என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • விடுதியில் தங்கியிருந்த 8 மாணவர்களுக்கு நேற்று இரவு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.
    • மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது குறித்து கீழக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முகமது சதக் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.வெளியூரை சேர்ந்த மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விடுதியில் தங்கியிருந்த 8 மாணவர்களுக்கு நேற்று இரவு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவர்கள் 11 மணியளவில் கீழக்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இரவில் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாமல் மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து கீழக்கரை அரசு ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவர் டாக்டர் ஜவாகீர் உசேன் கூறியதாவது:-

    விடுதி மாணவர்களுக்கு நேற்று இரவு வெளியே உள்ள ஓட்டலில் இருந்து பரோட்டா வாங்கி கொடுத்துள்ளனர். அதனை சாப்பிட்ட 8 மாணவர்கள் வாந்தி எடுத்து மயங்கி உள்ளனர். மாணவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பரோட்டா உணவு பாதுகாப்பு துறை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது குறித்து கீழக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் சுற்றிவளைத்து தாக்கினர்.
    • மீனவர்கள் வைத்திருந்த மீன்பிடி வலைகளை அறுத்து சேதப்படுத்தினர்.

    ராமேஸ்வரம்:

    இந்திய-இலங்கை கடல் எல்லையில் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வது, விரட்டியடிப்பது உள்ளிட்ட சம்பவங்களில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது தமிழக மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இருந்தபோதிலும் தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை தொடர்ந்தபடியே இருக்கிறது.

    இந்த நிலையில் நேற்றும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

    ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மீன்வளத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற்று சுமார் 500 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இந்திய-இலங்கை கடல் எல்லையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் இலங்கை கடற்படையினர் படகில் ரோந்து வந்துள்ளனர். 10 படகுகளில் வந்த அவர்கள் 20-க்கும் மேற்பட்ட ராமேசுவரம் மீனவர்களின் விசைப்படகுகளை சுற்றி வளைத்தனர். எல்லை தாண்டி வந்திருப்பதாக கூறி ராமேசுவரம் மீனவர்களை அவர்கள் சரமாரி தாக்கி உள்ளனர்.

    மேலும் அவர்களது படகில் இருந்த மீன்பிடி வலைகளை வெட்டி சேதப்படுத்தி அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். இதையடுத்து அந்த மீனவர்கள் அனைவரும் கடலில் மீன்பிடிக்க முடியாமல் கரைக்கு திரும்பினர்.

    அவர்கள் இன்று அதிகாலை ராமேஸ்வரம் துறைமுகத்துக்கு வந்தனர். இலங்கை கடற்படையினர் தங்களை தாக்கி, வலைகளை சேதப்படுத்தி விரட்டியடித்தது குறித்து சக மீனவர்களிடம் கூறினர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறியதாவது:-

    கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த எங்களை இலங்கை கடற்படை வீரர்கள் சுற்றிவளைத்து தாக்கினர். மேலும் நாங்கள் வைத்திருந்த மீன்பிடி வலைகளை அறுத்து சேதப்படுத்தினர். இதனால் எங்களுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இலங்கை கடற்படையினரின் இந்த செயலால் நாங்கள் மீன்பிடிக்க வழியின்றி தவிக்கிறோம். எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வன்முறையாளர்களுக்கு கடும் தண்டனை விதக்க வேண்டும்.
    • மாதந்தோறும் மின் கட்டண கணக்கெடுப்பு நடத்தி ஏழை, எளிய மக்களின் சிரமத்தை போக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    தேசிய தவ்ஹீத் கூட்ட மைப்பு சார்பில் ராமநாதபுரம் சந்தை திடலில் மாநிலச் செயலாளர் முஹம்மது பாரூஸ் தலைமையில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் வருகிற ஜனவரி 8-ந்தேதி திருச்சியில் நடைபெற உள்ள நபிகள் நாயகம் (ஸல்) சிறப்பு மாநாடு குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் மாநில பேச்சாளர் சபீர் ரஹ்மான், இம்ரான்கான் ஆகியோர் பேசினர். தேசிய தவ்ஹித் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் நபிகள் நாயகத்தின் சிறப்பு பண்புகளை விவரித்து பேசினார். மாவட்டப் பொருளாளர் முஹம்மது கான் தீர்மானம் வாசித்தார், மாவட்ட பேச்சாளர் அப்துல் சத்தார் நன்றி கூறினார்.

