என் மலர்
பெரம்பலூர்
- வேப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது
- தொல். திருமாவளவன் தொடங்கி வைத்தார்
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரம்சீகூர் அடுத்து திருமாந்துறை, அத்தியூர் உட்பட பல்வேறு பகுதியில் நலத்திட்ட பணிகளை சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் துவக்கி வைத்தார்.திருமாந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட கீரனூர் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.தொடர்ந்து திருமாந்துறை ஊராட்சியில் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளையும், கழனிவாசல் கிராமத்தில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடையை திறந்து வைத்தார்.தொடர்ந்து அத்தியூர் கிராமத்தில் நியாய விலை கடை புதிய கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போட்டு பணிகளை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் வேப்பூர் ஒன்றிய குழு துணை தலைவர் செல்வராணி வரதராஜன், பெரம்பலூர் மாவட்ட கிழக்கு பகுதி செயலாளர் கலையரசன், மண்டல அமைப்பு துணை செயலாளர் ஸ்டாலின் லெனின், வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன், திருமாந்துறை ஊராட்சி மன்ற தலைவர் வேளாங்கண்ணி இளையராஜா, ஒகளூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பையா, ஆண்டாள் குடியரசு மற்றும் பெண்ணாடம் பேரூராட்சி மன்ற தலைவர் அமுத லட்சுமி ஆற்றலரசு, வீர செங்கோலன் தர்மதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சு.ஆடுதுறை பெண் ஊராட்சி மன்ற தலைவ கீதா மீது தாக்குதல் நடைபெற்று உள்ளது
- 3 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்
அகரம் சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்துள்ள சு.ஆடுதுறை ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருபவர் கீதா. இவர் நேற்று வழக்கம்போல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.அப்போது மெயின் ரோட்டில் வசித்து வரும் அண்ணாதுரை என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் கழிவறை தொட்டி கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கழிவறை தொட்டியை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டனர்.இதனை அறிந்த கீதா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த கீதா பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
- ஆடித்திருவிழாவை முன்னிட்டு பொம்மனப்பாடி கிராமத்தில் அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம்
- பாலகாட்டு அம்மனுக்கு பக்தர்கள் கூழ்படைத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் அடுத்துள பொம்மனப்பாடி கிராமத்தில் உள்ள பாலகாட்டு அம்மன் கோவிலில் ஆடிதிருவிழா நடைபெற்றது. கடந்த வியாழன் அன்று வானவேடிக்கையுடன், ஏரியில் குடி அழைத்தல் நிகழ்ச்சியோடு தொடங்கிய விழாவில், வெள்ளி அன்று அம்மனுக்கு விசேஷ பூஜைகளும், சிறப்பு மலர் அலங்காரமும் நடைபெற்றது. அப்போது மழை வேண்டிய சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பாலகாட்டு அம்மனுக்கு பக்தர்கள் கூழ்படைத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இறுதியாக மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்று, அம்மன் குடிவிடுதல் நிகழ்ச்சியோடு ஆடி திருவிழா நிறைவடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பொம்மனப்பாடி கிராம மக்கள் செய்திருந்தனர்.
