search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை பணம் பறிப்பு"

    • மசாஜ் ஆசையில் ஐ.டி. ஊழியரான கார்த்தி குமரப்பா தெருவுக்கு சென்றார்.
    • மசாஜ் ஆசையில் அனைத்தையும் பறிகொடுத்த கார்த்தி இதுபற்றி நுங்கம்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் கோபால் நகர் நியூ காலனியில் வசித்து வருபவர் கார்த்தி. 29 வயதான இவர் ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.

    இவரது செல்போன் எண் செயலி ஒன்றில் இருந்துள்ளது. அந்த எண்ணில் மர்ம நபர்கள் கார்த்தியை தொடர்பு கொண்டு பேசினர்.

    அப்போது நுங்கம்பாக்கம் குமரப்பா தெருவில் ஒரு அறையில் மசாஜ் அழகிகள் இருக்கிறார்கள். நீங்கள் அங்கு வந்தால் அழகிகள் உங்களுக்கு மசாஜ் செய்வார்கள் என்று கூறியுள்ளனர்.

    இதனால் மசாஜ் ஆசையில் ஐ.டி. ஊழியரான கார்த்தி குமரப்பா தெருவுக்கு சென்றார். அப்போது 2 பேர் அங்கு வந்து கார்த்தியை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றனர்.

    அழகிகள் மசாஜ் செய்யப்போகிறார்கள் என்கிற குதூகலத்தோடு அறைக்குள் நுழைந்த கார்த்திக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அறையில் எந்த பெண்களும் இல்லை. இதுபற்றி அவர் கேட்பதற்குள், மசாஜ் ஆசை காட்டி அழைத்துச் சென்ற இருவரும் கார்த்தியை கீழே தள்ளி அங்கிருந்த தலையணையை கிழித்து கயிறாக்கி கை-கால்களை கட்டி போட்டனர்.

    பின்னர் கார்த்தி அணிந்திருந்த தங்க செயின், மோதிரம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். 1½ பவுன் செயின், ½ பவுன் மோதிரம் ஆகியவற்றை திருடிக்கொண்டு வங்கி அட்டைகளையும் பறித்துச் சென்றனர். 3 வங்கி கார்டுகளில் இருந்து ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் பணம் மற்றும் மணிபர்சில் இருந்து ரூ.4 ஆயிரம் பணம் ஆகியவற்றை அபேஸ் செய்து 2 பேரும் தப்பினர்.

    இப்படி மசாஜ் ஆசையில் அனைத்தையும் பறிகொடுத்த கார்த்தி இதுபற்றி நுங்கம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கல்லூரி மாணவர் ஒருவர் தனது தந்தையுடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இது தொடர்பாக இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசாருக்கு ராக்கி மீது சந்தேகம் ஏற்படவே அவரை பிடித்து விசாரித்தனர்.
    • கார்த்திகேயன் செல்போன் செயலி மூலம் வாலிபரை தொடர்பு கொண்டு செக்ஸ் ஆசை காட்டி அவரிடம் வழிப்பறியில் ஈடுபட திட்டம் தீட்டியது தெரியவந்தது.

    காளப்பட்டி:

    கோவையை சேர்ந்தவர் 33 வயது வாலிபர். இவர் கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் ஆண் நர்சாக வேலை செய்து வருகிறார்.

    இவர் செல்போனில் கிளுகிளுப்பான செக்ஸ் செயலி ஒன்றை பயன்படுத்தினார். அதன் மூலம் இவருக்கு ராக்கி என்பவர் அறிமுகமானார். இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். சம்பவத்தன்று 2 பேரும் சந்திக்க முடிவு செய்தனர்.

    இதையடுத்து வாலிபர், சரவணம்பட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே ராக்கிக்காக காத்திருந்தார்.

    அங்கு ராக்கி மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் துடியலூர் ரோட்டில் சென்று அங்குள்ள தனியார் பள்ளி அருகே நின்று பேசி கொண்டு இருந்தனர்.

