என் மலர்tooltip icon

    சேலம்

    • கே.ஆர். தோப்பூர் பகுதியை சேர்ந்த பிரபல குட்கா வியாபாரி லிங்கராஜ் (36) ஒரு காரில் வந்தார்.
    • போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதால் எனக்கு குட்கா வேண்டாம் என இஸ்மாயில் மறுத்துள்ளார்.

    சேலம்:

    சேலம் கொண்ட லாம்பட்டி அடுத்த நாட்டாமங்கலம் கரட்டூர் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் இஸ்மாயில் (31). இவரது கடைக்கு நேற்று மாலை கே.ஆர். தோப்பூர் பகுதியை சேர்ந்த பிரபல குட்கா வியாபாரி லிங்கராஜ் (36) ஒரு காரில் வந்தார். அப்போது கடையில் இருந்த இஸ்மாயிலிடம் குட்கா எத்தனை பண்டல் வேண்டும் என கேட்டார். அதற்கு போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதால் எனக்கு குட்கா வேண்டாம் என இஸ்மாயில் மறுத்துள்ளார்.

    இதனை தொடர்ந்து லிங்கராஜ் தனக்கு வர வேண்டிய பாக்கி தொகையை கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லிங்கராஜ், இஸ்மாயிலை தாக்கினார்.

    இது குறித்து இஸ்மாயில் கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராணியிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லிங்கராஜை கைது செய்து சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • பிரசித்தி பெற்ற கஞ்சமலை சித்தர் கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி தினங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.
    • மலை தொடரில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு உணவிற்காக சாலையை கடந்து வரும்போது குரங்குகள் வாகனங்களில் சிக்கி அடிக்கடி உயிரிழக்கும் சம்பவம் நடைபெறுகின்றன.

     காகாபாளையம்:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அமைந்துள்ளது, கஞ்சமலை சித்தேசுவரர் கோவில். இயற்கை எழில் சூழ்ந்த மலைகளுக்கு அருகில் கோவில் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

    பிரசித்தி பெற்ற கஞ்சமலை சித்தர் கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி தினங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.

    வன விலங்குகள்

    மிகுந்த மூலிகை வளம் கொண்ட கஞ்சமலையில் குரங்குகள், முயல்கள், நரிகள், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளும், மயில்கள், குருவிகள் உள்ளிட்ட பல்வேறு இன பறவைகளும் வாழ்ந்து வருகின்றன.

    குறிப்பாக இக்கோவில் மலை அடிவாரத்தில ஆயிரக் கணக்கான குரங்குகள் வசித்து வருகின்றன. அவை தினந்தோறும் உணவிற்காக கோவில் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன. குடியிருப்பு பகுதியில் புகுந்து வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துச் சென்று அட்டகாசம் செய்கின்றன. சில நேரங்களில் சிறுவர்களை கடித்து விடுகின்றன.

    இந்த நிலையில் மலை தொடரில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு உணவிற்காக சாலையை கடந்து வரும்போது குரங்குகள் வாகனங்களில் சிக்கி அடிக்கடி உயிரிழக்கும் சம்பவம் நடைபெறுகின்றன. மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் மின் கம்பியில் நடந்து செல்வதால் குரங்குகள் மின்சாரம் தாக்கி உயிர் இழக்கின்றன.

    எனவே வனத்துறை அதிகாரிகள், அதிக அளவில் உள்ள குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரமேஷ் (வயது 49), விவசாயி. இவர் அங்குள்ள தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார்.
    • அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சரஸ்வதி மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தேவூர் கோணகழுத்தனூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 49), விவசாயி. இவர் அங்குள்ள தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சரஸ்வதி மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். நேற்று அங்குள்ள அவரது உறவினரான செல்லப்பன் என்பவரது விவசாய கிணற்றில் ரமேஷ் பிணமாக மிதந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். தொடர்ந்து அவரது உடலை கயிறு கட்டி மீட்டனர். தகவல் அறிந்த தேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது கிணற்றின் ஓரத்தில் நடந்து சென்ற போது அவர் கால் தவறி விழுந்தாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • எனது தொகுதி வளர்ச்சி டெண்டர் குறித்து கேட்பதற்காக செரி ரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு வந்து செல்கிறேன்.
    • கடந்த 3 நாட்களாக பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு வந்தும் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளை சந்திக்க முடியவில்லை. போன் செய்தேன் போன் எடுக்கவில்லை.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பா.ம.க.வை சேர்ந்த சதாசிவம் உள்ளார். இவர் சேலம் செரி ரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு வந்தார். தொடர்ந்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஒரு நோட்டீசை ஒட்டினார்.