    முன்னதாக தேசிய தவ்ஹித்கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநில அரசுகளின் உரிமையைப் பறித்து, கூட்டாட்சித் தத்துவத்தை நீர்த்துப் போகச் செய்து, மத்திய அரசின் அடக்குமுறைப் போக்கை நிலைநாட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள என். ஐ. ஏ. என்னும் தேசிய புலனாய்வு முகமையை உடனடியாக கலைத்து விட்டு, மாநில அரசுகளின் ஒப்புதலோடு சி.பி.ஐ. மட்டுமே புலனாய்வுக்கு பயன்படுத்த வேண்டும்.

    நீண்டகால சிறைவாசி களை நன்னடத்தையின் அடிப்படையிலும், அரசின் பரிந்துரையின் அடிப்படையிலும் விடுதலை செய்யும்போது, ஒவ்வொரு முறையும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மட்டும் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. மத அடிப்ப டையிலான இந்த பாரபட்சம் ஜனநாயக விதிகளுக்கு முற்றிலும் மாறானது. இத்தகைய அநீதியைக் களையும் வகையில் முஸ்லிம்கள் உள்ளிட்ட நீண்டகால சிறைவாசிகளை விரைவில் விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

    கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பை டி.ஜி.பி. உத்தரவின் பேரில் கோவை காவல்துறையினர் விரைந்து எடுத்த நடவடிக்கையை பாராட்டுகிறோம். மத நல்லிணக்கத்தையும், அமைதியையும் கெடுக்கும் வன்முறை, பயங்கரவாதத்தில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உயர்ந்தபட்ச கடும் தண்டனைக்கு உட்படுத்தபட வேண்டும். அதே சமயம் இந்த வழக்கை புலன் விசாரணை செய்து வரும் என்.ஐ.ஏ. என்னும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகள், இறந்துபோன ஜமேஷா முபினுக்கு பின்புலத்தில் இருந்த உண்மையான சூத்திரதாரியை நாட்டிற்கு அடையாளம் காட்டக் கூடியதாக இருக்க வேண்டும். சம்பந்தமில்லாத அப்பாவிகளை சோதனை என்ற பெயரில் வேட்டை யாடி அவர்களை குற்றவாளி களாக சித்தரிக்கும் போக்கு கூடாது. தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். குறிப்பாக மாதந்தோறும் மின் கட்டண கணக்கெடுப்பு நடத்தி ஏழை, எளிய மக்களின் சிரமத்தை போக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீடுகளில் மழைநீர் தேங்கியதால் கூலி தொழிலாளிகள் அவதி அடைந்துள்ளனர்.
    • வீட்டுக்குள் குடை பிடித்து வசிக்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஆப்பனூர் காலனி பகுதியில் 300க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளிகள் மற்றும் கூலி தொழிலாளிகள் வசித்து வருகின்றனர். அரசு சார்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளில் அவர்கள் வசித்து வருகின்றனர்.

    தற்போது அந்த வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. பழுதான வீடுகளில் மழை நீர் ஒழுகுவதால் குடை பிடித்து வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பா.ஜ.க. மாவட்ட செயலாளர் வெற்றிமாலை கூறுகையில், வீடுகள் சேதம் அடைந்து இருப்பதை பலமுறை கலெக்டரிடம் புகார் அளித்தும் வீடுகளை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இந்தப்பகுதியில் பெய்த மழையால் வீடுகள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. வீட்டுக்குள் குடை பிடித்து வசிக்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அவர்களுக்கான குடியிருப்பு இடம் வழங்க வேண்டும் என்றார்.

