என் மலர்
புதுக்கோட்டை
- கந்தர்வகோட்டையில் சத்துணவு பேரவை கூட்டம் நடைபெற்றது
- சத்துணவு காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
கந்தர்வகோட்டை,
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் கந்தர்வகோட்டை கிளையின் சார்பில் ஒன்றிய பேரவை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் உலகநாதன் தலைமை தாங்கினார். வேலை அறிக்கையை ஒன்றிய செயலாளர் பாஸ்கர் வாசித்தார். சங்கத்தின் வரவு செலவு அறிக்கையை ஒன்றிய பொருளாளர் செல்வகுமார் வாசித்தார். கூட்டத்தில் சத்துணவு காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும், முழு நேர அளவு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும், தகுதியானவர்களுக்கு பிற துறைகளில் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்டத் தலைவர் அன்பு, மாவட்டச் செயலாளர் சீதாலட்சுமி, மாநில பொருளாளர் மலர்விழி, மனோகரி, கன்னிகா, மாரி கண்ணு, மகேஸ்வரி, விஜயா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- கணேசன் திருவண்ணாகோவில்பட்டியில் கோவில் ஊழியம் உள்ளிட்ட கிடைக்கும் வேலைகளை செய்து சாப்பிட்டு வந்தார்.
- கொலைக்கான காரணம்? கொலையாளிகள் குறித்து உடனடியாக தெரியவில்லை.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள எண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட திருவண்ணாகோவில்பட்டியை சேர்ந்தவர் கணேசன்(வயது 59).
இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த கணேசன், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பின் சொந்த ஊரான திருவண்ணாகோவில்பட்டிக்கு வந்தார்.
பின்னர் அவர் சென்னைக்கு செல்லவில்லை. மனைவி மற்றும் மகன்கள் சென்னையில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கணேசன் திருவண்ணாகோவில்பட்டியில் கோவில் ஊழியம் உள்ளிட்ட கிடைக்கும் வேலைகளை செய்து சாப்பிட்டு வந்தார். இன்று (வியாழக்கிழமை) அதிகாலை தனது வீட்டில் முன் அமர்ந்திருந்தார்.
அப்போது வாகனத்தில் வந்த சில மர்மநபர்கள் கணேசனை கற்கள் மற்றும் கட்டைகளால் கொடூரமாக தாக்கினர். இதில் அவரது முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். காலையில் விவசாய வேலைக்குச் சென்ற கூலி தொழிலாளிகள் இலுப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு கிடந்த கணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொலைக்கான காரணம்? கொலையாளிகள் குறித்து உடனடியாக தெரியவில்லை. சென்னையில் வசிக்கும் அவரது மனைவி மகன்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. கோவில் ஊழியம் செய்து வந்த தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பாராளுமன்ற தேர்தலில் நான் எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை.
- தி.மு.க. 2-வது பைல் மீது கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
புதுக்கோட்டை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் பாத யாத்திரையை ராமேசுவரத்தில் கடந்த 28-ந் தேதி தொடங்கினார். தொடர்ந்து நேற்று 6-வது நாளில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் பாத யாத்திரை மேற்கொண்டார். காரைக்குடியில் இருந்து வந்த அண்ணாமலைக்கு தேசிய நெடுஞ்சாலையில் கடியாப்பட்டி முக்கத்தில் கட்சியினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து காலை 10.30 மணிக்கு யாத்திரையை தொடங்கி திருமயம் பஸ் நிலையம் வரை அவர் நடந்து வந்தார். சாலையின் இருபுறமும் பொதுமக்களை அண்ணாமலை சந்தித்து பேசினார். பெண்கள் முளைப்பாரி எடுத்தும், மலர் தூவியும் வரவேற்றனர். பெருமாள் கோவில் அருகே ஜல்லிக்கட்டு காளைகள், வண்டி மாடுகள் நிறுத்தப்பட்டிருந்ததை அவர் பார்வையிட்டு காளைகளை தடவி கொடுத்தார்.
