என் மலர்
ராமநாதபுரம்
- ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த காற்று வீசி வருகிறது.
- பாம்பன் துறைமுகத்தில் இன்று 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த சூறாவளிக்காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
இதனையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (3-ந் தேதி) வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் (1-ந் தேதி) முதல் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் தங்களின் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளை கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த காற்று வீசி வருகிறது. பாம்பன் மற்றும் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் ராமேசுவரம் தீவுப்பகுதியில் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்தபடி உள்ளது.
இதையடுத்து பாம்பன் துறைமுகத்தில் இன்று 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் 3-வது நாளாக இன்றும் கடலுக்கு செல்லவில்லை. அவர்களது படகுகள் அனைத்தும் கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மீனவர்கள் மட்டுமின்றி கடற்கரையோர கிராம மக்களும் பாதுகாப்பாக இருக்குமாறு மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் கழிவு நீர் கால்வாய் வசதி ஏற்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- இங்குள்ள அனைத்து கிராமங்களிலும் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியத்தில் 429 ஊராட்சிகள் உள்ளது. இங்குள்ள அனைத்து கிராமங்களிலும் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
தமிழகத்தில் நகரங்களை போல் கிராமங்களிலும் குடியிருப்புகள் பெருகி சாலைகளும், வீதிகளும் உருவாகி வருகிறது. முறையான உள்கட்டமைப்பு திட்டமிடல் இல்லாமல் கழிவுநீர் கால்வாய்கள் இன்றி சாலைகள் அமைக்கப் படுகிறது.
பெரும்பாலான கிராமங்களில் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கேற்ப மழை நீர், கழிவு நீர் செல்ல போதிய கால்வாய்கள் கட்டப்படவில்லை. இதனால் வீடுகள் முன்பு கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
மழைக்காலங்களில் கொசுக்கள் உருவாகி டெங்கு உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுகிறது. கால்வாய்கள் அமைக்க அதிக அளவில் நிதி ஒதுக்கீடு தேவை என்பதால் ஊராட்சி நிர்வாகங்கள் தீர்மானங்களை மட்டும் போட்டு வைத்துக் கொண்டு தடுமாறுகின்றன.
எனவே கால்வாய் இல்லாத கிராமங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து முறையான கால்வாய்களை அமைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு கிராம மக்களின் நீண்ட நாள் கனவை நனவாக்க முன் வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கிராம ஊராட்சிகளில் கால்வாய் பணிகள் விரைவில் நடைபெறும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
- ராமநாதபுரம் அருகே எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட விழிப்புணர்வு பேரணி திருப்புலாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தலைமையாசிரியர் சண்முநாதன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் செல்வராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வட்டார மேற்பார்வையாளர் சேதுபதி வரவேற்றார்.
திருப்புல்லாணி கோவில், பஸ் நிறுத்தம், கடைவீதி வழியாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி, இணைவோம் புதிய பாரத திட்டத்தில் என்று கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வட்டாரக் கல்வி அலுவவர்கள் உஷாராணி, ஜெயா ஆகியோர் பேசினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பாண்டியராசு, செந்தில்குமார், ரமேஷ், செல்வகுமார், சந்திரசேகர், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் முருகவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் சித்ராதேவி ஏற்பாடுகளை செய்தார்.
- பராமரிப்பில்லாத சித்தார்கோட்டை சமத்துவபுரம் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்று எதிர்பார்க்கின்றனர்.
- திருவள்ளுவர் சிலைகளையும் பராமரித்து பாதுகாக்க வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பெரியார் பேரவை தலைவர் நாகேசுவரன் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் உள்ள பெரியார் சிலை கூண்டில் அடைக்கப்பட்டு அந்த பகுதி பராமரிக்கப்படாமல் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இந்த சமத்துவபுரத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
தமிழக அரசு இந்த ஆண்டு சமத்துவபுரங்களை பராமரிக்கவும், பாதுகாக்கவும் ரூ.63 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக தகவல் வந்த நிலையில், இந்த நிதியை முறையாக பயன்படுத்தி தமிழகம் முழுவதும் பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் உள்ள பெரியார் சிலைகளையும், திருவள்ளுவர் சிலைகளையும் பராமரித்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 1,000 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளன.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை காரணமாக ராமேசுவரம், பாம்பன் பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் நேற்றும், இன்றும் மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுரையின்பேரில் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 1,000 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளன.
இதனால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்றும், இன்றும் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த புயல் எச்சரிக்கை காரணமாக ஒரு நாளைக்கு ரூ.1 கோடி முதல் ரூ.1.50 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர். இதுபற்றி ராமேசுவரம் மீனவர்கள் கூறுகையில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் வருகிற 3-ந் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.
