என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பாடாலூர் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு நாற்காலி வழங்கும் விழா நடைபெற்றது
    • பாடாலூர் எதிர்நீச்சல் சமுதாய நற்பணி மன்றம் சார்பில் வழங்கப்பட்டது

    பாடாலூர்,

    ஆலத்தூர் தாலுகா பாடாலூர் எதிர்நீச்சல் சமுதாய நற்பணி மன்றம் சார்பில் ஊராட்சிக்கு உட்பட்ட அரச மரத்தெரு அங்கன்வாடி மையம் மற்றும் நடுத்தெரு அங்கன்வாடி மையத்திற்கு பள்ளி குழந்தைகள் அமர்ந்து பாடத்தை கவனிக்கும் வகையில் அவர்களுக்கு சேர் வழங்கப்பட்டது. மேலும் பாடாலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் அமரும் வகையில் அதன் அதன் வளாகத்தில் சிமெண்ட் இருக்கையும் எதிர்நீச்சல் சமுதாய நற்பணி மன்றம் சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மன்ற உறுப்பினர்கள் மணிவேல், ஆனந்த், பாலு, ராஜா கனகராஜ், கலாநிதி, சுரேஷ், சீனிவாசன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • செட்டிகுளத்தில் மலை தண்டாயுதபாணி சுவாமி கோவில் சாமி சிலையை சேதப்படுத்தியவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
    • கைது செய்யப்பட்டவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது

    பாடாலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்தில் மலையின் மீது பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில், படிக்கட்டுகளில் ஏறும் பகுதியின் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனி சன்னதி கட்டப்பட்டு, அதில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சுமார் 4 அடி உயரத்தில் சிமெண்டினால் செய்யப்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் வள்ளி, தெய்வானை சிலைகளை நேற்று மதியம் 12.30 மணியளவில் ஆண் ஒருவர் கல்லால் அடித்து சேதப்படுத்திக் கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்ற பக்தர்கள் ஓடிச்சென்று அந்த நபரை பிடித்து, சிலைகளை சேதப்படுத்துவதை தடுத்தனர்.பின்னர் அவர்கள் இது குறித்து பாடாலூர் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை பக்தர்களிடம் இருந்து மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சிறுவயலூரை சேர்ந்த பூபதி (வயது 49) என்பதும், அவர் தனது மனைவி லட்சுமியுடன் திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, பெருமாள்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மாமனார் வீட்டில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு, அதற்காக மாத்திரைகள் உட்ெகாண்டு வருவதாக கூறப்படுகிறது. நேற்று காலை வீட்டில் உள்ளவர்களிடம் மாத்திரை வாங்குவதற்கு துறையூர் சென்று வருவதாக கூறிவிட்டு வந்த அவர், செட்டிகுளத்துக்கு வந்து சுவாமி சிலைகளை சேதப்படுத்தியது, விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவிலில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் இறுதியில் செட்டிகுளத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சுவாமி சிலைகள், சுவாமி வாகனங்களை உடைத்து சேதப்படுத்தி, ஆவணங்களை எரித்த மனநலம் பாதிக்கப்பட்ட மாவிலங்கையை சேர்ந்த செல்வராஜ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெரம்பலூர் காவல் நிலையம் முன்பு ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்
    • கொலை வழக்கு விசாரணைக்காக, போலீசார் தனது மகனை பிடித்து சென்றதை கண்டித்து போராட்டம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய துணை தலைவராக இருப்பவர் சாந்தா தேவி. தி.மு.க.வை சேர்ந்த இவர் தனது கணவரான அரசு பஸ் டிரைவரும், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கவுன்சில் தலைவருமான குமார் மற்றும் குடும்பத்தினர், உறவினர்களுடன் போலீசாரை கண்டித்து பெரம்பலூர் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அப்போது சாந்தா தேவி கூறுகையில், நான் உடல் நலக்குறைவால் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு காரில் சென்றேன். என்னுடன் எனது மகன் மாறன் (24), என்னுடைய தங்கை மகன் லோகேஷ் (19) ஆகியோர் வந்தனர். அப்போது பெரம்பலூர் மாவட்ட தனிப்படை போலீசார், பெரம்பலூரில் சினிமா இயக்குனர் செல்வராஜ் என்ற அப்துல் ரகுமான் கொலை வழக்கில் சம்பந்தமில்லாத மாறன், லோகேஷை பிடித்து மறைமுகமான இடத்தில் வைத்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை வழக்கில் சம்பந்தமில்லாமல் பிடித்து வைத்திருக்கும் எனது மகனையும், தங்கையின் மகனையும் விடுவிக்க வேண்டும், என்றார்.இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி தலைமையிலான போலீசார் போலீஸ் நிலையம் வந்து தர்ணாவில் ஈடுபட்ட ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால், அவர்கள் தர்ணாவை கைவிட்டனர். பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • பெரம்பலூரில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறுகிறது
    • மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் அறிவிப்பு

