என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு- ஏற்காட்டில் கடும் குளிர், பனி மூட்டத்தால் மக்கள் தவிப்பு
    X

    ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள புதிய அருவிகளில் இருந்து கொட்டும் தண்ணீரை ரசித்த சுற்றுலா பயணிகள்.

    சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு- ஏற்காட்டில் கடும் குளிர், பனி மூட்டத்தால் மக்கள் தவிப்பு

    • மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 14 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
    • ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் வருகையும் மிகவும் குறைந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் வெயிலின் உஷ்ணம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. தொடர்ந்து 2-வது நாளாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக ஏற்காடு, தலைவாசல், எடப்பாடி, ஆனைமடுவு, கரியகோவில் உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. நீண்ட காலத்திற்கு பிறகு தற்போது பெய்யும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, ஜங்சன் உள்பட அனைத்து பகுதிகளிலும் நேற்றிரவு சாரல் மழை பெய்தது. இந்த மழையால் மாநகரில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

    குறிப்பாக ஏற்காட்டில் நேற்று மாலை 4.30 மணிக்கு தொடங்கிய மழை 6 மணி வரை கனமழையாக பெய்தது. தொடர்ந்து 7 மணி முதல் விடிய விடிய சாரல் மழையாக பெய்தது. மேலும் ஏற்காட்டில் அதிக அளவில் பனிமூட்டமும் நிலவி வருவதால் மலை கிராமங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொது மக்கள் தவித்து வருகிறார்கள்.

    ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் வருகையும் மிகவும் குறைந்துள்ளது. இதனால் ஏற்காட்டில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. கடைகளில் வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

    மேலும் ஏற்காடு மலைப்பாதைகளில் 40 அடி பாலம் உள்பட பல்வேறு வளைவுகளில் ஆங்காங்கே புதிது புதிதாக நீர்வீழ்ச்சிகள் தோன்றி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குறிப்பாக 3-வது கொண்டை ஊசி வளைவில் அருவி போல தண்ணீர் கொட்டுகிறது. இதனால் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்கிறார்கள்.

    மேலும் பல சுற்றுலா பயணிகள் தங்களது செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள். ஒரு சிலர் அந்த அருவிகளில் ஆனந்தமாக குளியல் போட்டும் மகிழ்கிறார்கள்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 14 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. தலைவாசல் 11, எடப்பாடி 10.2, ஆனைமடுவு 10, கரியகோவில் 9, பெத்தநாயக்கன் பாளையம் 4, சங்ககிரி 2.4, காடையாம்பட்டி 2, ஆத்தூர் 1.2, சேலம் 0.4 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 64.20 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.

    Next Story
    ×