என் மலர்tooltip icon

    சேலம்

    • சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரமச்சூர் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
    • இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், குறுக்கே சேலம் ஓமலூர் ரெயில்வே இருப்பு பாதை செல்கிறது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரமச்சூர் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஓமலூர் நகரில் இருந்து முத்துநாயக்கன்பட்டி, சேலம், தாரமங்கலம், இரும்பாலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது.

    இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், குறுக்கே சேலம் ஓமலூர் ரெயில்வே இருப்பு பாதை செல்கிறது. இங்கு அடிக்கடி ரெயில்வே கேட் போட்டதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து இங்கே தற்போது பாலம் கட்டி போக்குவரத்து சென்று வருகிறது.

    இந்தநிலையில், கீழே உள்ள பகுதி மக்கள் சென்று வருவதற்கான சர்வீஸ் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. அதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், தற்போது சர்வீஸ் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நிலம் எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    தொடர்ந்து வருவாய்துறை அதிகாரிகள், சாலை அமைக்கும் திட்ட அதிகாரிகள் இணைந்து, சாலைக்கான நிலத்தின் உரிமையாளர்களை அழைத்து பேசி ஒப்புதல் பெற்றனர். எடுக்கப்படும் நிலத்திற்கு சந்தை மதிப்பிற்கு மேல் ஒரு மடங்கு சேர்த்து இழப்பீடு வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தொடர்ந்து அங்கு காலி நிலம், வீடுகள் எடுக்கப்படுகிறது. கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நிலத்தின் உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

      சங்ககிரி:

      பெங்களூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (38). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு பெங்களூர் கூடல் கேட்டில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு கோவையை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

      இவருடன் லோடுமேனாக திண்டுக்கல்லை சேர்ந்த கிருஷ்ணன் (36) என்பவரும் உடன் சென்றுள்ளார். அதிகாலை 5 மணிக்கு சங்ககிரி அடுத்து வீராச்சிபாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது மகேந்திரன் ஓட்டிச் சென்ற லாரி முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு லாரியின் பின்பக்கத்தில் பலமாக மோதி விபத்து ஏற்பட்டது.

      இந்த விபத்தில் மகேந்திரன் ஓட்டிச் சென்ற லாரியின் முன் பகுதி முற்றிலும் சிதைந்து போனது. இதில் மகேந்திரன், கிருஷ்ணன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் மகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிருஷ்ணன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சங்ககிரி சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

      • அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தொடர்ந்து பல ஆண்டுகளாக கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனர்.
      • தேசிய அளவிலான கபடிப் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும் முகாம் நடைபெற்றது.

      வாழப்பாடி:

      சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தொடர்ந்து பல ஆண்டுகளாக கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனர்.

      கடந்த செப்டம்பர் 29-ந் தேதி திருவாரூர் மாவட்டம் வடுவூரில், தேசிய அளவிலான கபடிப் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும் முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவர் வி.சுரேஷ்குமார், மாநில அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

      கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் டிசம்பர் மாதம் நடைபெறும் தேசிய அளவிலான கபடிப் போட்டியில், தமிழக அணியில் விளையாடுவதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

      தேசிய அளவிலான கபடிப் போட்டியில் தமிழக அணியில்விளையாடு வதற்கு பங்கேற்கும் மாணவர் வி.சுரேஷ்குமார் மற்றும் மாணவருக்கு பயிற்சி அளித்த வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் பழனி முருகன், ராமமூர்த்தி ஆகியோருக்கு, பள்ளி தலைமையாசிரியர் கோ.ரவீந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கு.கலைஞர் புகழ் மற்றும் பெற்றோர்களும், பொதுமக்களும், விளையாட்டு வீரர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

      தமிழக அணியில் இடம் பிடித்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில், தேசிய அளவிலான போட்டியில் சிறப்பாக திறமை வெளிப்படுத்தி, எனது பள்ளிக்கும், நமது மாநிலத்திற்கு பெருமை தேடித் தருவேன் என மாணவர் வி.சுரேஷ்குமார் தெரிவித்தார்.

      • தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பருத்தி மற்றும் தேங்காய் கொப்பரை விற்பனைக்கான பொது ஏலம் நடைபெற்றது.

      எடப்பாடி - நெடுங்குளம் பிரதான சாலையில், வெள்ளரி வெள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பருத்தி மற்றும் தேங்காய் கொப்பரை விற்பனைக்கான பொது ஏலம் நடைபெற்றது. இப்போது ஏலத்தில்112 மூட்டை பருத்தி விற்பனையானது. பொது ஏலத்தில் ஒரு குவிண்டால் பருத்தி ரூபாய் 5,000 முதல் 7,109 வரை விற்பனையானது. இதேபோல் பொது ஏலத்தில் முதல் தர தேங்காய் பருப்பு குவிண்டால் ஒன்று ரூ.7,631 முதல் ரூ.7900 வரையிலும், இரண்டாம் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.5,825 முதல் ரூ.6731 வரை விலை போனது. நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தின் மூலம் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான வணிகம் நடைபெற்றது.

      • கடந்த 10-ந் தேதி அணையின் நீர்மட்டம் 30.99 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 38.60 அடியாக உயர்ந்து உள்ளது.
      • நீண்ட நாட்களுக்கு பின்பு மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

      சேலம்:

      மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வந்தது.

      இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது. அதே போல் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பருவமழை கைகொடுக்கவில்லை. மேலும் கர்நாடகா அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறக்கவில்லை.

      இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதன் காரணமாக அணையில் மூழ்கி இருந்த கோவில் மற்றும் கிறிஸ்துவ கோபுரங்கள் வெளியே தெரிந்தது.

      அதோடு இல்லாமல் நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு பாளம், பாளமாக நிலப்பரப்பு வெடித்து காணப்பட்டது. மேலும் பாறைகள் மற்றும் கற்களாக காட்சியளித்தது. அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால் கடந்த 10-ந்தேதி காலை 6 மணியுடன் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது.

      ஆனாலும் குடிநீருக்காக தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

      இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் திடீரென பெய்த மழை காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று காலை வினாடிக்கு 15 ஆயிரத்து 606 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 15 ஆயிரத்து 260 கனஅடியாக குறைந்தது. மேலும் கடந்த 10-ந் தேதி அணையின் நீர்மட்டம் 30.99 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 38.60 அடியாக உயர்ந்து உள்ளது. மேலும் அணையில் தற்போது 11.38 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த 5 நாட்களில் அணையின் நீர்மட்டம் 7.61 அடி உயர்ந்து உள்ளது.

      நீண்ட நாட்களுக்கு பின்பு மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதே அளவில் நீர்வரத்து இருந்தால் இன்னும் 2 வாரங்களில் அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டிவிடும்.

      • ரெயிலில் இருந்த முகமது ஷபி தவறி கீழே விழுந்தார்.
      • மின்னாம்பள்ளி-ஏத்தாப்பூர் ரெயில் நிலையம் இடையே சென்றபோது ரெயிலில் இருந்து தவறி விழுந்தார்.

      சேலம்:

      ஆந்திர மாநிலம் சித்தூர் தாலுகா மதனப்பள்ளியை சேர்ந்தவர் முகமது ஷபி (38), இவர் நேற்று காட்பாடி-கோழிக்கோடு ரெயிலில் பொதுப்பெட்டியில் பயணம் செய்தார். அப்போது ரெயில் லோகூர்-டேனீஸ்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயிலில் இருந்த முகமது ஷபி தவறி கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

      மற்றொரு சம்பவம்...

      இதே போல சேலம் மாவட்டம் ஆத்தூர் பெத்தநாயக்கன் பாளையம் அருகே உள்ள சின்னமசமுத்திரம் பஞ்சமர் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (38). கட்டிட தொழிலாளியான இவர் தினமும் ரெயிலில் வேலைக்கு சென்று வந்தார். அதே போல நேற்றும் வேலை முடிந்து சேலத்தில் இருந்து சேலம்-விருதாச்சலம் ரெயிலில் ஊருக்கு புறப்பட்டார். அப்போது மின்னாம்பள்ளி-ஏத்தாப்பூர் ரெயில் நிலையம் இடையே சென்றபோது ரெயிலில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்தில் இறந்தார்.

