search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் உமாமகேஸ்வரி
    X
    கலெக்டர் உமாமகேஸ்வரி

    ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் வேளாண்மை பணிகளை கலெக்டர் ஆய்வு

    ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் வேளாண்மை துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளாண் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு செய்தார்.

    புதுக்கோட்டை:

    ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் வேளாண்மை துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளாண் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தற்போது, வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்துவரும் சூழ்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் வேளாண் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சாகுபடியில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிக மகசூல் பெறவும், இதன்மூலம் நல்ல லாபம் ஈட்டவும் தமிழக அரசு வேளாண்மைத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன் பெறும் வகையில் வேளாண்மைத்துறையின் சார்பில் அனைத்து வேளாண் திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஆவுடையார்கோவில் வட்டாரம், பெருநாவலூர், வீரமங்களம், எசமங்களம் ஆகிய கிராமங்களில் நடவு செய்யப்பட்டுள்ள நேரடி நெல்விதைப்பு பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் விவசாயிகள் நெல்விதைப்பு செய்வதன் மூலம் செலவு குறைவதுடன், நெற்பயிரின் வாழ்நாளும் குறையும். இதனால் குறைவான காலத்திலேயே நெற்பயிரை அறுவடை செய்யலாம். இதேபோன்று நீர் மற்றும் உரத்தேவையும் குறைவான அளவே தேவைப்படும். நேரடி நெல்விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 600 மானியமாக தமிழக அரசு வழங்கி வருகிறது. இதற்கு இந்த ஆண்டு இலக்காக ரூ.3 கோடி நிர்ணயிக்கப்பட்டு இதுவரை விவசாயிகளுக்கு ரூ.2 கோடியே 96 லட்சம் நேரடி நெல் விதைப்புக்கு மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

    இதுபோன்று விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண்மைத் துறையின்கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் தமிழக அரசின் வேளாண் திட்டங்களை உரிய முறையில் பெற்று உற்பத்தியை பெருக்கி வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கூறினார்.

    Next Story
    ×