- ஆக்கிரமிப்பை அகற்றகோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- பொதுமக்கள் போராட்டத்தால் உடனே ஆக்கிரமிப்பு அகற்றம்
பெரம்பலூர்,
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் கே.கே.நகர், குறிஞ்சி நகரில் வசிக்கும் பொதுமக்கள் குறிஞ்சி நல குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஆசைதம்பி தலைமையில் நேற்று காலை துறைமங்கலம் கே.கே.நகர் ஆர்ச் முன்புள்ள திருச்சி செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டதோடு, அந்தப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.அப்போது அவர்கள் கூறுகையில், மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி, துறைமங்கலம் கே.கே.நகர் மெயின் ரோட்டில் இருந்து நகராட்சி தண்ணீர் தொட்டி சுற்றுச்சுவர் வழியாக அமைக்கப்பட்ட பொதுப்பாதை வழியாக துறைமங்கலம் கே.கே.நகர், புதுக்காலனி, வடக்கு தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அரசு நகர்ப்புற மருத்துவமனை, மாவட்ட மைய நூலகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், வேளாண்மை துறை அலுவலகம், கால்நடை மருத்துவமனை, புதிய பஸ் நிலையத்துக்கு சென்று வந்தனர்.அந்த பொதுப்பாதையை அருகே உள்ள ஒரு வீட்டுக்காரர் ஆக்கிரமித்துள்ளார். அந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஏற்கனவே கடந்த மாதம் 31-ந்தேதி நகராட்சி ஆணையாளரை சந்தித்து மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பொதுப்பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசாரும், பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜும் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் தாசில்தார், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பொதுப்பாதையை தற்காலிகமாக பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள திறந்து விட்டார். இதனால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து சுமார் அரை மணி நேரம் பாதிக்கப்பட்ட போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.
- பெரம்பலூரில் லாரி மோதியதில் மற்றொரு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
- நெடுஞ்சாலை ரோந்து போலீசார் லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே செங்குணம் பிரிவு சாலையில் நேற்று மதியம் வந்த சிமெண்டு கலவை எந்திரம் லாரி நெடுஞ்சாலையை திருச்சி நோக்கி திரும்பியது. அப்போது அந்த லாரி மீது பின்னால் கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராப்பாளையத்தில் சிமெண்டு மூட்டைகளை இறக்கி விட்டு, அரியலூரை நோக்கி வந்த லாரி மோதியது. இதில் சிமெண்டு கலவை லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதன்மீது மோதிய லாரியின் முன்புறம் சேதமடைந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூரில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 70 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது
- விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீசாருக்கான வளாகம், குடியிருப்பு மற்றும் மைதானம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர்பந்தலில் உள்ளது. இங்கு ஆயுதப்படை போலீசார் குடியிருக்கும் வீடுகளின் பின்புறம் மற்றும் அருகே உள்ள பகுதியில், மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்த வாகனங்கள் மீது கோர்ட்டில் வழக்கு முடிவடையாமல் நிலுவையில் உள்ளதால், அவை மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வந்தன. மேலும் வாகனங்களை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்தும், புதர் மண்டியும் காணப்பட்டன. இந்த நிலையில் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் யு, வி பிளாக்குகள் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் நேற்று மதியம் 12.45 மணியளவில் திடீரென்று தீப்பற்றி எரிய தொடங்கியது. பின்னர் தீ மள, மளவென பரவி இருசக்கர வாகனங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. இதனால் கரும்புகை வெளியேறியதால் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு வளாகம் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனை கண்ட குடியிருப்பில் வசிப்பவர்கள் இது குறித்து உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனங்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்கிடையே பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி இருசக்கர வாகனங்கள் மீது எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் 70 இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாகி எலும்புக்கூடாக காட்சியளித்தன.
- சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்று வேப்பூர் ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
- மெட்டல் சாலை அமைக்கவும் முடிவு
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா வேப்பூர் ஒன்றியத்தின் சாதாரண குழு கூட்டம், ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேமலதா செல்வகுமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய குழு கூட்டத்தில் வேப்பூர் யூனியனில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது, மழைக்காலம் ஆரம்பிக்க உள்ளதால் அனைத்து கிராமங்களிலும் மெட்டல் சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் வேப்பூர் ஒன்றிய துணைத் தலைவர் செல்வராணி வரதராஜன் நன்றி கூறினார்
- யார் நீங்கள் என்று கேட்ட போது அந்த நபர் தான் வைத்திருந்த கட்டையால் சரவணனை தாக்க முயன்றார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், தம்பிரான்பட்டி, அண்ணா நகர் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் சரவணன் (வயது 50). இவர் சொந்தமாக ஷேர் ஆட்டோ வை வைத்து தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் இரவு தனது வீட்டின் முன் ஆட்டோவை சரவணன் நிறுத்தியிருந்தார். இரவு 10 மணயளவில் ஷேர் ஆட்டோவை ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்டது.