      இதே போல சேலத்தை அடுத்த மேக்னசைட்-கருப்பூர் ரெயில் நிலையத்திற்கு இடையே நள்ளிரவு 12 மணியளவில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை துண்டாகிய நிலையில் பிணமாக கிடப்பதாக ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு போலீசாருடன் விரைந்து சென்ற அவர் விசாரணை நடத்தினார். அப்போது தலை துண்டாகிய நிலையில் இறந்து கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

      சேலம் பொன்னம்மாப்பேட்டை ரெயில் தண்டவாளப்பகுதியில் 24 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக நேற்றிரவு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகனுக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்து சென்ற ரெயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக சென்ற ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரிய வந்தது. மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்தும் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

      சேலத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து தண்டவாளத்தில் பிணமாக கிடந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

      • மாதந்தோறும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை போன்ற விசேஷ தினங்களில் சிறப்பு பூஜையுடன் அன்னதானம்
      • சோழீஸ்வரர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம்

      எடப்பாடி:

      சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அரசிரா மணி பழக்ககாரன்காடு சோழீஸ்வரர் கோவில் உள்ளது.

      பழமை வாய்ந்த இக்கோவிலில் மாதந்தோறும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை போன்ற விசேஷ தினங்களில் சிறப்பு பூஜையுடன் அன்னதானம் நடைபெறும்.

      மேலும் சங்கடகர சதுர்த்தி, சஷ்டி கிருத்திகை, தேய்பிறை அஷ்டமி பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் பெறும்.

      இந்த நிலையில் நேற்று பிரதோஷ சிறப்பு வழிபாடு பூஜை நடைபெற்றது. இதில் சோழீஸ்வரர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் சாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.

      இவ்விழாவில் தேவூர் சென்றாயனூர், பெரமாச்சி பாளையம், காணியாளம்பட்டி வெள்ளாள பாளையம், சுண்ணாம்புக்க ரட்டூர், ஒக்கிலிப்பட்டி, தண்ணித்தாசனூர், குள்ளம்பட்டி மயிலம்பட்டி, காணியாளம்பட்டி, எடப்பாடி, கொட்டாயூர், வட்ராம்பா ளையம், பூமணியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மேலும் சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்டு பூஜை செய்தனர்.

      • நாளை (13-ந் தேதி) ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்
      • பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

      சேலம்:

      சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

      உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கமிஷனர் அறிவுரைப்படி சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்கள் பயன் பெறும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

      அதன்படி நாளை (13-ந் தேதி) ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில் பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் நேரில் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்.

      இக்குறைதீர் முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். செல்போன் எண் பதிவு மற்றும் செல்போன் எண் மாற்றம் செய்தலுக்கான மனு பெற்று உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.நாளை (13-ந் தேதி) ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில்

      பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதன்பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

      தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைபாடுகள் குறித்த புகார்கள் இருப்பின் அவற்றை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்- 2019 -ன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

      • அஸ்தம்பட்டி கங்கா நகரை சேர்ந்தவர் ஜாபர் (வயது 32). இவர் சமூக இணையதளமான டெலிகிராம் செல்போனில் பயன்படுத்தி வருகிறார்.
      • ஜாபர் தனது வங்கி கணக்கு மூலமாக ரூ.18 லட்சத்து 25 ஆயிரத்தை அனுப்பினார்.