திருமயம் பஸ் நிலையத்தில் பேசிய பின் லேனா விளக்கில் பழனிசாமி என்பவரது சிற்பங்கள் தயாரிக்கும் கலைக்கூடத்தை அண்ணாமலை பார்வையிட்டார். அவரிடம் தொழில் பற்றி கேட்டறிந்ததோடு, அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்த யாத்திரையை பொறுத்தவரை பெரும் எழுச்சியாக இருக்கிறது. நல்லதொரு மாற்றம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த யாத்திரை பற்றி எதிர்க்கட்சியினர் விமா்சனம் வைப்பதன் மூலம் யாத்திரைக்கான நோக்கம் பூர்த்தி அடைகிறது. பிரதமர் மோடி 9 ஆண்டுகள் செய்ததை இந்த யாத்திரையில் பேசுகிறோம். அதேபோல தி.மு.க. அரசின் தவறுகளை ஆதாரத்தோடு தொடர்ந்து வைத்து கொண்டிருக்கிறோம். பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும் என கேட்கிறோம். அனைத்து இடத்திலும் மக்கள் வரவேற்கின்றனர். நாங்கள் யாருக்கும் போட்டியாளர்கள் கிடையாது.
தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்பாக தலைவர்கள் அரசியல் கட்சியினரை அழைத்து பேசி வருகின்றனர். அ.தி.மு.க. அதிகாரபூர்வமாக கூட்டணியில் உள்ளது. எங்களது பணியை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். ஓ.பன்னீர்செல்வத்தை அழைக்காததால் அவர் விரக்தியில் இல்லை. நாங்கள் யாரையும் ஒதுக்கவில்லை.
கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வர வாய்ப்பு உள்ளது. யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். பிரதமர் மோடியை ஏற்றுக்கொள்ள வேண்டும். கூட்டணியில் கதவுகள் திறந்துள்ளன. பாராளுமன்ற தேர்தலில் நான் எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை. பாதயாத்திரையை முடித்து விட்டு கட்சி வேலை பார்ப்பது தான் எனது வேலை.
தி.மு.க. 2-வது பைல் மீது கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. 3-வது பட்டியலும் வரும். தமிழ்நாட்டில் ஊழலை எதிர்த்து பேசக்கூடிய கட்சி பா.ஜ.க. தான். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களை சுட்டிக்காட்டுகிறோம். மக்கள் மன்றத்தில் வைக்கிறோம். அரசுக்கு சாராத அமலாக்கத்துறை, சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்து வருகிறது. கார்த்தி சிதம்பரம் ஊழல் செய்து அமலாக்கத்துறையிடம் மாட்டிக்கொண்டவர். அவர் அமலாக்கத்துறை வேண்டாம் என்று தான் சொல்வார். கோடநாடு வழக்கில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை விராலிமலையில் நடைபெற்றது
- டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 11 அமைச்சர்கள் பங்கேற்பு
விராலிமலை,
மதுரையில் அ.தி.மு.க. மாநாடு வருகின்ற 20-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாலையீடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டம் அதிமுக முன்னாள் அமைச்சரும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.மேலும் இந்த கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமார், காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன், கேபி.முனுசாமி, ஓ எஸ் மணியன், எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், வளர்மதி மற்றும் 5000க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்கள் மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மட்டும் ஒரு லட்சம் பேர் பங்கேற்க வேண்டும் அதிகப்படியான வாகனங்கள் அனுப்பி வைக்க வேண்டும். இதுவரை நடைபெறாத வகையில் அந்த மாநாட்டை சிறப்பிக்க வேண்டும் என்று எடுத்து கூறினர்.கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்:டிடிவி தினகரனை நம்பி சென்ற 18 எம்எல்ஏக்களும் தற்போது பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.கேபி முனுசாமி பேசுகையில்: முதலமைச்சராக இருக்கும் தன்னை பதவி விலக சொல்வதாக கூறி தான் ஓபிஎஸ் தர்மயுத்தத்தை தொடங்கினார். அந்த தர்மயுத்தத்தில் நானும் இருந்தேன். ஆனால் தற்பொழுது அவர்களுடன் ஒன்று சேர்ந்து போராட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி வெறும் 2000 பேரை வைத்துக் கொண்டு மட்டும்தான் பொதுச் செயலாளர் பதவியை பெற்றுக் கொண்டார் என்று கூறி வருகின்றனர். ஆனால் ஒன்றரை கோடி தொண்டர்களும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரித்து தற்பொழுது பொதுச் செயலாளராகவும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில்:எடப்பாடி பழனிச்சாமி இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் சிறந்த தலைவராக உருவெடுத்து கின்னஸ் சாதனை படைக்கப் போகிறார் என்றார்.
