என் மலர்tooltip icon

    சேலம்

    • கொடநாடு வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை நீலகிரி போலீசார் கைது செய்தனர்.
    • தனபாலை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மேச்சேரி போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை முயற்சி நடைபெற்றது.

    இதனை தடுக்க முற்பட்ட காவலாளி கொலை செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்பட்ட கார் டிரைவர் கனகராஜ் ஆத்தூர் அருகே மர்மமான முறையில் உயிர் இழந்தார். இந்த வழக்கை சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே கொடநாடு வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை நீலகிரி போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள எருமைப்பட்டி பகுதியில் உள்ள வாசுதேவனுக்கு சொந்தமான இடத்தை ரூ. 5 கோடிக்கு துரையரசு என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். இந்த நிலம் வாங்குவதில் இடைத்தரகராக தனபால் இருந்துள்ளார். பத்திரப்பதிவு முடிந்த நிலையில் குறிப்பிட்டப்படி துரையரசு வாசுதேவனுக்கு பணத்தை கொடுக்காமல் தலைமறை வாகியுள்ளார்.

    இதனையடுத்து வாசுதேவன் கொடுத்த புகாரின் பேரில் இடைதரகராக செயல்பட்ட தனபாலை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மேச்சேரி போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் சிறையில் இருந்த தனபாலுக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது . இதனால் அவர் கதறி துடித்தார். தகவல் அறிந்த சிறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவரை மீட்டு சிறை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தலை, முகம் உள்பட பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    சேலம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மீன்தொட்டி பஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா. இவரது மகன் பிரதீப் கண்ணா (வயது 27),

    இவர் சேலம் குகையில் உள்ள பர்பிகுயின் ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஓமலூரில் இருந்து சேலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    மோட்டார் சைக்கிள் சேலம் குரங்குச்சாவடி சந்தை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கிய போது பிரதீப் கண்ணா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலை, முகம் உள்பட பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படி அவர் கிடந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் ஆஸ்பத்திரியில் ப ரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தொடர்ந்து அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் விரைந்து வந்த அவர்கள் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த பிரதீப்கண்ணாவின் உடலை பார்த்து கதறி அழுது புரண்டனர். இந்த சம்பவம் ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த விபத்து குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்திய போது, விபத்துக்கு காரணமான வேகத்தடையில் வெள்ளை பெயிண்ட் அடிக்காமல் இருந்ததும், இரவு நேரத்தில் பிரதீப் கண்ணா மோட்டார் சைக்கிளில் வந்தபோது வேகத்தடையை கவனிக்காமல் வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்த சோக சம்பவம் அரங்கேறியதும் தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவிட்டால் தமிழகத்தில் நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை வழங்கினால் குறுவை பயிர்களை காப்பாற்ற முடியும்.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை போதுமான அளவு பெய்யாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.

    அணைக்கு நீர்வரத்து நேற்று 3 ஆயிரத்து 216 கன அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் சிறிது அளவு அதிகரித்து 4,107 கன அடியாக வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் ஒரு நாளைக்கு ½ அடி வீதம் சரிந்து வருகிறது.

    மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 56.85 அடியாக உள்ளது.

    இனி வரும் நாட்களில் நீர்வரத்து இதே அளவில் நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

    நீர்வரத்து சரிந்த நிலையிலும் காவிரி டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.

    மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர், அரியலூர், நாகப்பட்டினம் உள்பட 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

    பாசன வசதிக்கு மட்டுமின்றி 155 குடிநீர் திட்டங்களுக்கு ஆதாரமாக இருந்து 22 மாவட்ட மக்களின் தாகத்தையும் மேட்டூர் அணை தீர்த்து வருகிறது.

    ஆண்டுதோறும் பாசன விதிகளின்படி ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை 230 நாட்களுக்கு குறுவை சாகுபடி, தாளடி பயிர்களுக்கு 330 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும்.

    கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 56 நாட்களில் 46 டி.எம்.சி தண்ணீர் பாசனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

    குறுவை சாகுபடி நிறைவடைய வருகிற செப்டம்பர் மாதம் இறுதி வரை பாசனத்திற்கு சுமார் 79 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும்.

    ஆனால் தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 56.85 அடியாக உள்ளது. நீர் இருப்பு 22.30 டி.எம்.சியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்களுக்கும் அணையின் மீன்வளத்தை பாதுகாக்கவும் 9.60 டி.எம்.சி தண்ணீர் இருப்பு வைக்க வேண்டும். மீதமுள்ள தண்ணீரை கொண்டு 2 வாரங்களுக்கு மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும். அதன் பிறகு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

    குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்குமா என்ற கவலையும் டெல்டா விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.

