என் மலர்tooltip icon

    சேலம்

    • பூலாவரி மேம்பாலம் அருகே சென்ற போது ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ் அவர்கள் மீது மோதியது.
    • இதில் தூக்கி வீசப்பட்ட சுந்தரேஸ்வரன், ராவணன் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

    சேலம்:

    சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி உடையார்காடு பகுதியை சேர்ந்தவர் ராவணன்.இவரது மகன் சுந்தரேஸ்வரன் (வயது 25). இவர்கள் இருவரும் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பூலாவரி மேம்பாலம் அருகே சென்ற போது ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ் அவர்கள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சுந்தரேஸ்வரன், ராவணன் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர். பலத்த காயம் அடைந்த சுந்தரேஸ்வரன் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். ராவணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்

    இதேபோல் அரிசிபாளையம் ரத்தினசாமி புரத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் (65). இவர் சத்திரத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சுப்பிரமணியன் காயம் அடைந்தார். அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வெளியூருக்கு சென்று சங்கு ஊதி பொதுமக்களிடம் பணம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தார்.
    • சம்வத்தன்று வழக்கம் போல் சங்கு ஊதிக் கொண்டு சாலையில் சென்றபோது பின்னால் வந்த வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட குழந்தைகவுண்டர் படுகாயம் அடைந்தார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகில் உள்ள குண்டுராமபாளையம் பகுதியை சேர்ந்தவர் குழந்தைகவுண்டர் (வயது 75).

    இவர் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வெளியூருக்கு சென்று சங்கு ஊதி பொதுமக்களிடம் பணம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தார்.

    வாகனம் மோதியது

    இந்த ஆண்டும் புரட்டாசி மாதத்தில் சங்கு ஊதுவதற்காக பாப்பம்பாடி அருகில் உள்ள கொண்டக்காரனூர் பகுதியில் வந்து தங்கியுள்ளார். சம்வத்தன்று வழக்கம் போல் சங்கு ஊதிக் கொண்டு சாலையில் சென்றபோது பின்னால் வந்த வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட குழந்தைகவுண்டர் படுகாயம் அடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    வழக்கு

    இது குறித்து குழந்தை கவுண்டரின் மகள் மாதம்மாள் (45 )என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வாழப்பாடி பெரியாற்றின் கரையில் ஆடு அடிக்கும் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால், தினந்தோறும் ஓரிரு ஆடுகள் மட்டுமே இங்கு வெட்டப்படுகிறது.
    • இறைச்சி கழிவு, எலும்பு ஆகியவை சாலையோரத்தில் சிதறி கிடப்பதால் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி தேர்வுநிலை பேரூராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    வாழப்பாடி பேரூராட்சி பகுதியில் சுகாதாரமான முறையில் இறைச்சி வெட்டுவதற்கு, வாழப்பாடி பெரியாற்றின் கரையில் ஆடு அடிக்கும் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால், தினந்தோறும் ஓரிரு ஆடுகள் மட்டுமே இங்கு வெட்டப்படுகிறது.

    சாலையோரம்

    பெரும்பாலான இறைச்சி கடைக்காரர்கள், கடலூர் சாலை, தம்மம்பட்டி சாலையோரத்தில் ஆடுகளை வெட்டி, திறந்த வெளியில் கடைவிரித்து இறைச்சி விற்பனை செய்து வருகின்றனர். இறைச்சி கழிவு, எலும்பு ஆகியவை சாலையோரத்தில் சிதறி கிடப்பதால் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    எனவே வாழப்பாடி பேரூராட்சியில் திறந்த வெளியில் செயல்படும் இறைச்சி கடைகளை அகற்றவும், சுகாதாரமான முறையில் இறைச்சி கடைகள் செயல்படவும் வாழப்பாடி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தனசேகருக்கும் பாலுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது.
    • சாந்தி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவான பாலுவை தேடி வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கே.ஆர். தோப்பூர் தம்பி டாக்டர் தெருவை சேர்ந்தவர் தனசேகர் ( வயது 60). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார்.

    அதே பகுதியில் இவருக்கு சொந்தமான வீட்டில் பாலு என்கிற பாலசுப்பிரமணியம் (42) என்பவர் கடந்த 3 மாதங்களாக வாடகைக்கு குடியிருந்து கொண்டு பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வீட்டு வாடகை பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வீட்டின் உரிமையாளர் தனசேகர், பாலுவிடம் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் பாலு தனது வீட்டை காலி செய்து கொண்டிருந்தார்.

