search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமேசுவரத்தில் குவிந்த பக்தர்கள்- வாகன நெரிசல்
    X

    ராமேசுவரத்தில் குவிந்த பக்தர்கள்- வாகன நெரிசல்

    • தொடர் விடுமுறை நாட்களில் பக்தர்கள், பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
    • போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ராமேசுவரம்:

    பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை, புத்தாண்டு, ஐயப்ப சீசன் ஆகியவற்றால் கடந்த சில நாட்களாக ராமேசுவரத்திற்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இன்று காலையில் பல்லாயிரக்கணக்கானோர் ராமேசுவரத்தில் குவிந்தனர்.

    இந்தியாவின் முன்னோர் வழிபாட்டுக்கு முக்கியமான தலங்களில் ஒன்றாகவும், 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகவும் விளங்குவதால் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    தொடர் விடுமுறை நாட்களில் பக்தர்கள், பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இன்று காலையில் அக்னி தீர்த்த கடல் பக்தர்கள், பயணிகளால் நிரம்பி வழிந்தது. இதனால் கோவிலை சுற்றி உள்ள வாகனம் நிறுத்தும் இடங்களில் வாகனங்கள் நிரம்பி வழிந்தன. அங்கு வாகனங்கள் வரிசையில் நின்று உள்ளே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் நகரின் சாலைகளிலும் வாகனங்கள் வரிசையாக நின்றிருந்தன. சாலைகள் குறுகலாக இருப்பதால் போக்குவரத்தை சீர்செய்வதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. இதனால் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

    கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சுவாமி-அம்மனை வழிபட்டு மகிழ்ந்தனர். திட்டக்குடி, மேற்குவாசல், கிழக்கு வாசல், தெற்குவாசல் பகுதிகளில் தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் முடித்த பக்தர்கள், பயணிகள் கோதண்டராமர் கோவில், ராமர் பாதம் ஆகிய இடங்களில் தரிசனம் செய்தனர். பின்னர் தனுஷ்கோடி, அரிச்சல் முனை பகுதிக்கு சென்று சுற்றி பார்த்தனர். இதனால் அரிச்சல்முனை பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் நகரில் உள்ள அப்துல்கலாம் வீடு, பேக்கரும்பில் உள்ள மணி மண்டபம், பாம்பன் பாலம், அரியமான் கடற்கரை பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    Next Story
    ×