- மாற்று திறனாளி பெண்ணின் விருப்பத்திற்கு இணங்க புத்தகத்திருவிழாவிற்கு ஸ்டெச்சரில் அழைத்து வரப்பட்டார்
- ஏராளமானவர்கள் புத்தகப்பரிசு கொடுத்து உற்சாகப்படுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கொத்தம்பட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம்-வாசுகி தம்பதியினருக்கு சுகுணா (33), சுகந்தி (30) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் மாற்றுத்திறனாளிகள். சுகந்திக்கு திருமணமாகிவிட்டது. முடக்குவாத தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சுகுணா பெற்றோரின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.எட்டாம் வகுப்புவரை படித்துள்ள சுகுணா சிறுவயது முதல் புத்தக வாசிப்பில் மிகுந்த ஆர்வமுடையவராக உள்ளார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவிதைகளை எழுதி வருகிறார். கவிதைக்காக இதுவரை 270 சான்றிதழ்களும், 2 விருதுகளும் பெற்றுள்ளதாகக் கூறுகிறார்.இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சுகுணா புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவிற்கு வரவேண்டும் என்ற ஆசையை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் சுகுணாவை புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவிற்கு ஒருங்கிணைப்பாளர்கள் அழைத்து வந்தனர். அவருக்கு ஏராளமான புத்தகங்களை பலரும் பரிசளித்தனர்.பின்னர் இது குறித்து பேசிய சுகுணா, 10 ஆண்டுகளாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்த என்னை புத்தகத் திருவிழாவில் பங்கேற்க வைத்த அனைவருக்கும் நன்றி. இது என்னை மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. எனக்குப் பிடித்த ஏராளமான புத்தகங்களை பலரும் வாங்கிக்கொடுத்தது எனக்கு மேலும் ஊக்கத்ததை அளித்துள்ளது. தொடர்ந்து வாசிப்பதும், எழுதுவதும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. மிகவும் வறுமையில் வாடும் எனது நிலையைக் கருத்தில்கொண்டு ஏதாவது ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால் பேருதவியாக இருக்கும் என்றார்.சுகுணாவின் தாயார் வாசுகி கூறுகையில், எனது மூத்த மகள் சுகுணாவை இந்த புத்தகத் திருவிழாவில் பங்கேற்க வைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கூலி வேலையும் சிறிதளவு விவசாயம் செய்து வரும் தங்களுக்கு தமிழ்நாடு அரசு உதவிகளை செய்ய முன்வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
- கறம்பக்குடி புதிய வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கியது
- ஒன்றிய தலைவர் மாலா ராஜேந்திர துரை தொடங்கி வைத்தார்
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் தீத்தான் விடுதி குழந்திரான் பட்டு மற்றும் ராங்கியன் விடுதி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட நாட்களாக, பஸ் வசதி கேட்டு கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று போக்குவரத்து துறை அமைச்சர் புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கினார். இதனை தொடர்ந்து கறம்பக்குடி ஒன்றிய தலைவர் மாலா ராஜேந்திர துரை, கறம்பக்குடி பேருந்து நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டைக்கு தீத் தான் விடுதி குழந்திரான் பட்டு மற்றும் ராங்கியன் விடுதி வழியாக, புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர், பட்டுக்கோட்டை டெப்போ பொது மேலாளர் மற்றும் கிளை மேலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த புதிய வழிதடத்தில் கறம்பக்குடியில் இருந்து காலையில் ஒரு முறையும் மாலையில் ஒரு முறையும் பட்டுக்கோட்டைக்கு பஸ் சென்று வரும். இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள், முதியோர்கள் ஆகியோர் கறம்பக்குடி மற்றும் பட்டுக்கோட்டைக்கு சென்று வருவதற்க்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வெற்றி வேந்தன், ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ் ஆவுஸ், தொண்டரணி ரமேஷ் குழந்திரான், பட்டுகலியபெருமாள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இப் புதிய பேருந்தை ஏற்பாடு செய்து கொடுத்த ஒன்றிய தலைவர் மாலா ராஜேந்திர துரைக்கு கிராம பொதுமக்கள் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொண்டனர்.
- ஆலங்குடி நாடியம்மன் கோவிலில் 301 பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை
- கூட்டு பிரார்த்தனை, வழிபாடு நடைபெற்றது
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள நாடியம்மன் கோயில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். கடந்த 15 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. விழாவினையொட்டி நாடியம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவையொட்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 301 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு கூட்டு வழிபாடு செய்தனர்.