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்களின் குறைதீர்க்கும் கூட்டம் பெரம்பலூர் செயற்பொறியாளர் மின்வாரிய அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம், என்று பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூரில் பெண்கள் உதவி தொகை திட்டத்தில், 88சதவீத விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது
    • 76ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவேற்றம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் 2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 88 சதவீதம் பதிவு ஏற்கனவே நடந்த முதற்கட்ட சிறப்பு முகாம்களில் 74,311 விண்ணப்பங்களும், முதற்கட்ட முகாம்களில் விடுபட்டவர்களுக்காக நடைபெற்ற முகாமில் 2,189 விண்ணப்பங்களும் என மொத்தம் 76,500 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. முதற்கட்டமாக நடந்த முகாம்களில் 95 சதவீத விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட குடும்ப தலைவிகளிடம் வழங்கப்பட்டு, அவற்றில் 88 சதவீத விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பெரம்பலூர் அருகே கிணற்றில் மிதந்த விவசாயி பிணத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்
    • முதற்கட்ட விசாரணை அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது

    பாடாலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், பொம்மனப்பாடி இந்திரா நகரை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 58), விவசாயி. இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள அவரது விவசாய கிணற்றில் இறந்து கிடப்பதாக பாடாலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து அன்பழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அன்பழகனுக்கும், அவரது உறவினர்களுக்குமிடையே நிலத் தகராறு இருப்பது தெரியவந்தது. அன்பழகன் அதே பகுதியில் பிரச்சினைக்குரிய காலி இடத்தில் வீடு கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வந்தார். இதனால் ஏற்பட்ட தகறாரில் அன்பழகன் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மேட்டுகாளிங்கராயநல்லூர் மகா மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்றது
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் நடைபெற்றது

    அகரம்சீகூர், 

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள மேட்டுகாளிங்கராயநல்லூர் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து மேட்டுகாளிங்கராயநல்லூர் பொதுமக்கள் சின்னாற்றில் இருந்து பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் ஊர்வலமாக அம்மன் சன்னிதானத்தை வந்தடைந்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினார்கள்.இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வயலூர் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக வீடு சூறையாடப்பட்டது
    • தாக்கப்பட்ட பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்

