என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • பல்கலைக்கழக அளவிலான கூடைப்பந்து போட்டியில் செய்யது ஹமீதா கல்லூரி முதலிடம் பெற்றது.
    • கீழக்கரை அணி 43-23 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.

    கீழக்கரை,

    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழம் மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையே 2022-23-ம் ஆண்டிற்கான கூடைப்பந்து போட்டி தேவகோட்டையில் நடந்தது.

    இதில் 22-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த கூடைப்பந்து அணிகள் பங்கேற்றன. போட்டிகளை அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

    இறுதிப் போட்டியில் கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரி அணியும், தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி அணியும் மோதியது. இதில் கீழக்கரை அணி 43-23 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.

    முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் யூசுப், செயலர் ஷர்மிளா, இயக்குநர்கள், முதல்வர் சதக்கத்துல்லா, உடற்கல்வி இயக்குநர் தவசலிங்கம் ஆகியோர் கூடைப்பந்து அணியினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி நடைபயணம் தொடங்குகிறது.
    • சி.பி.எஸ். இயக்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ஊரக வளர்ச்சி துறை விஜயகுமார் கூறி உள்ளார்.

    ராமநாதபுரம்

    சி.பி.எஸ்.இயக்கத்தின் மாநில இணை ஒருங்கி ணைப்பாளர் ஊரக வளர்ச்சி துறை விஜயகுமார் கூறியதாவது:-

    தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள், சீருடைப் பணியாளர்களுக்கு 1.4.2003 முதல் புதிய ஓய்வூதியத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இதுவரை சுமார் 6 லட்சம் ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட ஓய்வு கால பலன்கள் இந்த திட்டத்தில் இல்லாததால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்கள் பல கட்ட போராட்டங்கள் மூலமாக தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வந்தது.

    அதன் அடிப்படையில் 2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவி த்தார்.

    பங்களிப்பு ஓய்வூதியச் சட்டத்தின்படி ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்துடன் புரிந்து ணர்வு ஒப்பந்தம் மாநில அரசுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலையில் இன்று வரை தமிழக அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

    மேலும், இந்த திட்டத்தில் சேருவது மாநில அரசுகளின் விருப்புரிமையைப் பொறுத்தது. வாக்குறுதி வழங்காத ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநில முதலமைச்சர்கள் மாநில அரசு ஊழியர்களுக்கு கேடு விளைவிக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அந்தந்த மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு கால வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து உள்ளனர்.

    இவர்களைத் தொடர்ந்து பஞ்சாப் மாநில முதல்வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துள்ளார். புதிய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய போதிலும் மத்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கும், பணியின் போது இறந்தவர்களுக்கும் பணிக்கொடை வழங்கி உள்ளனர்.

    ஆனால் தமிழகத்தில் அவ்வாறு பணிக் கொடையும் வழங்கவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் பல கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளோம். தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி நீதி கேட்டு 3 நாட்கள் நடை பயணம் மேற்கொள்கிறோம்.

    இதில் 100-க்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமநாதபுரத்தில் த.மு.மு.க. சார்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
    • தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிவுரையின் பேரில் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிவுரையின் பேரில் மாநில துணை பொதுச் செயலாளர் சலிமுல்லா கான் ஆலோசனையின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் த.மு.மு.க. சார்பில் ஏழை எளிய மக்களுக்கு கல்வி, மருத்துவ சிகிச்சை மற்றும் சிறு தொழில் செய்வதற்கு நிதி உதவி அளித்து வருகின்றனர். ராமநாதபுரம் பாரதிநகர் பாலமுருகனுக்கு ரூ.10 ஆயிரம், புவனேஸ்வரனுக்கு ரூ.5 ஆயிரம், மண்டபம் பாத்திமாவிற்கு ரூ.10 ஆயிரம், ஏர்வாடி சகுபர் சாதிக் ரூ.10ஆயிரம், நாகநாதபுரம் அமீர் ரூ.5 ஆயிரம், முதுகுளத்தூர் இப்ராஹிம் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக ரூ.50 ஆயிரம், ராமநாதபுரம் நகர் பகுதி, மண்டபம் பேரூர் பகுதியில் வசிக்கும் 2 விதவைப் பெண்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூ.1.40 லட்சம் என மொத்தம் ரூ.2.30 லட்சத்தை மாநில துணை பொதுச் செயலாளர் சலிமுல்லாஹ்கான் வழங்கினார். இதில் மாவட்டத் தலைவர் பிரிமியர் இப்ராஹிம், நகர் தலைவர் முகம்மது அமீன், மாவட்டச் செயலாளர் அப்துல் ரஹீம், 15-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் காதர் பிச்சை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கீழக்கரை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • முதல்வர் காப்பீடு திட்டத்தில் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் மாரியூர் அருகே கிருஷ்ண புரத்தைச் சேர்ந்தவர் சிவனா பிள்ளை. இவர் கீழக்கரையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காளீஸ்வரி (வயது39).

