என் மலர்tooltip icon

    சேலம்

    • சேலத்தில் நேற்று காலை முதலே வானத்தில் கரு மேகங்ககள் திரண்டன.
    • சேலம் மாநகரில் அம்மாப்பேட்டை, அஸ்தம்ப்டடி, ஜங்சன், கொண்டலாம்ப்டடி என அனைத்து பகுதிகளிலும் 4 மணிக்கு பெய்த தொடங்கிய மழை ஒரு மணி நேரம் கன மழையாக கொட்டியது.

    சேலம்:

    சேலத்தில் நேற்று காலை முதலே வானத்தில் கரு மேகங்ககள் திரண்டன. பின்னர் சேலம் மாநகரில் அம்மாப்பேட்டை, அஸ்தம்ப்டடி, ஜங்சன், கொண்டலாம்ப்டடி என அனைத்து பகுதிகளிலும் 4 மணிக்கு பெய்த தொடங்கிய மழை ஒரு மணி நேரம் கன மழையாக கொட்டியது.

    மேலும் இரவிலும் கன மழையாக நீடித்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடை நீருடன் மழை நீரும் கலந்து சாலையில் ஓடியதால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர்.கிச்சிப்பாளையம் மெயின்ரோட்டில் சாக்கடை கழிவு நீருடன் மழை நீரும் அதிக அளவில் ஓடியதால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.

    இதே போல சேலம் நாராயண நகர், கருவாட்டு பாலம், சித்தேஸ்வரா கருங்கல்பட்டி, களரம்பட்டி, குகை, தாதகாப்பட்டி, பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள் உழவர் சந்தைகள், காய்கறி மார்க்கெட்கள் உள்பட பல பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதிகள் தண்ணீர் காடாக காட்சி அளித்தது.

    சேலம் புறநகர்

    இதே போல சேலம் புறநகர் மாவட்டத்தில் ஏற்காடு, பெத்தநாயக்கன் பாளையம்,, சங்ககிரி, தம்மம்பட்டி, ஆனைமடுவு உள்பட பல பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழையால் விவசாய பயிர்கள் செழித்து வளரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியதால் கடந்த சில நாட்களாக புழுக்கத்தில் தவித்த மக்கள் சற்று நிம்மதியாக தூங்கினர்.

    இதற்கிடையே சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, பெரமனூர், கிச்சிப்பாளையம், தாதா காப்பட்டி, அம்மாப்பேட்டை உள்பட பல இடங்களில் நேற்றிரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் கொசுக்கடியால் தவித்தனர்.

    56.06 மி.மீ. பதிவு

    மாவட்டத்தில் அதிக பட்சமாக சேலம் மாநகரில் 23.4 மி.மீ. மழை பெய்துள்ளது. ஏற்காடு 6.4, பெத்தநாயக்கன் பாளையம் 5, சங்ககிரி 4.4, தம்மம்பட்டி 4, ஆனைமடுவு 4, கெங்கவல்லி 3, ஓமலூர் 2.1, கரியகோவில் 2, ஆத்தூர் 1.8 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 56.06 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. 

    • பெயிண்ட் குடோனில் தீப்பிடித்து பயங்கரமாக எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
    • தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் அதிகமாக கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள காமனேரி பகுதியை சேர்ந்தவர் அருண். இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஓமலூர் பைபாஸ் அண்ணமார் தனியார் விடுதியின் எதிரே உள்ள ஒரு குடோனில் பெயிண்ட், தின்னர் வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

    வழக்கம் போல் நேற்று குடோனை மூடிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் பெயிண்ட் குடோனில் தீப்பிடித்து பயங்கரமாக எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஓமலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்த ஓமலூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து குடோனில் தக தகவென எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க வேண்டி குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஆனால் தீ அதிகமாக கொழுந்து விட்டு எரிந்ததால் அவர்களால் அணைக்க முடியவில்லை. பின்னர் சேலத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள், காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வரவழைக்கப்பட்டனர்.

    தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் கொண்டு வந்த தண்ணீரை பயன்படுத்தி தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தின்னர் என்பதால் தீ அணையாமல் எரிந்து கொண்டு உள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சேலம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடோனில் இருந்த பெயிண்ட், தின்னரின் மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது. முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் இந்த பெயிண்ட் குடோனில் தீ வைத்து இருக்கலாம் என சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கோமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர்.

    இந்த தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் அதிகமாக கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • மண் அரிப்பை தடுப்பதால் நீர்நிலைகளின் கரைகளில் பனைமரங்கள் வளர்க்கப்பட்டன.
    • பனை தரும் 'நுங்கு' உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தருகிறது.

    வாழப்பாடி:

    வறண்ட நிலங்களிலும் வறட்சியை தாங்கி வளர்ந்து, நீண்ட கால பலன் தரும் மரங்களுள் 'பனை' முதன்மையானதாகும். இதன் குழல் போன்ற சல்லி வேர்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி, நிலத்தின் மேற்பரப்புக்கு கொண்டு வரும் தகவமைப்பு கொண்டதால், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன. மண் அரிப்பை தடுப்பதால் நீர்நிலைகளின் கரைகளில் பனைமரங்கள் வளர்க்கப்பட்டன.

    நமது மாநில மரமாக போற்றப்படும் பனை மரத்தின் ஓலைகள் குடிசை கூரை வேய்தல், விசிறி, கலைப்பொருட்கள் செய்ய பயன்படுகிறது. பனை தரும் 'நுங்கு' உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தருகிறது. பனை மரத்தில் எடுக்கப்படும் பதநீரை பதப்படுத்தி சித்த மருந்துகளில் சேர்க்கப்படும் வெல்லம், கருப்பட்டி, பனங்கற் கண்டு தயாரிக்கப்படுகிறது.

    சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பனை மரத்துப்பட்டி, பெத்த நாயக்கன்பாளையம், வீரபாண்டி, ஆத்துார், கெங்கவல்லி, தம்மம்பட்டி, ஏத்தாப்பூர், பேளூர் பகுதிகளில் மானாவரி, தரிசு நிலங்கள் மற்றும் ஆறு, குளம், குட்டை, நீரோடை, ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் கரையோரங்களிலும் பனைமரங்கள் நிறைந்து காணப்பட்டன. சேலம் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் பனைமரங்கள் நிறைந்திருந்த பெரும்பாலான பனந்தோப்புகள் அழிந்து விட்டன.

    நீர்நிலைகளின் கரையோரங்களிலும், தரிசு நிலங்களிலும், விளை நிலங்களில் வரப்பு ஓரங்களிலும் இருந்த ஆயிரக்கணக்கான பனை மரங்களும், செங்கல் சூளைகளுக்கும், வீட்டு உபயோக பயன்பாட்டிற்காகவும் வெட்டப்பட்டன. வறட்சியை தாங்கி வளர்ந்து நீண்டகாலத்திற்கு பலன் தரும் பனை மரங்களை வளர்க்க தற்கால சந்ததியிடையே ஆர்வம் இல்லை. இதனால் சேலம் மாவட்டத்தில் பனை மரங்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் குறைந்து வருகிறது.

    இந்நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த விலாரிபாளையம் கிராமத்தில் விலாரிபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் செல்வராணி மற்றும் இவரது கணவர் மணி ஆகியோர் முன்னிலையில் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் ஒன்றிணைந்து, உதிர்ந்து விழுந்து கிடந்த ஆயிரத்திற்கும் அதிகமான பனை விதைகளை சேகரித்தனர்.