    வருகிற ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவிட்டால் தமிழகத்தில் நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    காவிரி டெல்டா விவசாயிகள் மட்டுமின்றி மேட்டூர் அணை கிழக்கு, மேற்கு கால்வாய் பாசன விவசாயத்திற்கும் தண்ணீர் திறக்கப்படாததால் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் தண்ணீர் இன்றி பயிர் சாகுபடி செய்யப்படாமல் காய்ந்து வருகிறது.

    கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை வழங்கினால் குறுவை பயிர்களை காப்பாற்ற முடியும். அல்லது பருவமழை கை கொடுத்தால் மட்டுமே குறுவை சாகுபடியை நிறைவு செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    • சின்ன மொரப்பன்பட்டி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
    • தற்போது பக்கத்தில் உள்ள நில உரிமையாளர்கள் இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சின்ன மொரப்பன்பட்டி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இந்த பகுதியை சேர்ந்த பாப்பம்மாள் என்பவர் எங்கள் ஊர் மக்களுக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் மயானத்திற்கு கொடுத்தார்.

    இந்த நிலத்தை சரி பார்த்தபோது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பெயரில் உள்ளது. மேலும் கிராம நிர்வாக அலுவலர் பதிவேட்டில் மயான பகுதி என்று காட்டப்பட்டுள்ளது.

    தற்போது பக்கத்தில் உள்ள நில உரிமையாளர்கள் இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டனர். இது சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாசில்தார் ஆகியோரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

    ஆகவே எங்கள் கிராமத்திற்கு சொந்தமான மயான பகுதியை மீட்டு தர வேண்டும். மேலும் எரிமேடை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

    • மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் காவிரி உபரி நீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் நிரப்ப வேண்டும்.
    • மேலும் 100 ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் காவிரி உபரி நீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் நிரப்ப வேண்டும். மேலும் 100 ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். உழவர்களின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம், கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம், மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.12 ஆயிரம், மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரம், மக்காச்சோளம் ரூ.3 ஆயிரம், பசுமாட்டுப்பால் லிட்டர் ரூ.50, எருமை பால் லிட்டர் ரூ.75 வழங்கிட வேண்டும்.கறிக்கோழிகள் வளர்ப்பிற்கு கிலோ ரூ.12 விலை நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட வேண்டும். இந்திய அரசு விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு கடன் நிவாரண ஆணையம் அமைக்க வேண்டும்.தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ளதை போல வருடம் தோறும் ரூ.10 ஆயிரம் உழவு மானியமாக தமிழக அரசு வழங்க வேண்டும். தென்னை, பனைகளில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

    • வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.
    • இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப் பட்டு தீர்வு காணப்படும்.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.

    மனு

    இங்கு பொதுமக்கள் தங்கள் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மனு அளிப்பர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப் பட்டு தீர்வு காணப்படும். இந்த நிலையில் கொண்டலாம்பட்டியை சேர்ந்த ரேஷ்மா (35) என்பவர் இன்று தனது குழந்தைகளு டன் கலெக்டர் அலுவல கத்திற்கு வந்தார்.

    தீக்குளிக்க முயற்சி

    பின்னர் அவர் திடீரென தான் மறைத்து வைத்து எடுத்து வந்திருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து கலெக்டர் அலுவலக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ரேஷ்மாவை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    கணவர் கொடுமை

    அப்போது அவர் கூறு கையில், எனது கணவர் பெயர் ரமேஷ். நாங்கள் இருவரும் காதலித்து திரு மணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் எனது கணவர் மற்றும் மாமியார் என்னை கொடுமைபடுத்தி வருகின்றனர். இதனால் தற்கொலை செய்யும் முடி வில் இங்கு வந்தேன். எனவே அவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

    இதையடுத்து போலீசார் அவரை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • தளவாய்பட்டி கிராம மக்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் இன்று காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள தளவாய்பட்டி கிராம மக்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் இன்று காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தை

    இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தளவாய்பட்டி கிராமத்தில் சுமார் 150 வீடுகள் உள்ளன. எங்கள் கிராமத்தில் மாதம் ஒருமுறை தான் குடிநீர் வருகிறது. முறையாக குடிநீர் வினியோகம் செய்ய ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களை பலமுறை நேரில் சந்தித்து மனு கொடுத்தோம்.

