என் மலர்
பெரம்பலூர்
- பெரம்பலூரில் தூய்மை பணி இயக்கம் நடைபெற்றது
- மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் "என் குப்பை என் பொறுப்பு" என்ற தலைப்பிலான தூய்மை பணி இயக்கத்தை மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன்,நகர் மன்றத் தலைவர் அம்பிகா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தூய்மை பணிகள் நடைபெற்று வரும் மதரஸா ரோடு, வடக்குமாதவி ரோடு, சாமியப்பா நகர், எளம்பலூர் ரோடு, மதனகோபாலபுரம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூய்மைப் பணியினை தினந்தோறும் மேற்கொள்ள வேண்டும். நமது சுற்றுப்புறத் தூய்மையை பேணிக்காப்பது நமது கடமை என்கிற உணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும். மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து அவற்றை சேகரித்து தினசரி வீடு தோறும் வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அலுவலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் தன்னார்வமாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் நகராட்சி பகுதியில் உள்ள வெள்ளந்தாங்கி அம்மன் ஏரிக்கரை பகுதிகளில் சுமார் 75 மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட கலெக்டர் தொடக்கி வைத்தார். நிகழ்வுகளில் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, பெரம்பலூர் நகராட்சி ஆணையர் ராமர், நகர்மன்ற துணைத்தலைவர் ஹரிபாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கீழப்புலியூர் கிராமத்தில் மின் தடை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
- இரவில் நடந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள கீழப்புலியூர் கிராமத்தில் பச்சையம்மன் கோவில் திருவிழா வேலைகள் நடைபெற்று வரும் வேளையில் கடந்த ஒருவார காலமாக அவ்வப்போது மின் தடை ஏற்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை 10 மணி முதல் இரவு வரை மின் தடை ஏற்பட்டதால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சிரமம் அடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் மற்றும் மின்வாரிய துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் இரவு 8.30 மணியளவில் அப்பகுதியில் மின்வினியோகம் செய்யப்பட்டது. இதற்கிடையே மீண்டும் மின் தடை ஏற்பட்டதால் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு மின் வினியோகம் சீரானது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- போதிய அளவு குடிநீர் விநியோகிக்கப்படாததை கண்டித்து மறியல் போராட்டத்திற்கு முயற்சி
- காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் அவல நிலை உள்ளதாக குற்றச்சாட்டு
பெரம்பலூர்,
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளிலும் ஏற்கனவே காவிரி குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. மாதத்திற்கு 15 நாட்களுக்கு ஒரு முறை தான் காவிரி குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மற்ற நாட்களில் கிணற்று தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. காவிரி குடிநீரும், கிணற்று தண்ணீரும் போதிய அளவு வினியோகிக்கப்படாததால் பொதுமக்கள் தண்ணீரை காசு கொடுத்து வாங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் 12-வது வார்டுக்கு உட்பட்ட கம்பன் தெருவிற்கு கடந்த 20 நாட்களுக்கு மேலாக காவிரி குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் வினியோகிக்கப்படும் கிணற்று தண்ணீரும் கலங்கலாக வருவதாக தெரிகிறது. அந்த தண்ணீரும் போதிய அளவு வினியோகிக்கப்படுவதில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலை 8.15 மணியளவில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட காலிக்குடங்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட வந்த பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் நகராட்சி நிர்வாகத்தில் பேசி காவிரி குடிநீரும், கிணற்று தண்ணீரும் போதிய அளவு வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபடும் முடிவை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- பாடாலூர் கிராம கோவிலின் பூட்டை உடைத்து திருட முயற்சி நடைபெற்று உள்ளது
- போலீசார் வழக்கு பதிந்து விசாணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் கிராமத்தில் அய்யனார், செல்லியம்மனுக்கு கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூட்டு நேற்று முன்தினம் மர்மநபர்களால் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் கோவிலில் பொருட்கள் ஏதும் திருட்டு போகவில்லை. இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தினர் பாடாலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூரில உள்ள விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்
- விதைகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு விதை பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம் பெருமளவில் பயிரிடப்படுகிறது. மாவட்டத்தில் 204 விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. திருச்சி விதை ஆய்வு துணை இயக்குனர் கோவிந்தராசு தலைமையில் விதை ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, பாடாலூர், பெரம்பலூர், வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், பசும்பலூர், வாலிகண்டபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வின்போது பருத்தி, மக்காச்சோளம் ஆகிய பயிர்களின் 100 எண்கள் விதை மாதிரிகள் பகுப்பாய்விற்காக எடுக்கப்பட்டு, விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, விதையின் தரம் சோதிக்கப்பட உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் தற்போது வரை 308 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக துணை இயக்குனர் தெரிவித்தார்.
- பெரம்பலூரில் நில அளவையர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- நில அளவையரை காலணியால் அடித்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரை கைது செய்ய கோரிக்கை
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம், தமிழ்நாடு நில அளவை துறை அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு நில அளவை புல உதவியாளர்கள் சங்கம் ஆகிய சங்கங்கள் சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டதிற்கு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் உமாசந்திரன், நில அளவை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் அன்பரசன், நில அளவை புல உதவியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் புஷ்பராஜ் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். கடலூர் மாவட்டம், காடாம்புலியூரில் நில அளவையர் மகேஸ்வரனை தகாத வார்த்தையால் திட்டி, காலணியால் அடித்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சீத்தாபதியை கைது செய்து சிறையில் அடைக்க தமிழக அரசை வலியுறுத்தியும், நில அளவையர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குமரி அனந்தன், தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் பாரதிவளவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர்.