    அப்போது தனசேகருக்கும் பாலுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாலு மரக்கட்டையால் தாக்கியதில் தனசேகர் பலத்த காயமடைந்து மயங்கி கீழே விழுந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தனசேகரின் மனைவி சாந்தி அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த தனசேகர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுபற்றி சாந்தி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவான பாலுவை தேடி வருகின்றனர்.

    • குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    • இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

    சேலம்:

    கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவ மழை போதுமான அளவு பெய்யவில்லை. மேலும் கர்நாடக அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீர் திறக்கப்படவில்லை.

    இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால் கடந்த 10-ந் தேதி காலை 6 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை 15 ஆயிரத்து 260 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 15 ஆயிரத்து 433 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    கடந்த 10-ந் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30.99 அடியாக இருந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து இன்று காலை 41.1 அடியாக உயர்ந்தது. இதனால் கடந்த 5 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது குறிப்பிட தக்கது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சேலம் கோரி மேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற கிட்டாமணி (30), பிரபல ரவுடி, இவர் தற்போது கார் வைத்து வாடகைக்கு இயக்கி வருகிறார்.
    • மகாவிஷ்ணு தட்டி கேட்டார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மகாவிஷ்ணு, மணிகண்டன் தலையில் கம்பியால் சரமாரியாக தாக்கினார்.

    சேலம்:

    சேலம் கோரி மேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற கிட்டாமணி (30), பிரபல ரவுடி, இவர் தற்போது கார் வைத்து வாடகைக்கு இயக்கி வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மகாவிஷ்ணு. இவர் நேற்று மணிகண்டன் காரை வாடகைக்கு கேட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மணிகண்டன் காருக்கு டீசல்போட்டு தயாராக வைத்துள்ளார். ஆனால் மகாவிஷ்ணு , மணிகண்டன் காரை எடுக்காமல் வேறு நபரிடம் வாடகை காரை எடுத்து சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், மகாவிஷ்ணுவின் சகோதரியிடம் தகராறில் ஈடுபட்டதுடன் அவரை தாக்கினார். இது குறித்து மகாவிஷ்ணு தட்டி கேட்டார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மகாவிஷ்ணு, மணிகண்டன் தலையில் கம்பியால் சரமாரியாக தாக்கினார். இதில் படு காயம் அடைந்த மணிகண்டன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ஏற்காட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் வெளியூர்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்வதாக ஏற்காடு போலீஸ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதில் 5 மூட்டைகளில் சுமார் 45 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் வெளியூர்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்வதாக ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏற்காடு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (34). இவர் தனது ஆம்னி வேனில் பொம்மிடியில் இருந்து ஏற்காடு மலை கிராமங்களில் உள்ள கடைகளுக்கு மளிகை பொருட்கள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்.

    இவர் தனது ஆம்னி வேனில் மளிகை பொருட்களுடன் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வதாக ஏற்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இந்த தகவலை தொடர்ந்து ஏற்காடு போலீசார் நேற்று மஞ்சகுட்டை கிராமத்தில் தீவிர வாகன சோதனை செய்தனர். அப்போது மளிகை சரக்கு கொண்டு வந்த கார்த்திக்கின் ஆம்னி வேனை மஞ்சக்குட்டை கிராமத்திற்கு செல்லும் மலைப்பாதையில் வழிமறித்து திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    இதில் 5 மூட்டைகளில் சுமார் 45 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கைப்பற்றிய ஏற்காடு போலீசார் போதை பொருட்களை கொண்டு வர பயன்படுத்திய ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர். மேலும் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சம்பவத்தன்று சதீஷ்குமார், மோகன்குமார் ஆகியோர் விக்னேஷின் வீட்டிற்கு சென்று பாக்கி தொகையை கேட்டுள்ளனர்
    • ஆத்திரமடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த சூரி கத்தியை எடுத்து வந்து சதீஷ்குமாரை தலை மற்றும் கையில் வெட்டினார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடி கிராமம் நத்தியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன்கள் சதீஷ்குமார் (27), மோகன்குமார் (24). இருவரும் தறிதொழில் செய்து வருகின்றனர்.