- சிவகங்கையில் மனிதநேய வார நிறைவு விழா நடந்தது.
- இதில் 66 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மனிதநேய வார நிறைவு விழா நடந்தது. இதில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி 66 பயனாளிகளுக்கு ரூ.51.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
மனிதநேயத்தை எல்லோரும் சரியாக கடை பிடித்தால் சமுதாயத்தில் பாகுபாடு என்ற நிலை முற்றிலும் ஒழியும். அதை ஒவ்வொருவரும் உணர்ந்து மனிதநேயத்தை உறுதிப்படுத்தும் வகையில் தீண்டாமையை அகற்றி நல்லிணக்கத்துடன் வாழவேண்டும்.
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜக்கிய நாடுகளை சேர்ந்த அனைத்து நாடுகளிலும் இலக்கீடுகளை நிர்ணயித்து 2030-க்குள் அதனை செயல்படுத் துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அதனடிப்படையில் மத்திய, மாநில அரசின் சார்பில் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிகழ்ச்சியில் மனித நேயம் குறித்து பள்ளி மாணவ மாணவிகள் தங்களின் பேச்சுத்திறன் வாயிலாக விரிவாகவும், சிறப்பாகவும் எடுத்துரைத்தனர். இதனை கருத்தில் கொண்டு எவ்வித பாகுபாடுமின்றி அனைவரும் சமம் என்ற அடிப்படையில் அனைவரும் மனித நேயத்துடன் செயல்பட்டு, பிறருக்கு உதவும் மனப்பான்மையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மணி வண்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மங்களநாதன், அரசு வழக்கறிஞர் (வன்கொடுமை) துஷாந்த் பிரதீப்குமார், ஆதிதிராவிடர் நலக்குழு, விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு, தூய்மை பணிபுரிவோர்களுக்கான கண்காணிப்புக்குழு ஆகிய குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களான ஆறுமுகம், பூமிநாதன், மலைச்சாமி, செல்வக்குமார், பிச்சை, மற்றும் பொன்னுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 287 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
- பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்த மனுக்களே அதிகளவு வரப்பெற்றன
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் கோரிக்கையில் குறித்த மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் 287 மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் இன்று பெறப்பட்ட மனுக்களில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்த மனுக்களே அதிகளவு வரப்பெற்றன.
இதேபோல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் மனிதநேய வார நிறைவு விழா கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் முன்னிலை வகித்தார். மனிதநேய வார விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், சிறந்த விடுதி காப்பாளர்களுக்கும் நினைவு பரிசு வழங்கினார். தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அருண், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அன்னம்மாள், தனி வட்டாட்சியர் சண்முகசுந்தரம், சிறப்பு பேச்சாளர் அண்ணாதுரை, ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழ்விட- வலசை வரும் நீர்வாழ் பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- 13 இடங்களில் நடந்த கணக்கெடுப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம்
தமிழ்நாடு அரசு வனத்துறையின் மூலம் மாநில அளவிலான ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்து வருகிறது. இதற்காக 13 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர் ஆலோசனையின் படி பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
ஈரம் சார் நிலங்களான சித்திரங்குடி, காஞ்சி ரங்குளம், மனோலி தீவு, அரிச்சல் முனை, பிள்ளைமடம், முனைக்காடு, காரங்காடு, சக்கரக்கோட்டை தேர்த்தங்கால், வாலி நோக்கம், மேல-கீழ செவ்வனூர் பகுதிகளில் மேற்கொண்ட பறவைகள் கணக்கெடுப்பில் சுமார் 7000-க்கும் அதிகமான வாழ்விட மற்றும் வலசை வரும் நீர் வாழ் பறவைகள் கண்டறியப்பட்டன.
அவற்றில் குறிப்பி டத்தக்கவை சைபீரியா, மங்கோலியாவில் இருந்து வலசை வரும் வரித்தலை வாத்து, மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வரும் பூ நாரைகள், வட துருவ பகுதிகளை சார்ந்த எண்ணற்ற உள்ளான் வகை பறவை இனங்கள், கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து வரும் படைக்குருவிகள், அரிய வகை கழுகு இனங்கள் கண்டறியப்பட்டன.