    பின்னர் அவர் கூறுகையில், கடந்த 3 நாட்களாக எனது தொகுதி வளர்ச்சி டெண்டர் குறித்து கேட்பதற்காக செரி ரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு இன்று வந்து செல்கிறேன்.

    ஆனால் 3 நாட்களாக கண்காணிப்பாளர் செயற்பொறியாளர் மற்றும் அதிகாரிகள் யாரும் அலுவலகத்தில் இல்லை.

    இதனால் மனவேதனையுடன் இந்த நோட்டீசை அலுவலகத்தில் ஒட்டியுள்ளேன் என்றார்.

    அவர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஒட்டி உள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது:

    கடந்த 3 நாட்களாக பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு வந்தும் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளை சந்திக்க முடியவில்லை. போன் செய்தேன் போன் எடுக்கவில்லை.

    எனவே அவர்கள் மீது துறை ரீதியாகவும் எனது சட்டமன்ற உறுப்பினர் அதிகார வரம்புக்கு உட்பட்டு மாவட்ட கலெக்டர் மற்றும் மாநில அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த நோட்டீசில் கூறியுள்ளார்.

    இதற்கிடையே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சதாசிவம் எம்.எல்.ஏ., அருள் எம்.எல்.ஏ ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • கோவையில் இருந்து திருப்பூர் , ஈரோடு, சேலம், தருமபுரி வழியாக லோகமானியா திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் மும்பைக்கு இயக்கப்பட்டு வருகிறது.
    • மழை காரணமாக ரெயில் தாமத மானதால் 3 மணி நேரம் தாமதமாக கோவையில் இருந்து 11.50 மணிக்கு புறப்பட்டு வரும் என தென்னக ரெயில்வே சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.

    சேலம்:

    கோவையில் இருந்து திருப்பூர் , ஈரோடு, சேலம், தருமபுரி வழியாக லோகமானியா திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் மும்பைக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வழக்கமாக கோவையில் 8.50 மணிக்கு புறப்பட்டு 12 மணியளவில் சேலத்திற்கு வந்தடையும். இந்தநிலையில் மறு மார்க்கத்தில் மழை காரணமாக ரெயில் தாமத மானதால் 3 மணி நேரம் தாமதமாக கோவையில் இருந்து 11.50 மணிக்கு புறப்பட்டு வரும் என தென்னக ரெயில்வே சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.

    இதனால் இந்த ரெயில் சேலத்திற்கு வழக்கத்தை விட 3 மணிநேரம் தாமதமாக 3 மணியளவில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் அந்த ரெயிலில் பயணிக்க இருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். 

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • காலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மாலையில் சாரல் மழை பெய்து வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. காலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மாலையில் சாரல் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் மேட்டூர், ஆத்தூர், ஏற்காடு, கரியகோவில், எடப்பாடி ஆகிய பகுதிகளில் நேற்று மழை பெய்தது. ஏற்காடு பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இந்த மழையினால் சாலைகளில் சாக்கடை நீருடன் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த தொடர் மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:- ஆனைமடுவு - 12, மேட்டூர் - 10, ஏற்காடு - 6.4, கரியகோவில்- 2, ஆத்தூர்- 1.8, பெத்தநாயக்கன்பாளையம்-1.5, எடப்பாடி-1.2,சேலம் - 1, ஓமலூர்-1 சேலம் மாவட்டத்தில் மொத்தம் 35.50 பதிவாகி உள்ளது.

    • கமிஷனர் விஜயகுமாரி உத்தரவின் பேரில் மாநகரப் பகுதியில் கொலை,கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
    • குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அழைத்து நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவின் பேரில் மாநகரப் பகுதியில் கொலை,கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தற்போது அதற்காக அந்த போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அழைத்து நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடும் 17 ரவுடிகளை அழைத்து அவர்களின் பெயர், போன் நம்பர், ஆதார் எண் பதிவு செய்யும் பணி உதவிக் கமிஷனர் பாபு முன்னிலையில் இன்ஸ்பெக்டர் செல்வி (பொறுப்பு) சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெய சீலன், மோனிகா ஈடுபட்டனர். பின்னர் அவர்களுக்கு உதவி கமிஷனர் பாபு பல்வேறு அறிவுரை வழங்கினார். மேலும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இந்த நடவடிக்கையால் அந்த பகுதியில் உள்ள ரவுடிகள் பயத்தில் இருந்து வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வடுகப்பட்டி அரசு மாதிரி பள்ளி செயல்படுகிறது.
    • இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்- 2 வரை படித்து வருகின்றனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வடுகப்பட்டி அரசு மாதிரி பள்ளி செயல்படுகிறது.

    இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்- 2 வரை படித்து வருகின்றனர்.

    இப்பள்ளிக்கு கொங்க ணாபுரம், வைகுந்தம், தாழையூர், வெள்ளையம் பாளையம், காளிப்பட்டி பிரிவு, இருகாலூர், திருச்செங்கோடு போன்ற பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருகின்றனர்.

    தனியார் வாகனம்

    இவர்களுக்கு பஸ் வசதி இல்லாததால் தனியார் வாகனங்களில் மாதம் ரூ.2000 வரை கட்டணம் செலுத்தி தினமும் வந்து செல்கின்றனர். இந்த வழித்தடத்தில் 13-ம் எண் அரசு பஸ் இயக்கப்பட்ட நிலையில், கடந்த 2 ஆண்டாக காலை, மாலை வேளைகளில் பஸ் இயக்கப்படுவது இல்லை என கூறப்படுகிறது.

    இதனால் வடுகப்பட்டி பள்ளிக்கு வரும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    மறியல்

    இதையடுத்து, தங்களுக்கு பஸ் வசதி அளிக்க வேண்டும் எனக் கேட்டு, பள்ளியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இன்று காலை 9 மணியளவில் வைகுந்தம் - வடுகப்பட்டி சாலையில், பாப்பநாயக்கனூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பேச்சுவார்த்தை

    மறியல் குறித்து தகவல் அறிந்து சங்ககிரி டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் வளர்மதி, திருச்செங்கோடு அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் சதாசிவம், சங்ககிரி ஆர்.டி.ஓ லோகநாயகி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, 13-ம் எண் கொண்ட பஸ்சை பள்ளி நேரத்தில் காலை, மாலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தினர்.

    இதையடுத்து, மாணவர்கள் சென்று வர போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் மாணவ, மாணவிகள் மறியலை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர்.

    இந்த மறியல் போராட்டத்தால், சுமார் 1 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    • கணேசன் ( 55 ). வாய்பேச முடியாத நிலையில் உள்ள இவர் தாரமங்கலத்தில் கறி வெட்டும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
    • தனியார் பஸ் மோதியதில் கீழே விழுந்த கணேசன் படுகாயம் அடைந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    சேலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள கருக்கல்வாடி கிராமம் புகையிலைக்காரன் தெரு பகுதியை சேர்ந்தவர் கணேசன் ( 55 ). வாய்பேச முடியாத நிலையில் உள்ள இவர் தாரமங்கலத்தில் கறி வெட்டும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். காலையில் வழக்கம்போல் வேலைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது தாரமங்கலத்தில் உள்ள காமராஜர் சிலை அருகே ஓமலூரில் இருந்து சங்ககிரி நோக்கி சென்ற தனியார் பஸ் மோதியதில் கீழே விழுந்த கணேசன் படுகாயம் அடைந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது பற்றி தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ரமேஷ் உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சப்- இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர் ஆனந்தம் ஆகியோர் ரமேஷ் வீட்டிற்கு சென்றனர்.

    ஏற்காடு:

    ஏற்காட்டில் சமீப காலமாக உரிமம் இல்லாமல் கள்ளத்துப்பாக்கி பயன்படுத்துவதாக புகார்கள் வந்தது.

    இதையடுத்து ஏற்காடு பில்லேரி கிராமத்தில் உள்ள ரமேஷ் (வயது 38), விவசாயியான இவர் உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர் ஆனந்தம் ஆகியோர் அவரது வீட்டிற்கு சென்றனர்.

    அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் வீட்டின் அருகில் உள்ள ஆட்டுப்பட்டியில் சோதனை செய்தனர்.

    அப்போது உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி மற்றும் வெடி மருந்து பொருட்கள் 100 கிராமையும், ஈயக்குண்டுகள் 350 கிராம், சிறிய ஈய குண்டுகள் 100 கிராம் வீட்டில் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் ரமேசையும் கைது செய்தனர்.

    இதற்கிடையே ஏற்காட்டில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் ஏற்காடு போலீஸ் நிலையத்தில் அனைத்து பஞ்சாயத்து தலைவர்கள் ஊர் பெரியவர்களை சந்தித்து வருகிற 30-ந்தேதி ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இதில் பஞ்சாயத்து தலைவர்கள் ஊர் பெரியவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என வாழப்பாடி டி.எஸ்.பி. கூறி உள்ளார்.

