என் மலர்
புதுக்கோட்டை
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆலங்குடியில் இருந்து பாச்சிக்கோட்டை, வாழைக்கொல்லை, மழையூர் வழியாக கறம்பக்குடிக்கு காலையிலும், மாலையிலும் கடந்த 2108-ல் அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் வாழைக்கொல்லை, குளவாய்ப்பட்டி, மேட்டுப்பட்டி, மழையூர், விஜயரெகுநாதபட்டி கிராமங்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது.
சில மாதங்களே இயக்கப்பட்ட அந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அந்த கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பலமுறை சந்தித்து மனு கொடுத்தும், பலகட்ட போராட்டங்களை நடத்தியும் பஸ் இயக்கப்படவில்லை.
இந்நிலையில் ஆலங்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தலைமையில் பொதுமக்கள், நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். அதன்படி நேற்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு கட்சியின் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். போராட்டம் தொடங்கி வெகுநேரமாகியும் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட போக்குவரத்து கழக துணை மேலாளர்கள் சங்கர், சேகர், அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் ராஜேந்திரன், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா மற்றும் அதிகாரிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது வருகிற 30-ந் தேதிக்குள் மேற்படி வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை கிளை சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இங்கு கைதிகளிடம் செல்போன், கஞ்சா புழக்கம் இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதையடுத்து அவ்வப்போது போலீசார் சிறையில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று காலை புதுக்கோட்டை டி.எஸ்.பி.குலசேகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் சிறைக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். கைதிகள் அறைகள், கழிப்பறை, உணவு அருந்தும் இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். கைதிகள் சிலரிடமும் விசாரணை நடத்தினர். ஆனால் செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து போலீசார் அங்கிருந்து சென்றனர்.
விராலிமலை:
குழந்தைகள் தினம் நவம்பர் 14-ந்தேதி கொண்டாடப் படுவதையொட்டி தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அன்றைய தினம் பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட இரவு செல்போனை ஒரு மணி நேரம் சுவிட்ச் ஆப் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இது குறித்து பெற்றோருக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான சிறப்பு பெற்றோர் கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள உருவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கிராம கல்விக்குழுத் தலைவர் கருப்பையா முன்னிலை வகித்தார். உருவம்பட்டி பள்ளித்தலைமையா சிரியர் சாந்தி நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக பள்ளிக் கல்வித்துறை மீண்டும் இணைவோம் என்ற குறிக்கோளுடன் குழந்தைகள் தினத்தன்று பெற்றோருக்கான ஹோம் ஒர்க் கொடுத்துள்ளது. இதன்படி அன்றைய தினம் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை 1 மணி நேரம் பெற்றோர் தங்களது செல்போன், தொலைக்காட்சி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை அணைத்து வைத்து விட்டு தங்களது பிள்ளைகளுடன் அரட்டை அடித்துக் கொண்டும், சிரித்து மகிழ்ந்து பாட்டு, நடனம் மற்றும் விளையாடி கழிக்க வேண்டும்.
மாணவர்களும் அந்த நேரத்தை பெற்றோருடன் மகிழ்ச்சியாக செலவழிக்க வேண்டும். இந்நிகழ்வு வாரந் தோறும் நடைபெற வேண்டும். முடிந்தால் தினமும் 30 நிமிடமாவது பெற்றோரும் பிள்ளைகளும் செலவு செய்ய வேண்டும். இதனால் குழந்தைகள் மகிழ்ச்சியுடன், நம்பிக்கையுடன் இருப்பதுடன் பெற்றோர் குழந்தைகள் இடையே வலுவான உறவு உண்டாகும் என்றார்.
நிகழ்ச்சியில் பெற்றோர் மற்றும் மாணவர்கள் தினமும் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரையிலான ஒரு மணி நேரம் செல்போன், தொலைக்காட்சி மற்றும் மின்னணு சாதனங்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டு அந்த நேரத்தை மகிழ்வோடு செலவிடுவோம் என உறுதி மொழியேற்றனர்.
