என் மலர்
ராமநாதபுரம்
- கீழக்கரையில் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.
- இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்கு தெருவை சேர்ந்தவர் முகம்மது உசேன். இவரது மகள் லுத்துபியா பேகம் (வயது40). இவருக்கும் கீழக்கரை சொக்கநாதர் தெருைவ சேர்ந்த முகமது அப்துல் காதர் என்பவருக்கும் கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
திருமணத்தின்போது 41 பவுன் நகையும், ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் சீர் பொருட்களும் கொடுத்துள்ளனர். லுத்துபியா பேகம்-முகமது அப்துல் காதர் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் முகமது அப்துல் காதர் மனைவியிடம் அடிக்கடி பணம் வாங்கி வர சொல்லி துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் திருமணத்தின்போது போட்ட நகையையும் வாங்கி விற்றுள்ளார்.
இருந்தபோதிலும் லுத்துபியா பேகத்தின் தந்தை மருமகனுக்கு ஒரு கடை வைத்து கொடுத்து, அதனை நடத்த ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். முகமது அப்துல் காதர் மனைவியிடம் இருந்து பறித்துக்கொண்டு மேலும் பணம் வாங்கி வர சொல்லி அடித்து துன்புறுத்தி உள்ளார்.
கணவரின் சகோதரி களான ஜெசிமா என்ற தங்கராணி, மர்சூக்கா, கதிஜா பீவி ஆகியோர் கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாக சேர்ந்து வந்து லுத்துபியா பேகத்தை அடித்து மிரட்டி அவரது தந்தை கொடுத்த வீட்டை கணவருக்கு எழுதி வைக்கும்படி வற்புறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் லுத்துபியா பேகம் குடும்ப நலம் கருதி பொறுமையாக இருந்துள்ளார். அவருக்கு தந்தை கொடுத்த 11 சென்ட் நிலத்தை வற்புறுத்தி இனாம் செட்டில்மெண்ட் எழுதி வாங்கியுள்ளார். பின்பு அந்த இடத்தை மனைவிக்கு தெரியாமல் தனது சகோதரி ரகுமா பீவி என்பவருக்கு விற்றுள்ளார். இதுபற்றி அறிந்த லுத்துபியா பேகம் தட்டிக்கேட்டதால்அவரை உயிரோடு எரித்து விடுவதாக மிரட்டியுள்ளார்கள்.
இது குறித்து கீழக்கரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் லுத்துபியா பேகம் புகார் செய்தார். அதன்பேரில் கணவர் முகமது அப்துல் காதர், அவரது சகோதரிகள் ஜெஸிமா என்ற தங்கராணி, மர்சூக்கா, கதிஜா பீவி, ரகுமா பீவி மற்றும் சபீனா ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து முகமது அப்துல் காதரை கைது செய்தனர்.
- கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட ரூ.3½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இதுகுறித்து ஏற்கனவே மாலைமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இடப்பற்றாக்குறை காரணமாக மாணவ மாணவிகள் நெருக்கடியில் படித்து வந்தனர்.
இது குறித்து ஏற்க னவே மாலைமலர் நாளி தழில் செய்தி வெளியானது. இந்த நிலையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 24 கூடுதல் வகுப்பறைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் புதிய பள்ளி கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.3 கோடியே 49 லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
இதன்படி தேவிபட்டினம் தொடக்கப்பள்ளியில் 2, பெரியபட்டினம் தொடக்கப்பள்ளி வடக்கு பகுதியில் 2, தெற்கு பகுதியில் 2, மண்டபம் தொடக்கப்பள்ளியில் 2, ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் சித்தூர் வாடி ஊராட்சி வெட்டுகுளம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் 2, திருவாடானை ஒன்றியத்தில் முள்ளி முனையில் 2, நம்புதாளையில் 4, முகில்தகம் 2, முதுகுளத்தூரில் 2, கடலாடி ஒன்றியத்தில் சிக்கல் 2, ஏர்வாடி நடுநிலைப்பள்ளியில் 2 வகுப்பறைகள் என மொத்தம் 24 வகுப்பறைகள் கட்டப்படுகிறது.
இதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- வக்பு நிறுவன பணியாளர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 180 வக்பு நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கு மானிய விலையில் மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர் கள், தர்காக்கள், அடக்க தலங்கள், தைக்காக்கள், முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் மானிய விலையில் 125 சி.சி. என்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனம் வாங்குவதற்கு வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் இதில் எது குறைவோ, அந்த தொகை மானியமாக வழங்கப்படும்.
வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் பணி புரியும் உலமா நலவாரிய உறுப்பி னர்கள் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். 18 வயதில் இருந்து 45 வயதுக்குள் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது இருசக்கர வாகனம் ஓட்டும் கற்றுணர்வுக்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்ய கலெக்டர் தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை உறுப்பினர் செயலர் கூட்டுநராகவும், முன்னோடி வங்கியின் மேலாளரை உறுப்பின ராகவும் மற்றும் மாவட்ட வக்பு வாரிய கண்காணிப் பாளர் உறுப்பினராகவும் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்படும்.
மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற மனுதாரர் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயது சான்றிதழ், வருமானச் சான்றிதழ், புகைப்படம், மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரி டம் பெற்ற சான்று, சாதிச்சான்று, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. குறியீடுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் வைத்திருக்க வேண்டும்.
மேலும் சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பில் பணிபுரிகிறார் என்பதற்கு வக்பு கண்காணிப்பாளரின் சான்று மற்றும் வாகனம் வாங்குவதற்கான விலைப் பட்டியல், விலைப்புள்ளி ஆகியவற்றுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கீழக்கரையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
- பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கி மருந்து, மாத்திரை வழங்கினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளி வளாகத்தில் கீழக்கரை நகர் எஸ்.டி.பி. ஐ. கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக்கல்லூரி மருத்து வமனை இணைந்து இலவச சிறப்பு மருத்துவ முகாமை நடத்தியது.
கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவன தலைவர் உமர் அப்துல் காதர் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி கலந்து கொண்டார். கீழக்கரை நகர் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் சரவணன் தலைமையில் குழந்தைகள் மருத்துவர் கவுதம், காது, தொண்டை, மூக்கு மருத்துவர் ஆரோபிண்டோ, கண் மருத்துவர் வடுலா கிருஷ்ணன், எலும்பு முறிவு மருத்துவர் யுவராஜன், பொது அறுவை சிகிச்சை மருத்துவர் நூருல் ஆயிஷா, பொது மருத்துவர் ப்ளெக்ஸ் நிதின், தோல் மருத்துவர் ஸ்ரீ பார்வதி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கி மருந்து, மாத்திரை வழங்கினர்.
முகாமிற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் அலி, கீழக்கரை நகராட்சி கவுன்சிலர்கள் முகமது பாஷா, சகிலா பேகம், சித்திக், சமூக ஆர்வலர் அஜ்ஹர், ரோட்டரி கிளப் மரம் நடுதல் சேர்மன் சபீக். ம.ஜ.க. நிர்வாகி செய்யது இப்ராகிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு முகாமில் பயனடைந்தனர். அதனைத் தொடர்ந்து இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் எர்ணாகுளம் பஷீர் திருக்குர்ஆன் வழங்கினார்.
- மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
- நிர்வாக அலுவலர் ஜெயசுதா விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி புதுநகரில் உள்ள அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி மற்றும் 74-வது குடியரசு தினவிழா நடந்தது. பள்ளியின் சேர்மன் முகைதீன் முசாபர் அலி தலைமை தாங்கினார்.
மலேசியா தொழில் அதிபர் சீனிவாசன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பேசினார். பள்ளி வளாகத்தில் சீனிவாசன் மற்றும் குடும்பத்தினர் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர். பள்ளி முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் வரவேற்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. துணை முதல்வர்கள் கவிதா, அனில் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பிரிட்டோ நன்றி கூறினார்.
நிர்வாக அலுவலர் ஜெயசுதா விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
- கொத்தமல்லி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
- 10 கிலோ ரூ.1000-க்கு கீழ் மார்க்கெட்டில் விலை போகின்றது.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா அபிராமம் பகுதியில் இந்த ஆண்டு போதிய அளவு பருவமழை பெய்யாததால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.
அபிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான நகரத்தார் குறிச்சி, அச்சங்குளம், விரதக்குளம், நரியன், பள்ள பச்சேரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் விவசாயத்தைவிட பருத்தி, மிளகாய், கொத்த மல்லி உள்ளிட்ட விவசாய சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின் றனர்.
கடந்த அக்டோபர், நவம்பர் மாத இறுதியில் கொத்தமல்லி சாகுபடியை விவசாயிகள் தொடங்கினர். தற்போது இந்த கிராமங்களில் கொத்தமல்லியை அறுவடை செய்து அதை காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, ஒவ்வொரு வருடமும் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கொத்தமல்லி விதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அவை தை மாதம் அறுவடை செய்யப்படும்.
கடந்த ஆண்டு அதிக மழை பெய்ததால் கொத்த மல்லி விளைச்சல் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. அப்போது 10 கிலோ கொத்தமல்லி ரூ.1500 முதல் 2000 வரை விலை போனது.
இந்த ஆண்டு போதிய அளவு பருவ மழை பெய்யாததால் கொத்தமல்லி விளைச்சல் குறைந்து விட்டது. கொத்தமல்லி விலையும் குறைந்து 10 கிலோ ரூ.1000-க்கு கீழ் மார்க்கெட்டில் விலை போகின்றது. இதனால் எங்களது வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
- மங்கள விநாயகர் கோவில் வருடாபிஷேகம் நடந்தது.
- பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் அருகே உள்ள கலெக்டர் வளாகத்தில் 34 ஆண்டுகளாக அருள் பாலித்து வரும் டி பிளாக் மங்கள விநாயகர் கோவிலின் 7-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி மகா கணபதி ஹோமம் நடந்தது.
14 கும்பங்களுக்கு யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டு பின்பு கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. மங்கள விநாயகர், நாகநாதர் மற்றும் நவக்கிரகங்களுக்கு பூரண கும்ப அபிஷேகம் நடந்தது. ராஜ அலங்காரத்தில் மங்கள விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் குருக்கள் கோபால கிருஷ்ணன், ராஜாராம், ரவி மற்றும் விழா கமிட்டியாளர்கள் வருடாபிஷேக ஏற்பாடுகளை செய்தனர்.
- இயற்கை முறையில் பயிரிட்டு அமெரிக்காவுக்கு மிளகாய் ஏற்றுமதி செய்தனர்.
- சம்பாமிளகாயை 5 வருடங்களாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோரைப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இயற்கை விவசாயி ராமர். இவர் செயற்கை உரங்கள் இல்லாமல் இயற்கை முறையிலான உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார்.
ரசாயன உரங்களை பயன் படுத்தாமல் நாட்டு மாட்டுச் சாணங்களை உரமாக பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பதிலாக, வண்ண பூச்சி ஒட்டிகளை பயன்படுத்தி வருகிறார்.மற்ற விவசாயிகளுக்கு முன்னோடியாக திகழ்ந்து வரும் இவர் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது பெற்றுள்ளார்.
இவரது வயலில் விளையும், சம்பாமிளகாயை 5 வருடங்களாக அமெரிக்கா வுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்த வருடம் இயற்கை விவசாயம் மூலம் இவரது தோட்டத்தில் விளைந்த சம்பாமிளகாயை, கொள்முதல் செய்வதற்கு முன்பு அமெரிக்கநாட்டில் இருந்து 2 பேர் வந்தனர்.
அவர்கள் கோரைப் பள்ளம் கிராமத்தில் ராமர் தோட்டத்திற்கு சென்று மிளகாய் செடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அவர்களுக்கு விவசாயி ராமர் தலைமையில் கிராம மக்கள் குலவையிட்டு, மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
இந்த வருடம் 200 டன் சம்பாமிளகாய், இந்த பகுதியில் உள்ள 20 கிராமங்களில் இருந்து, கொள்முதல் செய்ய உள்ளதாக அமெரிக்க நாட்டினர் கூறினர். மேலும் இருவரும் பாக்குவெட்டி கிராமத்தில் உருவாட்டி என்பவரின் மிளகாய் தோட்டத்திலும் ஆய்வு செய்தனர். பின்னர் கமுதி விவசாய கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொள்முதல் செய்யப்படும் மிளகாயை ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, பாதுகாத்து வைக்கப்படும் குடோனை பார்வையிட்டனர்.
