என் மலர்
ராமநாதபுரம்
- ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் மழையால் அவதிக்குள்ளாகினர்.
- தொடர்ந்து கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல தேங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதிப்புக்குள்ளாகினர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலையில் இருந்தே கனமழை பெய்ய தொடங்கியது. இதில், ராமேசுவரத்தில் மட்டும் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் குளம் போல தேங்கியது.
நகராட்சி அலுவலகம் அருகே முனியசாமி கோவில் தெரு, நகராட்சி பொது மார்க்கெட், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் மழையால் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.
பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் சிரமத்துடன் வீடு திரும்பினர்.
இந்த நிலையில் இன்று வங்க கடலில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறை காற்று வீசக்கூடும். மேலும் புதன்கிழமை கன மழை பெய்யக்கூடும் என வானிமை மையம் அறிவுறுத்தி உள்ளது.
இதனைதொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல இன்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, வாலிநோக்கம், மூக்கையூர், தேவிபட்டணம், சோளியகுடி, தொண்டி உள்ளிட்ட துறைமுகங்களில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் அந்தந்த துறைமுங்களில் பாதுகாப்புடன் படகுகள் நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கடலாடி 41, வாலி நோக்கம் 53 , கமுதி 53, பல்ல மோர்குளம் 12.20, முதுகுளத்தூர் 25.10, பரமக்குடி 28.30, ஆர்,எஸ்.மங்கலம் 21.40, மண்டபம் 45.60, ராமநாதபுரம் 88, பாம்பன் 63.90, ராமேசுவரம் 68.00, தங்கச்சிமடம் 91.00, தீர்த்ததாண்டதானம் 15.90, திருவாடானை 10.20, தொண்டி 14.60, வட்டாணம் 15.20 பதிவாகி உள்ளது.
- விபத்தில் படுகாயமடைந்த 14 ஐயப்ப பக்தர்களை அந்தப்பகுதியினர் மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- சம்பவம் தொடர்பாக ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதுகுளத்தூர்:
கர்நாடகா மாநிலம் பெல்லாரி பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 47 பேர் உள்பட 49 பேர் சபரிமலைக்கு பஸ்சில் புறப்பட்டனர். இவர்கள் அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு செல்ல திட்டமிட்டனர்.
அதன்படி கர்நாடக பக்தர்கள் குழுவினர் திருச்செந்தூர் சென்று விட்டு நேற்று இரவு ராமேசுவரத்திற்கு பஸ்சில் புறப்பட்டனர்.
இன்று அதிகாலை ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள புல்லந்தை நெடுஞ்சாலையில் பஸ் வந்து கொண்டிருந்தது. அங்குள்ள சி.எஸ்.ஐ. சர்ச் அருகே ரோட்டோரத்தில் நின்றிருந்த லாரி மீது கர்நாடக பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பஸ்சின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. பஸ்சில் பயணித்த பெல்லாரியை சேர்ந்த கண்ணப்பா என்பவரின் மகன் சந்தீப்(வயது25) என்பவர் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 14 ஐயப்ப பக்தர்களை அந்தப்பகுதியினர் மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என்று அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- பல கோடி ரூபாய் மதிப்பில் பொருளாதாரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ராமேசுவரம்:
வங்க கடலில் சூறை காற்று காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் 2-வது நாளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் முடங்கி உள்ளனர்.
வங்க கடலில் சூறை காற்று வீசக்கூடும் என வானிலை மையம் அறிவுருத்திய நிலையில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் தடை விதிக்கப்பட்டது.
ராமேசுவரம் பகுதியில் பலத்த காற்று, கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம். ராமேசுவரம், ஆகிய பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசுவதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என்று அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீன்துறை அதிகாரிகளின் அறிவிப்பை தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி உள்ளிட்ட கடல் பகுதி முழுவதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுக பகுதியில் படகுகளை நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் 2-வது நாளாக பலத்தை சூறாவளி காற்று வீசுவதுடன் கடல் சீற்றமாகவே காணப்படுவது டன் கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு ஆக்ரோஷ மாக சீறி எழுந்து வருகின்றது.
இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால் பல கோடி ரூபாய் மதிப்பில் பொருளாதாரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
- மண்டபம் கடலில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
- மீன்பிடி தடையால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.
மண்டபம்:
இலங்கையையொட்டி உள்ள வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக ஆழ்கடல் பகுதியில் சூறாவளி காற்று, கடல் கொந்தளிப்பு காணப்படும். குறிப்பாக பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
இதையடுத்து மண்டபம் பகுதி மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் மீன்பிடி அனுமதி டோக்கனும் வழங்கப்படவில்லை. இதனால் மண்டபம் கடலில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இன்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் 2-வது நாளாக மண்டபம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடி தடையால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். நாட்டுப்படகு மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை.
