என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • 350 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
    • புதுக்கோட்டை மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் மெர்சி ரம்யாவிடம் பொதுமக்கள் அளித்த மனு மீது நடவடிக்கை

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 350 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்கவிதப்பிரியா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செய்யது முகம்மது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • இந்த சிறுவன் புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • கவிரூபன் தான் வாங்கிய கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டரிடம் வழங்கி பாராட்டுகளைப் பெற்றார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகர் பகுதிக்கு உட்பட்ட சத்திய மூர்த்தி நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்- சத்யா தம்பதியரின் மகன் கவிரூபன் (வயது 6). இந்த சிறுவன் புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண பாலகிருஷ்ணன் அவருடைய மகன் கவி ரூபனை அழைத்துச் சென்றுள்ளார். போட்டியை நேரில் பார்த்த அந்த சிறுவனுக்கு செஸ் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது.

    இதனை அடுத்து கவிரூபனை புதுக்கோட்டையில் உள்ள மாஸ்டர் செஸ் அகடமியில் அவரது பெற்றோர் சேர்த்தனர்.

    பின்னர் கவிரூபன் செஸ் விளையாட கற்றுக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு செஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். மேலும் திருவாரூர், கரூர் ஆகிய இடங்களில் நடந்த மாநில போட்டிகளிலும், திருவாரூரில் தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற செஸ் போட்டியிலும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இதையடுத்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மெர்சி ரம்யாவை மாணவன் கவிரூபன் தன்னுடைய பெற்றோருடன் சந்தித்தார். அப்போது அந்த மழலையிடம் கலெக்டர் பாசத்துடன் உரையாடினார்.

    பின்னர் கவிரூபன் தான் வாங்கிய கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டரிடம் வழங்கி பாராட்டுகளைப் பெற்றார். மேலும் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற இருக்கும் சுதந்திர தின விழாவில் செஸ் போட்டியில் அசத்தி வரும் அந்த சிறுவனுக்கு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்தார்.

    பின்னர் கபிரூபன் மழலைச் சொல்லில் கூறும்போது:-

    செஸ் போட்டியில் மாவட்ட, மாநில அளவில் கலந்து கொண்டு பல்வேறு கோப்பைகள் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளேன். இதில் சர்வதேச புள்ளி வாங்குவதே என்னுடைய லட்சியம் என்றார்.

    • அன்னவாசல் பகுதியில் குரங்கு தொல்லையால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்
    • கூண்டு வைத்து பிடிக்க பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை

    புதுக்கோட்டை,

    அன்னவாசல் பகுதிகளில் உள்ள புதுத்தெரு 1, 2, 3-ம்வீதி, கோல்டன் நகர், இஸ்மாயில் நகர், குறிஞ்சி நகர், உப்புகாரத்தெரு, பள்ளிவாசல் தெரு, பழைய கடைவீதி உள்ளிட்ட குடியிருப்புகளில் சுற்றித்திரியும் குரங்குகளால் பொதுமக்கள், வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக உணவு பொருட்களுடன் செல்லும் சிறுவர்களை குரங்குகள் விரட்டி சென்று உணவு பொருட்களை பிடுங்கி விடுகின்றன. மேலும், வீட்டின் உள்ளே புகுந்து பொருட்களை உடைத்து நாசம் செய்கிறது. காய்கறிகள், துணிகளை எடுத்துக்கொண்டு ஓடி விடுகின்றன. இதனால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அச்சத்துடன் வீடுகளில் முடங்கி உள்ளனர்.  குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, அன்னவாசல் பேரூராட்சி நிர்வாகத்தினர் இப்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆவுடையார்கோவில் அமரடக்கி கிராமத்தில் சந்தனத்தாய் ஆலய தேர்பவனி நடைபெற்றது
    • ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர்

    அறந்தாங்கி, 

    ஆவுடையார்கோவில் தாலுகா அமரடக்கி கிராமத்தில் உள்ள புனித சந்தனத்தாய் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆண்டுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆண்டுதோறும் ஆடி மாதம் 5ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்தாண்டு கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழா தொடங்கியது முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்புகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான சப்பர பவனி நேற்று நடைபெற்றது. தஞ்சை மறை மாவட்ட, பங்கு தந்தை சகாயராஜ் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து மைக்கேல், செபஸ்தியார், சந்தியாகப்பர், பழைய சந்தன மாதா, சந்தன மாதா ஆகிய சொரூபங்கள் தாங்கிய, மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி நடைபெற்றது. கிராமத்தின் முக்கிய வீதிகளில் சப்பரங்கள் வலம் வந்த போது ஏராளமான பொதுமக்கள் வணங்கினர். அதன் பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை பங்கு பணியாளர் ஜோதி நல்லப்பர் உள்ளிட்ட பங்கு இறை மக்கள் செய்திருந்தனர்.

