என் மலர்
ராமநாதபுரம்
- அபிராமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இரவு நேரங்களில் வரும் நோயாளிகள் டாக்டர்கள் இல்லாததால் சிரமப்படுகின்றனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா அபிராமம் அருகே உள்ள நத்தம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு பகல் நேரங்களில் மட்டும் டாக்டர்கள் மருத்துவம் பார்க்க வந்து செல்கின்றனர். இரவு நேரங்களில் வரும் நோயாளிகள் டாக்டர்கள் இல்லாததால் சிரமப் படுகின்றனர்.
அபிராமம் மற்றும் நத்தம், பாப்பனம், விரதக் குளம், அச்சங்குளம் டி.வல்லகுளம் காடனேரி உள்பட்ட 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெறுவதற்காக நத்தம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இங்கு இரவு நேரங்களில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கமுதிக்கோ, 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரமக்குடிக்கோ செல்லும் அவலநிலை உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் அருணாசலம் கூறியதாவது:-
அபிராமத்தை சுற்றி கிராமங்கள் அதிகமாக உள்ளன. நத்தம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. பிரசவம், காய்ச்சல், இரவு நேரங்களில் பூச்சி, பாம்பு, போன்ற விஷ ஜந்துகள் கடிபட்டு அவசரமாக ஆஸ்பத்திரிக்கு செல்லும்போது டாக்டர்கள் இல்லாததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த நோயாளிகளை கமுதிக்கோ, பரமக்குடிக்கோ, மதுரைக்கோ கொண்டு செல்லும்போது உயிர் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் அவசர விபத்து சிகிச்சை அளிப்பதற்கான உபகரணங்கள், பாம்பு கடி போன்ற விஷ ஜந்துகள் கடிக்கு தேவையான மருந்துகள் இங்கு இல்லாததால் உயிரிழப்பு ஏற்படுகிறது.
இதனை தடுத்த நிறுத்து வதுடன் அபிராமம் அருகே உள்ள நத்தம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு நிரந்தரமாக 24 மணி நேரமும் டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.
- தொண்டி அருகே அரசுப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட அடிக்கல் நாட்டினார்.
- இதில் மாணவ, மாணவிகள், ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட அரும்பூர் கிராமத்தில் உள்ள யூனியன் நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா யூனியன் சேர்மன் முகமது முக்தார் தலைமையில் நடந்தது.
கவுன்சிலர் கதிரவன், வட்டாரக் கல்வி அலுவலர் புல்லாணி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து தலைவர் சசிகுமார் வரவேற்றார். இதில் மாணவ, மாணவிகள், ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- தனுஷ்கோடி கடலோர பகுதிக்கு இலங்கை அகதிகள் சிலர் வந்திருப்பதாக மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் தனியாக தவித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை மீட்டு அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடலோர பகுதிக்கு இலங்கை அகதிகள் சிலர் வந்திருப்பதாக மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் தனியாக தவித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை மீட்டு அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில், அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் புங்குடு தீவு பகுதியை சேர்ந்த ஜெயபரமேஸ்வரன், அவரது மனைவி வேலு மாலினி தேவி, அவர்களது மகள் தமிழினி, மகன் மாதவன் என தெரிய வந்தது.
அவர்கள் 4 பேரும் தலா ஒருவருக்கு ரூ.1 லட்சம் வீதம் கொடுத்து தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் அருகே உள்ள ஒத்தப்பட்டி தெற்கு கடற்கரை பகுதிக்கு கள்ளத்தோணி மூலம் வந்ததாக தெரிவித்தனர்.
அவர்கள் 4 பேரையும் போலீசார் மண்டபம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இன்று காலை 4 பேரையும் மண்டபம் முகாமுக்கு அழைத்து சென்று தங்கவைத்தனர்.
அவர்களிடம் மத்திய-மாநில போலீசார் மற்றும் புலனாய்வு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் தமிழ்நாட்டுக்கு வந்ததாக தெரிவித்தனர்.
- தனிப்பிரிவு கடலோர போலீசார் மற்றும் சுங்கத்துறையினர் அங்கு விரைந்து சென்று, கரை ஒதுங்கி கிடந்த படகை பார்வையிட்டனர்.
- படகின் முன்பகுதியில் ஓ.எப்.ஆர்.பி.-ஏ-7069 சி.எச்.டபிள்யூ. என்ற பதிவெண் எழுதப்பட்டுள்ளது.
தனுஷ்கோடி:
ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனையை அடுத்த வடக்கு கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் படகு ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதாக மீனவர்கள் மூலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்பிரிவு கடலோர போலீசார் மற்றும் சுங்கத்துறையினர் அங்கு விரைந்து சென்று, கரை ஒதுங்கி கிடந்த படகை பார்வையிட்டனர்.
அந்த படகில் 9.9 குதிரை திறன் கொண்ட என்ஜின், சுமார் 20 லிட்டர் மண்எண்ணெய், மீன்பிடி வலை, மீன்களுக்கான பெட்டி ஆகியவை இருந்தன.
அந்த படகின் முன்பகுதியில் ஓ.எப்.ஆர்.பி.-ஏ-7069 சி.எச்.டபிள்யூ. என்ற பதிவெண் எழுதப்பட்டுள்ளது. அந்த எண்ணை வைத்து விசாரித்ததில் இந்த படகு இலங்கை யாழ்ப்பாணம் அனலை தீவு பகுதியை சேர்ந்தது என்று தெரியவந்தது. இந்த படகை யாரேனும் திருடி வந்து நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்களா அல்லது கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்றால் நங்கூரம் அறுந்து காற்றின் வேகத்தில் அடித்து வரப்பட்டு தனுஷ்கோடியில் கரை ஒதுங்கியதா? அல்லது கடத்தல்காரர்கள் தங்கக்கட்டிகளை கடத்தி வந்து படகை நிறுத்திவிட்டு தப்பிச்சென்றார்களா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராமநாதபுரம், கீழக்கரை பகுதிகளில் இளைஞர்களிடம் அதிகரித்து வரும் போதை ஊசி பழக்கம்.
- கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வளர்ந்துள்ள காட்டு கருவேல மரங்கள் தான் இந்த போதை ஊசி நபர்களின் சொர்க்க பூமியாக திகழ்கிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நகரங்களில் கடந்த சில மாதங்களாக மது, சிகரெட் போன்றவற்றை தொடர்ந்து இளைஞர்கள் போதை வஸ்துகளை பயன்படுத்தி வரத்தொடங்கி உள்ளனர். ராமநாதபுரம், கீழக்கரை நகரில் ஒதுக்குப்புறமான இடங்களில் காட்டு கருவேல மரங்கள் வளர்ந்துள்ள பகுதிகளில் ஏராளமான போதை ஊசிகள் கிடக்கின்றன.
இந்த ஊசிகள் போதை தரும் மருந்துகள் மற்றும் மாத்திரைகளை ஏற்ற பயன்படுத்தியதாக தெரிய வந்துள்ளது. இன்னும் சிலர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அதில் போதை ஏற்றி வருகின்றனர்.
தற்போது இளைஞர்கள் பலர் போதை மாத்திரை களையும், அது கிடைக்காத இன்னும் சிலர் தூக்க மாத்திரைகளையும் பொடியாக்கி அதனை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் கை நரம்புகளில் ஏற்றி அரை மயக்கத்தில் போதையாக இருந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வளர்ந்துள்ள காட்டு கருவேல மரங்கள் தான் இந்த போதை ஊசி நபர்களின் சொர்க்க பூமியாக திகழ்கிறது.
இந்த மரங்களின் இடையில் நடமாட்டம் தெரியாததால் போதை ஊசி மற்றும் மருந்து களுடன் செல்லும் நபர்கள் அங்கு தங்கள் கை நரம்புகளில் போதை ஊசிகளை ஏற்றிக்கொண்டு அரை மயக்கத்தில் பகல் முழுவதும் கிடக்கின்றனர்.
இதுபோன்ற நபர்களுக்கு மோட்டார் சைக்கிள்களில் வரும் மர்ம நபர்கள் சிலர் போதை மாத்திரைகளையும், ஊசிகளையும் இருக்கும் இடத்திற்கே வந்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. மன அமைதிக்காகவும், தூக்கமின்மைக்காகவும் விற்பனை செய்யப்படும் தூக்க மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி வருவது உடல்நலத்திற்கு தீங்கானது.
இது போன்ற மாத்திரை களை டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது என்ற நிலை உள்ள நிலையில் எவ்வாறு இவற்றை வாங்கி பயன்படுத்துகின்றனர் என்பது மர்மமாக உள்ளது.
கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை விற்பனை செய்வதை விட போதை ஊசி மருந்துகள் மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்வதில் அதிக லாபம் கிடைப்பதால் இதில் பலர் ஈடுபட்டு வருவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
இது குறித்து போலீசார் அதிரடி சோதனை நடத்தி போதை ஊசி மருந்து விற்பனை செய்பவர்களையும், அதனை பயன்படுத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராமேசுவரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 ேகாடி 19 லட்சம் வசூலானது.