- தொடர் விடுமுறை நாட்களில் பக்தர்கள், பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
- போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம்:
பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை, புத்தாண்டு, ஐயப்ப சீசன் ஆகியவற்றால் கடந்த சில நாட்களாக ராமேசுவரத்திற்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இன்று காலையில் பல்லாயிரக்கணக்கானோர் ராமேசுவரத்தில் குவிந்தனர்.
இந்தியாவின் முன்னோர் வழிபாட்டுக்கு முக்கியமான தலங்களில் ஒன்றாகவும், 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகவும் விளங்குவதால் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர்.
தொடர் விடுமுறை நாட்களில் பக்தர்கள், பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இன்று காலையில் அக்னி தீர்த்த கடல் பக்தர்கள், பயணிகளால் நிரம்பி வழிந்தது. இதனால் கோவிலை சுற்றி உள்ள வாகனம் நிறுத்தும் இடங்களில் வாகனங்கள் நிரம்பி வழிந்தன. அங்கு வாகனங்கள் வரிசையில் நின்று உள்ளே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் நகரின் சாலைகளிலும் வாகனங்கள் வரிசையாக நின்றிருந்தன. சாலைகள் குறுகலாக இருப்பதால் போக்குவரத்தை சீர்செய்வதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. இதனால் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சுவாமி-அம்மனை வழிபட்டு மகிழ்ந்தனர். திட்டக்குடி, மேற்குவாசல், கிழக்கு வாசல், தெற்குவாசல் பகுதிகளில் தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் முடித்த பக்தர்கள், பயணிகள் கோதண்டராமர் கோவில், ராமர் பாதம் ஆகிய இடங்களில் தரிசனம் செய்தனர். பின்னர் தனுஷ்கோடி, அரிச்சல் முனை பகுதிக்கு சென்று சுற்றி பார்த்தனர். இதனால் அரிச்சல்முனை பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் நகரில் உள்ள அப்துல்கலாம் வீடு, பேக்கரும்பில் உள்ள மணி மண்டபம், பாம்பன் பாலம், அரியமான் கடற்கரை பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
- புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
- மரகத நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு களையும் நிகழ்ச்சி
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை கோவிலானது முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. உலகில் முதலில் தோன்றிய கோவில் என்ற பெருமையும் இதற்கு உண்டு. இந்த கோவிலில் சிவபெருமான் மங்களநாதராகவும், அம்மன் மங்களநாயகியாகவும் அருள்பாலிக்கின்றனர். இங்கு நடராஜருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதியில் ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை உள்ளது.
மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஒளி, ஒலி அதிர்வுகளில் இருந்து இந்த சிலையை காப்பதற்காக மரகத நடராஜர் மீது ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு பூசப்பட்டு இருக்கும். ஆண்டில் ஒருநாள், அதுவும் ஈசனுக்கு உகந்த நாளான திருவாதிரைக்கு முதல்நாள் இந்த சந்தனக்காப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படுவது வழக்கம்.
இதன்படி ஆருத்ரா தரிசன விழாவையொட்டி மரகத நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு களையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்காக காலை 7.45 மணி அளவில் நடராஜர் சன்னதி நடைதிறக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு களையப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பச்சை மரகத நடராஜரை தரிசனம் செய்தனர்.
பின்னர் மரகத நடராஜருக்கு சந்தனம், நெய், பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், நெல்லிபொடி, பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபூர்வ மரகத நடராஜரின் திருமேனியில் ஆண்டு முழுவதும் பூசப்பட்டிருக்கும் சந்தனம் மருத்துவ குணம் மிகுந்தது என கருதப்படுவதால் இந்த சந்தனத்தை பக்தர்கள் வாங்கிச் சென்றனர்.
தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, நான்கு ரத வீதிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சந்தனம் களையப்பட்ட அபூர்வ மரகத நடராஜரை தரிசனம் செய்து சென்றனர்.
இன்று (புதன்கிழமை) ஆருத்ரா தரிசனத்தையொட்டி அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்னர் அருணோதய காலத்தில் அபூர்வ மரகத நடராஜர் மீது மீண்டும் சந்தனக்காப்பு பூசப்பட்டு இதைத்தொடர்ந்து நடராஜருக்கு தீபாராதனை காண்பிக்கப்படும்.- தனுஷ்கோடியை ஒரு குட்டி சிங்கப்பூர் என்று செல்லும் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்று வந்தது.
