என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கப்பலில் வேலை வாங்கித்தருவதாக  கூறி ரூ.5.60 லட்சம் மோசடி
    X

    கப்பலில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.5.60 லட்சம் மோசடி

    • கப்பலில் வேலை வாங்கித் தருவதாக கூறி போலி ஆவணங்களை அனுப்பி வாலிபரிடம் ரூ.5.60 லட்சம் மோசடி நடந்துள்ளது.
    • இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 21). இவர் டிப்ளமோ மெரைன் என்ஜினீயரிங் படித்து விட்டு வேலை தேடி வந்தார்.

    ராமநாதபுரத்தைச் சேர்ந்த இவரது நண்பர் வாஞ்சிநாதன் கப்பலில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக பேஸ்புக்கில் தகவல் வந்துள்ளதாக தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து இளங்கோவன், பேஸ்புக்கில் தெரிவித்த மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அதில் பேசியவர் தனது பெயர் தீபக் மிஸ்ரா என்றும் கப்பலில் என்ஜினீயரிங் வேலைக்கு ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார். மேலும் அது தொடர்பான ஆவணங்களை அனுப்பும்படி கூறியுள்ளார்.

    கடந்த 7-ந் தேதி இளங்கோவனை வேலைக்கு அனுப்புவதாக தெரிவித்து, தூத்துக்குடி வரும்படியும், அதற்கு முன்பு ரூ.2 லட்சத்தை அனுப்பும் படி கூறியதின் பேரில், ஜி-பே மூலம் இளங்கோவன் பணம் அனுப்பி வைத்தார்.

    இது போன்று வாஞ்சி நாதனின் நண்பர்களான பெரம்பலூரைச் சேர்ந்த வெங்கடேஷ், சிதம்பரத்தை சேர்ந்த கிஷோர் ஆகியோரும் தலா ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை பேஸ்புக்கில் கொடுக்கப்பட்ட வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தனர்.கடந்த 8-ந் தேதி காலை தூத்துக்குடி துறைமுகத்திற்கு 3 பேரும் சென்றனர். அங்கிருந்து குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்ட போது, மீண்டும் மீண்டும் பணம் கேட்டதால், மூவரும் சந்தேகம் அடைந்தனர். மேலும் மோசடி நபர் அனுப்பிய ஆவணங்களை தூத்துக்குடி துறைமுக அதிகாரியிடம் காட்டியுள்ளனர். ஆவணங்களை பார்த்த அதிகாரிகள் அனைத்தும் போலியானவை என்று தெரிவித்தனர்.

    அதிர்ச்சியடைந்த இளங்கோவன் இது குறித்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×