    அப்போது 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் திடீரென அங்கு பேசி கொண்டு இருந்த ஆண் நர்சிடம் சென்று பணத்தை கேட்டனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்றார்.

    இதில் ஆத்திரம் அடைந்த அந்த 3 வாலிபர்களில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி மிரட்டினார்.

    பின்னர் அந்த வாலிபர்கள் வாலிபரிடம் இருந்த ஒரு பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் மற்றும் ஒரு செல்போனை பறித்தனர்.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் மற்றும் ராக்கி சத்தம் போட்டனர். அவர்களின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அந்த 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து வாலிபர் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாருக்கு ராக்கி மீது சந்தேகம் ஏற்படவே அவரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவரது பெயர் ராக்கி இல்லை என்பதும், உண்மையான பெயர் கார்த்திகேயன் (வயது 27) என்பதும், தூத்துக்குடியை சேர்ந்தவர் தெரியவந்தது.

    கார்த்திகேயன் செல்போன் செயலி மூலம் வாலிபரை தொடர்பு கொண்டு செக்ஸ் ஆசை காட்டி அவரிடம் வழிப்பறியில் ஈடுபட திட்டம் தீட்டியது தெரியவந்தது.

    அதற்காக அவர் தனது நண்பர்களான நெல்லையை சேர்ந்த மாரிசெல்வம் (23), திருச்சியை சேர்ந்த அபிராம் (19), கொடைக்கானலை சேர்ந்த ஹரிவிஷ்னு (21) ஆகியோரிடம் முன்கூட்டியே தான் வாலிபரிடம் பேசும் இடத்தை தெரிவித்துள்ளார்.

    பின்னர் அவர்கள் இருக்கக்கூடிய இடத்திற்கு 3 பேரையும் வரவழைத்து வழிப்பறியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் கார்த்திகேயனை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி மாரிசெல்வம், அபிராம், ஹரிவிஷ்ணு ஆகியோரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • 7 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    • நண்பர்கள் 12 பேருடன் அம்பாள் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த கல்லூரிக்கு சென்று வந்தார்.

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் சர்வேஷ்குமார் (வயது 21). இவர் மலுமிச்சம்பட்டியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தனது நண்பர்கள் 12 பேருடன் அம்பாள் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த கல்லூரிக்கு சென்று வந்தார்.

    சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில் சர்வேஷ்குமார் தங்கி இருந்த வீட்டிற்குள் 7 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி உள்ளே நுழைந்தனர்.

    அவர்கள் அறையில் தூங்கி கொண்டு இருந்தவர்களை எழுப்பினர்.

    பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் அணிந்து இருந்த செயின், மோதிரம், வெள்ளி செயின் ஆகியவற்றை பறித்தனர். மேலும் ரூ.25 ஆயிரம் ரொக்க பணம், 5 லேப்டாப், 4 வாட்ச் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த வீட்டிற்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி செயின், மோதிரம், பணம் உள்பட ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்களை பறித்து சென்ற 7 பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்கள். 

    • பயந்து நடுங்கிய சாந்தியிடம் கொள்ளையர்கள் நகை-பணத்தை தருமாறு கேட்டனர்.
    • சந்தோசும் அவனது கூட்டாளிகளும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையையொட்டிய சர்வீஸ் சாலை பகுதிகளில் இரவு நேரங்களில் வாலிபர்கள் சுற்றி வந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மெரினாவில் தூங்குபவர்களிடம் பணம் பறிப்பது, காதல் ஜோடியை மிரட்டி செல்போன்களை பறித்துச் செல்வது போன்ற சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் மெரினா கடற்கரையை பகுதியில் நேற்று நள்ளிரவு பரபரப்பான கொள்ளை சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சாந்தோம் சர்ச்சுக்கு பின்புறம் உள்ள கடற்கரை பகுதியையொட்டி உள்ளது லூப் ரோடு. இந்த சாலையில் நேற்று இரவு சாந்தி என்ற வயதான பெண் ஆட்டோவில் பயணம் செய்தார். நள்ளிரவு 1.30 மணி அளவில் இவர் சென்று கொண்டிருந்தபோது மழை பெய்தது.