    நடவடிக்கை இல்லை

    ஆனால் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. மேலும் குடிநீர் வழங்குவது எங்களது வேலை இல்லை என்று சொல்கிறார்கள்.

    எங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறும் இல்லை.

    இதனால் தண்ணீர் இல்லாமல் தினசரி வேலைக்கு செல்வதற்கும் முடியவில்லை. மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    எனவே எங்களுக்கு முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    • மெய்யரசன் (27). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.
    • இதையடுத்து பிரபு தன்னுடைய அண்ணன் செல்வராஜையும், அதே ஊரைச் சேர்ந்த தர்மன் என்பவரையும் அனுப்பி வைத்துள்ளார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் காடை யாம்பட்டி தாலுகா ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் மெய்யரசன் (27). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இவர், மேட்டூரில் இருந்து பீஜாப்பூருக்கு யூரியா லோடு ஏற்றிச் செல்ல டிரைவர் இல்லாததால் தனக்கு தெரிந்த ஜாலிகொட்டாயைச் சேர்ந்த பிரபு என்பவரிடம் லாரிக்கு டிரைவர் வேண்டும் என கூறியுள்ளார்.

    பஞ்சு பேல் லோடு

    இதையடுத்து பிரபு தன்னுடைய அண்ணன் செல்வராஜையும், அதே ஊரைச் சேர்ந்த தர்மன் என்பவரையும் அனுப்பி வைத்துள்ளார். அதன்படி, செல்வராஜ் மற்றும் தர்மன் ஆகிய இருவரும் மேட்டூரில் இருந்து யூரியாவை லாரியில் ஏற்றுக் கொண்டு பீஜாப்பூரில் இறக்கிவிட்டு, கடந்த 2-ந் தேதி மகாராஷ்டிரா மாநிலம் பீடுவில் இருந்து 150 பஞ்சு பேல் லோடை ஏற்றிக் கொண்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இறக்க சென்றுள்ளனர். 5-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு சங்ககிரி அருகே ஈரோடு செல்லும் வழியில் தாமஸ் காலனி என்ற இடத்தில் லாரியில் திடீரென தீப்பிடித்து அதில் இருந்த பஞ்சு பேல்கள் முழுவதும் எரிந்து விட்டதாக சங்ககிரி போலீஸ் நிலையத்தில் பிரபு, லாரி உரிமையாளர் மெய்யரசன் புகார் அளித்தனர்.

    லாரி டிரைவரிடம் விசாரணை

    இது குறித்து சங்ககிரி இன்ஸ்பெக்டர் தேவி வழக்கு பதிவு செய்தார். மேலும் சந்தேகத்தின் பேரில் லாரி டிரைவரான பிரபுவிடம் தீவிர நடத்தினார். இதில் லாரிக்கு தீ வைத்ததை பிரபு ஒப்புக் கொண்டார். அவர் போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு அதிகம் கடன் ஏற்பட்டதால் சொந்த லாரியை விற்றுவிட்டு டிரைவராக வேலை பார்த்து வந்தேன். கடனை முழுவதும் அடைக்க முடியாமல் சிரமமப்பட்டு வந்தேன். எனது லாரியில் கிளினீராக வேலை பார்த்து வந்த சூர்யாவிடம் எனது அண்ணன் மகாராஷ்டிராவில் இருந்து பஞ்சு பேல் லோடு ஏற்றி வருகிறார். அதில் ஒரு பகுதியை எடுத்து கொடுக்கிறேன். அதை விற்று பணம் கொடுத்தால் எனது கடனை ஓரளவுக்கு அடைத்து விடலாம். உனக்கும் ஒரு தொகை கொடுக்கிறேன் என கூறினேன். அதற்கு அவரும் சம்மதித்தார்.

    அதே போல், திட்டமிட்டபடி சூர்யாவுடன் சேர்ந்து ராக்கிப்பட்டியில் மறைவான இடத்தில் லாரியை நிறுத்தி, அதில் இருந்து சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 92 பஞ்சு பேல்களை இறக்கி வைத்துவிட்டு நான் அங்கேயே இருந்து கொண்டேன். சூர்யா, செல்வராஜ் மட்டும் யாருக்கும் சந்தேகம் வராதபடி லாரியை சங்ககிரியில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடமான தாமஸ் காலனி அருகில் நிறுத்தி தீ வைத்து கொளுத்தி விட்டனர். இவ்வாறு அவர் கூறினார். அதனை யடுத்து, சங்ககிரி டி.எஸ்.பி ராஜா மேற்பார்வை யில், இன்ஸ்பெக்டர் தேவி, எஸ்ஐ ஸ்ரீராமன் ஆகி யோர் பிரபு (36), செல்வ ராஜ்(38) ஆகிய இருவரை யும் கைது செய்த னர். மேலும் ராக்கிப்பட்டி சென்று அங்கு மறைத்து வைத்தி ருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள 92 பஞ்சு பேல்களை பறிமுதல் செய்தனர். தலை மறைவான சூர்யா மற்றும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். 