முன்னதாக நேருவின் படத்திற்கு பெற்றோர்கள் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் குழந்தைகள் தின கேக் வெட்டி அதனை மாணவர்களுக்கு ஊட்டி மகிழ்ந்தும், குழந்தைகளோடு நொண்டி அடித்து விளையாண்டும், கதைகள் சொல்லி, பாட்டு பாடியும் மகிழ்ந்தனர். முடிவில் இதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரம் கிராமத்தில் விநியோகிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இடைநிலை ஆசிரியர் முனியசாமி செய்திருந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அருள்குமார் (வயது 13). இவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்தநிலையில் அருள்குமார் அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டு இருந்தான். அப்போது அருள்குமாரின் மூக்கினுள் ஒரு குட்டி மீன் நுழைந்து சிக்கிக்கொண்டது. இதனால் வலி தாங்க முடியாமல் அருள்குமார் துடித்தான். பெற்றோர். அக்கம்பக்கத்தினர் முயற்சி செய்தும் மீனை வெளியே எடுக்க முடியவில்லை.
அதனால் சிறுவன் அருள்குமாரை உடனடியாக அன்னவாசல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர் கதிர்வேல், மருத்துவ பணியாளர்கள் உதவியுடன் சிகிச்சை அளித்து, மாணவனின் மூக்கில் உயிருடன் இருந்த ‘சிலேபி’ வகையை சேர்ந்த குட்டி மீனை வெளியே எடுத்தார். இதன் பின்னர் சிறுவன் அருள்குமார் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 55). இவரது மனைவி வெண்ணிலா. இவர்களது மகன் ஸ்டாலின் (35). இவர்கள் இன்று காலை காரில் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டனர். காரை ஸ்டாலின் ஓட்டினார்.
அறந்தாங்கி அருகே கூத்தன்குடி பகுதியில் செல்லும் போது அந்த வழியாக மணமேல்குடியில் இருந்து அறந்தாங்கி நோக்கி மோட்டார் சைக்கிளில் நடேசன் (35) என்பவர் வந்தார். எதிர்பாராத விதமாக காரும், மோட்டார் சைக்கிளும் மோதின. இதில் நிலைதடுமாறிய கார் தாறுமாறாக ஓடி , சாலையோரமுள்ள மரத்தில் மோதியதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.
காரில் இருந்த ஸ்டாலின், பாக்கியராஜ், வெண்ணிலா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த நடேசனும் காயமடைந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் அறந்தாங்கி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காருக்குள் சிக்கிய 3பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது பாக்கியராஜ் பலத்த காயமடைந்து காருக்குள்ளேயே இறந்து கிடந்தார்.
இதையடுத்து மற்ற 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நடேசனையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிரிழந்த பாக்கியராஜ் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இருப்பினும் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட சிறை அருகில் சிறைத்துறை சார்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகத்தால் பெட்ரோல் பங்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தண்டனை கைதிகளில் நல்லொழுக்கம் பெற்ற 25-க்கும் மேற்பட்ட கைதிகள் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருகின்றனர்
இந்த நிலையில் இன்று அதிகாலை பெட்ரோல் பங்க்குக்கு இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்ப புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர் வந்துள்ளார். அவர் பெட்ரோல் நிரப்பிவிட்டு அவருடைய கைப்பையை அங்கேயே தவறவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
அதனை கண்ட பங்க்கில் பணியாற்றிவரும் சிறைக் கைதிகளான புஷ்பகுமார் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் அதை சோதனை செய்தபோது அதில் ரொக்கப் பணம் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக அவர்கள் அந்தப் பணத்தை பணியில் உள்ள சிறைத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் பையை சோதனை செய்த போது அதில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் பணம் இருந்தது. மேலும் அந்த பையில் ஒரு துண்டுச் சீட்டில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது அவர் தான் அந்த பணத்திற்கு சொந்தக்காரர் என்பது தெரியவந்தது
உடனடியாக அவரை அழைத்து இந்த பணத்தை சிறைத்துறை போலீசார் ஒப்படைத்தனர். இதற்கிடையே பெட்ரோல் பங்கில் பணியாற்றும் சிறைக்கைதிகள் பங்க்கில் தவற விட்ட பணத்தை எடுத்துக் கொடுத்த சம்பவம் புதுக்கோட்டையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. கைதிகள் இருவருக்கும் பாராட்டு குவிந்து வருகிறது.
இதற்கிடையே புதுக்கோட்டை சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி அந்த இரு கைதிகளையும் மற்றும் அந்த நேரத்தில் பணியாற்றிய சிறைத்துறை போலீசாரையும் அழைத்து பாராட்டி வெகுமதி அளித்தார்.






