search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணல் கடத்தல் கும்பலுடன் தொடர்பு: அதிகாரிகளிடம் சி.பி.ஐ. விசாரணை- பொதுமக்கள் வலியுறுத்தல்
    X

    மணல் கடத்தல் கும்பலுடன் தொடர்பு: அதிகாரிகளிடம் சி.பி.ஐ. விசாரணை- பொதுமக்கள் வலியுறுத்தல்

    மணல் கடத்தல் கும்பலோடு தொடர்புடைய அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறையும், சி.பி.சி.ஐ.டியும் விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் ஓடும் வெள்ளாற்றில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருடப்பட்டு, அப்பகுதியில் உள்ள அழியா நிலை, கோங்குடி, அத்தாணி, நற்பவளக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மணல் சேமிக்கப்பட்டு, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மணல் கடத்தல் கும்பலுக்கு மணல் தராத மாட்டுவண்டிக்காரர்கள் குறித்து மணல் கடத்தல் கும்பல் வருவாய்த்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்து சிக்க வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் அறந்தாங்கியை சேர்ந்த லாரி உரிமையாளர் ஒருவர் குறித்தும், அவர் தினசரி பல லாரிகளில் மணல் கடத்துவதாகவும், மணல் கடத்தலை கண்டு கொள்ளாமல் இருக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அறந்தாங்கி பகுதியில் துண்டு பிரசுரம் ஒன்று வெளியாகி பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    மேலும் இந்த துண்டு பிரசுரம் குறித்து தகவல் அறிந்த மேல் அதிகாரிகள், துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அதிகாரிகளை போனில் அழைத்து எச்சரித்ததுடன், சட்டவிரோதமாக அறந்தாங்கி பகுதியில் சேமிக்கப்பட்டுள்ள மணலை கைப்பற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

    மேல் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் பஞ்சவர்ணம் உத்தரவின்பேரில், அறந்தாங்கி தாசில்தார் கருப்பையா தலைமையில், பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் செந்தில் முன்னிலையில் நற்பவளக்குடி, கோங்குடி அத்தாணி உள்ளிட்ட 2 இடங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான யூனிட் மணலை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அந்த மணலை, அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்களுக்கு விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-

    அறந்தாங்கியில் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் மக்கள் பிரச்சினைகளில் அக்கறை காட்டுகிறார்களோ இல்லையோ தினசரி இரவு திருட்டு மணல் பிடிக்க கிளம்பி விடுகின்றனர். அவ்வாறு ரோந்து செல்லும் அதிகாரிகள் பெரிய மணல் கடத்தல் கும்பலை கண்டு கொள்ளாமல், மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுபவர்களையும், டிராக்டர் மற்றும் சொந்த தேவைக்காக ஒரு லாரியில் மணல் அள்ளுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து கொண்டு செல்கின்றனர். ஆனால் பெரிய மணல் கடத்தல் கும்பலோடு இணைந்து செயல்பட்டுள்ளனர். அதற்கு ஆதாரமாக துண்டு பிரசுரம் வெளிவந்த பின்பு,சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்ட மணலை பறிமுதல் செய்கின்றனர். இத்தனை நாள் இந்த இடங்களில் மணல் குவித்து வைக்கப்பட்டது இந்த அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். எனவே மணல் கடத்தல் கும்பலோடு தொடர்புடைய அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறையும், சி.பி.சி.ஐ.டியும் விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் அறந்தாங்கி இயற்கை வளத்தை கொள்ளை அடித்தவர்களுக்கு சரியான பாடம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    அறந்தாங்கியில் மணல் கொள்ளை தொடர்பான துண்டு பிரசுரம் வெளியான பின்பு சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த மணல் பறிமுதல் செய்யப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இனிமேலும் மணல் கடத்தலை தடுக்க வெளியூர் அதிகாரிகள் மூலம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×