    இந்த விதைகளை கிராமத்திலுள்ள நீர்நிலைகள் மற்றும் தரிசு நிலங்களிலும் விதைத்து வருகின்றனர்.அசுர வேகத்தில் குறைந்து வரும் நீண்டகால பலன்தரும் பனை மரங்களை வளர்க்கவும், மற்ற கிராம மக்கள்களுக்கு விழிப்புணர்வு ஏற்படவும், பனை விதைகளை சேகரித்து விதைத்து முன்னுதாரணமான விலாரிபாளையம் கிராம மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • குளிரை தாங்க முடியாமல், குழந்தைகள், வயதானவர்கள், சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர்.
    • பனி மூட்டம் காரணமாக அவ்வப்போது வானில் இருந்து மேக கூட்டங்கள் ஏற்காடு மலையில் படர்ந்து வருவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

    ஏற்காடு:

    சுற்றுலா தலங்களில் பிரசித்தி பெற்ற ஏற்காட்டில் வானுயர்ந்த மரங்கள், காபி செடிகள், அரியவகை தாவரங்கள், உள்ளன. இங்கு கிளியூர் நீர்வீழ்ச்சி, பூங்கா, ஏரி என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதை காண தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி ஏற்காட்டில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் 2 மணிக்கு பெய்ய தொடங்கிய சாரல் மழை நள்ளிரவு 1.30 மணி வரை நீடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் குளம்போல் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இதனிடையே குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. இரவில் நடுங்க வைக்கும் அளவுக்கு குளிர் நிலவுகிறது. காலையில் சூரிய வெளிச்சம் நன்கு பரவிய பின்னரே பொதுமக்களால் வெளியே நடமாட முடிகிறது.

    குளிரை தாங்க முடியாமல், குழந்தைகள், வயதானவர்கள், சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர். மேலும் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், பருகுவதற்கும், குளிப்பதற்கும் வெந்நீரையே பயன்படுத்துகின்றனர்.

    தினமும் காலை 11 மணி வரை பனி மூட்டம் காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பனி மூட்டதால், மலை பகுதிகளில் உள்ள சாலைகள் தெளிவாக காண முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சாலையில் மெல்ல ஓட்டிச் செல்கின்றனர்.

    பனி மூட்டம் காரணமாக அவ்வப்போது வானில் இருந்து மேக கூட்டங்கள் ஏற்காடு மலையில் படர்ந்து வருவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. வெளியூர் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ள சுற்றுலா பயணிகள் மேக கூட்டங்களால் நிலவிய குளுகுளு சூழலை ரசித்தவாறு சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கின்றனர். இந்த குளுகுளு சீசனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் முகாமை தொடங்கி வைப்பதற்காக காரில் புறப்பட்டு தருமபுரி மாவட்டம் தொப்பூருக்கு சென்றார்.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டுகள் சிவகுமார், ஸ்டீபன் சேசுபாதம் துணை கமிஷனர்கள் செய்திருந்தனர்.

    ஓமலூர்:

    தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்களை பதிவு செய்ய இன்று முதல் 35 ஆயிரம் 923 முகாம்கள் நடைபெற உள்ளன.

    இந்த முகாமினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார்.

    இதற்காக இன்று காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார்.

    விமான நிலையம் முன்பு காவல்துறை சார்பில் நடந்த அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். அவருக்கு விமான நிலையத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கலெக்டர் கார்மேகம், மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம். செல்வகணபதி, பார்த்திபன் எம்.பி. மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பூங்கொத்து, புத்தகம் கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

    விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் முகாமை தொடங்கி வைப்பதற்காக காரில் புறப்பட்டு தருமபுரி மாவட்டம் தொப்பூருக்கு சென்றார்.

    வழிநெடுகிலும் அவருக்கு சாலையின் இருபுறமும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் விமான நிலையத்தில் இருந்து தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டுகள் சிவகுமார், ஸ்டீபன் சேசுபாதம் துணை கமிஷனர்கள் செய்திருந்தனர்.

    • இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கை கொடுக்காததால் அணைக்கு வரும் நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது.
    • அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட போது நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து தேவைக்கு ஏற்ப தண்ணீர் குறைத்தும், அதிகரித்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கை கொடுக்காததால் அணைக்கு வரும் நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    இதனால் கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 987 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் நாளை முதல் தமிழத்துக்கு வரத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கர்நாடகாவில் மழை அதிகரித்து உள்ளதால் தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 67.91 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 165 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • தமிழக அரசு, தொழில் அதிபர்களுடன் கைகோர்த்து கொண்டு விலைவாசி உயர்வை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது.
    • தற்போது தக்காளி விலை ஆப்பிள் விலையை விட அதிகமாக விற்பதை நாம் அறிவோம்.