    • தமிழக முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
    • புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் பஞ்சாயத்து கும்முப்பட்டியில் நடைபெற்ற மருத்துவமுகாமில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை, 

    முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம், டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின்நிர்வாக இயக்குநர் டாக்டர்.கே.எச்.சலீம் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், முள்ளுர் பஞ்சாயத்து, கும்முப்பட்டி கிராமத்திலுள்ள சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு கும்முப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் முன்னிலை வகித்தனர். இம்மருத்துவ முகாமில், தொற்றா நோய்களான சர்க்கரை நோய், இருதய நோய், புற்றுநோய், ஆஸ்துமா நோய் மற்றும் பல்வேறு நோய்கள் பற்றிய விழிப்புணர்வும், நோய் கண்டறியும் பரிசோதனையும்செய்யப்பட்டன.தொற்றும் நோய்களால் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை பற்றியும், கொரோனா, டெங்கு, பன்றிக்காய்ச்சல், இன்ஃபுளுயன்சா போன்ற வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளை அணுகி பரிசோதனை செய்துகொண்டு முறையாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும்முகாமில் அறிவுறுத்தப்பட்டது. டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இருக்கை மருத்துவர்அறிவரசு அனைவருக்கும் பரிசோதனையும் ஆலோசனையும் வழங்கினார். முகாமில் இரத்த அழுத்தம், உயரம், எடை, வெப்பத்தின் அளவு, இரத்த சர்க்கரை அளவு போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது.இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப், செவிலியர் கண்காணிப்பாளர் பத்மாவதி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

    • கறம்பக்குடியில் மணல் திருட்டுக்கு பயன்படுத்திய லோடு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
    • இருவர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாணை நடத்தி வருகினறனர்

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் அனுமதி இன்றி மணல் அள்ளுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அக்னி ஆற்றில் இருந்து மணல் அள்ளிக் கொண்டு வந்த லோடு ஆட்டோவை தடுத்து நிறுத்தினர். போலீசார் விசாரணையில் மணல் அள்ளி கொண்டு வந்த லோடு ஆட்டோவிற்கு அனுமதி இல்லை என்று தெரியவந்தது. லோடு ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் கறம்பக்குடி கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சூரியகுமார் மோகன் ரமேஷ் குமார் மன்மத ராஜா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 138-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
    • புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 138-வது பிறந்த நாளை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட  கலெக்டர் மெர்சி ரம்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன்  டாக்டர் வை.முத்துராஜா எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, அரசு மருத்துவக்கல்லூரி டீன் ராஜ்மோகன், கோட்டாட்சியர் முருகேசன், நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத் அலி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். 

    • ஆலையில் வெடி மருந்து தயாரிக்கும் கூடமானது சிறிய கட்டிடத்தில் இயங்கி வந்தது.
    • வெடி விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து வெடி சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே பூங்குடி கிராமத்தில் கோவிலூரை சேர்ந்த வைரமணி (வயது 44) என்பவர் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். கோவில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வாண வேடிக்கைக்கு வெடிகள் மற்றும் நாட்டு வெடிகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

    இந்த ஆலையில் வெடி மருந்து தயாரிக்கும் கூடமானது சிறிய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த கட்டிடத்தில் நேற்று 7 பேர் வெடிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் இந்த கட்டிடத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வெடிகள் வெடித்து சிதறின. இதில் அங்கு பணியாற்றிய 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் தீக்காயத்தில் அலறி துடித்தனர். இதற்கிடையே வெடி விபத்தில் வெடிகள் நாலாபுறமும் வெடித்து சிதறின. இந்த பயங்கர சத்தம் அக்கம் பக்கம் கிராமங்கள் வரை கேட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    தீக்காயமடைந்து கிடந்தவர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்து வரவழைத்தனர். புதுக்கோட்டை, சிப்காட் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.