- தை அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
ராமேசுவரம்
ராமேசுவரம் ராமநாத சாமி கோவில் தை அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் மற்றும் உபகோவில்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன.
துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
உண்டியல் வருவாயாக ரூ.1 கோடியே 19 லட்சத்து, 82 ஆயிரத்து, 629 ரொக்கம். தங்கம் 17 கிராம், 200 மில்லி மற்றும் 710 கிராம் வெள்ளி யும் கிடைக்க பெற்றது.
உண்டியல் எண்ணும் பணியில் உதவி ஆணையர் ஞானசேகரன், மேலாளர் மாரியப்பன், கோவில் பேஷ்கார்கள் அண்ணா துரை, கமலநாதன் பஞ்ச மூர்த்தி, செல்லம் உள்பட பணியாளர்களும், அலு வலர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
- புத்தக திருவிழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
- ராமநாதபுரத்தில் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருகிற 9-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை புத்தக திருவிழா நடக்கிறது.
இதில் 100 அரங்குகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் ஒரு லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி பட்டறைகள் நாள் தோறும் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் ராஜா பள்ளி மைதானத்தில் நடைபெறும் அரங்கம் அமைக்கும் பணிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆய்வு செய்தார். அப்போது சுகாதார முறையில் உணவகம், குடி நீர், கழிப்பறை, பார்க்கிங் வசதிகள், உள்ளே வெளியே செல்வதற்கு தனி வழிகள் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.
ஆய்வின் போது கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு உதவி செயற் பொறியாளர் குருதி வேல், முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முகமது, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜய குமார், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சுரேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- முத்துப்பேட்டை கவுசானல் கல்லூரியில் கருத்தரங்கம் நடந்தது.
- கருத்தரங்கத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கல்லூரி, இலங்கை ஒப்பீட்டு சமயம், சமூக நல்லுறவு துறை கிழக்குப் பல்கலைக்கழகம், ஷான்லகஸ் நிறுவனம் சார்பில் இலக்கியங்களில் தமிழர் அறிவுருவாக்க முறைகள் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. கவுசானல் கல்லூரி கூட்ட அரங்கில் கல்லூரி செயலர் மரிய சூசை அடைக்கலம் தலைமை தாங்கினார். முதல்வர் ஹேமலதா முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் அலங்கானூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதுநிலை கணினி ஆசிரியர் செந்தில்குமார் சிறப்புரை ஆற்றினார்.
முதுநிலை விரிவுரையாளர் நவரத்தினம் கருத்துரை வழங்கினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி உதவி பேராசிரியர் ராமர் நோக்க உரை ஆற்றினார், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சிவகுரு வாழ்த்துரை வழங்கினார். அறிவு மணி மைய உரையாற்றினார். முன்னதாக கவுசானல் கல்லூரி தமிழ் உயராய்வு மைய தலைவர் ராஜலட்சுமி வரவேற்றார். முடிவில் உதவி பேராசிரியர் ரேவதி நன்றி கூறினார். கருத்தரங்கத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்தது.
- இதனால் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே ஆழ் கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
ராமநாதபுரம்
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் அதனைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்தது.
இதன் காரணமாக ராமநாதபுரம் பகுதியில் இன்று காலை முதல் கடலோர பகுதியில் கருமேகம் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. ராமநாதபுரம், கீழக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பெய்த மழையால் வெயிலின் தாக்கம் முழுமை யாக குறைந்து குளுமையான சூழல் காணப்பட்டது.
இன்று காலை பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வீடுகளில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கீழக்கரையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கின.
போக்குவரத்து மிகுந்த முக்கிய ரோடு, தெருக்கள் சேதமடைந்து குண்டும் குழியுமாகி தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்ற னர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலை யோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வாட்ஸ்-அப்பில் பள்ளி விடுமுறை என தவறான தகவல் பரப்பப்பட்டதால் பெற்றோர்கள் பெரும் குழப்பம் அடைந்தனர். மாவட்ட கலெக்டர் இதுகுறித்து விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் நள்ளிரவு முதல் மழை பெய்ந்து கொண்டு உள்ளது. கடலில் பலத்த காற்று வீசியதாலும், புயல் சின்னம் உருவானதாலும் மீன் துறை மூலம் வழங்கப்படும் டோக்கன் வழங்காததால் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
இதனால் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே ஆழ் கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. மேலும் தொடர் மழை காரணமாக வழக்கமான தொழில் பாதிக்கப்பட்டது. தொண்டி வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் இரவிலிருந்து காலை வரை மழை அளவு 22 மில்லிமீட்டராக பதிவானது.