    இதனால் ஆட்டோவை சாலையோரமாக டிரைவர் நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 4 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள் மழை பெய்வதால் சிறிது நேரம் ஆட்டோவில் ஒதுங்கிவிட்டு செல்கிறோம் என்று கூறினர். இதற்கு ஆட்டோ டிரைவரும் மூதாட்டி சாந்தியும் சம்மதித்தனர்.

    இதையடுத்து ஆட்டோவில் ஏறி அமர்ந்த 4 பேரும் திடீரென கத்தியை காட்டி மிரட்ட தொடங்கினார்கள்.

    முதலில் ஆட்டோ டிரைவரிடம் சென்று "பேசாமல் இங்கிருந்து ஓடி விடு... சத்தம் போட்டால் நீ காலி" என்று எச்சரித்தனர். இதனால் பயந்துபோன ஆட்டோ டிரைவர் எதுவும் செய்யாமல் அங்கிருந்து ஓடிவிட்டார்.

    இதைதொடர்ந்து பயந்து நடுங்கிய சாந்தியிடம் கொள்ளையர்கள் நகை-பணத்தை தருமாறு கேட்டனர். ஆனால் அவர் தரமறுத்து கூச்சல் போட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த கொள்ளை கும்பல் சாந்தியின் முகத்தில் ஓங்கி கத்தியால் குத்தியது. பின்னர் கழுத்து பகுதியிலும் கொள்ளையர்கள் கீறல் போட்டனர். இதனால் நிலைகுலைந்த சாந்தி உயிர் பயத்தில் நடுங்கினார். அப்போது தங்க கம்மல், ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளை கும்பல் பறித்தது.

    பின்னர் கொள்ளையர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதை தொடர்ந்து சாந்தி, திருடன்... திருடன் என்று சத்தம் போட்டார். அப்போது அந்த வழியாக வந்த போலீசார் கொள்ளையர்களை விரட்டினர்.

    கொள்ளையர்களில் 3 பேர் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    ஆனால் ஒருவன் மட்டும் மோட்டார் சைக்கிளில் ஏற முடியாமல் தவித்தான். அவன் போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க கடலில் குதித்தான்.

    ஆனால் காவலர்கள் விடாமல் விரட்டிச் சென்று கொள்ளையனை மடக்கி பிடித்தனர். பின்னர் கடலில் இருந்து குண்டுகட்டாக கையையும், காலையும் பிடித்து கரைக்கு தூக்கி வந்தனர்.

    கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். பிடிபட்ட கொள்ளையனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவனது பெயர் சந்தோஷ் என்பது தெரியவந்தது. அயனாவரம் பகுதியை சேர்ந்த இவன்மீது கொலை முயற்சி வழக்கு ஒன்றும் உள்ளது. இந்த வழக்கில் சிறை சென்ற இவன் சமீபத்தில்தான் வெளியில் வந்துள்ளான்.

    இந்த நிலையில்தான் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்டு மாட்டிக் கொண்டு உள்ளான். தப்பி ஓடிய இவனது கூட்டாளிகள் யார்-யார்? என்பது பற்றி சந்தோஷிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் தலைமறைவான கொள்ளையர்கள் 3 பேரும் யார்-யார்? என்பது தெரிய வந்தது. அவர்களை அடையாளம் கண்டுள்ள போலீசார் கைது செய்ய தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    சந்தோசும் அவனது கூட்டாளிகளும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளனர்.

    அப்போதுதான் சாந்தோம் லூப்ரோடு பகுதியில் ஆட்டோவில் பெண் ஒருவர் தனியாக அமர்ந்திருப்பதை பார்த்து அருகில் சென்று பேச்சு கொடுத்து துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    போலீசில் சிக்கியுள்ள கொள்ளையர்கள் சந்தோஷ், சூர்யா இருவரையும் விசாரணைக்கு பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் மெரினா பகுதியில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    ×