    • ஆத்தூர் நகர சபை அலுவலகத்திற்கு நேற்று மாலை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையிலான போலீசார் வந்தனர்.
    • புறவழிச்சாலை இணைப்பு சாலையில் உள்ள வேகத்தடை தொடர்பான ஆவணங்களை பெற்று கொண்டனர்

    ஆத்தூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் 45, எடப்பாடியை சேர்ந்த இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந் தேதி ஆத்தூர் அருகே புறவழிச்சாலையில் மர்மமாக இறந்தார். இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்தனர்.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கனகராஜ் இருந்ததால் இந்த வழக்கு இப்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் உள்ளது. இதனால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீலகிரி, சேலம் மாவட்டத்தில் கனகராஜ் இறந்தது எப்படி ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆத்தூர் நகர சபை அலுவலகத்திற்கு நேற்று மாலை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையிலான போலீசார் வந்தனர். அவர்கள் நகர சபை அலுவலகத்தில் இருந்த என்ஜினீயர் மலர் கொடியிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது ஆத்தூர் புறவழிச்சாலையை இணைக்கும் கடைவீதி, கோட்டை, உப்பு ஓடை வழியே செல்லும் சாலையில் வேகத்தடைகள் எத்தனை உள்ளன. வேகத்தடைகள் நகராட்சி மூலம் அமைக்கப்பட்டதா? வேகத்தடை அமைத்தபோது பணிபுரிந்த நகராட்சி கமிஷனர் மற்றும் அதிகாரிகள் உள்பட அலுவலர்கள் 10 ஆண்டுகளுக்கு முன் பணிபுரிந்தவர்கள் குறித்தும் விசாரித்தனர்.

    மேலும் கனகராஜ் இறந்ததாக கூறப்பட்ட முல்லைவாடி சந்தனகிரி புறவழிச்சாலை சர்வீஸ் சாலையில் ஏன் வேகத்தடை அமைக்கப்பட்டது என்பது, அதற்கான ஆவணங்கள் நகராட்சியில் உள்ளதா ? என்பது குறித்தும் விரிவாக விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து புறவழிச்சாலை இணைப்பு சாலையில் உள்ள வேகத்தடை தொடர்பான ஆவணங்களை பெற்று கொண்டனர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில்,

    ஆத்தூர் புறவழிச்சாலையின் இணைப்பு சாலையான ஆத்தூர் நகரில் இருந்து கோட்டை வழியாக செல்லும் சாலையில் வேகத்தடையில் கனகராஜ் இறந்த நாளில் வேறு ஒருவர் விழுந்ததாக கூறப்படுகிறது. அதனால் அந்த வேகத்தடை அனுமதியுடன் அமைக்கப்பட்டதா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

    • தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதால் அணைகளின் பாதுகாப்பு கருதி இரு அணைகளில் இருந்தும் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.
    • காவிரியில் திறக்கப்பட்ட உபரிநீர் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் இரு மாநில எல்லையான பிலுகுண்டு பகுதியை வந்தடைந்தது.

    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டத்திலும், கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதால் அணைகளின் பாதுகாப்பு கருதி இரு அணைகளில் இருந்தும் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 2 ஆயிரத்து 500 கன அடியாக திறக்கப்பட்ட நீர் நேற்று முன்தினம் 12ஆயிரத்து 500 கன அடியாக உயர்த்தப்பட்டது.

    பின்னர் நேற்று மதியம் 18 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்டது. அதன் பிறகு மாலையில் 22 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டது.

    இதையடுத்து காவிரியில் திறக்கப்பட்ட உபரிநீர் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் இரு மாநில எல்லையான பிலுகுண்டு பகுதியை வந்தடைந்தது. அப்போது வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து மாலை 6 மணிக்கு 3 ஆயிரம் கன அடியானது.

    தொடர்ந்து இன்று காலை 6 மணி நிலவரப்படி பிலிகுண்டு பகுதிக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 100 அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அங்கிருந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வந்தடைந்த இந்த புதுவெள்ளம் அருவிகளில் செந்நிறத்தில் பெருக்கெடுத்து கொட்டுகிறது.

    இந்த தண்ணீர் இன்று மதியம் மேட்டூர் அணையை வந்தடையும் என தெரிகிறது.

    மேட்டூர் அணைக்கு இன்று காலையில் இந்த புதுவெள்ளம் வராததால் அணைக்கு நீர்வரத்து 177 கன அடியாகவே உள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பயிர் சாகுபடியை கருத்தில் கொண்டு இன்று காலையில் நீர் திறப்பு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் நேற்று காலை 66.86 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை நீர்மட்டம் 65.80 அடியாக குறைந்தது.

    ×