என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5ஆயிரத்து 385 கனஅடியாக அதிகரிப்பு
- அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து வினாடிக்கு 7ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலம் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இதையடுத்து 2 அணைகளில் இருந்தும் உபரி நீர் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த 3 நாட்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து காணப்படுகிறது.
நேற்று முன்தினம் வினாடிக்கு 4ஆயிரத்து 654 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் நேற்று வினாடிக்கு 5 ஆயிரத்து 26 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. இன்று மேலும் அதிகரித்து வினாடிக்கு 5 ஆயிரத்து 385 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.79 அடியாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து வினாடிக்கு 7ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 21.65 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அணையில் இருந்து இன்னும் 15.65 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வெளியேற்ற முடியும். மீதி உள்ள 6 டி.எம்.சி. தண்ணீர் குடிநீர் திட்டங்கள் மற்றும் மீன் வளத்திற்கு பயன்படுத்தப்படும். தற்போது திறக்கப்பட்டு வரும் தண்ணீர் அளவே தொடர்ந்து திறந்து விடப்பட்டால் இன்னும் 2 வார காலத்திற்கு மட்டுமே குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியும். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.






