என் மலர்tooltip icon

    சேலம்

    • மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள், முகப்பு விளக்குகளை எரியவிட்டு ஊர்ந்தபடி செல்கின்றன.
    • கடும் குளிரால் பொதுமக்கள் 2-வது நாளாக வீடுகளிலேயே தஞ்சமடைந்துள்ளனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக ஏற்காட்டில் கடந்த 3 நாட்களாக சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது.

    நேற்று முன்தினம் மாலை தொடங்கிய சாரல் மழை இடைவிடாமல் பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    மழையுடன் காற்றின் வேகமும் அதிகமாக இருப்பதால், ஏற்காட்டில் குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் உள்ளூர்வாசிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

    இடை இடையே பனிமூட்டமும் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள், முகப்பு விளக்குகளை எரியவிட்டு ஊர்ந்தபடி செல்கின்றன.

    இதனிடையே காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் அதற்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஏற்காட்டில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பங்கள் மற்றும் சாலையில் விழுந்தது.

    இதனால் ஏற்காடு முழுவதும் நேற்றிரவு முதல் இன்று காலை வரை சுமார் 40 முறைக்கு மேல் மின்தடை ஏற்பட்டது.

    இதனை அதிகாரிகள் சீர் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    மழை மற்றும் பனிக்காற்றின் காரணமாக ஏற்காட்டில் காபி விவசாய தொழில் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டது.

    அதேபோல் கடும் குளிரின் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்துள்ளது. இதனால், ஏற்காட்டில் உள்ள பூங்காக்கள், பல்வேறு காட்சி முனைகள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    கடும் குளிரால் பொதுமக்கள் 2-வது நாளாக வீடுகளிலேயே தஞ்சமடைந்துள்ளனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    • எக்ஸ்பிரஸ் ரெயில் 5-வது பிளாட்பாரத்தில் வந்து கொண்டிருந்ததது.
    • ரெயில் அவர் மீது ஏறியதில் அவரது உடல் 2 துண்டானது.

    சேலம்:

    சேலம் ரயில் நிலையத்தில் இன்று தூத்துக்குடியில் இருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் 5-வது பிளாட்பாரத்தில் வந்து கொண்டிருந்ததது.அப்போது அங்கு நின்றிருந்த வாலிபர் திடீரென தண்டவா ளத்தில் படுத்து கொண்டார். ரெயில் அவர் மீது ஏறியதில் அவரது உடல் 2 துண்டானது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு சேலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்த வர் என விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் நிலையத்தில் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதேபோல் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வது
    • குறைகளைத் தீர்ப்பதற்காக காந்திமதி என்பவர் சேலம் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது.அதன்படி, இத்திட்டத்தின் கீழ் குறைகளைத் தீர்ப்பதற்காக காந்திமதி என்பவர் சேலம் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே பொதுமக்கள் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்ட பயனாளிகள், இத்திட்டம் தொடர்பான குறைகள் ஏதும் இருப்பின் slmombuds@gmail.com அல்லது மாவட்ட மக்கள் குறைதீர் அலுவலர் (Ombudsman), அறை எண்.211, 2-ம் தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், சேலம் மாவட்டம் என்ற முகவரியிலோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இவவாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகள் பல்வேறு வகையான விளை பொருட்களை சந்தைப்படுத்துவது வழக்கம்.
    • ஒரு நாள் சந்தை அமைக்கப்பட்டு இருந்தது பிரதம மந்திரி குடியிருப்புத் திட்ட பயனாளிகள்

    சேலம்:

    மாதந்தோறும் சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் தினத்தில் விற்பனைக்காகவும் விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையிலும் விவசாயிகள் பல்வேறு வகையான விளை பொருட்களை சந்தைப்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தையொட்டி இன்று காலை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு நாள் சந்தை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சந்தையில் மரக்கன்றுகள், செக்கு எண்ணெய் சிறு தானிய பண்டங்கள் உள்ளிட்ட ஏராளமான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் காய்கறி அங்காடியில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. குறிப்பாக கடந்த பல நாட்களாக தக்காளி தட்டுப்பாடு நிலவும் சூழலில், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கடையில் தக்காளி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. தக்காளி வரத்து குறைவாக உள்ள காரணத்தால் வெளி சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நேரடி விற்பனையில் ஈடுபட்டதால் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டதால் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் தக்காளியை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    • கடந்த 1995-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது
    • 2023-ம் ஆண்டிற்கான விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:-சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" கடந்த 1995-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் தொகையும், விருதும் ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது முதல்-அமைச்சரளால் தேர்வு செய்யப்படுகிறார்.2023-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, சேலம் மாவட்டத்தில் சமூக நீதிக்காகப் பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகிய தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.தங்களது விண்ணப்பத்தில் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 2023-ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.09.2023 ஆகும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக அறை எண் 110-ல் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ அணுகுமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறது.இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • பெரமனூர் மரம் ஒன்று கீழே விழுந்ததால் போக்குவரத்து நெரிசல்
    • இளையராஜா ஆட்டோவில் இருந்து இறங்கி பின்னால் மோட்டார் சைக்கிளில் நின்றிருந்த 2 வாலிபர்களை பின்னோக்கிச் செல்ல அறிவுறுத்தி இருக்கிறார்

    சேலம்:

    சேலம் மெய்யனூர் ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (41). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு வேலைக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவில் சேலம் 4 ரோடு பகுதியில் இருந்து பெரமனூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது மரம் ஒன்று கீழே விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது இளையராஜா ஆட்டோவில் இருந்து இறங்கி பின்னால் மோட்டார் சைக்கிளில் நின்றிருந்த 2 வாலிபர்களை பின்னோக்கிச் செல்ல அறிவுறுத்தி இருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் இளையராஜாவை கடுமையாக தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த இளையராஜா சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இளையராஜாவை தாக்கிய 2 வாலிபர்களையும் வலை வீசி தேடி வருகிறார்கள்.

    • ஜூலை மாதங்களில் 10-ம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய (தத்கல் தனித் தேர்வர்கள் உள்பட) தனிதேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் வெளியிடப்படவுள்ளன.
    • தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது தேர்வெண், பிறந்த தேதியை பதிவு செய்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களா கவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    சேலம்:

    தமிழகத்தில் நடப்பாண்டு ஜூன், ஜூலை மாதங்களில் 10-ம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய (தத்கல் தனித் தேர்வர்கள் உள்பட) தனிதேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் வெளியிடப்படவுள்ளன. தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது தேர்வெண், பிறந்த தேதியை பதிவு செய்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களா கவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதையடுத்து துணைத் தேர்வுக்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு வருகிற 1,2 ஆகிய 2 நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    • கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முதற்கட்ட முகாம் நேற்று தொடங்கியது.
    • இதற்காக கடந்த 20 ஆம் தேதியிலிருந்து விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

    சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முதற்கட்ட முகாம் நேற்று தொடங்கியது. இதற்காக கடந்த 20 ஆம் தேதியிலிருந்து விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. அதில் விண்ணப்ப தாரர்கள் எத்தனை மணிக்கு முகாமிற்கு வர வேண்டும் தேவையான ஆவணங்கள் குறித்து தெரிவிக்கப்ப ட்டுள்ளது.அதன்படி முகாம் நடந்த இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே நேற்று மக்கள் திரண்டனர். இதையடுத்து அவர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர் பூர்த்தி செய்தனர். விரல் ரேகை பயோமெட்ரிக் மூலம் சரிபார்க்கப்பட்டது.விண்ணப்பங்களை அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட மொபைலில் உள்ள செயலியில் பதி வேற்றினர். சேலம் சிஎஸ்ஐ பாலி டெக்னிக் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதி வேற்றம் செய்யும் பணியை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். மாவட்டத்தில் 11 லட்சத்து 1861 ரேஷன் கார்டுகள் உள்ளன.இதில் முதல் கட்டமாக ஆறு லட்சத்து 138 காடுகளுக்கு டோக்கன், விண்ணப்பங்கள் வழங்கப் பட்டுள்ளது. இவர்களுக்கு ஆகஸ்ட் 4 வரை விண்ணப்ப பதிவு முகாம் நடக்க உள்ளது.முதல் நாளில் 846 முகாம்களில் 60 ஆயிரத்து 250 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இரண்டாவது நாளாக இன்றும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப் பட்டு வருகிறது. இதனை வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார்கள்.

    • நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வாரசந்தை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணா சிலை அருகே இயங்கி வருகிறது.
    • இங்குள்ள கல்மேடைகளில் கடையை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வாரசந்தை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணா சிலை அருகே இயங்கி வருகிறது. தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த சந்தையில் மளிகை பொருட்கள், காய்கறி, ஆடு, கோழி ஆகியவற்றி வாங்கியும் விற்றும் வருகின்றனர். இங்குள்ள கல்மேடைகளில் கடையை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மேற்கூறையுடன் கூடிய 156 கடைகள், வணிகப் பயன்பாட்டிற்கான கான்கிரீட் தளங்களைக் கொண்ட 14 கடைகள், சைக்கிள் ஸ்டாண்ட், ஆட்டோ ஸ்டாண்ட், நவீன கழிப்பிட வளாகங்கள், 4 புறமும் சுற்றுச்சுவருடன் கூடிய 12,350 சதுர அடி பரப்பளவில் வார சந்தை புனரமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.2 கோடியே 78 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த கருத்து கேட்பு கூட்டம் நேற்று நகராட்சி கூட்ட அரங்கில் நகரமன்ற தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட நகர மன்ற துணைத் தலைவர் தனம், நகராட்சி பொறியாளர் பிரேமாஇ நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சந்தை வளாகத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட புளிய மரங்களை அகற்றாமல் பணியை தொடங்குவது என்றும், மழைநீர், கழிவு நீர் தேங்காமல் பாதுகாக்கவும், வணிக நிறுவன பயன்பாட்டிற்கு கூடுதலான கடைகளை கட்டுவது குறித்தும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

    • வாழப்பாடி வட்டாரத்தில் உதவி இயக்குநர் முனைவர் பிரியதர்ஷினி தலைமையில் வாழப்பாடி மகளிர் சங்க அலுவலகத்திலும் மாடித்தோட்டம் அமைப்பது குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • இதில் பெண்கள் ஆர்வத்தோடு அதிகளவில் பங்கேற்றனர்.

    வாழப்பாடி:

    பெத்தநாயக்கன்பாளை யம் வட்டாரத்தில் தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநர் கோதைநாயகி தலைமையில் புத்திரகவுண்டன்பாளையம் வேளாண்மை வட்டார விரிவாக்க மையத்திலும், அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில் உதவி இயக்குநர் முனைவர்.கலைவாணி தலைமையில், மாசிநாயக்கன்பட்டி மகளிர் சங்க அலுவலகத்திலும், வாழப்பாடி வட்டாரத்தில் உதவி இயக்குநர் முனைவர் பிரியதர்ஷினி தலைமையில் வாழப்பாடி மகளிர் சங்க அலுவலகத்திலும் மாடித்தோட்டம் அமைப்பது குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இப்பயிற்சியில், தக்காளி, மிளகாய், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள், கீரைகளை மாடித்தோட்டம் அமைத்து சாகுபடி செய்வது குறித்து செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. 3 வட்டாரங்களிலும் தலா 50 பேர் பயிற்சி பெற்றனர். இதில் பெண்கள் ஆர்வத்தோடு அதிகளவில் பங்கேற்றனர்.

    மாடித்தோட்டம் அமைப்பதற்கு தேவையான வளர்ப்பு பைகள், தென்னைநார் கழிவு, காய்கறி விதைகள், உயிர் உரங்கள், வேப்ப எண்ணெய் ஆகியவை உள்ளடக்கிய தொகுப்பை மானிய விலையில் பெறுவதற்கும், ரூ.450 பணம் செலுத்தி ஏராளமானோர் முன்பதிவு செய்தனர். மாடித்தோட்டம் அமைப்பதற்கு ஆர்வமுள்ளவர்கள் அரசு மானியத்தில் ரூ.450 மட்டும் கொடுத்து மாடித்தோட்ட தொகுப்பை பெற்றக் கொள்ளலாமென, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர். மாடித்தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி பயனுள்ள வகையில் அமைந்ததாக பயிற்சி பெற்ற பெண்கள் தெரிவித்தனர்.