இக்கணக்கெடுப்பு பணியில் உதவி வன பாதுகாவலர்கள் சுரேஷ், சுரேஷ் பிரதாப் மற்றும் வனப்பாதுகாப்பு படை உதவி வனப்பாதுகாவலர் கணேசலிங்கம், மண்டபம் வனச்சரக அலுவலர் மகேந்திரன், கீழக்கரை, ராமநாதபுரம் கூடுதல் பொறுப்பு வனச்சரக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுடன் பறவை ஆர்வலர்களான மதுரை இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில், வேடி டோக் கல்லூரியை சேர்ந்த மாணவிகளும், கமுதி நம்மாழ்வார் வேளாண்மைக் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர்.
- பரமக்குடி அப்துல் கலாம் பள்ளி மாணவர்கள் யோகாசன போட்டியில் வெற்றி பெற்றனர்.
- சேர்மன் முகைதீன் முசாபர் அலி, முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் ஆகியோர் பாராட்டினர்.
பரமக்குடி
பரமக்குடி புதுநகரில் உள்ள அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்னவ்(கடல்) யோகா மையம் மூலம் நடத்தப்பட்ட மண்டல அளவிலான யோகாசனப் போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில் அனைத்து மாணவர்களும் திறமையை வெளிப்படுத்தி 9 பேர் முதல் பரிசும், 30-க்கும் மேற்பட்டோர் 2-ம் பரிசும், 10-க்கும் மேற்பட்டோர் 3-வது பரிசும் பெற்றனர். பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கமலக்கண்ணன், மணிகண்டன் ஆகியோரையும், பரிசு பெற்ற மாணவர்களையும் பள்ளி சேர்மன் முகைதீன் முசாபர் அலி, முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் ஆகியோர் பாராட்டினர்.
- ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், ஏர்வாடி, தொண்டி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பலத்த சூறைகாற்று வீசி வருகிறது.
- ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
ராமேசுவரம்:
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலோர மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக நேற்று முதல் சாரல் மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதையொட்டி பாம்பன் துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், ஏர்வாடி, தொண்டி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பலத்த சூறைகாற்று வீசி வருகிறது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்றதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று கடல் காற்று அதிகமாக வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகு, நாட்டு படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.
அதன்படி இன்று கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை.
கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதையொட்டி ராமேசுவரம், பாம்பன், ஏர்வாடி, தொண்டி, மண்டபம் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு கடலோர பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூ ரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நாட்டுப்படகு மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை.
திடீர் தடையால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடித் தொழிலை சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இன்று காலையும் ராமேசுவரம், ராமநாதபுரம் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசியது. பாம்பனில் கடற்கரையில் உள்ள குடிசை வீடுகளில் கடல் தண்ணீர் புகுந்தது.
சூறாவளி காற்று காரணமாக தனுஷ்கோடியில் வழக்க த்தை விட அதிகமாக கடல் கொந்தளிப்புடன் இருந்தது. அங்கு சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- குமரிக்கடல், தென்தமிழக கடல் பகுதியில் சுழல் காற்று 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ராமேசுவரம்:
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டு உள்ளது.
இதனால் இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் சில இடங்களிலும், நாளை (புதன்கிழமை) தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பாம்பன், கடலூர், நாகை, தூத்துக்குடி துறைமுகங்களில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இது தொலை தூரத்தில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதை குறிப்பதாகும்.
அதே போன்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் மீனவ அமைப்புக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்,
இன்று (செவ்வாய்க்கிழமை) மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென்கிழக்கு கடற்பகுதி, அதனை ஒட்டிய கடற்பகுதிகளில் சுழல் காற்றானது 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்துடனும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகம் வரையும்,
நாளை (புதன்கிழமை), நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென்தமிழக கடல் பகுதியில் சுழல் காற்று 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஆகையால் மீனவர்கள் இன்று முதல் 2-ந் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கமுதி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலியானார்.
- இந்த விபத்து குறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பூதத்தான் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது24). இவர் வலையபூக்குளத்தை சேர்ந்த நண்பர் அருணுடன்(25) மோட்டார் சைக்கிளில் வெளியூர் சென்றார்.
நேற்று மாலை கமுதி நோக்கி வந்து கொண்டிருந்தார். பாம்புல்நாயக்கன்பட்டி அருகே வந்தபோது முன்னே சென்ற ஆட்டோவை முந்த முயன்றனர். எதிர்பாராதவிதமாக ஆட்டோவில் மோதி கீழே விழுந்தனர்.
இதில் முருகேசன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.அவரது உடல் கமுதி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
உடன் சென்ற அருண், ஆட்டோவில் சென்ற கண்ணார்பட்டியை சேர்ந்த சூர்யகலா(42) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இருவரும் கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இந்த விபத்து குறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.