    இவர் 8 மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு இணைப்பு பகுதியில் முறிவு ஏற்பட்டு சிரமம் அடைந்து வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பார்த்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.

    இதையடுத்து காளீஸ்வரி கீழக்கரை அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக வந்தார். தலைமை டாக்டர் ஜவாஹிர் ஹூசைன், எலும்பு சிகிச்சை டாக்டர் பிரகாஷ் ஆகியோர் இவரை பரிசோதனை செய்ததில் இடுப்பு எலும்பு இணைப்பு பகுதியில் முறிவு ஏற்பட்டு பலத்த சேதமடைந்து இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காளீஸ்வரிக்கு செயற்கை எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. டாக்டர் பிரகாஷ் தலைமையில் கமுதி அரசு மருத்துவமனை டாக்டர் பிரபாகரன், மயக்கவியல் மருத்துவர் உமா சங்கரி, செவிலியர் ஆனந்தி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் சுமார் 4 மணி நேரத்தில் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

    அறுவை சிகிச்சை செய்து கொண்ட காளீஸ்வரி கூறுகையில், தனியார் மருத்துவ மனைக்கு இணையாக அரசுமருத்துவமனையிலும் அறுவை சிகிச்சை நடத்த முடியும் என்பதை கீழக்கரையில் டாக்டர்கள் நிரூபித்து விட்டனர்.

    இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீட்டுக்கு செல்ல உள்ளேன். ஒரு ரூபாய் கூட எனக்கு செலவில்லாமல் முதல்வர் காப்பீடு திட்டத்தில் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் அறுவை சிகிச்சை நடந்த நிலையில் கீழக்கரையில் உள்ள அரசு மருத்துவமனையில் செயற்கை மாற்று எலும்பு அறுவை சிகிச்சை நடத்தி சாதனை படைத்த டாக்டர்களை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

    • அபிராமம் அருகே 15-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
    • இந்த கல்வெட்டு எழுத்தின் அமைப்பை வைத்து பார்க்கும்போது 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள கீழக்கொடு மலூரில் பழமையான எழுத்து பொறித்த கல்வெட்டு இருப்பதாக அந்த ஊரைச் சேர்ந்த கருப்புராஜா கொடுத்த தகவலின்பேரில், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன், மீனாட்சி சுந்தரம், ஸ்ரீதர் ஆகியோர் அங்கு சென்று கள ஆய்வு செய்தனர். அது விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு என்பது தெரிய வந்தது.

    இது குறித்து கள ஆய்வு செய்தவர்கள் கூறியதாவது:-

    இந்த கல்வெட்டு கீழக்கொடுமலூரில் வடக்கு பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் தேங்காய் உடைக்கும் படிக்கல்லாக இருந்து வந்துள்ளது. இதனால், கல்வெட்டின் மையப்பகுதி முற்றிலுமாக சிதைந்து காணப்படுகிறது.

    இந்த கல்வெட்டில் 9 வரிகள் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலான வரிகள் சிதைந்து விட்டது. அவற்றில் சில வரிகள் மட்டும் தெளிவாக தமிழ் எழுத்துகள் இருந்தன. அதில் அந்தராயம் உபயம், மேற்கு, காடு, உட்பட்ட நிலத்தில் பழந்தே அராய்ச்சியும் வெட்டிபாட்ட என்ற வார்த்தைகள் மட்டும் தெளிவாக தெரிகிறது.

