என் மலர்
புதுக்கோட்டை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 40), பழைய நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் வியாபாரத்திற்கு வந்த அவர், கே.புதுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் பொது மக்களிடம் இருந்து 92 பவுன் பழைய நகைகளை வாங்கினார். மேலும் பழைய நகைகளை விற்பனை செய்ததன் மூலம் ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் பணம் அவருக்கு கிடைத்தது.
வியாபாரம் முடிந்ததும் நேற்றிரவு காரைக்குடிக்கு காரில் புறப்பட்டார். காரை அவரே ஓட்டிச்சென்றார். புதுக்கோட்டை கே.புதுப்பட்டி அருகே பாம்பாற்று பாலம் பகுதியில் செல்லும் போது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் , விக்னேஷின் காரை வழிமறித்தது. அதிர்ச்சியடைந்த அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க முயன்றார்.
அதற்குள் அந்த கும்பல் விக்னேசை சுற்றி வளைத்து பிடித்ததோடு, அவர் வைத்திருந்த நகை-பணத்தை பறிக்க முயன்றனர். அவர் கொடுக்க மறுத்து கூச்சலிடவே, 4 பேரும் சேர்ந்து விக்னேஷின் வாயை துணியால் பொத்தினர்.
மேலும் கை-கால்களை கயிற்றால் கட்டி காருக்குள் போட்டு விட்டு, விக்னேஷ் வைத்திருந்த 92 பவுன் நகை மற்றும் ரூ.1.82 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். கொள்ளை போன நகை- பணத்தின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும்.
இதனிடையே அந்த வழியாக வந்த பொதுமக்கள் நடுரோட்டில் கார் தனியாக நிற்கவே, அதற்குள் யார் இருக்கிறார் என்று பார்த்த போது, விக்னேஷ் கட்டி போடப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை பொதுமக்கள் மீட்டதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து விக்னேஷ் கே. புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் எங்கு தேடியும் மர்மநபர்கள் சிக்கவில்லை. மேலும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வாகன சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டது. ஆனால் வாகன சோதனையில் சந்தேகப்படும்படியான நபர்கள் சிக்கவில்லை.
கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விக்னேஷிற்கு தெரிந்த நபர்களே இந்த கைவரிசையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
நேற்று புதுக்கோட்டைக்கு நகை வியாபாரம் செய்ய வந்ததை நோட்டமிட்ட நபர்கள், அவர் ஊருக்கு புறப்பட்டு செல்வதை அறிந்து, நகையை பறித்து சென்றிருக்கலாம் என தெரிகிறது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கணேஷ் கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு கல்வி உதவித்தொகை பெறவிண்ணப் பிக்கும் மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று வருகிற 15-ந்தேதிக்குள் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு எண் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.
மேலும் செப்டம்பர் 1-ந் தேதியில் தொடங்கும் கல்வி உதவித்தொகைக்கான இணையதளத்தில், புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை செப்டம்படர் 15-ந்தேதிக்கு முன்பும், புதியதிற்கான விண்ணப்பங்களை நவம்பர் 30-ந்தேதிக்கு முன்பும் அந்தந்த கல்வி நிறுவனங்கள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே அரசங்கரை மற்றும் துத்தனேந்தல் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாயத்து மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது குடிநீர் சரிவர வழங்கவில்லை. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் குடிநீர் வண்டிகளில் ஒரு குடம் தண்ணீர் ரூ.20 கொடுத்து வாங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று அரசங்கரையில் உள்ள கிழக்கு கடற்கரைசாலையில் கம்யூனிஸ்டு கட்சி மாநில மீனவர் அணி செயலாளர் ஷாஜகான் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அதிகாரி தமிழ்செல்வன், கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு காமராஜ், மீமிசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற தொகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் தொடக்க விழா கலெக்டர் கணேஷ் தலைமையில் நடை பெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் பங்கேற்று திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
விராலிமலை ஊராட்சி ஒன்றியம், விராலிமலை ஊராட்சி, விராலிமலை முருகன்கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தரைமட்ட நீர்த் தேக்கத்தொட்டி, ஈஸ்வரி நகர் மற்றும் காமராஜர் நகரில் தலா ரூ.1.85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறிய குடிநீர்த்தொட்டிகள், பெரியார் நகரில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி உள்ளிட்ட பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விராலிமலை புதிய பேருந்து நிலையம் அருகில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கம், பழைய பேருந்து நிலையம் அருகில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உணவு தானிய கிடங்கு, நந்த