    • உப்பூர் அருகே மினி மாரத்தான் போட்டி நடந்தது.
    • ரோட்டரி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், உப்பூர் அருகே ரோட்டரி கிளப்ஆப் கோல்டன் மற்றும் உப்பூர் அமிர்தாஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி இணைந்து போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியை நடத்தியது.

    ரோட்டரி கிளப் தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். கலங்காப்புலி விலக்கு ரோட்டில் இருந்து தொடங்கிய போட்டியை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் அமிர்தாஸ் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 5 கிலோ மீட்டர் தூரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உப்பூர் வெயில் உகந்த விநாயகர் கோவில் வரை சென்று நிறைவடைந்தது. இதில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    இதில் பள்ளியின் திட்ட சேர்மன் ஜான்பிரிட்டோ, பள்ளி தாளாளர் அன்புமலர் பாண்டியன் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய மாடுகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • 16 மாடுகளை அழைத்து செல்வதற்கு மாடுகளின் உரிமையாளர்கள் இதுவரை வரவில்லை.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராம நாதசாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக 4 ரத வீதிகள், அக்னி தீர்த்தக் கடற்கரை ஆகிய பகுதிகளில் அதிகமான மாடுகள் சுற்றி திரிகின்றன.

    பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை பறிக்கும் முயற்சியிலும், பக்தர்கள் மீது மோதும் முயற்சியிலும் மாடுகள் ஈடுபடுகின்றன. இதனையடுத்து மாடுகளை அந்த பகுதியில் விடுவதற்கு அனுமதிக்க கூடாது எனவும், உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

    அதன்பேரில் கலெக்டரின் உத்தரவின் பேரில் ராமேசுவரம் நகராட்சி நிர்வாகம், நகர் மன்ற தலைவர் நாசர் கான் தலைமையில் ஆணையாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கடந்த 9-ந் தேதி முதல் கோவிலை சுற்றி 4 ரத வீதிகளிலும், கடற்கரை பகுதிகளிலும் சுற்றி திரிந்த 22 மாடுகளை பிடித்து கோவிலுக்கு சொந்தமான அக்னி தீர்த்த கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள பிர்லா காட்டேஜ் வளாகத்தில் அடைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாடுகளின் உரிமையாளர்கள் 6 பேர் மட்டும் அபராதம் கட்டி மாடுகளை அழைத்து சென்றனர். மேலும் மாடுகளின் உரிமையாளர்களிடம் மாடுகள் சாலைகளுக்கு வரக்கூடாது என்றும், தனி இடங்களில் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், நகராட்சி அலுவலர்கள் எச்சரித்து அனுப்பினர்.

    இதனை யடுத்து இந்த வளாகத்தில் கடந்த 5 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 16 மாடுகளை அழைத்து செல்வதற்கு மாடுகளின் உரிமையாளர்கள் இதுவரை வரவில்லை.

    இந்த மாடுகளுக்கு அன்றாட உணவுப் பொரு ட்கள், தண்ணீர் கொடுத்து பராமரிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. உடனடியாக 16 மாடுகளையும் அபராதம் செலுத்தி உரிமையாளர்கள் அழைத்துச் செ ல்ல வேண்டும். இல்லையென்றால் நகராட்சி நிர்வாகம் பொது ஏலத்தில் விடும் என்றும் நகராட்சி ஆணையர் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • கடந்த 8-ந் தேதி ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
    • 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் பகுதியில் இருந்து கடந்த 5-ந்தேதி மீன் பிடிக்க சென்ற 16 மீனவர்களை 2 படகுகளோடு இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

    மீனவர்கள், படகுகளை விடுவிக்க கோரியும் ராமேசுவரத்தில் கடந்த 6-ந்தேதி முதல் பெரிய விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் காலைவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கடந்த 8-ந் தேதி ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனை தொடர்ந்து வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.