    சேலம்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கொங்கணாபுரத்தை அடுத்த குரும்பப்பட்டி ஊராட்சி நாச்சியூரில் அ.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது.

    விழாவில் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-

    தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றனர். இன்று, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்குவதாக கூறுகின்றனர்.

    இதனால் சாதாரண ஏழை எளிய குடும்ப தலைவிகள் கூட உரிமைத்தொகை பெற முடியாத நிலையில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்.

    தமிழக அரசு, தொழில் அதிபர்களுடன் கைகோர்த்து கொண்டு விலைவாசி உயர்வை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையின்போது கட்டுமான பொருட்கள் அனைத்தும் அத்தியாவசிய பட்டியலில் சேர்க்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால் அந்த வாக்குறுதி இன்று காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.

    தற்போது தக்காளி விலை ஆப்பிள் விலையை விட அதிகமாக விற்பதை நாம் அறிவோம். இந்த விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பெண்களுக்கு திருமண உதவித்தொகை, மடிக்கணினி திட்டம், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் அமரும் போது இந்த திட்டங்கள் கொண்டு வரப்படும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை நாளை திங்கட்கிழமை தருமபுரி மாவட்டத்தில் தொடங்கி வைக்க உள்ளார்கள்.
    • சேலம் மாவட்டத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை நாளை திங்கட்கிழமை தருமபுரி மாவட்டத்தில் தொடங்கி வைக்க உள்ளார்கள்.

    இதற்காக, நாளை காலை சென்னையில் இருந்து விமா னம் மூலம் சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையம் வருகைபுரிந்து, அங்கிருந்து சாலை வழியாக தருமபுரி மாவட்டத்தில் நிகழ்ச்சி நடைபெறும் தொப்பூருக்குச் சென்று, நிகழ்ச்சி முடிந்து மீண்டும் சாலை வழியாக சேலம் மாவட்டம்,காமலாபுரம் விமான நிலையம் வருகைதந்து, விமானம் மூலம் சென்னை செல்ல உள்ளார்கள். இதனையொட்டி, சேலம் மாவட்டத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட அவர் தெரிவித்துள்ளார்.

    • ராசிபுரம் அருகே உள்ள பில்லா நல்லூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் இவரது தந்தை நாச்சிமுத்துவிற்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    • அப்போது இவருக்கு அருகில் நின்றிருந்த ஒரு வாலிபர் ரமேஷின் பாக்கெட்டில் இருந்து ரூ.500 திருடினார்.

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பில்லா நல்லூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (36) இவரது தந்தை நாச்சிமுத்துவிற்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ரமேஷ் உடன் இருந்து கவனித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காலை மருத்துவர்கள் எழுதிக் கொடுத்த மருந்து மாத்திரைகளை வாங்குவதற்காக மருத்துவமனை வளாகத்தில் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு அருகில் நின்றிருந்த ஒரு வாலிபர் ரமேஷின் பாக்கெட்டில் இருந்து ரூ.500 திருடினார்.இதைக் கண்ட ரமேஷ் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    போலீசாரின் விசாரணையில் அந்த வாலிபர் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (34) என்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சீனிவாசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் சூரமங்கலம் கல்யாணசுந்தரம் காலனி பகுதியில் உள்ள ஒரு காலி நிலத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக தகவல் வந்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சில வாலிபர்கள் பணம் வைத்து சேவல் சண்டை விளையாட்டில் ஈடுபடுவது தெரியவந்தது.

    சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் சூரமங்கலம் கல்யாணசுந்தரம் காலனி பகுதியில் உள்ள ஒரு காலி நிலத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக தகவல் வந்தது. அதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சில வாலிபர்கள் பணம் வைத்து சேவல் சண்டை விளையாட்டில் ஈடுபடுவது தெரியவந்தது.அப்போது அங்கு பணம் வைத்து சேவல் சண்டை விளையாட்டில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கோரையர் பாலம் பகுதியைச் சேர்ந்த ராஜா (34), சூரமங்கலம் அருகே உள்ள கல்யாண சுந்தரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் பூபதி (44), சுபாஷ் (30), பிரபு (33),ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் 11 சேவல்களையும் பறிமுதல் செய்தனர்.

    • மனைவியுடன் கள்ளக்காதலால் அண்ணனை கொல்ல முயன்ற தம்பியை ஜெயிலில் அடைத்தனர்.
    • போலீசார், விவேக் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு அவரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு கொம்மக்காடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி வினோத் (வயது 26). இவர், நேற்று முன்தினம் எஸ்.புத்தூர் செல்லும் வழியில் சாலையோர பள்ளத்தில் படுகாயங்களுடன் சுயநினைவு இல்லாமல் கிடந்தார். காட்டெருமை தாக்கி காயம் அடைந்ததாக கூறி அவரது தம்பி விவேக், வினோத்தை மீட்டு நாகலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சந்தேகம்

    இது தொடர்பாக ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத் படுகாயங்களுடன் கிடந்த எஸ்.புத்தூர் பகுதிக்கு சென்று அங்கு காட்டெருமையின் கால் தடங்கள் எதுவும் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து விட்டு அப்பகுதி பொதுமக்களிடம் விசாரித்தனர். இந்த பகுதியில் சமீபகாலமாக காட்டெருமை நடமாட்டம் கிடையாது என அவர்கள் தெரிவிக்கவே சந்தேகம் அடைந்த போலீசார், வினோத்தை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

    கள்ளத் தொடர்பு

    வினோத்துக்கும் அவரது தம்பி விவேக்கின் மனைவிக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. அதாவது, திருமணத்துக்கு முன்பே இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. தம்பியின் திருமணத்துக்கு பிறகும் வினோத் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனை அறிந்த விவேக், தனது அண்ணனை தீர்த்துக்கட்ட முடிவு செய்து காத்திருந்தார்.

    சம்பவத்தன்று கள்ளத் தொடர்பு சம்பந்தமாக எஸ்.புதூர் செல்லும் வழியில் விவேக்குக்கும், வினோத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சண்டையில் விவேக் அங்கு கிடந்த கல்லை எடுத்து வினோத்தின் தலையில் தாக்கினார். இதில் அவர் சுயநினைவு இழந்து சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். அவரை காட்டெருமை முட்டியதாக விவேக் அனைவரையும் நம்ப வைத்து நாடகமாடியது தெரியவந்தது.

    ஜெயிலில் அடைப்பு

    இதையடுத்து போலீசார், விவேக் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு அவரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.  

    • ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து அரசு மது பாட்டில்களை வாங்கி சட்ட விரோதமாக சந்து கடைகளில் வைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இதில் அங்குள்ள அங்கமுத்து என்பவரது வீட்டில் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 91 அரசு மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

    ஏற்காடு:

    ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து அரசு மது பாட்டில்களை வாங்கி சட்ட விரோதமாக சந்து கடைகளில் வைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    மது பாட்டில்கள் பறிமுதல்

    இந்த நிலையில் ஏற்காடு பிலியூர் கிராமத்தில் சந்துகடை நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்று போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில் அங்குள்ள அங்கமுத்து என்பவரது வீட்டில் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 91 அரசு மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கமுத்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    எச்சரிக்கை

    இதுகுறித்து ரூரல் டி.எஸ்.பி அமலா ஆட்வின் கூறியதாவது:-

    ஏற்காட்டில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் திருத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    லாட்டரி, மது, கஞ்சா, ஆகியவை விற்பனை செய்தால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். எனவே ஏற்காட்டில் யாரும் குற்றச் செயல்களில் ஈடுபட கூடாது.

    குற்றச் செயல்கள் ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் எங்கு நடந்தாலும் எனது செல்போன் எண். 8300127780 -க்கு தகவல் கொடுக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் விவரம் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×