- கடந்த 1964 ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி மிதமான காற்றுடன் கூடிய மழை பெய்துகொண்டிருந்தது.
ராமேசுவரம்:
தனுஷ்கோடி... ஆழிப்பேரலை தாக்கி அழிந்ததின் 59 ஆண்டு நினைவு தினம் இன்று. சேதமடைந்த கட்டிடங்கள் நினைவுகளாக காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறது. தமிழகத்தின் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி என்று இரண்டு கடல் பகுதியை கொண்டது தனுஷ்கோடி துறைமுக நகரம் இலங்கைக்கு மிகவும் குறுகிய தொலைவில் உள்ளது. இதனால் இங்கிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கினால் அதிகளவில் வருவாய் கிடைக்கும் என்பதால் தனுஷ்கோடியில் துறைமுகம் அமைக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு துறைமுகம் அமைக்கப்பட்டு தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே இரண்டு கப்பல் போக்குவரத்து 1914 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த துறைமுகத்திற்கு அதிகளவில் சரக்கு கொண்டு செல்லும் வகையில் ரெயில் போக்குவரத்தை ஆங்கிலேயர்கள் தொடங்கினர். சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு போட்மெயில் ரெயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது. தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு இரண்டு கப்பல்கள் இயக்கப்பட்டது. இதனால் தனுஷ்கோடி மிகப்பெரிய அளவில் வர்த்தக துறைமுக நகரமாக மாறியது.
இந்த பகுதி மக்கள் தனுஷ்கோடியை ஒரு குட்டி சிங்கப்பூர் என்று செல்லும் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்று வந்தது. இலங்கை வழியாக செல்லும் பயணிகள் தங்களது பணத்தை மாற்றிக்கொள்ளும் வகையில் அலுவலகம், காவல் துறை, சுங்கத்துறை, தபால் அலுவலகம், ரெயில் நிலையம் என பரந்து விரிந்து காணப்பட்ட தனுஷ்கோடி துறைமுக நகரம், ஆழிப்பேரலையில் சிக்கிகொண்டு அழிந்து போகும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
கடந்த 1964 ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி மிதமான காற்றுடன் கூடிய மழை பெய்துகொண்டிருந்தது. இரவு 10 மணிக்கு கிராமத்தில் உள்ள பொதுமக்கள் வீடுகளிலும், அரசுத்துறை அதிகாரிகள் என அலுவலகத்திலும் இருந்தனர். காற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க கடலின் சீற்றமும் அதிகமானது. நள்ளிரவு 12.30 மணிக்கு கொட்டித்தீர்த்த மழை சுழன்று அடித்த காற்று கடலில் எழுந்த ஆழிப்பேரலை தனுஷ்கோடியை தாக்கியது. விடியும் என காத்திருந்த மக்கள் அனைவரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.
அரசுத்துறை கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தது. மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டதால் அனைத்து அலுவலகங்கள் மற்றும் வீடுகள் கடுமையாக சேதமடைந்தது இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு தனுஷ்கோடி கடலுக்குள் சென்று விட்டது.

ஆழிப்பேரலையில் சிக்கி சின்னாபின்னமான ரெயில்
பாம்பன் பகுதியில் இருந்து தனுஷ்கோடி நோக்கி வந்த ரெயில் சிக்னல் கிடைக்காமல் இடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பேரலையில் சிக்கி தூக்கி வீசப்பட்ட அந்த ரெயிலில் இருந்த பயணிகள் ஏராளமான பேர் உயிரிழந்தனர். விடிந்தால் 24-ந்தேதி அதிகாலையில் தனுஷ்கோடியில் தாக்கிய புயல் பாம்பன் பாலத்தையும் விட்டு வைக்கவில்லை. 8 இரும்பு கர்டர்களை தூக்கி கடலில் வீசியது. 45 நாட்களுக்கு பின் பாம்பன் பாலம் ரெயில்வே துறையினரால் மீண்டும் சீரமைக்கப்பட்டது.
தனுஷ்கோடியை புயல் தாக்கியது காலையில் தான் தெரியவந்தது. துறைமுக நகரம் எங்கு பார்த்ததாலும் தண்ணீர் நிறைந்த சிறு சிறு தீவுகள் போல காட்சி அளித்தது. புயலில் சிக்கி உயரிழந்தவர்கள் சடலங்கள் அங்கும் இங்குமாக சிதறிக் கிடந்தது. மரண ஓலங்கள் அழுகை என மனதை தவிக்க வைத்து இன்றுடன் 59 ஆண்டுகள் ஆகிறது.
