என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் பெய்த மழைக்கு இடையே வாகனங்கள் சீறிப்பாய்ந்து சென்ற காட்சி.
ராமநாதபுரத்தில் 994 மி.மீ. பதிவு: விடிய விடிய பெய்த கனமழையால் வீடுகளுக்குள் முடங்கிய பொதுமக்கள்
- மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.
- ராமேசுவரம் வந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
ராமநாதபுரம்:
தமிழகத்தின் தென் வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நேற்று முன்தினம் முதல் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டமான ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் முதல் பரலாக சாரல் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் அவ்வப்போது விட்டுவிட்டு கனமழை பெய்கிறது.
மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார். கனமழையினால் நேற்று ராமநாதபுரம் நகர் பகுதியில் மட்டும் வழிவிடு முருகன் கோவில் பகுதி, மூலக்கொத்தளம் பகுதி உள்ளிட்ட 3 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதனை அகற்றும் பணியில் வருவாய்த்துறை, நகராட்சி ஊழியர்கள், போக்குவரத்து போலீசார், தீயணைப்பு படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். நேற்று முன்தினம் முதல் இன்று வரை பெய்து வரும் தொடர் கனமழையானது நகரின் பிரதான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
கடலாடி-105.20, வாலி நோக்கம்-67.40, கமுதி-129.40, பள்ளமோர்க்குளம்-9.50, முதுகுளத்தூர்-87.20, பரமக்குடி-93.60, ஆர்.எஸ்.மங்கலம்-59.36, மண்டபம்-23.20, ராமநாதபுரம்-104, பாம்பன்-36.60, ராமேசுவரம்-43.20, தங்கச்சிமடம்-41.50, தீர்த்தாண்டதனம்-49, திருவாடானை-35, தொண்டி 64.80, வட்டாணம்-45.40 என மாவட்டம் முழுவதும் 994.36 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதேபோல் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல தேங்கி காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் வந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
மேலும் வங்கக்கடலில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசுவதால் இன்றுடன் மூன்றாவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தில் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டுள்ளது.
5 கோடிக்கு மேல் இறால் மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவ சங்கத்தினர் தெரிவித்தனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மூன்றாவது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் கடந்த 3 நாட்களாக அடை மழை பெய்து வரும் நிலையில் தொண்டியில் நேற்று 70.6. மில்லி மீட்டர் மழை பதிவானது. மீன்பிடி தொழிலை நம்பியுள்ள ஏராளமான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.