    இவர்கள் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு துட்டம்பட்டி பைபாஸ் அருவங்காடு பகுதியை சேர்ந்த மார்க்கண்டன் மகன் விக்னேஷ் (24) என்பவருக்கு ரூ.10 ஆயிரத்துக்கு சேலை கொடுத்துள்ளனர். அதில் ரூ.8 ஆயிரத்து 500-ஐ பெற்றுக்கொண்டு ரூ.1500 பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று சதீஷ்குமார், மோகன்குமார் ஆகியோர் விக்னேஷின் வீட்டிற்கு சென்று பாக்கி தொகையை கேட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த சூரி கத்தியை எடுத்து வந்து சதீஷ்குமாரை தலை மற்றும் கையில் வெட்டினார். இதை மோகன்குமார் தடுக்க முயன்றபோது அவரையும் கத்தியால் தலை மற்றும் கை பகுதியில் வெட்டி காயப்படுத்தினார்.

    இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுபற்றி தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

    சேலம்:

    சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

    சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில் இன்று காலை சிறப்பு அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. அதன்பின்னர் அழகிரிநாதர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோல் சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள பட்டை கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவில், பெரமனூர் வெங்கடேச பெருமாள் கோவில், ஜாகீர் அம்மாபாளையம் வரபிரசாத ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.

    குரங்குசாவடி பகுதியில் உள்ள நகரமலையில் பெருமாள் சாமியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஆனந்தா இறக்கம் அருகே உள்ள லட்சுமி நாராயணசாமி கோவில், செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், அயோத்தியாப்பட்டணம் ராமர் கோவில், சின்னத் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில், அழகாபுரம் வெங்கடேசுவரா பாலாஜி டிரஸ்ட் கோவில், உடையாப்பட்டி சென்றாய பெருமாள் கோவில், கடைவீதி வேணுகோபாலசுவாமி கோவில், நாமமலை பெருமாள் கோவில், நெத்திமேடு கரியபெருமாள் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

    • மகாளய அமாவாசையையொட்டி இன்று முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள்.
    • இதையொட்டி காய்கறிகள் பழங்கள் வாங்கி படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    சேலம்:

    மகாளய அமாவாசையையொட்டி இன்று முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள். இதையொட்டி காய்கறிகள் பழங்கள் வாங்கி படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் கோவில்களிலும் சிறப்பு பூைஜகள் நடந்தன. இதனால் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்து நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    உழவர் சந்தைகள்

    இதையொட்டி சேலம் மாவட்ட உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளில் இன்று காலை முதலே பொது மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குறிப்பாக சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்ைட, சூரமங்கலம், தாதகாப்பட்டி உழவர் சந்தைகள் மற்றும் பால் மார்க்கெட், ஆற்றோரம மார்க்ெகட், கடை வீதி உள்பட காய்கறி மார்க்கெட்டுகளிலும் அதிக அளவில் கூட்டம் அலை மோதியது. இதனால் காய்கறிகளிள் விலை சற்று அதிகரித்து காண்ப்பட்டது.

    தக்காளி 10 முதல் 16 ரூபாய் வரையும், உருளை கிழங்கு 32-50, சின்ன வெங்காயம் 60-65, பெரிய வெங்காயம் 36-40, பச்சை மிளகாய் 22-26, கத்திரி 22-25, வெண்டைக்காய் 14, முருங்கைக்காய் 30-70, பீர்க்கங்காய் 32-35, சுரக்காய் 12-15, புடலங்காய் 14-18, பாகற்காய் 32-35, தேங்காய் 25-28, முள்ளங்கி20, பீன்ஸ் 75-85, அவரை40-45, கேரட் 44-48, மாங்காய் 70-80, வாழைப்பழம் 40-60, கீரைகள் 20-24, பப்பாளி 25-30, கொய்யா 50-40, ரூபாய்க்கும் விற்பனையானது.

    பூ மார்க்கெட்

    சேலம் பழைய பஸ் நிலைய வணிக வளாகம் பகுதியில் வ.உ.சி. பூ மார்க்கெட் தற்காலிகமாக செயல்படுகிறது. இந்த பூ மார்க்கெட்டுக்கு சேலம் மற்றும் பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனை சேலம் மற்றும் சுற்று வட்டார வியாபாரிகள் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    இந்த பூ மார்க்கெட்டில் இன்று காலை முதலே அதிக அளவில் பூக்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்தது. பூக்களை வாங்கவும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்திருந்தனர். இதனால் பூக்கள் விலை சற்று அதிக மாக இருந்தது. ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் பூக்களை அதிக அளவில் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.   

