search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandanakappu also performed"

    • புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
    • மரகத நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு களையும் நிகழ்ச்சி

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை கோவிலானது முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. உலகில் முதலில் தோன்றிய கோவில் என்ற பெருமையும் இதற்கு உண்டு. இந்த கோவிலில் சிவபெருமான் மங்களநாதராகவும், அம்மன் மங்களநாயகியாகவும் அருள்பாலிக்கின்றனர். இங்கு நடராஜருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதியில் ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை உள்ளது.

    மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஒளி, ஒலி அதிர்வுகளில் இருந்து இந்த சிலையை காப்பதற்காக மரகத நடராஜர் மீது ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு பூசப்பட்டு இருக்கும். ஆண்டில் ஒருநாள், அதுவும் ஈசனுக்கு உகந்த நாளான திருவாதிரைக்கு முதல்நாள் இந்த சந்தனக்காப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படுவது வழக்கம்.

    இதன்படி ஆருத்ரா தரிசன விழாவையொட்டி மரகத நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு களையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்காக காலை 7.45 மணி அளவில் நடராஜர் சன்னதி நடைதிறக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு களையப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பச்சை மரகத நடராஜரை தரிசனம் செய்தனர்.

    பின்னர் மரகத நடராஜருக்கு சந்தனம், நெய், பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், நெல்லிபொடி, பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபூர்வ மரகத நடராஜரின் திருமேனியில் ஆண்டு முழுவதும் பூசப்பட்டிருக்கும் சந்தனம் மருத்துவ குணம் மிகுந்தது என கருதப்படுவதால் இந்த சந்தனத்தை பக்தர்கள் வாங்கிச் சென்றனர்.

    தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, நான்கு ரத வீதிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சந்தனம் களையப்பட்ட அபூர்வ மரகத நடராஜரை தரிசனம் செய்து சென்றனர்.

    இன்று (புதன்கிழமை) ஆருத்ரா தரிசனத்தையொட்டி அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்னர் அருணோதய காலத்தில் அபூர்வ மரகத நடராஜர் மீது மீண்டும் சந்தனக்காப்பு பூசப்பட்டு இதைத்தொடர்ந்து நடராஜருக்கு தீபாராதனை காண்பிக்கப்படும்.
    ×