வனத்தில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி, ஆசாரித்தெருவில் ரூ.1.85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறிய குடிநீர்த் தொட்டி, விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி, வாணதிராயன்பட்டி ஊராட்சி, அத்தி பள்ளத்தில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சிமன்ற அலுவலககட்டடம் என பல்வேறு பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விராலிமலை சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து சிறப்பான திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி புதுக்கோட்டை மாவட்டத்தை தமிழகத்தின் முன்மாதிரி மாவட்டமாக மாற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் சந்தோஷ் குமார், இணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) சந்திரசேகரன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) பன்னீர்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், உதவி பொறியாளர் சித்திரவேலு, ஆத்மா குழுத்தலைவர் பழனியாண்டி மற்றும் அரசு அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் ஓடும் வெள்ளாற்றில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருடப்பட்டு, அப்பகுதியில் உள்ள அழியா நிலை, கோங்குடி, அத்தாணி, நற்பவளக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மணல் சேமிக்கப்பட்டு, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மணல் கடத்தல் கும்பலுக்கு மணல் தராத மாட்டுவண்டிக்காரர்கள் குறித்து மணல் கடத்தல் கும்பல் வருவாய்த்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்து சிக்க வைத்து வந்தனர்.
இந்த நிலையில் அறந்தாங்கியை சேர்ந்த லாரி உரிமையாளர் ஒருவர் குறித்தும், அவர் தினசரி பல லாரிகளில் மணல் கடத்துவதாகவும், மணல் கடத்தலை கண்டு கொள்ளாமல் இருக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அறந்தாங்கி பகுதியில் துண்டு பிரசுரம் ஒன்று வெளியாகி பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இந்த துண்டு பிரசுரம் குறித்து தகவல் அறிந்த மேல் அதிகாரிகள், துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அதிகாரிகளை போனில் அழைத்து எச்சரித்ததுடன், சட்டவிரோதமாக அறந்தாங்கி பகுதியில் சேமிக்கப்பட்டுள்ள மணலை கைப்பற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேல் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் பஞ்சவர்ணம் உத்தரவின்பேரில், அறந்தாங்கி தாசில்தார் கருப்பையா தலைமையில், பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் செந்தில் முன்னிலையில் நற்பவளக்குடி, கோங்குடி அத்தாணி உள்ளிட்ட 2 இடங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான யூனிட் மணலை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த மணலை, அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்களுக்கு விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-
அறந்தாங்கியில் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் மக்கள் பிரச்சினைகளில் அக்கறை காட்டுகிறார்களோ இல்லையோ தினசரி இரவு திருட்டு மணல் பிடிக்க கிளம்பி விடுகின்றனர். அவ்வாறு ரோந்து செல்லும் அதிகாரிகள் பெரிய மணல் கடத்தல் கும்பலை கண்டு கொள்ளாமல், மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுபவர்களையும், டிராக்டர் மற்றும் சொந்த தேவைக்காக ஒரு லாரியில் மணல் அள்ளுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து கொண்டு செல்கின்றனர். ஆனால் பெரிய மணல் கடத்தல் கும்பலோடு இணைந்து செயல்பட்டுள்ளனர். அதற்கு ஆதாரமாக துண்டு பிரசுரம் வெளிவந்த பின்பு,சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்ட மணலை பறிமுதல் செய்கின்றனர். இத்தனை நாள் இந்த இடங்களில் மணல் குவித்து வைக்கப்பட்டது இந்த அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். எனவே மணல் கடத்தல் கும்பலோடு தொடர்புடைய அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறையும், சி.பி.சி.ஐ.டியும் விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் அறந்தாங்கி இயற்கை வளத்தை கொள்ளை அடித்தவர்களுக்கு சரியான பாடம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
அறந்தாங்கியில் மணல் கொள்ளை தொடர்பான துண்டு பிரசுரம் வெளியான பின்பு சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த மணல் பறிமுதல் செய்யப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இனிமேலும் மணல் கடத்தலை தடுக்க வெளியூர் அதிகாரிகள் மூலம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகிற 15-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் பால், தயிர், சமையல் எண்ணெய், மருத்துவ உறைகள் தவிர தடிமன் வேறுபாடின்றி இதர மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், தண்ணீர் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், கைப்பைகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் மற்றும் கொடிகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986-ன் கீழ் தடை செய்து அரசு அறிவித்துள்ளது.
