என் மலர்
புதுக்கோட்டை
- ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நல்லேர் பூட்டி விவசாயிகள் வழிபட்டனர்
- இதில் 11 ஜோடி மாடுகளைக்கொண்டு விவசாயிகள் உழவுப் பணியை உற்சாகத்தோடு தொடங்கினர்.
ஆலங்குடி
தமிழர் புத்தாண்டான சித்திரை முதல் நாள் நல்லேர் பூட்டி விளை நிலத்தை வழிபட்டால் அந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில், சித்திரை முதல் நாளான நேற்று முன்தினம் ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட எஸ்.குளவாய்ப்பட்டியில் நல்லேர் பூட்டும் நிகழ்வு நடந்தது.இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடி தேங்காய், பழம், தானியங்கள் மற்றும் பச்சரிசி உள்ளிட்ட பூஜைப் பொருட்களை வைத்து விளைநிலத்தில் வழிபட்டனர்.
அதன் பின்பு வரிசையில் அணிவகுத்து நின்ற டிராக்டர்களுக்கும் பூஜைகள் செய்யபட்ட பின் நல்லேர் பூட்டும் நிகழ்வு தொடங்கியது.இதில் 11 ஜோடி மாடுகளைக்கொண்டு விவசாயிகள் உழவுப் பணியை உற்சாகத்தோடு தொடங்கினர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் சிலர் கூறுகையில், கடந்த காலங்களில் பெரும்பாலான விவசாயிகள் மாடுகளைக்கொண்டு நல்லேரு பூட்டி தமிழ்புத்தாண்டை வரவேற்றனர். ஆனால் போதுமான மழை இல்லாததால், மாடுகளுக்கு தீவனப்பற்றாக்குறை ஏற்பட்டது.
இதனால், விவசாயிகள் தங்களது மாடுகளை வளர்க்க இயலாமல் விற்பனை செய்துவிட்டனர்.இருப்பினும் ஒரு சில விவசாயிகள் மட்டும் பாரம்பரியமாக கால்நடைகளை கொண்டே வேளாண் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சித்திரை முதல் நாள் நல்லேறு பூட்டினால் விவசாயம் செழிக்கும் என்று தங்கள் முன்னோர்கள் கடைபிடித்து வந்த மாண்பை தாங்களும் ஆண்டு தோறும் அதனை கடைபிடித்து வருவதாகவும், இந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையிலே நல்லேரு பூட்டியுள்ளோம் என்று கூறினர்.
- பொன்னமராவதியில் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
- அமைச்சர் ரகுபதி வழங்கினார்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வர்த்தக மஹாலில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார். அதன் பின்னர் அவர் பேசும்போது, 57 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 31 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை, 5 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலும் (முழுப்புலம்), 7 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலும் (உட்பிரிவு) என ஆகமொத்தம் 100 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 35 லட்சம் மதிப்புடைய அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பொன்னமராவதியில் தொழிற்பேட்டை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, பொன்னமராவதி ஒன்றியக்குழுத் தலைவர் சுதா அடை க்கலமணி, இலுப்பூர் வரு வாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, பொன்னமராவதி பேரூ ராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன், பேரூராட்சி துணைத் தலைவர்வெங்கடேசன், வட்டாட்சியர் பிரகாஷ், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்து, தொட்டியம்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் கீதா சோலையப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கந்தர்வகோட்டையில் தீயணைப்பு துறை சார்பில் தீ கொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டது
- நிலைய அலுவலர் குமரேசன் தலைமையில் காவலர்கள் முக்கிய கடைவீதிகளிலும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் தீ கொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டது. பனிக்காலத்தில் இறந்த காவலர்களின் பணியை நினைவு கூறும் வகையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு தேசிய உள்கட்டமைப்பின் வளர்ச்சியாகும் என்ற வகையில் நிலைய அலுவலர் குமரேசன் தலைமையில் காவலர்கள் முக்கிய கடைவீதிகளிலும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- கந்தர்வகோட்டையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடைபெற்றது
- கந்தர்வ கோட்டையில் அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தி.மு.க. சார்பில் நகரச் செயலாளர் ராஜா தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர். அ.தி.மு.க. சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமையில், ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திக் மழவராயர், தெற்கு ஒன்றிய செயலாளர் குமார், மாவட்ட பிரதிநிதி கவிதா சிவா, நகரச் செயலாளர் அய்யா. செந்தில் குமார், மாவட்ட பாசறை அருண் பிரசாத், எம்.ஜி.ஆர். மன்றம் செல்லத்துரை, வார்டு உறுப்பினர்கள் முத்துராமன், சாமிநாதன், செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணர் ஜெய்சங்கர் தலைமையில் மாலை அணிவித்தனர்.
- நடந்து சென்ற போது விபத்து
- வாகனம் மோதி முதியவர் பலியானார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ஆலங்குடி கலைஞர் காலனியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 93). இவர் ஆலங்குடி-கறம்பக்குடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிதம்பரம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்றது
- விவசாயிகள் நல்லேறு பூட்டி உழவு பணியை தொடங்கினர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நல்லேறு பூட்டும் நிகழ்ச்சி வசந்த காலத்தின் தொடக்கமான சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இந்தநாளில் கிராம பகுதிகளில் விவசாயிகள் நல்லேறு பூட்டி உழவு பணிகளை தொடங்குவது வழக்கம். புதிய ஆண்டில் விவசாயம் தழைக்க வேண்டும், ஆடு, மாடுகளுக்கு தீவனம் கிடைக்க வேண்டும். உணவு பொருள் உற்பத்தி அதிகரித்து பசி, பட்டினி இல்லாத நிலை தொடர வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நல்வேறு பூட்டும் நிகழ்ச்சி தமிழ் ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படுகிறது.இதன்படி புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, பிலாவிடுதி, பட்டமாவிடுதி, மழையூர், ரெகுநாதபுரம், திருமணஞ்சேரி, பட்டத்திக்காடு, வாண்டான்விடுதி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று நல்லேறு பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது உழவு பணிக்கு பெரும்பாலும் டிராக்டர்களே பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் கிராம பகுதிகளில் பழமை மாறாமல் உழவு மாடுகளில் ஏர் பூட்டி விவசாய பணிகளை தொடங்கினர்.
- போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்
- 2 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அரிமளம் ஒன்றியம் கல்லூர் சுகந்திரபுரம் பகுதியில் புதுக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்ேபாது அந்த வழியாக சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து கே.தெக்கூர் பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 37), கே.ராயவரம் பகுதியை சேர்ந்த அரவிந்தன் (25) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
- 19 பேர் காயம் அடைந்தனர்
- பொன்னமராவதி அருகே மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மஞ்சுவிரட்டு பொன்னமராவதி ஒன்றியம் ஆலவயல் ஊராட்சியில் வேட்டைக்காரன் சுவாமி கோவில் திருவிழாவையொட்டி நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதனை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து தொடக்கி வைத்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. முன்னதாக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்.19 பேர் காயம் அடைந்தனர்.
- ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆடு விற்பனை
- புதுக்கோட்டை சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை வாரச்சந்தை புதுக்கோட்டை சந்தையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி, காரைக்குடி, தேவக்கோட்டை, தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள்.இதில் பெட்டை ஆடுகளை விட கிடா ஆடுகளின் விற்பனை அதிகமாக இருந்தது. நேற்று ஒரு நாள் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. இதன் மூலம் ரூ.1 கோடிவரை வர்த்தகம் நடைபெற்றது. மேலும் அடுத்தவார சந்தையில் ஆடுகளின் விற்பனை இன்னும் அதிகமாக இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
- அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடட்டும், பார்த்துக்கொள்ளலாம்.
- அடுத்தாண்டு தேர்தல் வரவுள்ளதால் மத்திய அரசு அம்பேத்கர் பிறந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க காரணமாக இருக்கலாம்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் பழைய பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க. சார்பில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இன்னும் 11 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது. ஒன்றுக்கு மட்டும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். மீதமுள்ள 10-க்கு தரக்கூடிய நிலையில் விரைவில் அவர் ஒப்புதல் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் சட்டமன்றத்திலேயே சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றி இந்திய குடியரசு தலைவருக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடட்டும், பார்த்துக்கொள்ளலாம். அதைப்பற்றி எங்களுக்கு ஒன்றும் கவலை இல்லை. மடியில் கனம் இல்லாததால் வழியில் பயமில்லை. அமைச்சர்கள் எதையும் சந்திக்க தயாராக உள்ளனர். அடுத்தாண்டு தேர்தல் வரவுள்ளதால் மத்திய அரசு அம்பேத்கர் பிறந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.
- வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்
- காரை வழிமறித்து நடந்த சம்பவம்
புதுக்கோட்டை:
காரை வழிமறித்து தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை புதுக்கோட்டை மச்சுவாடி அருகில் தைலா நகர், இடையப்பட்டி வழியாக மருத்துவக்கல்லூரி செல்லும் சாலையில் சிறுவர்கள் சிலர் மது போதையில் அந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகளிடமும், நடந்து செல்வோர்களிடமும், வழிப்பறியில் ஈடுபடுவதாகவும் சமூகவலைத்தளங்களில் வீடியோ வைரலானது. சமீபத்தில் அந்த வழியாக சென்ற ஒரு காரை வழிமறித்து, தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டதாகவும், இதனை தட்டிக்கேட்ட போலீசார் ஒருவரையும் தாக்கியதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியது. இது தொடர்பாக கணேஷ் நகர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 8 பேர் கொண்ட கும்பல் மது போதையில் காரை வழிமறித்து தாக்கி, வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக 18 வயது நிரம்பிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
- அம்ரித் திட்டத்தில் மேம்பாட்டு பணிகள் தொடர்பாக
புதுக்கோட்டை:
தெற்கு ரெயில்வேயில் அம்ரித் திட்டத்தின் கீழ் ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் புதுக்கோட்டை ரெயில் நிலையமும் ஒன்றாகும். இதில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், புதிய கட்டிடங்களை கட்டவும் ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அம்ரித் திட்ட மேம்பாட்டு பணிக்கான தெற்கு ரெயில்வே முதன்மை திட்ட அதிகாரி பொன் பாலசுந்தரம் தலைமையிலான அதிகாரிகள் ரெயில் மூலம் நேற்று மதுரையில் இருந்து திருச்சி வழியாக புதுக்கோட்டை ரெயில் நிலையம் வந்தனர்.புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நடைமேடை, நடைபாதை மேம்பாலம், ரெயில் நிலைய வளாகப்பகுதி உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக திருவப்பூர் ரெயில்வே கேட்டை அவர்கள் பார்வையிட்டனர்.
ஆய்வுக்கு பின் அம்ரித் திட்டத்தின் தெற்கு ரெயில்வே முதன்மை திட்ட அதிகாரி பொன் பாலசுந்தரம் நிருபர்களிடம் கூறுகையில், ''ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிக்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி தான் பணிகள் தொடங்கப்படும். திருவப்பூர் ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைப்பதற்காக மாநில அரசின் ஆணை இன்னும் ரெயில்வே நிர்வாகத்திற்கு வரவில்லை. திருவப்பூர் ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியை 1½ ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார்.