இதனால் வெளியே வந்து பார்த்த போது ஒருவர் ஆட்டோவுக்குள் அமர்ந்து ஒயர்களை பிரித்துக் கொண்டிருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன், யார் நீங்கள் என்று கேட்ட போது அந்த நபர் தான் வைத்திருந்த கட்டையால் சரவணனை தாக்க முயன்றார். இதில் சுதாரித்த சரவணன் திருடன் திருடன் என சத்தம் போட அப்பகுதியினர் அங்கு திரண்டர். அந்த நபரை சுற்றி வளைத்து கைகளால் தாக்கினர். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் உள்ளிட்ட போலீசார், அவரை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த பாலா (32) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சோமண்டாபுதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பச்சமுத்து வயது 50போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
- இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி
பெரம்பலூர் பெரம்பலூர் அருகே சோமண்டாபுதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 50), விவசாயி. இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், அன்புமணி, பார்த்தி ஆகிய 2 மகன்களும் உள்ளனர். பச்சமுத்து நேற்று முன்தினம் மாலை வீட்டில் உள்ளவர்களிடம் மாடுகளுக்கு தீவனம் வயலில் இருந்து எடுத்து வருவதாக கூறி விட்டு சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் இரவு 8 மணியளவில் அவரது வயலில் உள்ள கிணற்றின் அருகே பச்சமுத்துவின் காலணி கிடந்தது. இதனைக்கண்ட உறவினர்கள் பச்சமுத்து கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம்? என்ற சந்தேகத்தில் இதுகுறித்து உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி பச்சமுத்துவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கிணற்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த பச்சமுத்துவின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் பெரம்பலூர் போலீசார் பச்சமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகின்றனர்
- மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அணைப்பாடி நடுத்தெருவை சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மகன் மதுபாலன் (வயது 18). இவரும் அதே பகுதியை சோ்ந்த நண்பரான காமராஜின் மகன் சுவராஜூம் (19) திருச்சி மாவட்டம், கொணலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகின்றனர். நேற்று காலை மதுபாலனும், சுவராஜூம் கல்லூரிக்கு செல்வதற்காக இரூர் பஸ் நிறுத்தத்துக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இரூர் பஸ் நிறுத்தத்தில் சுவராஜ் மொபட்டில் இருந்து இறங்கி விட்டார். பின்னர் மதுபாலன் மொபட்டில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, எஸ்.புதுப்பேட்டையை சேர்ந்த ரமேஷ் (45) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது. இதில் மதுபாலன் படுகாயமடைந்தார். இந்த விபத்தில் ரமேசும், அவரது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணம் செய்த சேதுவும் காயம் அடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுபாலன் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூரில் போலீசாரின் சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது
- 27 மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது விசாரணை நடத்தப்பட்டது
பெரம்பலூர்,
பெரம்பலூர் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையில், மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றனர். இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 27 மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- இரூர் ரேஷன் கடையில் இன்று தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது
- மற்ற ரேஷன் கடைகளிலும் இதேபோல் தக்காளி விற்பனை செய்ய வேண்டும் என்றும் இல்லத்தரசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி உழவர் சந்தையில் ரூ.160-க்கும், காய்கறி மார்க்கெட்டில் ரூ.180-க்கும், சில்லரை கடைகளில் ரூ.200-ஐ தாண்டியும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஏற்கனவே மற்ற மாவட்டங்களில் தமிழக அரசின் உத்தரவின்படி ரேஷன் கடைகள் மூலம் கூட்டுறவுத்துறையினர் தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என்று இல்லத்தரசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் கூட்டுறவுத்துறை சார்பில் ஆலத்தூர் தாலுகா, இரூர் ரேஷன் கடையில் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணி முதல் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்யப்படவுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். மற்ற ரேஷன் கடைகளிலும் இதேபோல் தக்காளி விற்பனை செய்ய வேண்டும் என்றும் இல்லத்தரசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