இதன் முதல் கட்ட நடவடிக்கையாக ஒரு முறை உபயோகித்து தூக்கி எரிய கூடிய பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் விரிப்பு, பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் டம்ளர், கோப்பை, பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் கொடி, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட் ஆகியவைகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகிற 15-ந் தேதி முதல் உபயோகிக்க தடை செய்யப்பட்டு உள்ளது.
மேலும் மாவட்ட அலுவலர்கள் தங்கள் அலுவலக வளாகத்தை மேற்கூறிய பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்காத வளாகம் என அறிவிக்க வேண்டும். இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்களும், வியாபாரிகளும் மேலே குறிப்பிட்டு உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, துணிப்பை, காகிதப்பை, கண்ணாடி பாட்டில், எவர்சில்வர் பாட்டில் மற்றும் எளிதில் மக்கக்கூடிய பொருட்களால் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #tamilnews
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மூக்குடியை சேர்ந்தவர் சாத்தையா (வயது 35). இவர் அங்கு கோழிப்பண்ணை அமைத்து குஞ்சுகளை வளர்த்து வருகிறார். அவரது பண்ணையில் 20 நாட்கள் வளர்ந்த 5 ஆயிரம் கோழி குஞ்சுகள் இருந்தன.
இந்தநிலையில் திடீரென்று கோழிப்பண்ணை கொட்டகை தீப்பற்றி எரிந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக அறந்தாங்கி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கோழிப்பண்ணையில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இருப்பினும் ரூ.2 லட்சம் மதிப்பிலான 5 ஆயிரம் கோழி குஞ்சுகள் தீயில் எரிந்து பரிதாபமாக இறந்தன. மேலும் பல லட்சம் மதிப்பிலான கொட்டகை மற்றும் உபகரணங்கள் எரிந்து நாசாமாயின. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி பஸ் நிலையத்தில் அறந்தாங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு தொழுவங்காட்டைச் சேர்ந்த பாண்டி (வயது 25) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
உடனே போலீசார் அவரை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த 20 லாட்டரி சீட்டுக்களையும், ரூ.700 ரொக்கப்பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள அம்மாபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. அவரது மகள் மாசிலா (வயது12). 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடவுள் பக்தியும், நம்பிக்கையும் அதிகம் கொண்ட மாசிலா, விரைவில் துறவியாக மாறப்போவதாகவும், சாமியாக போவதாகவும் கூறி வந்தார். இதனை அவரது பெற்றோர் பெரிதாக எடுத்துக்கொள்ளாவிட்டா லும் அவரது நடவடிக்கையை கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் மாசிலாவின் பெற்றோர் அவளது ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் காண்பித்து கேட்டனர். அப்போது அந்த ஜோதிடர், மாசிலா 12-வது பிறந்தநாளில் கற்சிலையாக மாறி விடுவார் என தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று மாசிலாவிற்கு 12-வது பிறந்தநாள் வந்தது. இதனால் வீட்டில் சிறப்பு பூஜை நடத்தி மாசிலாவிற்கு பட்டு சேலை கட்டி பூ அலங்காரம் செய்யப்பட்டது.
மணமேல்குடியில் உள்ள வடக்கூர் அம்மன் கோவில் வளாகத்திற்கு மேளதாளங்கள் முழங்க அழைத்து வரப்பட்டார். இந்த செய்தி மணமேல்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவியது. அங்கு 500-க்கும் மேற்பட்ட பொது மக்கள் குவிந்தனர்.
அலங்காரம் செய்து இருந்த மாசிலாவை பார்த்து பெண்கள் ஓம் சக்தி, பராசக்தி என பக்தி கோஷமிட்டு சுற்றி வந்தனர். ஆனால் மாணவிக்கு அருள் வரவில்லை. அவர் கற்சிலையாகவும் மாறவில்லை. கோவில் பூசாரி அந்த மாணவியையும், அவரது பெற்றோரையும் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார். #Tamilnews