    • தினேஷ்குமார் (44). நிதி நிறுவன உரிமையாளர். இவர் கடந்த ஜூன் 17-ந் தேதி நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • சில நபர்கள் தினேஷை திடீரென வழிமறித்து கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து அவரிடமிருந்து 3 பவுன் செயின், ரூ.5200 பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் நெத்திமேடு, ஞானபத்மா அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (44). நிதி நிறுவன உரிமையாளர். இவர் கடந்த ஜூன் 17-ந் தேதி நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    வழிப்பறி

    அப்போது அங்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சில நபர்கள் தினேஷை திடீரென வழிமறித்து கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து அவரிடமிருந்து 3 பவுன் செயின், ரூ.5200 பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வழிப்பறியில் ஈடுபட்ட சேலம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (45), நாமக்கல் மாவட்டம் மோகனூர் வளையப்பட்டி அரூரைச் சேர்ந்த இளங்கோவன் (48) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஈரோடு ரமேஷ், எடப்பாடி கொங்கணாபுரம் ஜனார்த்தனன், சரவணன், கன்னங்குறிச்சி சின்னகொல்லப்பட்டி குமார், பழனிசாமி, துரை, சந்தோஷ்குமார் உள்ளிட்டோரை தேடி வந்தனர்.

    ஆயுள் தண்டனை கைதி

    இந்த வழக்கில் தொடர்பு டைய கன்னங்குறிச்சி சின்னகொல்லப்பட்டி குமார் (43) என்பவரை ஏற்காடு அடிவாரம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து சேலம் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நெத்திமேடு வழிப்பறி வழக்கில் அவரை கைது செய்ய இன்ஸ்பெக்டர் சிவக்குமார் நடவடிக்கைகள் மேற்கொண்டார். இதையடுத்து கோவை நீதிமன்றத்தில் ஒரு நாள் அனுமதி பெற்று நேற்று அவரை காவலில் எடுத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து அவரை கோவை சிறையில் மீண்டும் அடைக்கும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ள னர்.

    • அமாவாசை நாளில் மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்து அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து படைக்கிறோம்.
    • அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பது நம்முடைய சந்ததிகளை காக்கும். வீட்டில் உள்ள சுபகாரிய தடைகள் விலகும் என்பது நம்பிக்கை.

    சேலம்:

    முன்னோர்களை நினைத்து வழிபடுவதற்கான நாளாக அமாவாசை நாளில் மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்து அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து படைக்கிறோம். அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பது நம்முடைய சந்ததிகளை காக்கும். வீட்டில் உள்ள சுபகாரிய தடைகள் விலகும் என்பது நம்பிக்கை.

    மகாளய பட்ச காலம்

    செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 14 வரையிலான காலம் மகாளய பட்ச காலம் என்று அழைக்கப்படுகிறது.மகாளய பட்சத்தை தொடர்ந்து வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகிறது. இந்த 15 நாட்களும் பித்ருக்களுக்கு உரிய காலமாகும்.இந்த நாட்களில் நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து நம் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.மகாளய பட்சத்தில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வது விசேஷம்.

    அதன்படி மகாளய அமாவாசையான இன்று சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக சேலம் அணை மேடு பகுதியில் இன்று காலை முதலே பொது மக்கள் அதிக அளவில் குவிந்தனர். பின்னர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    இதில் முன்னேர்களை நினைத்து ேதங்காய் பழம் உடைத்து எள், அரிசி, பூக்களை வாழை இலையில் வைத்து பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதையொட்டி அணை மேடு பகுதியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது.

    இதே போல சுகவனேஸ்வ ரர் கோவில் நந்தவனம் பகுதியிலும் காலை முதலே ஏராளமான பொதுமக்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள்.

    மேட்டூர், பூலாம்பட்டி காவிரி ஆறு உள்பட பல்வேறு நீர் நிலைகளிலும் பொது மக்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதையொட்டி சேலம் அணைமடு, சுகவனேஸ்வரர் கோவில் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.அமாவாசை நாளில் மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்து அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து படைக்கிறோம். 

    ×