    அகரம்சீகூர், 

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள வயலூர் கிராமத்தில் வசிக்கும் தங்கவேல் பூசாரியின் மகன்கள் முருகேசன், மாணிக்கம். இருவரிடையே சொத்து பிரிப்பதில் தகராறு காரணமாக முன் விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முருகேசன் மருமகன் மோகன் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து, மாணிக்கம் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.அப்போது மாணிக்கம் மனைவி பூங்காவனம் (வயது 60) என்பவரையும் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பூங்காவனம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த வந்த அகரம்சீகூர் காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விவசாயியை ஆட்டோ ஏற்றி கொல்ல முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்
    • ஆட்டோ மோதி படுகாயம் அடைந்த விவசாயிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடி தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 63), விவசாயி. அதே தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (53), டிரைவர். இவர்கள் இருவருக்கும் நீண்ட நாட்களாக வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று காலை சீனிவாசன் டீசல் வாங்குவதற்காக தனது மொபட்டில் பூலாம்பாடியில் இருந்து அரும்பாவூர் நோக்கி சென்றுள்ளார். அப்போது கார்த்திகேயன் தனது சரக்கு ஆட்டோவை ஓட்டிச் சென்று முன்னால் மொபட்டில் சென்று கொண்டிருந்த சீனிவாசன் மீது மோதி உள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் சீனிவாசனை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயியை ஆட்டோ ஏற்றி கொல்ல முயன்ற கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது
    • தொல். திருமாவளவன் தொடங்கி வைத்தார்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரம்சீகூர் அடுத்து திருமாந்துறை, அத்தியூர் உட்பட பல்வேறு பகுதியில் நலத்திட்ட பணிகளை சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் துவக்கி வைத்தார்.திருமாந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட கீரனூர் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.தொடர்ந்து திருமாந்துறை ஊராட்சியில் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளையும், கழனிவாசல் கிராமத்தில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடையை திறந்து வைத்தார்.தொடர்ந்து அத்தியூர் கிராமத்தில் நியாய விலை கடை புதிய கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போட்டு பணிகளை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் வேப்பூர் ஒன்றிய குழு துணை தலைவர் செல்வராணி வரதராஜன், பெரம்பலூர் மாவட்ட கிழக்கு பகுதி செயலாளர் கலையரசன், மண்டல அமைப்பு துணை செயலாளர் ஸ்டாலின் லெனின், வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன், திருமாந்துறை ஊராட்சி மன்ற தலைவர் வேளாங்கண்ணி இளையராஜா, ஒகளூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பையா, ஆண்டாள் குடியரசு மற்றும் பெண்ணாடம் பேரூராட்சி மன்ற தலைவர் அமுத லட்சுமி ஆற்றலரசு, வீர செங்கோலன் தர்மதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சு.ஆடுதுறை பெண் ஊராட்சி மன்ற தலைவ கீதா மீது தாக்குதல் நடைபெற்று உள்ளது
    • 3 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்

    அகரம் சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்துள்ள சு.ஆடுதுறை ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருபவர் கீதா. இவர் நேற்று வழக்கம்போல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.அப்போது மெயின் ரோட்டில் வசித்து வரும் அண்ணாதுரை என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் கழிவறை தொட்டி கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கழிவறை தொட்டியை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டனர்.இதனை அறிந்த கீதா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த கீதா பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    • ஆடித்திருவிழாவை முன்னிட்டு பொம்மனப்பாடி கிராமத்தில் அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம்
    • பாலகாட்டு அம்மனுக்கு பக்தர்கள் கூழ்படைத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் அடுத்துள பொம்மனப்பாடி கிராமத்தில் உள்ள பாலகாட்டு அம்மன் கோவிலில் ஆடிதிருவிழா நடைபெற்றது. கடந்த வியாழன் அன்று வானவேடிக்கையுடன், ஏரியில் குடி அழைத்தல் நிகழ்ச்சியோடு தொடங்கிய விழாவில், வெள்ளி அன்று அம்மனுக்கு விசேஷ பூஜைகளும், சிறப்பு மலர் அலங்காரமும் நடைபெற்றது. அப்போது மழை வேண்டிய சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பாலகாட்டு அம்மனுக்கு பக்தர்கள் கூழ்படைத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இறுதியாக மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்று, அம்மன் குடிவிடுதல் நிகழ்ச்சியோடு ஆடி திருவிழா நிறைவடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பொம்மனப்பாடி கிராம மக்கள் செய்திருந்தனர். 

    ×