    இவற்றை வைத்து பார்க்கும்போது கல்வெட்டில் ஆரம்பமும் முடிவும் இல்லாத ஒரு துண்டு கல்வெட்டில், ஊரின் பெயரும் திசையின் பெயரும் இடத்தின் பெயரும் இடம்பெற்று இருப்பதால், நிலத்தின் 4 எல்லையைக் குறிக்கும் விதமாகவும், அந்த நிலத்தை இறையிலியாக கொடுத்ததற்கான ஆதாரமாக உபயம் என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கிறது.

    மேலும், கல்வெட்டு இந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு விஜயநகர பேரரசு காலத்தில் நிவந்தம் கொடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த கல்வெட்டு எழுத்தின் அமைப்பை வைத்து பார்க்கும்போது 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பாதாள சாக்கடை இணைப்பில் ஏற்பட்ட உடைப்பை ராமநாதபுரம் நகரசபை தலைவர் ஆய்வு செய்தார்.
    • பழுதடைந்த எந்திரத்தை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விரைவில் சீரமைக்கும்படி ஒப்பந்ததாரரிடம் நகர்மன்ற தலைவர் அறிவுறுத்தினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பல வார்டுகளில் கடந்த சில தினங்களாக பாதாள சாக்கடை இணைப்பில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் தேங்குவதாக பொதுமக்கள் நகர்மன்ற தலைவர் கார்மேகத்திடம் புகார் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்-தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின்படி உடைப்பு ஏற்பட்ட குழாய்கள் அகற்றி போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.

    நகராட்சியின் 7.10 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நகர் மன்ற தலைவர் கார்மேகம், பொறியாளர் சுரேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பழுதடைந்த எந்திரத்தை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விரைவில் சீரமைக்கும்படி ஒப்பந்ததாரரிடம் நகர்மன்ற தலைவர் அறிவுறுத்தினர்.

    • கமுதி அருகே உள்ள கீழவலசை கிராமத்துக்கு முதல் முதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் ராஜகண்ணப்பன் பஸ் வசதி செய்து தர ஏற்பாடு செய்தார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பேரையூர் ஊராட்சி கீழவலசை கிராமத்திக்கு சுதந்திர பெற்ற காலத்தில் இருந்து பஸ் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இது குறித்து கீழவலசை கிராம மக்கள் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ராஜ கண்ணப்பனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று அமைச்சர் ராஜகண்ணப்பன் உடனடியாக அதிகாரியிடம் பேசி கீழவலசை கிராமத்திற்கு பஸ் வசதி செய்து தர ஏற்பாடு செய்தார்.

    அதன்படி கீழவலசை கிராமத்திற்கு முதன்முதலாக அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. இதன் தொடக்க விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், மாவட்ட கவுன்சிலர் பெருநாழி போஸ் சசிகுமார், பேரையூர் ஊராட்சி மன்ற தலைவர் ரூபி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பாண்டி, ஒன்றிய துணை செயலாளர் நேதாஜி சரவணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பசும்பொன் தனிக்கொடி, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை முத்துராமலிங்கம், கமுதி வட்டார காங்கிரஸ் தலைவர் பழக்கடை ஆதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கப்பலில் வேலை வாங்கித் தருவதாக கூறி போலி ஆவணங்களை அனுப்பி வாலிபரிடம் ரூ.5.60 லட்சம் மோசடி நடந்துள்ளது.
    • இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 21). இவர் டிப்ளமோ மெரைன் என்ஜினீயரிங் படித்து விட்டு வேலை தேடி வந்தார்.

    ராமநாதபுரத்தைச் சேர்ந்த இவரது நண்பர் வாஞ்சிநாதன் கப்பலில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக பேஸ்புக்கில் தகவல் வந்துள்ளதாக தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து இளங்கோவன், பேஸ்புக்கில் தெரிவித்த மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அதில் பேசியவர் தனது பெயர் தீபக் மிஸ்ரா என்றும் கப்பலில் என்ஜினீயரிங் வேலைக்கு ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார். மேலும் அது தொடர்பான ஆவணங்களை அனுப்பும்படி கூறியுள்ளார்.

