search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உணவு தயார் செய்ததை படத்தில் காணலாம்.
    X
    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உணவு தயார் செய்ததை படத்தில் காணலாம்.

    நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

    நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி ஆலங்குடியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆலங்குடி:

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆலங்குடியில் இருந்து பாச்சிக்கோட்டை, வாழைக்கொல்லை, மழையூர் வழியாக கறம்பக்குடிக்கு காலையிலும், மாலையிலும் கடந்த 2108-ல் அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் வாழைக்கொல்லை, குளவாய்ப்பட்டி, மேட்டுப்பட்டி, மழையூர், விஜயரெகுநாதபட்டி கிராமங்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது.

    சில மாதங்களே இயக்கப்பட்ட அந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அந்த கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பலமுறை சந்தித்து மனு கொடுத்தும், பலகட்ட போராட்டங்களை நடத்தியும் பஸ் இயக்கப்படவில்லை.

    இந்நிலையில் ஆலங்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தலைமையில் பொதுமக்கள், நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். அதன்படி நேற்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு கட்சியின் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். போராட்டம் தொடங்கி வெகுநேரமாகியும் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டனர்.

    இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட போக்குவரத்து கழக துணை மேலாளர்கள் சங்கர், சேகர், அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் ராஜேந்திரன், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா மற்றும் அதிகாரிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது வருகிற 30-ந் தேதிக்குள் மேற்படி வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×