search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேச்சேரி பா.ம.க. போராட்டத்தில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது
    X

    மேச்சேரி பா.ம.க. போராட்டத்தில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

    • அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மேச்சேரியை சேர்ந்த குமார் என்ற வாலிபர் மீது மேச்சேரி போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
    • மறியலில் ஈடுபட்ட சதாசிவம் எம்.எல்.ஏ உள்பட 70 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    மேட்டூர்:

    நெய்வேலியில் என்.எல்.சி நிர்வாகம் விவசாய நிலத்தை கையகப்படுத்துவதை கண்டித்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்திற்கு சென்ற பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.

    இதனை கண்டித்து சேலம் மாவட்டம் மேச்சேரியில் மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ தலைமையில் தொப்பூர் - பவானி சாலை மேச்சேரி பஸ் நிறுத்தம் அருகே பா.ம.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வன்னியர் சங்க சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் ஒகேனக்கல், சேலம், மேட்டூர், தர்மபுரி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய மேட்டூர் டி.எஸ்.பி மரியமுத்து தலைமையில் போலீசார் அரசு பஸ் ஒன்றை அங்கு கொண்டு வந்தனர்.

    அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவர் பஸ் மீது கல் வீசி தாக்கியதில் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. பஸ் டிரைவர் காயமின்றி தப்பினார்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ உள்பட பா.ம.க நிர்வாகிகள் 110 பேரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.

    இந்த நிலையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மேச்சேரியை சேர்ந்த குமார் என்ற வாலிபர் மீது மேச்சேரி போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதேபோல் மறியலில் ஈடுபட்ட சதாசிவம் எம்.எல்.ஏ உள்பட 70 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×