    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததால் அணையில் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை முழுவதுமாக தெரிகிறது.
    • காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பருவமழை பெய்துவருவதால் கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.

    இதே போல் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால் காவிரியில் நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 3-வது வாரத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு 5 நாட்கள் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    பின்னர் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் தமிழகத்துக்கு தண்ணீர்திறப்பும் குறைக்கப்பட்டது. இதனால் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 57.46 அடியாக குறைந்ததால் அணையில் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை முழுவதுமாக தெரிகிறது. மேலும் கிறிஸ்துவ கோபுரமும் முழுமையாக தெரிய தொடங்கியது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பருவமழை பெய்துவருவதால் கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தற்போது வினாடிக்கு 10 ஆயிரத்து 306 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 77 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 22.83 டி.எம்.சி. நீர் இருப்பு மட்டுமே உள்ளது.

    • ஏரி கரை முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
    • காலை 6 மணிக்கு தொடங்கிய மீன்பிடி திருவிழா காலை 9 மணியுடன் முடிவடைந்தது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ளது கொண்டையம் பள்ளி. இங்கு சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் ஏராளமான மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.

    கட்லா, ரோகு, ஜிலேபி, அயிரை உள்ளிட்ட ஏராளமான மீன்கள் இந்த ஏரியில் உள்ளது. தற்போது ஏரியில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. இதனால் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து பொதுமக்களுக்கு மீன்பிடிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து கொண்டையம் பள்ளி ஊர் பொதுமக்கள் ஏராளமான பேர் அதிகாலை முதலே ஏரி பகுதியில் குவிய தொடங்கினர்.

    இதனால் ஏரி கரை முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் காலை 6 மணியளவில் மீன்களை பிடித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏரிக்குள் இறங்கி பொதுமக்கள் போட்டி போட்டு மீன்களை பிடித்தனர்.

    காலை 6 மணிக்கு தொடங்கிய மீன்பிடி திருவிழா காலை 9 மணியுடன் முடிவடைந்தது. இதையடுத்து ஏரியில் பிடித்த மீன்களை பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டனர். இந்த மீன் பிடி திருவிழாவில் ஒருவருக்கு 12 கிலோ எடையுள்ள மீன் கிடைத்தது.

    பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மீன் பிடி திருவிழாவை பலரும் கண்டு ரசித்தனர்.

    • வேலு (வயது 53). பெயிண்டர். இவர் அழகாபுரம் பகுதியில் உள்ள ஒரு டாக்டர் வீட்டில் தங்கி இருந்து பெயிண்ட் அடித்து வருகிறார்.
    • வேலு தான் வேலை செய்யும் வீட்டின் முதல் மாடியில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள காக்காபாளையம் கணக்கர் காலனி பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 53). பெயிண்டர். இவர் அழகாபுரம் பகுதியில் உள்ள ஒரு டாக்டர் வீட்டில் தங்கி இருந்து பெயிண்ட் அடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் வேலு தான் வேலை செய்யும் வீட்டின் முதல் மாடியில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த வேலுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • செல்வி (வயது 38). இவர் வீட்டிலேயே இரவு நேரத்தில் பணியாரம் வியாபாரம் செய்து வந்தார்.
    • நேரத்தில் பணியாரம் வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு வழக்கம்போல் செல்வி பணியாரம் செய்து கொண்டிருந்த போது கியாஸ் அடுப்பில் கியாஸ் கசிவு ஏற்பட்டு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் அப்பர் தெருவை சேர்ந்தவர் ராஜி. இவரது மனைவி செல்வி (வயது 38). இவர் வீட்டிலேயே இரவு நேரத்தில் பணியாரம் வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு வழக்கம்போல் செல்வி பணியாரம் செய்து கொண்டிருந்த போது கியாஸ் அடுப்பில் கியாஸ் கசிவு ஏற்பட்டு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் செல்வியின் 2 கைகளிலும் தீப்பிடித்து பற்றி எரிந்தது. இது குறித்து உடனடியாக கிச்சிப்பாளையம் போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சிலிண்டரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். படுகாயம் அடைந்த செல்வியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ×