக்ஸ்பிரஸ் விருதுநகரில் புறப்படும்.
வருகிற 25-ந் தேதி நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட வேண்டிய சிறப்பு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சூரிய ஒளி சிவலிங்கத்தின் நெற்றியில் படும் அதிசய நிகழ்வு நடைபெறும்.
- சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழாததால் பக்தர்கள் ஏமாற்றம்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 21, 22, 23 ஆகிய தேதிகளில் மாலை நேரத்தில் சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரத்தில் சூரிய ஒளி சிவலிங்கத்தின் நெற்றியில் படும் அதிசய நிகழ்வு நடைபெறும்.
இந்த நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்வார்கள். இந்த நிகழ்வை காணவும், பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ளவும் நேற்று மாலை திரளான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் ராஜகோபுரம் வழியாக உள்ளே வந்த சூரிய ஒளி நந்தி சிலை வரை சென்று மறைந்தது. மேற்கொண்டு ஒளி கோவிலுக்கு உள்ளே செல்லவில்லை. இதனால் சிவலிங்கத்தின் மீது ஒளி விழாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அதனை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் சாமியை வழிபட்டு சென்றனர். தொடர்ந்து இன்று மாலை சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் என எதிர்ப்பார்ப்பில் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர்.
- ஏற்காடு டவுண் பகுதியில் குடிநீர் தட்டுபாடு அதிகமாக உள்ளது.
- காபி செடிகளுக்கு இடையே காட்டெருமைகள் புகுந்து செடிகளை சேதப்படுத்தியும் விவசாயிகளை அச்சுறுத்தும் வருகிறது.
ஏற்காடு:
ஏற்காட்டிற்கு தினமும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தாவரவியல் பூங்கா, அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், மான் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட், ஏரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளது.
இங்குள்ள மலை பகுதியில் வானுயுர்ந்த மரங்கள் உள்ளன. இங்குள்ள தோட்டங்களில் காபி, ஆரஞ்சு, மிளகு, அத்தி பழம், ஆட்டுக்கால் கிழங்கு, மலை வாழை உள்ளிட்டவை அதிக அளவில் விளைகிறது.
குறிப்பாக ஏற்காடு தட்டவெப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு உள்ளதால் இங்கு காட்டெருமைகள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றன. இந்த காட்டெருமைகள் சில சமயங்களில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்குள் புகுந்து காட்டெருமை 2 பேரை தாக்கியது.
இந்நிலையில் தற்போது இரவு நேரங்களில் அதிக பனிபொழிவும் பகல் நேரங்களில் அதிக வெயிலும் காணப்படுகிறது. மேலும் கோடைகாலத்திற்கு முன்பாகவே ஏற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது.
மேலும் ஏற்காடு டவுண் பகுதியில் குடிநீர் தட்டுபாடு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள காட்டெருமைகள் குடிருப்பு பகுதிகளில் படையெடுக்க தொடங்கியுள்ளது. காபி தோட்டங்களில் காபி செடிகளுக்கு இடையே காட்டெருமைகள் புகுந்து செடிகளை சேதப்படுத்தியும் விவசாயிகளை அச்சுறுத்தும் வருகிறது. இதனல் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- முதல் நாள் முடிவில் தமிழ்நாடு 291 ரன்கள் எடுத்துள்ளது.
- அந்த அணியின் பாபா இந்திரஜித் சதமடித்து அசத்தினார்.
சேலம்:
ரஞ்சி கோப்பை தொடரில் நடந்து முடிந்துள்ள 6 சுற்றுகளின் முடிவில் தமிழ்நாடு அணி 22 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், சி பிரிவில் உள்ள தமிழ்நாடு, பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி சேலத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ் 10 ரன்னிலும், பிரதோஷ் பால் 20 ரன்னிலும், ஜெகதீசன் 22 ரன்னிலும், முகமது அலி 27 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் பாபா இந்திரஜித் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். இவருக்கு விஜய் சங்கர் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். 5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி இதுவரை 184 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் நாள் முடிவில் தமிழ்நாடு அணி 4 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்துள்ளது. பாபா இந்திரஜித் 122 ரன்னும், விஜய் சங்கர் 85 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- ஆட்டோக்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்து டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பெண்கள் மற்றும் முதியவர்கள் அவசர தேவைகளுக்கு கூட செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.