    கடந்த 7-ந் தேதி இளங்கோவனை வேலைக்கு அனுப்புவதாக தெரிவித்து, தூத்துக்குடி வரும்படியும், அதற்கு முன்பு ரூ.2 லட்சத்தை அனுப்பும் படி கூறியதின் பேரில், ஜி-பே மூலம் இளங்கோவன் பணம் அனுப்பி வைத்தார்.

    இது போன்று வாஞ்சி நாதனின் நண்பர்களான பெரம்பலூரைச் சேர்ந்த வெங்கடேஷ், சிதம்பரத்தை சேர்ந்த கிஷோர் ஆகியோரும் தலா ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை பேஸ்புக்கில் கொடுக்கப்பட்ட வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தனர்.கடந்த 8-ந் தேதி காலை தூத்துக்குடி துறைமுகத்திற்கு 3 பேரும் சென்றனர். அங்கிருந்து குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்ட போது, மீண்டும் மீண்டும் பணம் கேட்டதால், மூவரும் சந்தேகம் அடைந்தனர். மேலும் மோசடி நபர் அனுப்பிய ஆவணங்களை தூத்துக்குடி துறைமுக அதிகாரியிடம் காட்டியுள்ளனர். ஆவணங்களை பார்த்த அதிகாரிகள் அனைத்தும் போலியானவை என்று தெரிவித்தனர்.

    அதிர்ச்சியடைந்த இளங்கோவன் இது குறித்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சாயல்குடி அருகே 178 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • கடலாடி வட்டாட்சியர் மரகத மேரி வரவேற்றார்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே எஸ். கீரந்தை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது இம் முகாமிற்கு பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல் தலைமை வகித்தார். கடலாடி வட்டாட்சியர் மரகத மேரி வரவேற்றார்.

    சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கந்தசாமி, எஸ். கீரந்தை ஊராட்சிமன்ற தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 225 மனுக்கள் பெறப்பட்டு 178 பயனாளிகளுக்கு ரூ. 9 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பரமக்குடி சார் ஆட்சியர் வழங்கினார்.

    இம்முகாமில் மாவட்ட வழங்கள் அலுவலர் மரகதநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அன்னம்மாள், வேளாண்மை இணை இயக்குனர் சரஸ்வதி, உதவி இயக்குனர் ஊராட்சிகள் பரமசிவன், பரமக்குடி துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் பிரதாப்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி மாவட்ட திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் விசுபாவதி, தோட்டக்கலை துறை இயக்குனர் நாகராஜன், கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்வேல் முருகன், கடலாடி ஒன்றிய ஆணையாளர் அண்ணாதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, கடலாடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன், துணை வட்டாட்சியர்கள் சாந்தி, தமிழ் மதி கடலாடி வட்ட வழங்கல் அலுவலர் ரங்கராஜ், சாயல்குடி வருவாய் ஆய்வாளர் சேகர் கிராம நிர்வாக அலுவலர்கள் வெள்ளைச்சாமி, மாரி ப்பாண்டியன், நவீன் குமார், அருண்குமார், ஜமால் முகம்மது உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தொண்டியில் செ.மு.ஆண்கள் மேல்நிலைப்பள்ளிய விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு போட்டி நடந்தது.
    • முடிவில் முதுநிலை காசநோய் மேற்பார்வையாளர் ராகுல் நன்றி கூறினார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அரசு மேம்படுத்தப்ப ஆரம்ப சுகாதார நிலையத்தின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் அதில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் தொண்டி செ.மு.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

    வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி தலைமை தாங்கினார். தொண்டி அரசு மருத்துவர் அருண் வரவேற்றார். நேசம் அறக்கட்டளையின் நிறுவனர் கோட்டைச்சாமி முன்னிலை வகித்தார். திருவெற்றியூர், பாண்டுகுடி, எஸ்.பி.பட்டிணம், வெள்ளையபுரம், மங்களக்குடி ஆகிய துணை சுகாதார நிலையங்களிலிருந்து மருத்துவர்கள் கௌதமன், டார்லிங்டன், அல்ஷிபா ஆகிய மருத்துவர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், இளம்பரிதி, சந்தானம் உட்பட சுகாதார ஆய்வாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், என ஏராளமானோர் போட்டியில் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டி முடிவில் முதுநிலை காசநோய் மேற்பார்வையாளர் ராகுல் நன்றி கூறினார்.