- திருமயத்தில் 1.4 டன் ரேஷன் அரிசி லோடு ஆட்டோவில் கடத்தப்பட்டது
- அரிசி கடத்திய பெண் உள்பட இருவர் கைது
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் திருமயம் தாலுகா கொசப்பட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த லோடு ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 28 வெள்ளை நிற சாக்கு மூட்டைகளில் 1400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை கடத்திச் சென்ற வண்டியின் டிரைவர் திருமயம் வாரியப்பட்டியைச் சேர்ந்த தைனிஸ் (65) என்பவரையும் அந்த வாகனத்தில் இருந்த திருமயம் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த மருதமுத்து மனைவி ரஞ்சிதம்(41) என்பவரையும் கைது செய்தனர்.
- கவிரூபனை புதுக்கோட்டையில் உள்ள மாஸ்டர் செஸ் அகட மியில் அவரது பெற்றோர் சேர்த்தனர்.
- கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டரிடம் வழங்கி பாராட்டுகளைப் பெற்றார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகர் பகுதிக்கு உட்பட்ட சத்திய மூர்த்தி நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்- சத்யா தம்பதியரின் மகன் கவிரூபன் (வயது 6). இந்த சிறுவன் புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண பாலகிருஷ்ணன் அவருடைய மகன் கவிரூபனை அழைத்துச் சென்றுள்ளார். போட்டியை நேரில் பார்த்த அந்த சிறுவனுக்கு செஸ் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது.
இதனை அடுத்து கவிரூபனை புதுக்கோட்டையில் உள்ள மாஸ்டர் செஸ் அகட மியில் அவரது பெற்றோர் சேர்த்தனர்.
பின்னர் கவிரூபன் செஸ் விளையாட கற்றுக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு செஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். மேலும் திருவாரூர், கரூர் ஆகிய இடங்களில் நடந்த மாநில போட்டிகளிலும், திருவாரூரில் தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற செஸ் போட்டியிலும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இதையடுத்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மெர்சி ரம்யாவை மாணவன் கவிரூபன் தன்னுடைய பெற்றோருடன் சந்தித்தார். அப்போது அந்த மழலையிடம் கலெக்டர் பாசத்துடன் உரையாடினார்.
பின்னர் கவிரூபன் தான் வாங்கிய கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டரிடம் வழங்கி பாராட்டுகளைப் பெற்றார். மேலும் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி நடை பெற இருக்கும் சுதந்திர தின விழாவில் செஸ் போட்டியில் அசத்தி வரும் அந்த சிறுவனுக்கு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்தார். பின்னர் கபிரூபன் மழலைச் சொல்லில் கூறும்போது:
செஸ் போட்டியில் மாவட்ட, மாநில அளவில் கலந்து கொண்டு பல்வேறு கோப்பைகள் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளேன். இதில் சர்வதேச புள்ளி வாங்குவதே என்னுடைய லட்சியம் என்றார்
- எண்ணெய்ப் பனைத் திட்டத்தின் கீழ் பாமாயில் மரக்கன்றுகள் நடவை நடைபெற்றது
- சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மறமடக்கியில் தோட்டக்கலை- மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம்- எண்ணெய்ப் பனைத் திட்டத்தின் கீழ் பாமாயில் மரக்கன்றுகள் நடவை நடைபெற்றது. இதற்கான தொடக்கவிழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். பின்னர் அவர் மரக்கன்றுகளை நடத்து வைத்து நடவையை தொடங்கி வைத்தார்.
- புதுக்கோட்டையில் அரசு பேருந்து மோதி விவசாயி பலியானார்
- மலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மலையூர் அருகே உள்ள கருப்பட்டி பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 80). விவசாயி. இவர் மலையூருக்கு சென்று தனது வேலைகளை முடித்துக் கொண்டு மீண்டும் தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கணேசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- புதுக்கோட்டையில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது
- அரிவாள், இரும்பு கம்பியுடன் மோதிக்கொண்டனர்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உடையாளிப்பட்டி அருகே நெய்வேலி முனியன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக அதே ஊரை சேர்ந்த முனியய்யா (வயது 30), முத்தையா (62) ஆகியோருக்கு இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது.இந்தநிலையில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.இதையடுத்து, இருதரப்பை சேர்ந்தவர்களும் அரிவாள், இரும்பு கம்பியால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் முனியய்யா, முத்தையா, பேபி (58) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடையாளிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, மோதலில் ஈடுபட்ட நெய்வேலி பகுதியை சேர்ந்த சரவணன் (40), கோவிந்தராசு (34), விஜயகுமார் (60), மதியழகன் (45) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ரவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.