சேலம்:
விபத்துகளில் சிக்கும் டிரைவர்கள் மீது 10 ஆண்டுகள் சிறை, 7 லட்சம் அபராதம் என்ற மத்திய அரசின் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல், கியாஸ் விலைகளை குறைக்க வேண்டும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும், ஆன்லைன் அபராதத்தை தடுத்து நிறுத்த வேண்டும், ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணத்தை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஆட்டோ டிரைவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று காலை முதல் ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோக்களை இயக்காமல் நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி சேலத்தில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் பெரும்பாலான ஆட்டோக்கள் இன்று ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மேலும் ஆட்டோக்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்து டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் பங்கேற்றனர். இதனால் பெண்கள் மற்றும் முதியவர்கள் அவசர தேவைகளுக்கு கூட செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.
பள்ளி மாணவிகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்களில் சில ஆட்டோக்கள் மட்டும் இயங்கின. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளை பெற்றோர் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டனர். மேலும் ஆட்டோக்களில் அலுவலகங்களுக்கு செல்வோரும் கடும் அவதி அடைந்தனர்.
- சாலையோரம் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் காற்றாடி என்ஜின் ஏற்றிய டாரஸ் லாரி டீசல் போடுவதற்காக நின்று கொண்டிருந்தது.
- லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கிளீனர் தப்பியோடி விட்டனர்.
சேலம்:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வெட்டு வெந்நியை அடுத்த தறியன் விளையை சேர்ந்தவர் பிரபாகர் சிங், இவரது மகன் கேம்கோ (21), தக்கலை அருகே உள்ள மேக்காமண்டபத்தை சேர்ந்தவர் சத்தியபிரவீன் (21), சேலம் அங்கம்மாள் காலனி குப்தா நகரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் கவுதம் (21), சரண் (21) மற்றும் ஜெகநாத் (21) இவர்கள் 5 பேரும் புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கல்லூரி விடுமுறையையொட்டி மாணவர்கள் 5 பேரும் கேம்கோவுக்கு சொந்தமான காரில் சேலத்திற்கு புறப்பட்டனர். காரை மாணவர் கேம்கோ ஓட்டி வந்தார். இவர்கள் வந்த கார் நள்ளிரவு 12.30 மணியளவில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மல்லூர் அருகே உள்ள பொய்மான் கரடு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சாலையோரம் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் காற்றாடி என்ஜின் ஏற்றிய டாரஸ் லாரி டீசல் போடுவதற்காக நின்று கொண்டிருந்தது. இதை கவனிக்காத கேம்கோ கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த லாரியின் பின் பகுதியில் பயங்கரமாக மோதினார்.
இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த மாணவர் கேம்கோ மற்றும் பின் சீட்டில் அமர்ந்திருந்த மாணவர் கவுதம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தனர். காயம் அடைந்த மற்றவர்கள் வலியால் அலறி துடித்தனர்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த மல்லூர் போலீசார் மற்றும் ரோந்து போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த மாணவர் ஜெகநாத்தை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள இவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லேசான காயம் அடைந்த சத்தியபிரவீன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் மாணவர் சரண் காயமின்றி தப்பினார்.
விபத்தில் இறந்த கேம்கோ மற்றும் கவுதமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுது புரண்டனர். இந்த சம்பவம் அரசு ஆஸ்பத்திரியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து மல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கிளீனர் தப்பியோடி விட்டனர்.
- காதலர் தினத்தையொட்டி மேட்டூர் அணை பூங்காவுக்கு இன்று காலை முதலே ஏராளமான காதல் ஜோடிகள் வந்தனர்.
- சேலம் அண்ணா பூங்காவிலும் காலை முதலே காதல் ஜோடிகள் அதிக அளவில் குவிந்தனர்.
சேலம்:
காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் உள்ள காதலர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காதலர்கள் தங்களது காதலர்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுத்தும், வாழ்த்து தெரிவித்தும் காதலை பரிமாறிக்கொண்டனர். மேலும் காதலர்கள் இன்றைய பொழுதை மகிழ்ச்சியாக கழிக்க தங்களுக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு காலை முதலே படையெடுத்தனர்.
