என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 100 வயதை கடந்த தம்பதி அடுத்தடுத்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பக்குடி ஏ.டி.காலனியை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 104). இவரது மனைவி பிச்சாயி (100). இவர்களுக்கு 5 மகன்கள், ஒரு மகள். அவர்கள் மூலம் பேரன்கள், கொள்ளு பேரன்கள் என மொத்தம் 23 பேர் உள்ளனர்.

    100 வயதை கடந்து விட்ட நிலையிலும் யாருடைய உதவியும் இன்றி வெற்றிவேலும், பிச்சாயியும் மகன் ஒருவரின் வீட்டில் வாழ்ந்து வந்தனர். வீட்டு வேலைகளை அவர்களே கவனித்து வந்தனர். கடந்த சில மாதங்களாக இருவருக்கும் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் நன்றாக எழுந்து நடமாடி வந்த அவர்கள் படுத்த படுக்கையாகினர். அவர்களை அவரது மகன்களும், மகளும் கவனித்து வந்தனர்.

    நேற்றிரவு வெற்றிவேலுவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயற்சித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் இறந்தார். வெற்றிவேல் இறந்ததும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    கணவர் இறந்ததை அறிந்த பிச்சாயி மிகவும் சோகத்துடன், வெற்றிவேல் உடல் அருகே அமர்ந்து அழுது கொண்டிருந்தார். அவரை அவரது உறவினர்கள் தேற்றினர். இருப்பினும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இரவு முதல் இன்று அதிகாலை வரை சோகத்தில் இருந்த பிச்சாயி திடீரென மயக்கமடைந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை எழுப்ப முயன்ற போது அவரும் மரணமடைந்தது தெரியவந்தது. இது உறவினர்கள் மத்தியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. சாவிலும் இணை பிரியாத தம்பதியை பார்த்து பொதுமக்கள் நெகிழ்ச்சியடைந்தனர். இதனை கேள்விப்பட்ட பலர் அங்கு திரண்டு வந்து இருவரது உடல்களுக்கும் அஞ்சலி செலுத்தினர்.

    இருவருக்கும் இறுதி சடங்குகள் நடத்துவதுடன், இருவரது உடலையும் ஒன்றாக அடக்கம் செய்ய அவர்களது உறவினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், வெற்றிவேலும்- பிச்சாயியும் 100 வயதை கடந்த நிலையிலும் அன்போடு பழகி வந்தனர். வயதான நிலையிலும் கூட யாருடைய உதவியையும் எதிர்பாராமல் சிறிய வேலைகளை அவர்களே செய்து வந்தனர். இருவரும் ஒன்றாக மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.

    கறம்பக்குடியில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு திடீரென திருமணம் நடைபெற்றது.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிலா விடுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 29), கும்பகோணத்தை சேர்ந்த மாதவி (24) ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது.

    விழாவில் கலந்து கொண்ட பிலாவிடுதியை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ராமராஜன் (30), நாகப்பட்டினத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி தேவி (27) ஆகியோர் எதார்த்தமாக சந்தித்து அவர்களது பாசையில் பேசிக்கொண்டனர்.

    இதையறிந்த இரு தரப்பு உறவினர்களும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க கலந்து பேசினர். பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதையடுத்து வாய் பேச முடியாத 2பேருக்கும் உடனடியாக திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இதையடுத்து நேற்று மாலை கறம்பக்குடி முருகன் கோவிலில் 2பேருக்கும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

    திருமணத்திற்கு வந்த உறவினர்கள், பொதுமக்கள் பலர் மணமக்களை வாழ்த்தி திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். ஆனால் இவர்களுக்கு இன்னொருவர் திருமணத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்று கூறிச்சென்றனர்.

    திருமணத்தை நடத்தி வைத்த மாப்பிள்ளையின் உறவினர் சிற்றரசு என்பவர் கூறுகையில், இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்து, மற்றொரு நாளில் திருமணம் நடத்தி வைக்கலாம் என்று இருந்தோம். ஆனால் யாராவது எதையாவது கூறி திருமணம் நடைபெற காலதாமதமாகி விடும் என்று நினைத்து உடனே திருமணத்தை நடத்தி விட்டோம் என்றார்.
    அறந்தாங்கி அருகே மணல் கடத்திய 4 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கியை அடுத்த நாயக்கர் பட்டியில் அறந்தாங்கி டி.எஸ்.பி. கோகிலா, தாசில்தார் சூரிய பிரபு ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணல் ஏற்றி வந்த 4 லாரிகளை நிறுத்தி அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அது ஆலங்குடி அருகே உள்ள வெள்ளக்கொல்லை பகுதியிலிருந்து ஏற்றி வரப்பட்டதும் தெரியவந்தது.

    உடனே அதிகாரிகள் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த 4 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து அறந்தாங்கி போலீசார் மணல் கடத்திய லாரி ஓட்டுனர்கள் முருகானந்தம், பாலமுருகன், ரவிச்சந்திரன், சசிக்குமார் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு கைது செய்தனர்.