    • 15 குடும்பங்களுக்கு கடந்த 1997-ம் ஆண்டு விவவாயி ஒருவரிடம் விவசாய தரிசு நிலத்தை ஆதிதிராவிட நலத்துறை மூலம் விலைக்கு வாங்கி அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
    • மக்கள் சுமார் 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையில் செல்லக்கூடாது என ஊருக்கு அருகில் உள்ள விவசாய நில உரிமையாளர்கள் சிலர் கூறியுள்ளனர்.

    சங்ககிரி:

    சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், வடுகப் பட்டி ஊராட்சி, தாதவராயன்குட்டை கிராமம், புதுகாலனி அருந்ததியர் தெருவைச் சேர்ந்த 15 குடும்பங்களுக்கு கடந்த 1997-ம் ஆண்டு விவவாயி ஒருவரிடம் விவசாய தரிசு நிலத்தை ஆதிதிராவிட நலத்துறை மூலம் விலைக்கு வாங்கி அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அதனையடுத்து, அங்கு வீடு கட்டி வசித்து வந்தனர். இந்த மக்கள் சுமார் 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையில் செல்லக்கூடாது என ஊருக்கு அருகில் உள்ள விவசாய நில உரிமையாளர்கள் சிலர் கூறியுள்ளனர். அதனையடுத்து, நேற்று மதியம் 15 குடும்பத்தினரும் வடுகப்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நாங்கள் பயன்படுத்தி வந்த பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சர்வே செய்து தார் சாலை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனையடுத்து வடுகப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் முத்துசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். முற்றுகை போராட்டம் குறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனையடுத்து, மக்கள் சங்ககிரி வந்து ஆர்.டி.ஓ., லோகநாயகியிடம் புகார் அளித்தனர். அப்போது அவர், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை அளவீடு செய்யும் வரை விவசாய நில உரிமையாளர்கள் தடுக்க கூடாது என உத்திரவிட்டார். அதனையடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    • ஒரே நாளில் அணை நீர்மட்டம் 5 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.
    • கபினி அணை விரைவில் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    கேரள மாநிலம் வயநாடு, கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதன் காரணமாக கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    அணைக்கு நேற்று காலை 29 ஆயிரத்து 552 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் மாலையில் 44 ஆயிரத்து 436 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. அணையில் இருந்து 5,452 கன அடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டுள்ளது.

    124 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 92 அடியாக இருந்த நிலையில் நேற்று 97.5 அடியாக உயர்ந்தது. இதனால் ஒரே நாளில் அணை நீர்மட்டம் 5 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.

    இதேபோல் கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 79.50 அடியாக இருந்தது. அணை நிரம்ப இன்னும் 5 அடி மட்டுமே பாக்கி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 21,600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணை விரைவில் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

    2 அணைகளில் இருந்தும் கடந்த சில நாட்களாக 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்று முதல் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 15 ஆயிரத்து 452 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது.

    கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்பட்ட நீர் இன்று பிற்பகல் தமிழக கர்நாடக எல்லையான பிலி குண்டலு வந்து சேருமென எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையும் அதே அளவில் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் வந்து சேரும் பட்சத்தில் ஒகேனக்கல்லில் இன்று பிற்பகல் முதல் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தமிழக கர்நாடக எல்லையான பிலி குண்டுலு பகுதியில் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் 6 மணி நேரத்தில் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் கர்நாடக அணைகளில் இருந்து விடப்பட்ட தண்ணீர் இன்று இரவு மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என தெரிகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 165 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 119 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் நீர்மட்டம் 66.86 அடியாக உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இனிவரும் நாட்களில் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் மேட்டூருக்கு வந்து சேரும் என்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

    ×