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் காதல் ஜோடிகள் வந்தனர். இன்று காலை முதலே ஏற்காட்டிற்கு மோட்டார் சைக்கிள்களிலும், கார்களிலும், சாரையாக காதல் ஜோடிகள் வந்தனர். மேலும் காதல் திருமணம் செய்தவர்களும் அங்கு குவிந்தனர். இதனால் ஏற்காட்டில் காதல் ஜோடிகள் மற்றும் இளம் ஜோடிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
ஏற்காட்டில் குவிந்த காதல் ஜோடிகள் அங்குள்ள மான் பூங்கா, அண்ணா பூங்கா, படகு குழாம், சேர்வராயன் கோவில் , பக்கோடா பாயிண்ட, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், மீன் பண்ணை உள்பட அனைத்து பகுதிகளையும் ஆனந்தமாக சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். மேலும் முக்கியமான பகுதிகளில் நின்று செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இதனால் கடைகளிலும் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் குரும்பப்பட்டியில் இயற்கை சூழலில் அனைவரையும் கவரும் வகையில், உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு பறவையினங்கள், பாலூட்டி இனங்கள், ஊர்வன, நீந்துவன என 200-க்கும் மேற்பட்ட உயிர் இனங்கள் உள்ளன. இயற்கை சூழலில் இந்த பூங்கா உள்ளதால் காதல் ஜோடிகள் இன்று காலை முதலே அதிக அளவில் அங்கு வந்தனர்.
மேலும் வண்ணத்து பூச்சி பூங்கா, செயற்கை நீர் வீழ்ச்சிகள் முன்பும் நின்று காதல் ஜோடிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். குறிப்பாக அங்குள்ள மான்கள், பாம்புகள், குரங்குகள், மயில்கள், மற்றும் பறவையினங்களை பார்த்து மகிழ்ந்ததுடன் உற்சகாமாக பொழுதை கழித்தனர்.
காதலர் தினத்தையொட்டி மேட்டூர் அணை பூங்காவுக்கு இன்று காலை முதலே ஏராளமான காதல் ஜோடிகள் வந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் நீராடி மகிழ்ந்தனர். தொடர்ந்து அங்குள்ள ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாட்டுகளில் ஆனந்தமாக விளையாடி மகிழ்ந்தனர். மேலும் அணையின் பவள விழா கோபுரத்தில் ஏறிய அவர்கள் அணையின் அழகையும் பார்த்து ரசித்தனர். தொடர்ந்து தங்களுக்கு பிடித்த மீன்கள் மற்றும் உணவுகளையும் வாங்கி ருசித்து மகிழ்ந்தனர்.
இதே போல சேலம் அண்ணா பூங்காவிலும் காலை முதலே காதல் ஜோடிகள் அதிக அளவில் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள புல் தரையில் அமர்ந்தும், செயற்கை நீரூற்று முன்பு நின்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனால் காலை முதலே அண்ணா பூங்காவில் காதல் ஜோடிகள் கூட்டம் அலைமோதியது. இதே போல சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தியேட்டர்களிலும் காதல் ஜோடிகள் திரண்டு தங்களுக்கு பிடித்த சினிமாக்களை பார்த்து மகிழ்ந்தனர்.
- பஞ்சு மிட்டாய்களில் கலக்கப்படும் ரசாயனம் குடலில் ஆறாத புண் ஏற்பட்டு பின்னர் புற்று நோயாக மாறும் அபாயம்.
- செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட வேண்டாம்.
சேலம்:
தமிழக அரசின் உத்தரவின் பேரில் பஞ்சு மிட்டாய்கள் விற்கப்படும் பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். அதன்படி சேலம் மாவட்டத்தில் பஞ்சு மிட்டாய் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதில் உணவு பொருளுக்கு அனுமதிக்கப்படாத நிறமிகள் சேர்க்கப்பட்டுள்ளதா? என்றும் அனுமதிக்கப்பட்ட நிறமிகள் குறிப்பிட்ட அளவு உள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சேலம் 5 ரோட்டில் உள்ள தனியார் மால், பெங்களூர் பைபாஸ் சாலையில் உள்ள பஞ்சு மிட்டாய் தயாரிப்பு நிறுவனங்களிலும் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
2-வது நாளாக இன்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பஞ்சு மிட்டாய் கடைகள் மற்றும் ரோட்டோரம் பஞ்சு மிட்டாய் விற்பவர்களிடம் மாதிரிகளை எடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். சந்தேகத்தின் பேரில் 8 மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து வரும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த ஆய்வு2-வது நாளாக இன்றும் நடைபெறுவதாகவும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெிவித்தனர்.