- ஓலைப்பாடி கிராமத்தில் பச்சையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது
- ஏழு நாட்கள் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது
அகரம்சீகூர் ,
பெரம்பலூர் மாட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள ஓலைப்பாடி கிராமத்தில் பச்சையம்மன் கோவில் தீ மிதி திருவிழா நடைபெற்றது.இதில் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்,பக்கத்தர்கள் தீமிதித்தனர்.இவ்விழாவையொட்டி கடந்த 5-ம் தேதியன்று காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஏழு நாட்கள் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன .தொடர்ந்து நேற்று தீ மிதி திருவிழா நடைப்பெற்றது.இவ்விழாவில் ஓலைப்பாடி, வயலூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டணர். இவ்விழாவை வகையற காரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏற்பாடு செய்தனர்.குன்னம் போலிஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்புபணியில்யிடுப்பட்டனர்.
- விசேஷ நிகழ்ச்சிக்கு சமைத்த போது சம்பவம்
- எதிர்பாராத விதமாக அவரது கைலியில் தீப்பிடித்தது.
குன்னம்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா பண்டாரவடை திருமணஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மக்கள் பாஷா (வயது 45).சமையல் கலைஞர். இவர் ஆர்டரின் பேரில் பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடி காடு ஜமாலியா நகரில் உள்ள ஒரு வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சமையல் செய்யச் சென்றார். அங்கு சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது கைலியில் தீப்பிடித்தது.
பின்னர் மளமளவென உடல் முழுவதும் பரவியது. சக தொழிலாளர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் மக் புல் பாஷா சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- பெரம்பலூர் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்து முதியவர்
- அவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்
குன்னம்
பெரம்பலூர் அருகே உள்ள குன்னம் சீதா ராமாபுரம் மேற்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் ( வயது 68). இவர் வீட்டில் ஆடு மாடுகள் வளர்த்து வருகிறார்.
தனது ஆடுகளுக்கு இலை பறிக்க அங்குள்ள ஒரு மரத்தில் ஏறினார். அப்போது எதிர்பாராத விதமாக தவறு கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூரில் உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான குறைதீர்க்கும் முகாம்
- உடனடி தீர்வு காண கலெக்டர் அழைப்பு
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம், நாளை 12-ந்தேதி சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் பெரம்பலூர் வட்டம், அரணாரை (தெ) கிராமத்தில் நிறைமதி, வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், பாண்டகப்பாடி கிராமத்தில், மணிகண்டன் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), தலைமையிலும், குன்னம் வட்டம், அகரம்சீகூர் கிராமத்தில் சு.சத்திய பால கங்காதரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், சில்லக்குடி கிராமத்தில், த.மஞ்சுளா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான, குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- தமிழக அரசை வலியுறுத்தி எறையூர் சர்க்கரை ஆலை ஊழியர்கள் உண்ணாவிரதம்
- அண்ணா தொழிற்சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள எறையூரில் உள்ள சர்க்கரை ஆலையில் பணிபுரியும் பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள்சர்க்கரை ஆலை முன்பு அண்ணா தொழிற்சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்களின் இரட்டை ஊதிய முறையை மாற்றி அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிடவும், தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட கோரியும் கோஷங்களை எழுப்பினர் உண்ணா விரதத்தில் அண்ணா தொழிற்சங்க செயலாளர் உலகநாதன், பாட்டாளி மக்கள் தலைவர் செல்வராஜ், செயலாளர் பார்த்திபன், கரும்பு உதவியாளர் சங்கத் தலைவர் கனகராஜ், செயலாளர் பொன்னுசாமி, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி சர்க்கரை பிரிவு மாநில செயலாளர் திருஞானசம்பந்தம் உட்பட 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
- 16 வயது சிறுமிக்கு, 35 வயதுடையவருடன் திருமணம் நடத்தி வைத்த சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டு உள்ளார்
- சிறுமியுடன் தலைமறைவான கணவரை போலீசார் தேடி வருகின்றனர்
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமிக்கும், சேலம் மாவட்டத்தை சேர்ந்த 35 வயது வாலிபருக்கு திருமணம் நடைபெற்றது. எறையூர் சக்கரை ஆலை பகுதியில் உள்ள கோயிலில் கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி திருமணம் நடத்தியுள்ளனர். இந்த குழந்தை திருமணம் குறித்து மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிந்தது. ஆனால் திருமணம் ஆன சிறுமியும், அவரது கணவரும் வெளியூர் சென்று தலைமறைவாகிவிட்டனர். இந்த குழந்தை திருமணம் குறித்து மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்கு பதிவு செய்து குழந்தை திருமணம் செய்ய உடந்தையாக இருந்த சிறுமியின் தாயை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிறுமியையும் அவரது கணவரையும் தேடி வருகின்றனர்.