    எனவே மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர். போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டு வானிலை சீரான நிலையில் 13 நாட்களுக்குப் பின்பு ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் பெரிய விசைப்படகு மீனவர்கள் இன்று காலையில் மீன்பிடி உபகரண பொருட்களை சேகரித்துக்கொண்டு மீன்வளத்துறை அதிகாரியிடம் மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்றுக்கொண்டு கடலுக்கு புறப்பட்டனர்.

    இதனால் இன்று காலை முதலே ராமேசுவரம் துறைமுகம் பரபரப்பானது. 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    இதேபோல் 300-க்கும் மேற்பட்ட சிறிய விசைப்படகுகளில் 1500-க்கு மேற்பட்டோர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

    • பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • ஸ்மார்ட் கார்டில் பெயர் சேர்க்க 15 மனுக்களும், பெயர் நீக்க 12 மனுக்களும், திருத்தங்களுக்காக 9 மனுக்களும் அளிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் தாலுகா தேவிபட்டணம் அருகே நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள ரேசன் கடையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் தனி வட்டாட்சியர் குடிமைப்பொருள் வழங்கல் தமிம் ராசா தலைமையில் நடந்தது. ஊராட்சி தலைவர் காளிமுத்தன் முன்னிலை வகித்தார்.

    இதில் ஸ்மார்ட் கார்டில் பெயர் சேர்க்க 15 மனுக்களும், பெயர் நீக்க 12 மனுக்களும், திருத்தங்களுக்காக 9 மனுக்களும் அளிக்கப்பட்டது. இந்த மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. முதுநிலை வருவாய் அலுவலர் சிவக்குமார், ஆதி ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • கடன் வாங்கியவர்கள் பணத்தை செலுத்திய பிறகும் வீட்டு பத்திரங்களை கொடுக்காமல் கந்து வட்டி கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
    • ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரனை கைது செய்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரிய மாயாகுளத்தை சேர்ந்தவர் கலீல் ரகுமான். இவர் ராமநாதபுரத்தில் மிளகாய் கமிசன் கடை வைத்திருந்த போது வட்டிக்கு பணம் கொடுக்கும் அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    கலீல் ரகுமான் மகளின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டதால் கங்காதரனிடம் சென்று பணம் கேட்டார். 100 ரூபாய்க்கு 1 ரூபாய் வட்டி வீதம் ரூ.4 லட்சம் பெற்று மாதம் தவறாமல் வட்டி செலுத்தி வந்துள்ளார்.

    உறவினர்களுக்கு பணம் தேவைபட்டால் வாங்கி கொடுங்கள் என்று கூறியதால் கலீல் ரகுமான் உறவினர்கள் மற்றும் ஊரில் உள்ள 19 பேருக்கு மொத்தம் ரூ.46 லட்சம் கடனாக பெற்றுகொடுத்தார். அந்த பணத்திற்கு பதிலாக 19 பேரின் வீட்டு பத்திரங்களை வாங்கி கொடுத்தார்.

    பின்னர் கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டதால் பணம் வாங்கிய சிலர் வட்டி செலுத்த முடியாமல் போனதால் ரூ.100-க்கு 3 ரூபாய், 100 ரூபாய்க்கு 10 ரூபாய், 100 ரூபாய்க்கு 13 ரூபாய் வட்டி வீதமும் மற்றும் அபராத தொகையும் சேர்த்து ரூ.1 ½ கோடி கட்டினர்.

    பெரும்பாலானோர் அசல் தொகையை செலுத்தி விட்டதால் அசல் தொகை அனைத்தையும் வட்டி தொகையில் வரவு வைத்து தற்போது ரூ.50 லட்சம் தர வேண்டும் என்று கங்காதரன் மிரட்டியுள்ளார். பணம் பெற்றவர்கள் அசல் தொகை செலுத்தியதால் வீட்டு பத்திரத்தை திருப்பி கேட்டும் கொடுக்கவில்லை.