    • பலத்த சூறாவளி காற்று காரணமாக ராமேசுவரம், மண்படம் பகுதிகளில் மீன்பிடிப்பதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை.
    • பாம்பன், ராமேசுவரம், மண்டபம் ஆகிய பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 1,500 படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம், மீன்வளம் மற்றும் மீளவர் நலத்துறை, (தெற்கு) உதவி இயக்குநர் ராஜதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையரின் மின்னஞ்சல் செய்தியில், மீனவர்களுக்கான வானிலை எச்சரிக்கையில், மன்னார் வளைகுடா கடற்பகுதியில் காற்றின் வேகமானது மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் முதல் அதிகபட்சமாக 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் நேற்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே புதுமடம் முதல் ரோச்மா நகர் வரை பகுதிகளில் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், மீனவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது மீன்பிடி கலன் மற்றும் மீன்பிடி உபகரணங்களை கரையில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்லவும், விசைப்படகு உரிமையாளர்கள் தங்களது விசைப்படகுகளை இடைவெளி விட்டு, கடல் அலைகளால் பாதிப்பு ஏற்படாத வகையில் கடலில் நங்கூரமிடவும் மீனவர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர்கள், நாட்டுப்படகு, விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் சங்கத்தலைவர்கள், மூக்கையூர் மீன்பிடி துறைமுக மேலாண்மைக் குழு ஆகியோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பலத்த சூறாவளி காற்று காரணமாக ராமேசுவரம், மண்படம் பகுதிகளில் மீன்பிடிப்பதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இதனால் பாம்பன், ராமேசுவரம், மண்டபம் ஆகிய பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 1,500 படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    • வெளிநாட்டு வேலைக்கு அனுப்பியதில் ‘தில்லுமுல்லு’ செய்த தாய்-மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • ராமநாதபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பிரபுக்களுர் கிராமத்தை சேர்ந்தவர் நீதிராஜன் (வயது28) இவர் டிப்ளமோ மெக்கானிக் படித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

    இதையறிந்த முதுகுளத்தூர் தாலுகா கொளுந்துரையை சேர்ந்த செய்யது ருகானி என்பவர் தனது மகன் மகாதீர் முகம்மது கம்போடியா நாட்டில் நல்ல வேலை செய்து வருவதாகவும், வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டாக இருப்பதாகவும் தெரிவி த்துள்ளார். இதை நம்பிய நீதிராஜன் தனது மொபைல் நம்பரை கொடுத்துள்ளார். அடுத்த சில மணி நேரத்தில் மகாதீர் முகம்மது தொடர்பு கொண்டு கம்போடியா நாட்டில் நல்ல சம்பளத்தில் டேட்டா என்ட்ரி வேலை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்துள்ளார். செய்யது ருகானி பாஸ்போர்ட்டை பெற்றுக் கொண்டு, பிசினஸ் விசா மற்றும் டிக்கட் செலவுகளுக்காக பணம் கேட்டதை தொடர்ந்து தாய், மகனிடம் ரூ.2.50 லட்சம் பெற்றுள்ளனர். கடந்த ஜூன் மாதம் கம்போடியா நாட்டிற்கு டூரிஸ்ட் விசாவில் அனுப்பி வைத்து தெரிவித்த வேலையை வாங்கிக் கொடுக்காமல், சீன கம்பெனியில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து, பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துள்ளார். கம்போடியா அரசு மேற்கொண்ட நடவடிக்கையில் சட்ட விரோமாக தங்கியிருந்ததாக கூறி ரூ.2,50 லட்சம் அபராதம் செலுத்தி நாட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.இது குறித்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் அளித்தார். ராமநாதபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×