இன்றும் தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள் ஆழிப்பேரலையின் தாக்கத்தை முழுமையை புரிந்து கொள்ளமுடிகிறது. புகழ் பெற்ற துறைமுக நகரம் தனது அழிவுக்கு பின் பழமையை எடுத்துகாட்டும் விதமாக கட்டிடங்கள் காட்சி அளிக்கின்றது. தனுஷ்கோடிக்கு நேராக வாகனங்கள் வர முடியாது. 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முகுந்தராயர் சத்திரம் வரையில் வாகனங்கள் வந்து விடும். இதன் பின் அங்கிருக்கும் பிரத்யேக வாகனங்கள் மூலம் தனுஷ்கோடிக்கு செல்ல வேண்டும். வழி நெடுகிலும் கடலில் இருந்து மணல் மேடுகளாக காணப்படுகின்றது. கடல் நீரில் தான் இந்த வாகனம் சென்று வருகிறது. பாதுகாப்பற்ற பயணமாக இருந்தாலும் இதை தவிர வேறு வழி கிடையாது. தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆழிப்பேரலையின் கோர தாண்டவத்தை பார்த்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பல கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அரிச்சல்முனை வரை சாலைகள் அமைக்கப்பட்டு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதன் பின்னர் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை பகுதிக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆண்டுக்கு 3 கோடி வரை வந்து செல்லுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் அடிப்படை வசதிகளான கழிவறை, வாகன நிறுத்தம், பொதுமக்கள் கடற்கரையோரம் அமர்ந்து பொழுது போக்கிடும் வகையில் இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யவும், இடிந்து போன தேவாலயத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கவும் தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நீதி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவடையும்போது புதுப்பொலிவு பெற்று விடும். மேலும் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கினால் மீண்டும் தனுஷ்கோடி பிரமாண்ட நகரமாக மாறி விடும் என்ற நம்பிக்கையுடன் இன்றளவும் 200-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் 59 ஆண்டு நினைவுகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
- சொந்தமாக ரூ.1 கோடி மதிப்பிலான பல்வேறு வசதிகளை கொண்ட விசைப்படகு ஒன்று இருந்தது.
- சேதமடைந்துள்ள படகுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்துள்ள பாம்பன் பிரான்சிஸ் நகரை சேர்ந்தவர் காலின்ஸ். ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்து வரும் இவருக்கு சொந்தமாக ரூ.1 கோடி மதிப்பிலான பல்வேறு வசதிகளை கொண்ட விசைப்படகு ஒன்று இருந்தது.
அடுத்தடுத்த புயல் சின்னம் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த பலத்த மழை எதிரொலியாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காலின்ஸ் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகினை தெற்குவாடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்தார்.
இதற்கிடையே கடந்த சில தினங்களாக படகில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இன்று முதல் கடலுக்கு செல்ல காலின்ஸ் திட்டமிட்டு இருந்தார். அதற்கான முன்னேற்பாடு பணிகளையும் அவர் மேற்கொண்டு தயார் நிலையில் வைத்திருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 5 மணிக்கு திடீரென படகில் இருந்து அளவுக்கு அதிகமாக புகை வந்தது. அடுத்த ஒருசில விநாடிகளில் தீ பிடித்துள்ளது. இதில் படகு முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதைப் பார்த்த மீன்பிடி தொழிலுக்கு தயாராகிக்கொண்டிருந்த சக மீனவர்கள் காலின்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் பதறியடித்துக்கொண்டு அவர் கட லுக்கு ஓடி வந்தார். மேலும் மற்ற மீனவர்கள் உதவியுடன் தீயை அணைக்க போராடினார். இருந்தபோதிலும் படகு முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. படகில் ஏற்பட்ட விபத்து முன்விரோதம் காரணமாக மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டதா அல்லது எதிர்பாரத விதமாக தீ பிடித்ததா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துறைமுகத்தில் 100-க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தப்பட்டிருந்த படகில் ஒரு படகு தீ விபத்துக்குள்ளானது சக படகு உரிமையாளர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. படகில் இருந்த பேட்டரிகளில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
தீ விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சேதமடைந்துள்ள படகுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மீனவர்கள் கடலுக்கு செல்ல கடந்த 18ந்தேதி தடை விதிக்கப்பட்டது.
- விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
ராமேசுவரம்:
தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த வாரம் தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. கடலோர மாவட்டமான ராமநாதபுரத்திலும் பரவலாக மழை பெய்தது.
வங்கக்கடலில் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசியதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல கடந்த 18ந்தேதி தடை விதிக்கப்பட்டது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் வேலை இழந்தனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் தற்போது மழை, காற்றின் வேகம் குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான தடை நீக்கப்பட்டது. இதன் காரணமாக 5 நாட்களுக்கு பிறகு ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். முன்னதாக கடலுக்கு செல்ல மீன்வளத்துறை சார்பில் அவர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்பட்டது. தடை நீக்கப்பட்டதால் ராமேசுவரம், பாம்பன் துறைமுகம் மீண்டும் பரபரப்பாக காணப்பட்டது.
- வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் மட்டுமே மீன் பிடிக்கச் சென்று ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் கரை திரும்புவார்கள்.
- கடந்த 7 நாட்களாக பெய்த அடைமழை காரணமாக இப்பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
தொண்டி:
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நகர் லாஞ்சியடி, சோழியக்குடி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் மட்டுமே மீன் பிடிக்கச் சென்று ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் கரை திரும்புவார்கள்.
அப்போது விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் பிடித்து வரும் இறால், நண்டு, கனவாய் போன்ற கடல் உணவுப்பொருட்களை தூத்துக்குடி பகுதியிலிருந்து வந்து கடல் உணவுப்பொருட்களை பதப்படுத்தி வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் பெரிய நிறுவனங்கள் வாங்கிச்செல்வது வழக்கம்.
நெல்லை, தூத்துக்குடி பகுதியில் வெள்ளத்தினால் அப்பகுதியில் சாலை, மின்சாரம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதால் போக்குவரத்து தடைபட்டதோடு, மின்சாரம் இல்லாததால் கடல் உணவுப்பொருட்களை குளிர்படுத்தும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன் ஏற்றுமதி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7 நாட்களாக பெய்த அடைமழை காரணமாக இப்பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இந்தநிலையில், தற்போது பெரிய நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் நிலையும் இல்லாததால், மழை விட்டும் இப்பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொண்டி வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் 4.4 மில்லி மீட்டர் என்ற அளவில் குறைந்த அளவு மழை பொழிவு பதிவானது குறிப்பிடத்தக்கது.
- ராமேசுவரத்தை சேர்ந்த 8 மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் படகுடன் சிறைபிடித்து சென்றனர்.
- விடுதலையான மீனவர்கள் மீண்டும் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என நிபந்தனையுடன் நீதிபதி விடுதலை செய்தார்.
ராமேசுவரம்:
கடந்த நவம்பர் மாதம் 6-ந் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 8 மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் படகுடன் சிறைபிடித்து சென்றனர். பின்னர் அவர்கள் மன்னார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலையான மீனவர்கள் மீண்டும் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என நிபந்தனையுடன் நீதிபதி விடுதலை செய்தார்.
இதனை தொடர்ந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இந்திய துணை தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
- மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.
- ராமேசுவரம் வந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
ராமநாதபுரம்:
தமிழகத்தின் தென் வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நேற்று முன்தினம் முதல் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டமான ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் முதல் பரலாக சாரல் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் அவ்வப்போது விட்டுவிட்டு கனமழை பெய்கிறது.
மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார். கனமழையினால் நேற்று ராமநாதபுரம் நகர் பகுதியில் மட்டும் வழிவிடு முருகன் கோவில் பகுதி, மூலக்கொத்தளம் பகுதி உள்ளிட்ட 3 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதனை அகற்றும் பணியில் வருவாய்த்துறை, நகராட்சி ஊழியர்கள், போக்குவரத்து போலீசார், தீயணைப்பு படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். நேற்று முன்தினம் முதல் இன்று வரை பெய்து வரும் தொடர் கனமழையானது நகரின் பிரதான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
கடலாடி-105.20, வாலி நோக்கம்-67.40, கமுதி-129.40, பள்ளமோர்க்குளம்-9.50, முதுகுளத்தூர்-87.20, பரமக்குடி-93.60, ஆர்.எஸ்.மங்கலம்-59.36, மண்டபம்-23.20, ராமநாதபுரம்-104, பாம்பன்-36.60, ராமேசுவரம்-43.20, தங்கச்சிமடம்-41.50, தீர்த்தாண்டதனம்-49, திருவாடானை-35, தொண்டி 64.80, வட்டாணம்-45.40 என மாவட்டம் முழுவதும் 994.36 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதேபோல் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல தேங்கி காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் வந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
மேலும் வங்கக்கடலில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசுவதால் இன்றுடன் மூன்றாவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தில் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டுள்ளது.
5 கோடிக்கு மேல் இறால் மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவ சங்கத்தினர் தெரிவித்தனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மூன்றாவது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் கடந்த 3 நாட்களாக அடை மழை பெய்து வரும் நிலையில் தொண்டியில் நேற்று 70.6. மில்லி மீட்டர் மழை பதிவானது. மீன்பிடி தொழிலை நம்பியுள்ள ஏராளமான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.






