என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • மேத்தாள் ஒன்றிய பள்ளிக்கு பர்னிச்சர், எலக்ட்ரிக்கல் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது
    • ஒன்றிய கவுன்சிலர் என்.கே.கர்ணன் தனது நிதியில் இருந்து வழங்கினார்

    குன்னம், 

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் சில்லக்குடி ஊராட்சிக்குட்பட்ட மேத்தாள் கிராமத்தில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு, ஒன்றிய கவுன்சிலர் என்.கே.கர்ணன், தனது ஆலத்தூர் ஒன்றிய கவுன்சிலர் நிதியிலிருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் பள்ளிக்குத் தேவையான தளவாடப் பொருட்கள் மின்விசிறி மேஜைகள், பீரோ, டேபிள் மற்றும் பர்னிச்சர் பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா தேவி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், அதிமுக கிளை செயலாளர் தங்கவேல், எழுமூர் ஒன்றிய கவுன்சிலர் அழகுதுரை, திம்மூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், வார்டு உறுப்பினர் இளையராஜா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது
    • தரைக்கடை வியாபாரிகளை வியாபாரம் செய்யவிடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் புரட்சியாளர் அம்பேத்கர் நடைபாதை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் துரைமுருகன் தலைமையில் நடைபாதை வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்களில் சிலர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளா் ரத்தினவேல், கட்சியின் வக்கீல் அணியின் மாநில துணைச் செயலாளர் சீனிவாசராவ், நகர செயலாளரும், கவுன்சிலருமான தங்க.சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மஞ்சுளாவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், பெரம்பலூர் நகர்ப்பகுதியில் பாலக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எங்கள் சங்கத்தின் நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்களை வியாபாரம் செய்ய விடாமல் தடுத்து துன்புறுத்தும் நகர போக்குவரத்து போலீசாா் மீதும், பிற போலீசார் மீதும் நடவடிக்கை எடுத்து எங்களை தொடர்ந்து வியாபாரம் செய்ய அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

    • பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வந்த அரசு மிதவை பஸ் ஜப்தி செய்யப்பட்டது
    • கோர்ட் உத்தரவிட்ட இழப்பீடு தொகையை வழங்காததால் நடவடிக்கை

    பெரம்பலூர், 

    தூத்துக்குடி மாவட்டம், போல்பேட்டையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜோதி (வயது 40). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். ரவிச்சந்திரன் சென்னையில் காய்கறி கடை நடத்தி வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு ஜோதி சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக ஒரு தனியார் ஆம்னி பஸ்சில் பயணம் செய்தார். அந்த பஸ் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் பின்னால் வந்த ஒரு அரசு விரைவு மிதவை பஸ் ஆம்னி பஸ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஜோதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஜோதியின் கணவர் ரவிச்சந்திரன் பெரம்பலூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ரூ.14 லட்சத்து 7 ஆயிரத்து 117 ஆயிரம் இழப்பீடாக ஜோதியின் குடும்பத்தினருக்கு வழங்க திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 2022-ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஜோதியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.

    இதனால்பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வந்துசெல்லும் திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழகத்தின் ஏதேனும் விரைவு மிதவை பஸ்சை ஒன்றை ஜப்தி செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நேற்று காலை திருச்சியில் இருந்து திருப்பதி நோக்கி பயணிகளுடன் புறப்பட்டு பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்துக்கு வந்த அரசு விரைவு மிதவை பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர்.

    • போலீசாரின் சிறப்பு விசாரணை முகாமில் 31 மனுக்கள் பெறப்பட்டன
    • மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமையில் நடைபெற்றது

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் நடந்தது. முகாமிற்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றனர். இதில் மொத்தம் 31 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    • குழந்தை திருமணத்திற்கு சிறுமியின் தாய் முத்துலட்சுமி உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
    • குழந்தை திருமணத்தால் பெண்களின் கல்வி பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பு மறுக்கப்படும் சூழல் உருவாகிறது.