இந்த ஆய்வின் போது, கூட்டுறவு விற்பனை சங்க பொது மேலாளர் போஸ், தனியார் நிறுவன அதிகாரி சவுரப், கொள்முதல் மேலாளர் சஞ்ஜய், ஜோசப்ராஜ், கள ஆய்வாளர் வெற்றிச்செல்வன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- கோவிலின் பல இடங்களில் தடுப்பு கம்பிகள் வைத்து பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன.
- உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்யும் வழக்கமான பாதையும் மூடப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்களுக்கு இடையூறாக கோவிலின் பல இடங்களில் தடுப்பு கம்பிகள் வைத்து பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்யும் பாதையும் மூடப்பட்டதால் பக்தர்கள் பல்வேறு சன்னதிகளில் தரிசனம் செய்ய முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இதனிடையே ராமேசுவரம் கோவில் நிர்வாகத்தை கண்டித்தும், பக்தர்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளை அகற்றவும், உள்ளூர் பக்தர்கள் வழக்கமான பாதையில் தரிசனம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தியும் ராமேசுவரத்தில் மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் வருகின்ற 31-ந் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ராமேசுவரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., வருவாய் கோட்டாட்சியர் கோபு, துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்ஜெயன், நகராட்சி சேர்மன் நாசர்கான், துணை சேர்மன் தட்சிணாமூர்த்தி தலைமையில் மக்கள் பாதுகாப்பு பேரவை அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் ராமேசுவரம் கோவிலின் துணை ஆணையர் மாரியப்பன், தாசில்தார்கள் உமா மகேஸ்வரி, அப்துல் ஜபார், கோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நல்லுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆண்டாண்டு காலமாக ராமேசுவரம் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் விஸ்வநாதர் சன்னதி அருகே உள்ள வாசல் வழியாகவே சென்று கட்டணம் செலுத்தாமல் தரிசனம் செய்து வருகிறோம். தற்போது பல்வேறு இடங்களில் தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளதால் தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்யும் வழக்கமான பாதையும் மூடப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதையடுத்து காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., வருவாய் கோட்டாட்சியர் கோபு, துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்ஜெயன் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளை பார்வையிட்டனர்.
பின்னர் வருவாய் கோட்டாட்சியர் கோபு கூறியதாவது, ராமேசுவரம் கோவிலில் உள்ள உள்ளூர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கோவிலின் பிரகாரங்களில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகள் அகற்றப்படும். அது போல் உள்ளூர் பக்தர்கள் வழக்கமான விஸ்வநாதர் சன்னதி அருகே உள்ள பாதை வழியாகவே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
கோவிலில் பக்தர்கள் நெருக்கடி இல்லாமல் தரிசனம் செய்ய வசதியாக கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார். இதனால் வருகின்ற 31-ந் தேதி நடைபெறவிருந்த வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு உள்ளிட்ட அனைத்து போராட்டங்களையும் தற்காலிகமாக கைவிடுவதாக மக்கள் பாதுகாப்பு பேரவையினர் தெரிவித்தனர்.
- முதுகுளத்தூர் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 33-ம் ஆண்டு பரிசளிப்பு விழா நடந்தது.
- முதல் 3 இடங்களில் வென்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 33-ம் ஆண்டு பரிசளிப்பு விழா நடந்தது. நாடார் உறவின்முறை தலைவர் ஏ.எம்.டி. சிவகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி உதவி சேர்மன் வயணப்பெருமாள், ராமமூர்த்தி, கணேசன், அசோகன், செல்வகுமார், பெருமாள் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தாளாளர் அய்யாசாமி வரவேற்றார். 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பேரூராட்சி உதவி சேர்மன் வயணப் பெருமாள் பரிசு வழங்கி பாராட்டினார். விளையாட்டுப் போட்டியில் முதல் 3 இடங்களில் வென்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பரிசளிப்பு விழாவில் தாசில்தார் சிவகுமார், டி.எஸ்.பி. சின்னகண்ணு, பள்ளியின் பொருளாளர் எஸ்.முத்து முருகன், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மேலாளர் காந்தி ராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, முன்னாள் என்.சி.சி. அலுவலர் எஸ். துரைப்பாண்டியன், கல்விக்குழு உறுப்பினர்கள் மணிக்குமார், பாண்டி குமரன், நாகராஜன், மாதவன், ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலாளர் டி.ரவீந்திரன் நன்றி கூறினார்.
- ராமநாதபுரம், கீழக்கரையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
- குடியரசு தின விழா தலைமையாசிரியர் தபசுமுத்து தலைமையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகரசபை அலுவலகத்தில் குடியரசு தினவிழா ஆணையாளர் சுரேந்திரன் தலைமையில் நடந்தது. நகரசபை தலைவர் கார்மேகம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
தொடர்ந்து நகர சபை அலுவலக வளாகத்தில் உள்ள காத்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். துணை தலைவர் பிரவின் தங்கம், கணக்காளர் பத்மநாபன், மேலாளர் நாகநாதன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தினவிழா நடந்தது. யூனியன் தலைவர் பிரபாகரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் துணை தலைவர் ராஜவேணி, ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகபெருமாள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முகமது கொடியேற்றினார். நேர்முக உதவியாளர் பாலமுருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் நடந்த குடியரசு தின விழாவில் கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் ராசிகா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முதல்வர் பெரியசாமி வரவேற்றார். மாணவ- மாணவிகள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் குறித்து எடுத்துரைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் சத்தியேந்திரன் செய்தார்.
கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த 74-வது குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு முதல்வர் சதக்கத்துல்லா தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசினார். குடியரசு தின விழா உறுதிமொழியை நுண்ணு யிரியல் துறை பேராசிரியை ஷோபனா முன்மொழிய, அனைவரும் திரும்பக்கூறி எடுத்துக் கொண்டனர்.
பெரியப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா தலைமையாசிரியர் தபசுமுத்து தலைமையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது. இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் அசன் அலி, முகமது களஞ்சியம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நல்லாசிரியர் முத்துக்குமார் தொகுத்து வழங்கினார்.
- கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்டப்பட்டது.
- மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
கீழக்கரை
கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் சார்பில் நடந்த 74-வது குடியரசு தின விழாவுக்கு பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம் தலைமை தாங்கினார். கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பால முரளி சுந்தரம் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
தொடக்க நிகழ்ச்சியில் 7-ம் வகுப்பு மாணவி முஷ்ரிபா, 6-ம் வகுப்பு மாணவிகள் அகமது அலினா, ஷானா ஹயா கிராஅத் ஒதினர். 5-ம் வகுப்பு மாணவர் முகம்மது பைஜான் வரவேற்றார். பிளஸ்-2 (மெட்ரிக்) மாணவி சித்தி ஹனூனா, 7-ம் வகுப்பு (உயர்நிலைப்பள்ளி) மாணவி எகிதா, 5-ம் வகுப்பு (தொடக்கப்பள்ளி) மாணவி அல்சனா ஆகியோர் குடியரசு தின உரையாற்றினர்.
மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக மாணவர்களின் உடல் வலிமை, மன உறுதியை சோதிக்கும் வகையில் பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் 5 ஓடுகளை அடுக்கி வைத்து அதன் மீது தீப்பற்ற வைத்து ஒரே தடவையில் அடித்து சிதறடித்து் பார்வையாளர்களின் பாராட்டை பெற்றார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மனநல மருத்துவர் பெரியார் லெனின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.சர்வதேச அளவிலான சிறந்த கல்வியாளர் விருது பெற்ற இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் தலைவர் வழக்கறிஞர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிமுக்கு முதல்வர், தலைமை ஆசிரி யர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், மாணவ- மாணவிகள் சார்பில் நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
11-ம் வகுப்பு மாணவி சம்சூன் பசிகா நன்றி கூறினார். தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகிம் ஆலோசனையின் படி இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முஸ்தபா, இஸ்லாமியா துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி, நிர்வாக அலுவலர் மலைச்சாமி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் ஏற்பாடுகளை செய்தனர்.