    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து 223 விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த பஷீர் ரகுமான் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற அதே ஊரை சேர்ந்த சிவகுமார் (வயது 25), வீரமணி (43), முருகன் (28) ஆகியோர் இந்திய எல்லையான நெடுந்தீவு அருகே 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் 3 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். அவர்களது விசைப்படகை கயிறு மூலம் கட்டி இலங்கைக்கு இழுத்து சென்றனர்.

    கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் ராணுவ முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 3 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் வேளாண்மை துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளாண் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு செய்தார்.

    புதுக்கோட்டை:

    ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் வேளாண்மை துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளாண் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தற்போது, வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்துவரும் சூழ்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் வேளாண் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சாகுபடியில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிக மகசூல் பெறவும், இதன்மூலம் நல்ல லாபம் ஈட்டவும் தமிழக அரசு வேளாண்மைத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன் பெறும் வகையில் வேளாண்மைத்துறையின் சார்பில் அனைத்து வேளாண் திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஆவுடையார்கோவில் வட்டாரம், பெருநாவலூர், வீரமங்களம், எசமங்களம் ஆகிய கிராமங்களில் நடவு செய்யப்பட்டுள்ள நேரடி நெல்விதைப்பு பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் விவசாயிகள் நெல்விதைப்பு செய்வதன் மூலம் செலவு குறைவதுடன், நெற்பயிரின் வாழ்நாளும் குறையும். இதனால் குறைவான காலத்திலேயே நெற்பயிரை அறுவடை செய்யலாம். இதேபோன்று நீர் மற்றும் உரத்தேவையும் குறைவான அளவே தேவைப்படும். நேரடி நெல்விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 600 மானியமாக தமிழக அரசு வழங்கி வருகிறது. இதற்கு இந்த ஆண்டு இலக்காக ரூ.3 கோடி நிர்ணயிக்கப்பட்டு இதுவரை விவசாயிகளுக்கு ரூ.2 கோடியே 96 லட்சம் நேரடி நெல் விதைப்புக்கு மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

    இதுபோன்று விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண்மைத் துறையின்கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் தமிழக அரசின் வேளாண் திட்டங்களை உரிய முறையில் பெற்று உற்பத்தியை பெருக்கி வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கூறினார்.

    அறந்தாங்கி அருகே நள்ளிரவில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் இந்தியன் வங்கிக்கு சொந்தமான ஏ.டி. எம். மையம் உள்ளது.

    அப்பகுதியில் வியாபாரிகள் அதிகம் பேர் உள்ளதால் அந்த மையத்தில் பணம் செலுத்துவதற்கான எந்திரமும் அமைக்கப்பட்டிருந்தது. தினமும் வியாபாரிகள், பொதுமக்கள் இந்த மையத்தில் உள்ள எந்திரங்கள் மூலம் பணம் செலுத்தியும், எடுத்தும் வந்தனர். இதனால் பாதுகாப்புக்காக கடந்த 6 மாதங்க ளுக்கு முன்பு வரை வங்கி நிர்வாகம் பாதுகாவலரை பணியில் அமர்த்தி இருந்தது.

    நிதிநிலை கருதி, வங்கி நிர்வாகம் பாதுகாவலரை பணியில் இருந்து நிறுத்தியது. இதன் காரணமாக அந்த ஏ.டி.எம். மையம் பாதுகாப்பற்ற முறையிலேயே இருந்து வந்தது. சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா மட்டுமே பொருத்தப்பட்டிருந்தது.

    இன்று அதிகாலை அங்கு வந்த மர்ம நபர்கள், ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து அங்குள்ள எந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் எந்திரங்களை உடைக்க முடியாத நிலையில், அதனை உடைக்கும் சத்தம் வெளியே கேட்டுள்ளதுடன், ஆட்கள் நடமாட்டம் இருக்கவே, மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதனிடையே அந்த வழியாக ரோந்து வந்த போலீஸ்காரர்கள், ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்திருப்பதை பார்த்து உடனடியாக மணமேல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிந்திருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் வங்கி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஏ.டி.எம். எந்திரத்தில் பொதுமக்கள் பணம் எடுப்பதற்கு வசதியாக ரூ.15 லட்சம் வரை பணம் வைக்கப்பட்டிருந்தது. அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் பலர், ஏ.டி.எம்.மில் உள்ள பணம் செலுத்தும் எந்திரம் மூலமே பண பரிவர்த்தனையை மேற்கொண்டு வந்தனர்.

    இதன் மூலம் நேற்று அந்த எந்திரத்தில் பொதுமக்கள், வியாபாரிகள் செலுத்திய பல லட்சம் பணம் இருந்தது. கொள்ளையர்களால் எந்திரங்களை உடைக்க முடியாததால் பல லட்சம் பணம் தப்பியது.

    கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி. டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாவலர் இல்லாததே இந்த கொள்ளை முயற்சிக்கு காரணம். எனவே பாதுகாவலர் நியமிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

    கந்தர்வக்கோட்டையில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
    கந்தர்வக்கோட்டை:

    கந்தர்வக்கோட்டை மின்வாரிய உதவிசெயற் பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    பழைய கந்தர்வக்கோட்டை, ஆதனக்கோட்டை,புதுப்பட்டி மற்றும் மங்களாக் கோவில் ஆகிய துணைமின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 8 ந்தேதி வெள்ளிகிழமை நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர்,தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்க நாதப்பட்டி, மாந்தான்குடி, காட்டு நாவல், மட்டையன்பட்டி, மங்களத்துப்பட்டி, கந்தர்வக் கோட்டை, அக்கச்சிப் பட்டி,  கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன்பட்டி, சிவன்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புரான்பட்டி, பல்லவராயன்பட்டி, பழையகந்தர்வக்கோட்டை, பிசானத்தூர், துருசுப்ட்டி, மெய்குடிப்பட்டி, ஆத்தியாடிப்பட்டி, வெள்ளாள விடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9.00 மணி முதல்  மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது. 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கீரனூர் அருகே தகராறில் உறவினரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கீரனூர்:

    கீரனூர் அருகே சீரங்கம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் பாண்டி (வயது 28).அதே பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர் (32). இவர்கள் இருவரும் உறவினர்கள். இருப்பினும் சில பிரச்சினையால் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்துள்னர்.

    இந்த நிலையில் இருவருக்குமிடையே வாய்த்தகறாறு ஏற்பட்டது. பின்னர் அது முற்றிப்போய் ஆத்திரத்தில் சிவசங்கரை பாண்டி மறைத்து வைத்திருந்து தனது அரிவாளால் சராமரியாக வெட்டியுள்ளார். இதில் அவருக்கு தலை, கழுத்து, நெஞ்சு பகுதியல் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இது குறித்து போலீசார் பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மகன் இறந்தால் அதிர்ச்சி அடைந்த தந்தை மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அரையப்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது73). கூலி விவசாயி. இவரது மகன் ராஜாங்கம் (47). ராஜாங்கத்துக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.

    இவர் வாரச்சந்தைகளில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். ராஜாங்கத்துக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். 

    இதையடுத்து அவரது உடல் ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது மகன் இறந்த செய்தியை கேட்ட தந்தை ஆறுமுகம் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மகனும் தந்தையும் இறந்தது கிராமத்தினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அஞ்செட்டி அருகே திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள பாண்டுரங்கன் தொட்டியை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவரது மகள் நதியா (வயது 26). கடந்த ஆண்டு 2-ம் நிலை காவலராக பணியில் சேர்ந்த இவர், திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறார். 3 நாள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த நதியா நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள், அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு நதியாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த அஞ்செட்டி போலீசார் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். 

    அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட மோப்ப நாய் பிரிவில் பணியாற்றி வரும் 2-ம் நிலை காவலரான கண்ணன் (28) என்பவரும், நதியாவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். உறவினர்களான இவர்களது இரு குடும்பத்தினரிடையே கடந்த 40 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கண்ணனும், நதியாவும் இரு குடும்பத்தினருக்கும் தெரியாமல் பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 

    நதியாவை கல்லூரியில் படிக்க வைத்து போலீஸ் வேலையில் சேர கண்ணன்  உதவியதாக தெரியவந்தது. விடுமுறையில் ஊருக்கு திரும்பிய நதியா கிருஷ்ணகிரிக்கு சென்று கண்ணனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். அப்போது அவர் இரு குடும்பத்தினரிடையே உள்ள முன்விரோதம் காரணமாக திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நதியா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக அஞ்செட்டி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அறந்தாங்கி அருகே இடி தாக்கி வீடு இடிந்து மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது.

    அறந்தாங்கி மேல்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் அமராவதி (வயது 58). இவரது பக்கத்து வீட்டில் அவரது சகோதரர் முருகன் வசித்து வந்தார். நேற்றிரவு அமராவதி வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது இடி மின்னல் பலமாக தாக்க, லேசான தூரலுடன் மழை பெய்தது.

    முருகன் வீட்டை இடி தாக்கியதில், வீட்டின் ஒரு பக்க சுற்றுச்சுவர் இடிந்து, அருகில் உள்ள அமராவதி வீட்டின் மேல் விழுந்தது. தூங்கி கொண்டிருந்த அமராவதியின் மீது விழுந்ததில் அவர் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் முடியவில்லை.

    இதையடுத்து நாகுடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அமராவதியை மீட்க முயன்ற போது, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குடி அருகே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு வந்த தொழிலாளி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கீழப்பட்டி ராசியமங்கலத்தை சேர்ந்த மூர்த்தி மகன் தங்கமுத்து (வயது 25). இவர் சிறு வயது முதலே மேலப்பட்டி ராசியமங்கலத்தில் உள்ள தனது பாட்டி அங்கம்மாள் வீட்டில் வசித்து வந்தார். இவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டார். டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. 

    இதனால் மனமுடைந்த தங்கமுத்து ,வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நெற்பயிருக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி  தங்கமுத்து இறந்தார். 

    இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×