    ரூ.46 லட்சம் அசல் தொகைக்கு ரூ. 1 ½ கோடி செலுத்தியும் கங்காதரன் பத்திரத்தை கொடுக்காமல் அடியாட்களை வீட்டிற்கு அனுப்பி வைத்து மிரட்டி உள்ளார். இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரையிடம் கலீல் ரகுமான் மனைவி உம்முல் ஹபீபா புகார் செய்தார்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரனை கைது செய்தனர்.

    • முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன், ஆய்வகத்தில் ஊழியர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என விவசாய தொழிலாளர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • 100 நாள் வேலையை முறையாக 100 நாட்களும் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் வழங்க வேண்டும்.

    முதுகுளத்தூர்,

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் விவசாய தொழிலாளர் மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் கலையரசன் தலைமை தாங்கினார்.

    தாலுகா செயலாளர் அங்குதன் தொடங்கி வைத்தார். மாநிலதுணை தலைவர் வசந்தாமணி உள்ளிட்ட 13 பேர் அடங்கிய புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா குழு செயலாளர் முருகன் தீர்மானங்களை முன்மொழிந்தார்.மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    100 நாள் வேலையை முறையாக 100 நாட்களும் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் வழங்க வேண்டும். வைகை ஆற்றில் வரும் தண்ணீர் வீனாக கடலில் கலக்கிறது. இதை முறைப்படுத்தி பரலை ஆறு, கூத்தன் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி, அனைத்து கண்மாய்கள்- ஊரணிகளுக்கு, குடி நீருக்கு, பாசனத்துக்கு, பயன் பெறும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து விவசாயி களுக்கும் தட்டுபாடின்றி யூரியாவும், உரங்களும் வழங்க வேண்டும்.

    முதுகுளத்தூர் புறவழி சாலை வேலையை உடனே தொடங்க வேண்டும். முதுகுளத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில். சி.டி.ஸ்கேன், ஆய்வகத்தில் உள்ள ஊழியர் பற்றாக்கு றையை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பரமக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பி ஓடினார்.
    • மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு காமிரா உதவியுடன் தப்பி ஓடிய கைதி அஜித்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பரமக்குடி,

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த அங்குசாமி மகன் அஜித் குமார் (வயது24).

    இவர் கடந்த 5-ந் தேதி நயினார்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சிறு காயங்களுடன் கைது செய்யப்பட்டார்.

    காயம் காரணமாக பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க ப்பட்டிருந்தார். அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

    நேற்று இரவு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கைதி அஜித்குமார் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு காமிரா உதவியுடன் தப்பி ஓடிய கைதி அஜித்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரமக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அபிராமம் பஸ் நிலையம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள கழிவறை கட்டிடத்தை சீரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர.
    • இரவு நேரங்களில் சமூகவிரோதிகளின் கூடாரமாக இருந்து வருகிறது.

    அபிராமம்,

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பஸ் நிலையம் அருகே 10 ஆண்டுகளுக்கு முன் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டது.

    தொடக்கத்தில் 2 ஆண்டுகள் மட்டுமே இந்த கழிவறையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இங்கு மோட்டார் பழுதடைந்து கிடப்பதால் அதை சரிசெய்து கொடுக்க வேண்டும், கழிவறையை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் இந்த கட்டிடம் சேதமடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் சமூகவிரோதிகளின் கூடாரமாக இருந்து வருகிறது. தேள், பாம்பு போன்ற விஷ ஜந்துக்களின் நடமாட்டங்களும் இங்கு அதிக அளவில் உள்ளன.

    இந்த கழிவறை அருகே பஸ் நிறுத்தம் இருப்பதால் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பயத்துடன் செல்லவேண்டிய நிலை உள்ளது.

    எனவே இந்த கழிவறையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள்- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×