      சேலம்:

      சேலம் அஸ்தம்பட்டி கங்கா நகரை சேர்ந்தவர் ஜாபர் (வயது 32). இவர் சமூக இணையதளமான டெலிகிராம் செல்போனில் பயன்படுத்தி வருகிறார். இதில் கடந்த 4-ந்தேதி ஒரு விளம்பர லிங்க் வந்தது. அதில் உங்களுக்கு பகுதி நேரம் வேலை வழங்கப்படும். அதற்கு முன்பு சில பதிவுகளை நிரப்பி கொடுக்க வேண்டும். இதற்கு உங்களுக்கு திருப்திகரமான சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

      இந்த கவர்ச்சிகர அறிவிப்பை நம்பி லிங்கை கிளிக் செய்து, அதில் கொடுக்கப்பட்ட வேலைகளை செய்து கொடுத்தார். இதையடுத்து அவரிடம் உங்களுக்கு வேலை வேண்டுமானால் பணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. மேலும் அதற்கான லிங்கும் ஜாபரின் செல்போனுக்கு டெலிகிராம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து ஜாபர் தனது வங்கி கணக்கு மூலமாக ரூ.18 லட்சத்து 25 ஆயிரத்தை அனுப்பினார். இதையடுத்து அவருக்கு வேலையும் கிடைக்கவில்லை. தான் அனுப்பிய பணமும் கிடைக்கவில்லை.

      தான் ஏமாற்றம் அடைந்ததை நினைத்து அதிர்ச்சி அடைந்த ஜாபர் இது குறித்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவல கத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சைபர்கிைரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

      • பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் சங்கர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
      • ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், பதிவேடுகள், வாகனப் பதிவு எண் வழங்குதல், புதிய வாகனங்களைப் பதிவு செய்தல் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

      சேலம்:

      சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் சங்கர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

      அப்போது தலைவாசல் வட்டத்திற்கு உட்பட்ட காமக்காபாளையம் கிராமத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் மஞ்சினி ஓடையின் குறுக்கே ரூ.22.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலப் பணியினை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

      தொடர்ந்து தலைவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு இருக்கிறதா? என்பது குறித்தும், சிகிச்சைகள் அளிக்கும் முறை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

      மேலும் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தலைவாசல் தாசில்தார் அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் பதிவேடு களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், பதிவேடுகள், வாகனப் பதிவு எண் வழங்குதல், புதிய வாகனங்களைப் பதிவு செய்தல் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

      நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நரசிங்கபுரம் நகராட்சியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வார்டு எண் 15-ல் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பூங்காப் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமென அலு வலர்களுக்கு அறிவுறுத்தினார்.

      இதனைத்தொடர்ந்து வாழப்பாடி வட்டம் காட்டுவேப்பிலை ப்பட்டியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ஆழ்துளைக் கிணறுகள், சொட்டு நீர் பாசனம், பழ சாகுபடிகள் மற்றும் தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள காளாண் வளர்ப்பு உள்ளிட்டவைகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

      இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்மேகம் முன்னிலையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தை நடத்த உள்ளார்கள்.

      இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) (பொறுப்பு) யோகானந்த் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

      • சிலர் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
      • உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

      அன்னதானப்பட்டி:

      சேலம் அன்னதானப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் சிலர் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

      இந்த நிலையில் நேற்று மணியனூர் காந்தி நகர் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகளை சிலர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இது குறித்த தகவலின் பேரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி வைத்து கடத்தலில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.

      இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்தியதாக மணியனூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (60) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் பலகாரம், தின்பண்டங்கள் விற்கும் கடைகளுக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றது கண்டறியப்பட்டது. அவரிடம் இருந்து 1 டன் ரேஷன் அரிசி, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

      • பராமரிப்பு பணிகள் நாளை முதல் வருகிற 17-ந்தேதி வரை ஆகிய 4 நாட்களுக்கு நடைபெறுகின்றது.
      • மாநகராட்சிப் பகுதிகளில் இந்த 4 நாட்களும் குடிநீர் விநியோகம் குறைவாக இருக்கும்.

      சேலம்:

      சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில் பராமரிப்பு பணிகள் நாளை முதல் வருகிற 17-ந்தேதி வரை ஆகிய 4 நாட்களுக்கு நடைபெறுகின்றது.

      அதன்படி மாநகராட்சிப் பகுதிகளில் இந்த 4 நாட்களும் குடிநீர் விநியோகம் குறைவாக இருக்கும். எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.

      ×