    வெடி விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து வெடி சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு வெடிகளாக வெடித்தபடி இருந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்த இடத்தின் அருகே செல்ல முடியவில்லை. இதனிடையே வெடி விபத்து நடந்த இடத்தின் அருகே தைல மரக்காடுகள் உள்ளன. இதிலும் தீப்பற்றி எரிந்தது. இதில் ஏற்பட்ட தீயையும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். வெடி விபத்து நடந்த இடத்திலும் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

    இந்த விபத்தில் கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. மேலும் கட்டிடத்தில் இருந்த வெடி பொருட்கள் சிதறின. தீயணைப்பு கருவிகள் தூக்கி வீசப்பட்டு கட்டிடத்தின் வெளிப்பகுதியில் கிடந்தன. தண்ணீர் நிரப்பப்பட்ட டிரம்கள் சிதறி கிடந்தன.

    தீக்காயமடைந்தவர்களுக்கு பட்டாசு ஆலை உரிமையாளர் வைரமணி உள்ளிட்ட 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த வெடி விபத்து தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி விபத்திற்கான காரணம் என்ன? முதலில் தீ எங்கு பிடித்தது, வெடி விபத்து ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • மணல் கடத்திய சரக்கு வேன் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது
    • மணல் கடத்திய 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது

    புதுக்கோட்டை,

    கறம்பக்குடி பகுதியில் உள்ள அக்னி ஆற்றில் சிலர் மணல் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் கறம்பக்குடி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கறம்பக்குடி தட்டாரத்தெரு அருகே சென்ற சரக்கு வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து கறம்பக்குடி கிராம நிர்வாக அதிகாரி ஜாஸ்மின்பானு கொடுத்த புகாரின்பேரில் சூரியகுமார், ரமேஷ்குமார், மன்மத ராஜா, மோகன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மணலுடன் சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கழிவு நீர் தொட்டியில் விழுந்த கன்று மீட்கப்பட்டது
    • தீயணைப்பு வீரர்கள் கயிற்றின் உதவியுடன் மீட்டனர்

    கந்தர்வகோட்டை, 

    கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே ரவி என்பவருக்கு சொந்தமான பசுங்கன்று ஒன்று அருகில் இருந்த செப்டிக் டேங்கில் தவறி விழுந்தது.ரவி கொடுத்த தகவலின் பெயரில் கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலைய காவலர்கள் விரைந்து சென்று பசுங்கன்றை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். மேலும் செப்டிக் தேங்காய் பாதுகாப்பாகமூடி வைக்க அறிவுறுத்தினர்.

    • புதுக்கோட்டை 6வது புத்தகத் திருவிழாவில் 112 அரங்குகளில், 3 லட்சம் புத்தகங்கள்
    • அமைச்சர் மெய்யநாதன் தகவல்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நகர மன்றத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், 6வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் சுற்றுச்சூழல் மற்றும்காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு, பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது, இந்த புத்தக திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 75 பதிப்பகங்களிலிருந்து சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுஅறிவு, அறிவியல், அரசியல், கவிதைகள், வரலாறுகள் உள்ளிட்ட எண்ணற்றத் தலைப்புகளின்கீழ் புத்தகங்கள் கிடைக்கப்பெறுகின்றன. 112 அரங்குகளில் இதற்காக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த புத்தக திருவிழா ஆகஸ்ட் 6ம் தேதி வரை நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்சின்னத்துரை, வருவாய் கோட்டாட்சியர்முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், ஒருங்கிணைப்பாளர்தங்கம்மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்செந்தாமரை பாலு, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • புதுக்கோட்டையில் மாதிரி வாக்கு பதிவு நடைபெற்றது
    • கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் நடத்தினார்

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்கு பதிவு எந்திரம் வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள வாக்கு பதிவு எந்திரங்களை கொண்டு, மாதிரி வாக்கு பதிவு நடத்தி பார்க்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாதிரி வாக்கு பதிவை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நடத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பஞ்குடியினர் நல அலுவலர் ஸ்ரீதர், தேர்தல் தனி வட்டாட்சியர் சோனை கருப்பையா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 

    ×