    வேப்பந்தட்டை:

    இந்தியாவில் குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆண்களின் திருமண வயது 21 ஆகவும், பெண்களின் திருமண வயது 18 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் குழந்தை திருமணங்கள் தொடர்கதையாக இருக்கிறது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் 16 வயது மகளை 35 வயது வாலிபருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்தவர் காளி. கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 40). இந்த தம்பதியரின் 16 வயது சிறுமிக்கு சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த சக்திவேல் (35) என்ற வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பின்னர் எறையூர் சர்க்கரை ஆலை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கடந்த ஜூன் மாதம் 13ந் தேதி உற்றார் உறவினர்கள் புடை சூழ தடபுடலாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த குழந்தை திருமணம் குறித்து மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

    உடனே போலீசார் விரைந்து சென்று சிறுமியின் பெற்றோரை தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

    இதில் குழந்தை திருமணத்திற்கு சிறுமியின் தாய் முத்துலட்சுமி உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதனை மோப்பம் பிடித்துக்கொண்டு சக்திவேல் சிறுமியுடன் வெளி மாநிலத்துக்கு தப்பி ஓடிவிட்டார். அதைத் தொடர்ந்து போலீசார் தலைமறைவாக உள்ள சிறுமியையும் அவரது கணவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    குழந்தை திருமணத்தால் பெண்களின் கல்வி பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பு மறுக்கப்படும் சூழல் உருவாகிறது. இதனால் குடும்பத்தில் வறுமை சூழும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் பாலின சமமின்மை காரணத்தால் தாம்பத்திய வாழ்க்கையும் சிறிது காலத்திலேயே கசந்து போகிறது. மேலும் குழந்தை திருமணத்தால் சிறுமிகளுக்கு பிரசவத்தின்போது உடல் நலக்குறைவும் ஏற்படுகிறது. ஆகவே குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.

    • பெரம்பலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • டிரைவர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தொழிற்சங்கம், அகில இந்திய உழைப்பாளர் டிரைவர் நலச் சங்கம் சார்பில் நடைபெற்றது

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் தமிழ்நாடு அனைத்து மாவட்ட டிரைவர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தொழிற்சங்கம், அகில இந்திய உழைப்பாளர் டிரைவர் நலச் சங்கம் ஆகியவற்றின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.பெரம்பலூர் பாலக்கரை தொடங்கிய பேரணியை மாவட்ட தலைவர் வடிவேல் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.பேரணி வெங்கடேசபுரம், ரோவர் வளைவு, சங்குப்பேட்டை, கடைவீதி வழியாகச்சென்று உள்ள வானொலி திடலில் முடிவடைந்தது.பேரணியில் சாலை விதிகளை கடைபிடிப்போம், ஹெல்மட் அணிவோம், மிதவேகம் மிக நன்று போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய கோஷமிட்டு சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் சங்க நிர்வாகிகள், டிரைவர்கள், தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் ஏரி நில ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது
    • கிராம மக்கள் பெரம்பலூர் கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்தல்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் கற்பகம் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 324 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை ஊராட்சிக்குட்பட்ட புதுக்குறிச்சி கிராம பொதுமக்கள், உள்ளாட்சி பிரநிதிகள் ஆகியோர் சார்பில் கலெக்டர் கற்பகத்திடம் மனு அளித்தனர்.அந்த அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது,புதுக்குறிச்சி கிராமத்தில் சர்வே எண் 275 எண்ணில் சுமார் 120 ஏக்கரில் ஏரி உள்ளது. ஆனால் தற்போது தனிநபர்கள் சுமார் 30 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் ஏரியின் பரப்பளவு குறைந்துவிட்டது. இதனால் ஏரியின் நீரின் கொள்ளவு குறைந்து நீர் பரப்பளவு குறைந்துள்ளது.நீர்வழி வாய்க்காலை மறிந்து தற்போது சாலை வசதி ஏற்படுத்தும் பணி துவங்கியுள்ளது. இதனால் நீர்வருவதற்கு வழியில்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.மழைக்காலங்கள் துவங்கும் முன்பு ஏரியின் நிலத்தை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றிலும் கரை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • பெரம்பலூரில் பாரதீய மஸ்தூர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
    • கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டனர்

    பெரம்பலூர், 

    பெரம்பலூரில் பாரதீய மஸ்தூர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சிற்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர் விமேஸ்வரன், மாநில செயலாளர் தணிகை அரசு, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாநில தலைவர் திவாகர். அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் நாராயணசாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.பெரம்பலூர் மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்க புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதன்படி மாவட்ட செயலாளராக மணிவேல். மாவட்ட பொது செயலாளராக சிவராஜ். செயல் தலைவராக கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளராக அமுதா மற்றும் மாவட்ட துணை தலைவர்களாக மணிவேல், தமிழரசன். அஜித்குமார், மாவட்ட துணை செயலாளர்களாக கர்ணன். தர்மலிங்கம். ராஜ் ஆகியோர் தேர்ந்தெடு க்கப்பட்டுள்ளனர். கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    • புதுவேட்டக்குடி ஓம் பராசக்தி அம்மன் ஆலயத்தில் மாங்கல்ய பூஜை நடைபெற்றது
    • மாங்கல்ய பூஜையில் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு

    அகரம்சீகூர், 

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள புதுவேட்டக்குடி கிராமத்தில் ஓம் சக்தி தெருவில் சொற்பமாய் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஓம் பராசக்தி ஆலயத்தில் ஆடி மாதத்தில் சுமங்கலி பூஜை நடைபெறுவது வழக்கம்.அதுபோல் நேற்று மாலை 7-மணியளவில் மாங்கல்ய பூஜை மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் நிறுவனத் தலைவர் சிவசாமி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.இந்த மாங்கல்ய பூஜையில் 700-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கு கொண்டு மாங்கல்ய பூஜை செய்தனர்.இக்கோவிலில் திருமணம் ஆகாதவருக்கு திருமண பாக்கியமும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் வேண்டி வருவோருக்கு நிறைவேற்றித் தருவதாக இக்கோவிலுக்கு வரும் பக்த கோடிகள் கூறுகிறார்கள்.

    • குடும்ப பிரச்சினை காரணமாக மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    பாடாலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன் மனைவி வைரம் (68). குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வைரம் காலை விஷம் குடித்து மயக்கமடைந்தார். உடனடியாக அவரை அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். இது குறித்து மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அகரம்சீகூரில் நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து வணிகர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் பேருந்து நிலையம் எல்லை பகுதியில் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் நெடுஞ்சாலைத் துறையினர் அகரம்சீகூர் பேருந்து நிலையத்தில் கடைகள் அமைந்துள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக அளவீடு செய்து, அடையாளம் வைத்தனர். இதனால் அவருக்கு சாதகமாகவும், வியாபாரிகளை பாதிக்கக்கூடிய வகையிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி, அதை கண்டித்து அப்பகுதியில் உள்ள சிறு வியாபாரிகள் சார்பில் நேற்று காலை முதல் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.இதையொட்டி அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் மதியம் 12 மணி வரை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வராததால், வியாபாரிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து அங்கு வந்த குன்னம் உதவி கோட்ட பொறியாளர் தமிழ் அமுதன், மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், வார்டு கவுன்சிலர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாளை(புதன்கிழமை) அமைதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அதிகாரிகள் அழைத்தனர். இதையடுத்து மறியல் மற்றும் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் சுமார் அரை மணி நேரம் அரியலூர்-அகரம் சீகூர் எல்லை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையில் குழந்தைகளுடன் மாயமான பெண் பக்கத்து வீட்டு சிறுமிகளையும் அழைத்து சென்றதால் பரபரப்பு
    • வழக்கு பதிந்த போலீசார் 5 பேரை தேடி வருகின்றனர்

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பொத்தவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் (வயது 30). இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பின்னர் அங்கு வேலை செய்த ரேவதி (27) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு கயல்விழி (3), சாதனா (2) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.திருமணத்துக்கு பின் மனைவியை அழைத்து கொண்டு சரத்குமார் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் இங்கு கூலி வேலை செய்து வந்தார். சரியாக வேலை கிடைக்காததால் சென்னைக்கு புறப்பட்டு சென்று அங்குள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மனைவி குழந்தைகள் பொத்த வாசல் கிராமத்தில் வசித்து வந்தனர்.இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சரத்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. செல்போனில் பேசிய இருவரும் சண்டையிட்டனர்.பின்னர் கடந்த 3ம் தேதி ரேவதி தனது 2 குழந்தைகளுடன் ஊரிலிருந்து மாயமானார்.அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த முருகன் மகள்கள் ப்ரீத்தா (17) திவ்யா (14) ஆகியோரும் மாயமாகியுள்ளனர். ரேவதி அவர்களை அழைத்து சென்றதாக தெரிகிறது. பின்னர் 5 பேரையும் அவர்களின் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து சரத்குமார் மற்றும் முருகன் குடும்பத்தினர் குன்னம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் தேடி வருகின்றனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறும் போது,மாயமான ரேவதி பக்கத்து வீட்டைச் சேர்ந்த அந்த சிறுமிகளுடன் நன்கு பழகி வந்துள்ளார். அப்போது இரு தரப்பினரும் தங்கள் குடும்பத்தில் இருக்கும் வறுமை மற்றும் பிரச்சனைகளை பகிர்ந்துள்ளனர்.இந்த நிலையில் ரேவதி வீட்டிலிருந்து வெளியேற முடிவு செய்ததை அறிந்து தாங்களும் கஷ்டப்படுகிறோம். உங்களுடன் எங்களையும் அழைத்துச் செல்லுங்கள் என்று அந்த சிறுமிகளும் வீட்டை விட்டு ரேவதி உடன் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.கணவருடன் ஏற்பட்ட மோதலில் மனைவி பக்கத்து வீட்டு சிறுமிகளையும் அழைத்துக் கொண்டு மாயமான சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×