பஞ்சு மிட்டாய்களில் கலக்கப்படும் ரசாயனம் குடலில் ஆறாத புண் ஏற்பட்டு பின்னர் புற்று நோயாக மாறும் அபாயம் இருக்கிறது. சிறுநீர் பிரச்சினைகளை தாண்டி மூளை செயலிழக்கும் அபாயமும் இருக்கிறது. சட்டை, தோல் பொருட்களில் பயன்படுத்தப்படும் இந்த வகை ரசாயன பொருட்கள் உடலுக்கு கேடு விளைவிக்க கூடியது.
செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- அதிர்ச்சி அடைந்துள்ள பொது மக்கள் மிக குறைந்த அளவே பூண்டுகளை வாங்கி செல்கிறார்கள்.
- பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை மிக அதிகமாகவே உள்ளது.
சேலம்:
தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் பூண்டு பயிரிடப்படுகிறது. ஆனாலும் தேவை அதிகமாக இருப்பதால் மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
ஆண்டு தோறும் ஜனவரி மாத பிற்பகுதியில் தொடங்கி மார்ச் மாத இறுதி வரை பூண்டு அறுவடை காலமாகும். இதனால் பொங்கல் பண்டிகைக்கு பிறகு வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பூண்டு மூட்டைகள் கொண்டு வரப்படும். இதனால் ஜனவரி இறுதியில் பூண்டு விலை குறைந்து மார்ச் மாதம் வரை 100 ரூபாய்க்கு விற்கப்படும்.
தமிழகத்தில் பூண்டு மொத்த விற்பனை சந்தைகளில் சேலம் லீபஜார், பால் மார்க்கெட் உள்பட பல இடங்கள் முக்கிய இடம் வகிக்கிறது. தற்போது பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை மிக அதிகமாகவே உள்ளது.
முதல் தர பூண்டுகள் கடந்த 2 மாதங்களாக 350 முதல் 450 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது அதன் விலை மேலும் அதிகரித்து 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பொது மக்கள் மிக குறைந்த அளவே பூண்டுகளை வாங்கி செல்கிறார்கள்.
சேலம் மொத்த சந்தைகளில் இருந்து நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்பட சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு பூண்டு மூட்டைகள் அனுப்பி வைக்கப்படும்.
ஆனால் அறுவடை காலம் தொடங்கியும் வட மாநிலங்களில் விளைச்சல் குறைவு காரணமாக வழக்கத்தை விட 4-ல் ஒரு பங்கு மட்டுமே சேலம் சந்தைக்கு பூண்டு கொண்டு வரப்படுவதால் விலை 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் பூண்டு பதுக்கப்பட்டுள்ளதா? இதனால் விலை உயர்ந்துள்ளதா? என்பது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளதால் அது குறித்தும் அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து சேலத்தை சேர்ந்த பூண்டு வியாபாரி ஒருவர் கூறுகையில், வட மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக பூண்டு பயிரிடப்பட்ட விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்காததால் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் பூண்டு பயிரிடவில்லை. இதனால் பூண்டு விளைச்சல் 4-ல் ஒரு மடங்காக குறைந்துள்ளதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள மார்கெட்களுக்கு பூண்டு வரத்து தற்போது வரை அதிகரிக்கவில்லை.
சென்னை கோயம்போடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 30 லாரிகளில் கொண்ட வரப்படும் பூண்டு தற்போது 9 லாரிகளில் மட்டுமே கொண்டு வரப்படுகிறது. இதே போல சேலம் மார்க்கெட்டுகளுக்கும் 4-ல் ஒரு பங்காக பூண்டு வரத்து குறைந்துள்ளது. தற்போது பூண்டு அறுவடை காலம் தொடங்கி உள்ளதால் இனி வரும் நாட்களில் பூண்டு வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது விலை குறையும். பூண்டுகளை பதுக்கினால் அழுகிவிடும், இதனால் பதுக்கவும் வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.