- மத்திய பட்ஜெட் அறிவிப்புக்கு ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கம் சார்பில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
- ரெயில்வே போக்கு வரத்து மேம்பாட்டுக்கென ரூ. 2.40 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்திய தனி நபர் வருமான வரி வரம்பு 3 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது வரவேற்கத்தக்கது. ரூ. 7 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் வரி செலுத்த தேவை யில்லை என்ற அறி விப்பு பாராட்டத்தக்கது.
நாடெங்கும் 157 நர்சிங் கல்லூரிகள் நிறுவ உத் தேசித்துள்ளதும், விவசாய தொழில் முனை வோரை ஊக்குவிக்க தனி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதும், மீன் வளத்துறையை மேம்படுத்த ரூ.6000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரெயில்வே போக்கு வரத்து மேம்பாட்டுக்கென ரூ. 2.40 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டுள்ளதும், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.79,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதும் பாராட்ட தகுந்த அம்சங்கள். மின்சார வாகனங்களுக்கு பொருத்தப்படும் லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி குறைப்பை வரவேற்கிறோம்.
மிகப்பழைய அரசு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாக னங்க ளுக்கு மாற்றாக புதிய வாகனங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு, உள்நாட்டு விமான போக்குவரத்தை மேம்படுத்த 50 புதிய விமான நிலையங்கள் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது சிறப்பான அம்சம்.
இப்படி பல நல்ல அம்சங்களை கொண்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு மக்கள் பெரிதும் எதிர்பார்த்த சேது கால்வாய் திட்டம் பற்றி ஒரு வரி கூட இல்லாதது தான் ஏமாற்றம் அளிக்கிறது. பொதுவாக இந்த பட்ஜெட் வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராமநாதபுரத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.
- இதனை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் விளை யாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:-
விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அத்தகைய போட்டிகள் நடைபெறும்போது விளை யாட்டு வீரர்கள் அதிக ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் திறமைக்கு ஏற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டியிலும் மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெற்று சிறந்த வீரர்களாக திகழ்ந்திட வேண்டும்.
அந்த வகையில் தற்போது இறகுப்பந்து, மேசைப்பந்து, கையுந்து பந்து, கால்பந்து, கபாடி, ஆக்கி, கூடைப்பந்து, நீச்சல் போட்டி, டென்னிஸ், கிரிக்கெட் ஆகிய போட்டிகள் வருகிற 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இப்போட்டியில் அதிகளவு ஆர்வமுடன் பங்கேற்று பயன் பெற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன் பிறகு 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து ெதாடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- 4-ம்தேதி பிள்ளையார் தெப்ப உற்சவம் நடக்கிறது.
- அர்த்தசாம பூஜை, பள்ளியறை பூஜை நடைபெற்ற கோவில் நடையானது சாத்தப்படுகிறது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச தெப்ப திருவிழா சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டின் தைப்பூச தெப்பத் திருவிழா வருகிற 5-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) லெட்சுமண தீர்த்த தெப்பக்குளத்தில் நடைபெறுகிறது. தெப்ப திருவிழாவை முன்னிட்டு 5-ம் தேதி ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும் நடைபெற்று தொடர்ந்து கால பூஜைகள் நடைபெறும்.
பின்னர் காலை 10 மணிக்கு சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பாடாகி லெட்சுமண தீர்த்தத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வைக்கப்பட்டு தெப்பக்குளத்தில் 11 முறை சுவாமி- அம்பாள் தெப்பத்தை சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் மீண்டும் சுவாமி-அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் அங்கிருந்து புறப்பாடாகி இரவு 10 மணிக்கு கோவிலுக்கு வந்தடைகின்றனர்.
இதைதொடர்ந்து அர்த்தசாம பூஜை, பள்ளியறை பூஜை நடைபெற்ற கோவில் நடையானது சாத்தப்படுகிறது. தெப்ப திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வருகிற 5-ம் தேதி காலை 10 மணியிலிருந்து இரவு வரையிலும் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் தீர்த்தமாடவோ தரிசனம் செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெப்ப திருவிழா ஏற்பாடுகளை கோவிலின் துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். அதுபோல் 4-ம் தேதி சனிக்கிழமை இரவு 7 மணிக்கு பிள்ளையார் தெப்ப உற்சவமும் தீர்த்த தெப்பக்குளத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






